”இந்தப் பாரம்பரியம் எங்கள் உயிரினும் மேலானது. உடன்கட்டையேறி உயிர் துறக்கும் விதவையானவள், உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள், 3 கோடி ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள்.”

உடன் கட்டையேற்றும் பழக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் பிரபு பெண்டிங் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரி மன்னர்களும், 120 பார்ப்பனப் பண்டிதர்களும் கை ஒப்பமிட்டு அளித்த மனுவில் கண்டுள்ள வாசகம் இது. விதவை வாழ்க்கையின் துன்பங்களையும், கட்டுப்பாடுகளையும் ஒப்பிடும்போது ‘சிறிது நேரம் சிரமப்பட்டாலும்’ போய்ச் சேர்ந்து விடுவதே ஒரு பெண்ணுக்கு நல்லது என்ற உண்மையையும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

தமது விருப்பத்துக்கு விரோதமாக ஒரு பெண்ணை உடன்கட்டையேற்றக்கூடாது என்று கூறிய அந்தச் சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்ட விதத்தை- உடன்கட்டையேறும் காட்சியை – எஸ்.ஸி. போஸ் (1881) கூறுகிறார்;

”நான் சிறுவனாக இருந்தபோது அத்தை உடன் கட்டையேறிய காட்சியை அழுது கொண்டே அம்மா என்னிடம் கூறியிருக்கிறாள்.

சவ ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்தையிடம் வந்து உடன்கட்டையேற வேண்டாம் என்று எடுத்துச் சொன்னார். பயனில்லை. கொஞ்சம் தள்ளி நின்று என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் தொடங்கினார். சிதையை 7 முறை சுற்றிவருமாறு புரோகிதர்கள் அத்தையிடம் கூறினர். ஒவ்வொரு சுற்று வரும்போதும் அவளுடைய கால்கள் தள்ளாடத் தொடங்கின. மயக்கமடையத் தொடங்கினாள். இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒரு முறை அத்தையிடம் வந்து பேசினார். அவளுக்கு எங்கே கேட்டிருக்கும்?

பிறகு அத்தையை சிதையின் மீது ஏற்றி கணவனின் பிணத்துக்கு அருகில் படுக்க வைத்தனர். ஒரு கையை கணவனின் தலைக்குக் கீழும், இன்னொரு கையை அவன் மார்பின் மீதும் வைத்து அணைத்தபடி படுத்திருந்தாள். ஹரி…. ஹரி… என்ற முனகல் அவள் வாயிலிருந்து கேட்டது.”

”பெண்ணே எழுந்திரு, உன் கணவன் இறந்து விட்டான். நீ அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தன. இந்த உலகத்தில் உன் வாழ்க்கையைத் தொடர வந்துவிடு” என்று யாரேனும் ஒருவர் அந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்பது சம்பிரதாயம். யாரும் சொல்லவில்லை.

”அத்தையின் மீது உடனே விறகுகளை அடுக்கினார்கள். தடியான ஒரு ஆள் விறகுகளை ஒரு அமுக்கு அமுக்கினான். சிதையைச் சுற்றியிருந்த மூங்கில்கள் சடசடவென எரியத் தொடங்கின. ஒரு உடலும், இன்னொரு உயிரும் சாம்பலாகும் வரை சுற்றியிருந்தவர்களின் கத்தல் ஓயவில்லை.”

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இந்தக் கொடூரத்தை, கட்டாயப்படுத்தி நிறைவேற்றும் உரிமையை மன்னர்களும், புரோகிதக் கும்பலும் மன்றாடிக்கேட்டபோதும் பெண்டிங் செவிசாய்க்கவில்லை.

புரோகிதர்கள் தங்கள் மனுவில் குறிப்பிடாமல் விட்ட ஒரு சம்பிரதாயத்தை பெண்டிங் குறிப்பிட்டார். ”உடன் கட்டையேறும் தாயை உயிருடன் கொளுத்துவது மகனின் கடமை. ஒரு வேளை அவள் குழந்தையில்லாத இளம் விதவையாக (சிறுமியாக) இருந்தால், தன்னை யார் கொளுத்தவேண்டும் என்பதை அவள்தான் கூறவேண்டும்” என்பதே அந்த சம்பிரதாயம்.

சதிமாதாவாக ரூப் கன்வர்

