“மாங்கா…. மாங்கா…”

மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ”மாங்கா… மாங்கா… ருசியான மாங்கா” மங்களத்து மாமியும் பக்கத்து வீட்ட மாமிகளும் வாசலுக்கு வந்துவிட்டதைப் பார்த்த செல்லத் துரைக்கு முகத்தில் சிரிப்பு ததும்பியது.

”என்ன மாமி எல்லோரும் பாத்திரத்தோடு வந்துட்டிங்க. இன்னைக்குன்னு பாத்து சரக்கு வேற கம்மியா போட்டுட்டு வந்துட்டேன். ஆளுக்கு ரெண்டு கிலோ போடட்டா?”

”ஏண்டா கூறுகட்டி விக்கறத போயி கிலோ கணக்குல விக்கிற அளவுக்கு நோக்கு கிராக்கி முத்திடுச்சோ! கிட்டக்க வா மொதல்ல கூடய பாப்போம்”

சைக்கிள் அருகில் வந்ததும், கூடையிலிருந்து வந்த நாற்றத்தை மூச்சில் இழுத்த  பார்வதி மாமி கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி அவனைச் சந்தேகத்துடன் பார்வையால் அளந்தாள்.

”ஏண்டா வீணா போன மாங்காயா கொண்டாந்துருக்கியோ! இந்த நாத்தம் நார்றது”

”நல்ல மீனுன்னா இப்படித்தான் மாமி நாறும், வேணும்ணா பாருங்க,” கூடைக்கு மேல் மூடியிருந்த சாக்கைத் திறந்தான்.

”திருட்டு முழி முழிச்ச்சிண்டு அவன் சிரிக்கறப்பவே நெனச்சேன். கிராதகம் பண்ணுவான்னு. மற்றவர்களும் வசவை ஆரம்பித்தனர்.

”பாவி கம்மனாட்டி, கோகுலாஷ்டமியும் அதுவுமா, இப்படி பண்றியே மாங்காண்ணா நாங்க பாத்திரத்தோட வந்தோம். நோக்கே நன்னாருக்கா இப்படி பண்றது” அதுக்கு மேல் மீன் நாற்றத்தில் நிற்க விரும்பாமல் சரேலென்று திண்ணைக்கு ஓடி வாயை வளைத்தும் நெளித்தும் முணுமுணுத்த வண்ணமிருந்தனர்.

வெக்கு வெக்கென்று சிரித்துக் கொண்டிருந்த செல்லத்துரையைப் பார்த்து பொரிந்து தள்ளினாள் பார்வதி மாமி.

”அந்தக் கண்றாவிய, தண்ணிய கொட்டிண்டு இன்னும் ஏண்டா நிக்கற? மொதல்ல சைக்கிள நகர்த்து. போடா! போனா போறது உங்கப்பன் காலத்லேர்ந்து அக்கிரகாரத்த நம்பி பொழச்ச குடும்பமாச்சேன்னு உன்கிட்ட கறிகா வாங்கிண்டிருந்தோம. இந்த கண்றாவிய கொண்டாந்து வச்சிண்டு மாங்கான்னு எங்களவாள நக்கல் பண்ணியோ, இனிமே யாரும் ஒன்னிட்ட எதுவும் வாங்க மாட்டா, நீ போடா மொதல்ல.”

”சும்மா பயப்படாதீங்க மாமி, மெட்ராசுல போயி பாருங்க உங்க ஆளுங்க மாட்டுக்கறிய என்னா போடு போடுறாங்கண்ணு.”

”நீ காலங்காத்தால தண்ணி போட்டுட்டு வந்துட்டியா? போடா மொதல்ல”

”கோவிச்சுக்காத மாமி, வெறும் தயிறு சோற திங்கறதுனாலத்தான் கொற வயசுலேயே தலை ஆடுது. கூன் விழுது. எங்கள மாதிரி எலும்பையும், மீனையும் கடிச்சு பாருங்க. இடுப்பு என்னமா நிக்குதுன்னு. என்னா போடட்டா ஒரு கிலோ?”

”இல்ல இல்ல, இவன் நம்ப பேச்சுக்குப் படியமாட்டான். ஏய்! ராமமூர்த்தி இங்க வாயேன்….”

”தே! மாமி அந்தாள இழுத்து வுட்றாத. திருக்கைய உப்புல வச்சி தேக்கிற மாதிரி, வாயாலயே வச்சி தேச்சிடுவாரு தேச்சி” சிரித்துக் கொண்டே, கால் சட்டைக்கு மேலே கைலியை தூக்கிவிட்டவாறு சைக்கிளை ஒரு மிதி மிதித்து ”மாங்கா….. மாங்கா… மீனு… மீனு” என்று சிரித்தபடியே புறப்பட்டான்.

”மாங்கா மாங்கான்னு சத்தம் வந்துதேன்னு வடாம் போட்ட கையோட அப்படியே வந்தேன். கட்டயிலே போறவன் மீன் கூடய வச்சிண்டு என்ன பேச்சு பேசறான் பார்த்தேளா!” மங்களத்து மாமியின் பொறுமலோடு பார்வதியும் ஒத்திசைத்தாள்.

”எல்லாம் அழியறத்துக்கு காலம்டி, ஒரு காலத்துல இந்த அக்கிரகாரத்துல கால வைக்கவே நடுங்னவாள்லாம் இப்ப நம்பளவாள நக்கல் பண்ணிண்டு போறா.”

”கேக்க ஆள் இல்லியோன்னோ அதான், கண்டதும் நம்பள நக்கல் பண்றது. மொதல்ல இந்த போஸ்ட் ஆபீஸ் வந்தது. ஒரு சேரி ஆள் வந்தான். அடுத்து தெருவுல இந்த தாய் சேய் விடுதி வந்தது சூத்திரவாள் வந்தா. இப்ப இது அக்கிரகாரமாவா இருக்கு…. க்கூம்.”

”இந்த முத்துசாமி அய்யர் மெட்ராசோட போறேனிட்டு காசுக்காக சூத்திரன் கிட்ட வீட்ட வித்துட்டு போயிட்டார். நம்பளவாளே சரியில்லாதப்போ யார குத்தம் சொல்றது.”

”சரி போயி ஆத்துல வேலைய பாருங்கோ” பார்வதி மாமி வழிமொழிய கலைந்தனர்.

***

”வாசு வாங்க என்ன ஹாயா உட்கார்ந்திட்டேள்” ராமமூர்த்தி அய்யர் வழக்கமான வெண்பொங்கல் சிரிப்பை பரிமாறினார்.

மாலை நேர சுலோகங்களை முடித்துக் கொண்டு திருநீறு, சந்தனம் மணக்க ராமமூர்த்தி அய்யர திண்ணையில் வந்து உட்கார்ந்தால், யாரும் பக்கத்தில் போகவே பயப்படுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டு பாகவதம் பாடி ”இது கூட தெரியாதா? என்னத்த எம். எஸ்சி. படிக்கிறேள்” என்று மடக்குவதும், ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லி அர்த்தம் கேட்டு தெரியாமல் விழிப்பவர்களைப் பார்த்து ”என்ன கான்வென்ட் படிப்போ எழவோ? ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்கறது” என்று பலருக்கும் முன் அவமானப்படுத்தி ”இத்தனைக்கும் நான் அந்தக்கால பத்தாவது” என்று அவர் சிரிக்கும் சிரிப்புக்கு எதிர் நிற்க முடியாமல் பலரும் பயந்து ஒதுங்குவார்கள்.

என்னை மட்டும் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்து அவர் அழைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை அவரது பேச்சுக்கு ஒத்துப் போகாமல் எதிர்கேள்வி கேட்கும் என்னை முழுவதுமாகப் பணியவைக்க வாதத்தை ஆரம்பிப்பது அவரது வழக்கம்.

இவ்வளவு ஆர்வமாக வரவேற்க காரணம் என்னவாயிருக்கும்? காலையில் தெருவில் நடந்த சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு ராமமூர்த்தி அய்யர் பக்கம் போனேனே.

”என்ன சார் ஏதும் முக்கியமான விசயமா?”

”என்ன இருந்தாலும் நானெல்லாம் ஓல்டு ஜெனரேஷன். உங்கள மாதிரி புதுமை, பகுத்தறிவெல்லாம் நேக்குத் தோண மாட்டேன்றதே!”

சுற்றி வளைத்து எங்கு வருகிறார் என்பது புரிந்தது. மௌனமாகச் சிரித்துக் கொண்டேன். ”சொல்லுங்கோ வேற என்ன நியூஸ், ஏதாவது ராமசாமி நாயக்கர் புக் படிச்சிருப்பேயே பிராமின்ஸ குத்தம் சொன்னா உங்களுக்கு வெல்லம்…. ஹி…. ஹி….”

”என்ன சார் நீங்க வேற, காரணம் இல்லாம ஒருத்தர திட்டுனா ஏத்துக்க முடியுமா? தேவையானத தெரிஞ்சுக்க வேண்டியதுதான்.”

”ஜாடையா எங்களவாள திட்றத சரிதான்றேள். காலைல தெருவுல நடந்த்தை பாத்தேளா, யாரு தப்பு பண்றா, சொல்லுங்கோ.”

”ஓ! அந்த செல்லத்துரையா?”

”என்ன சாதாரணமா ஓ போடறேள். நீங்கதான் பகுத்தறிவு பாக்குற ஆள். அவன் செஞ்சது சரியா சொல்லுங்கோ! என்ன பேசிண்டே இருக்கேன், சிரிக்கிறேள்” உணர்ச்சிகரமானார் அய்யர்.

”இது அக்கிரகாரம்னு தெரியும், இங்க இருக்கிறவா பிராமின்னு தெரியும். இங்க வந்து மீனு, மீனுன்னு கத்தறான், ஆளுக்கு ரெண்டு கிலோ வேணுமான்னு கேக்கறான்னா, எவ்ளோ இன்டீசென்ட் பிகேவியர். இங்க இருக்கிற நான்பிரமின்ஸ் பார்த்து சிரிச்சிட்டுதானே இருந்தாள், யாராவது அந்த படவாவ கண்டிச்சாளா? பிராமின், நான்பிராமின் பேதம் பாக்காம எவ்ளோ டீசென்டா இருந்துண்டு இருக்கோம். அடுத்தவாளுக்குப் புடிக்காததை செஞ்சி அதுல ஆனந்தம் அனுபவிக்கிறன்னா அவனோட புத்திய என்ன சொல்றது? இத எந்த பகுத்தறிவும் கேட்காதோ?” ஆவேசமும், ஆலோசனையுமாக பேச்சு நீண்டது.

”சொல்லுங்க வாசு, இது அசிங்கமில்லையா? எங்களவாதான் மேனியில பூணூல் போட்டாலே தப்புன்னு வாதம் பண்றேள்! அடுத்தவா வேணாம்னு ஒதுக்குறத அடுத்தவா மேல அத்துமீறி நடந்துக்குறதுக்கு யாரு தப்பு சொல்றது. இதுதான் டெமாக்ரசியா? சொல்லுங்கோ.”

பேசிக் கொண்டே போனவர், தெருப்பக்கம் கவனித்தவாறு ” தோப்பனார் தேடறார் போல இருக்கு. போயிட்டு வாங்கோ, நீங்களும் நானும் எங்க போயிடப்பொறோம், ஆற அமர பேசலாம். கொஞ்சம் சாமர்த்தியமா யோசிக்கிற ஆளாச்சேன்னு உங்க காதுலயும் போட்டேன் அவ்வளவுதான்,” சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார்.

****

முதல் நாள் இராமமூர்த்தி அய்யரிடம் மேற்கொண்டு பேச நினைத்தைப் பேச இயலாது போயிற்று. காலையிலிருந்து தெருப்பக்கம் அவரைத் தேடிக் கொண்டிருந்தன எனது கண்கள். வீட்டிலிருந்து தென்படுவார் என எதிர்பார்த்தேன். இராமமூர்த்தி அய்யர் தெருவிலிருந்து வீட்டுப்பக்கம் வழக்கத்தைவிட வேகமாக நடந்து வந்தார். அவரது வட்டவடிவமான தொந்தியும், பூணூலும் புவியீர்ப்பு விசையோடு போராடுவது போல அசைந்து கொண்டிருந்தது.

“என்ன சார் இவ்வளவு வேகமா வாரீங்க, ஏதும் அவசரமான வேலையா?”

”என்ன தெரியாதது போல கேக்கறேள்! கம்மாளத் தெருவுல புதுசா கட்டுன வினாயகர் கோவிலுக்கு இன்னிக்கு மகா சம்புரோட்சணமோன்னோ! அதான் பாராயணத்துக்கு காத்தாலயே போயிட்டேன். அபிஷேகத்துக்கு சந்தனம் வாங்கி ஆத்துலேயே மறந்து வச்சிட்டு போயிட்டேன், அதான் வேகு வேகுன்னு கொண்டு போயி கொடுதிட்டு வர்றேன். அப்பாடா… நாராயணா…. நமச்சிவாயா…” துண்டால் தொந்தியில் வழிந்த வியர்வையை ஒற்றியபடி திண்ணையில் உட்கார்ந்தார்.

”அப்புறம் என்ன சேதி, ஊரே அங்க தெரண்டு நிக்கறது. நீங்க மட்டும் வரமாட்டேள்”

”ஓ! அதானா காலைலேர்ந்து நமகா, நமகான்னு சத்தம் கேட்டுச்சு”

”நீங்க காத்தால கேட்டது என்னோட வாய்ஸ்தான். வேதபாராயாணம் உங்களுக்கு நக்கலா படுதா”

”இல்ல சார் நேத்து நீங்க சொன்ன மாதிரியே நல்லா யோசிச்சு பார்த்தேன். செல்லத்துரை செஞ்சதையே இப்ப நீங்களும் செய்யறீங்களே, அதான், என்ன சொல்றதுன்னே தெரியலே”

”அந்த மீன்காரன் மாதிரி நானா? என்னது குண்டதூக்கி போடறேள்” பரபரத்தார் இராமமூர்த்தி.

”வாங்கப் புடிக்காதவங்க கிட்ட மீனு மீனுன்னு கத்தறது தப்புன்னா, சமஸ்கிருதம்னா என்னன்னு தெரியாதவங்ககிட்ட போயி மைக்கசெட்டு போட்டு நீங்க நமகா, நமகான்னு கத்தறது மட்டும் சரியா? நீங்களே யோசிச்சு பாருங்க. அந்தத் தெருவுல இருக்கறவங்களுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது. நீங்க கர்நாடக சங்கீதம் கச்சேரி வேற வெச்சீருக்கீங்க. இப்படி அவங்க விருப்பத்த மதிக்காம இதுதான் பாட்டு, இதுதான் வேதம்னு நீங்க திணிக்கறது மட்டும் எந்த வகையில சார் டெமாக்ரசி?”

”ஹி… ஹி…. யாரோ எழுதி வச்சத படிச்சுட்டு தப்பாப்  பேசறேள். உங்களுக்குப் புரிய வைக்க நம்மால ஆகாது. சரி. அந்த சாப்டர விடுங்கோ. கொஞ்சம் கட்டையை சாச்சிட்டு திரும்பவும் பாராயணம் பண்ண போகணும்.”

”அப்ப திரும்பவும் மீன்விக்க போறீங்கன்னு சொல்லுங்க.”

ஆவேசமாகி வாதம் பொறி பறக்கப் போகிறதென்று எதிர்பார்த்தேன்.

”ஆஹா…. ஹா… ஹா…. ஒங்களுக்கு அனுபவம் பத்தாது. அதான் தெரியாம பேசறேள். சாதாரண மேட்டர போயி ரொம்ப சீரியசா எடுத்துக்கறேளே. போயி நீங்களும் ரெஸ்டு எடுங்கோ. ஏன் சும்மா பேசிண்டு. திண்ணைல வேற காத்த காணோம். ரொம்ப புழுங்கறது….” போய்க் கொண்டே இருந்தார்.

இதற்கு முன், நழுவிச் செல்வதில் இப்படியொரு உயிரினத்தை இதற்குமுன் பார்த்திராத அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன்.

________________________________________

புதிய கலாச்சாரம், செப்டம்பர் 1999.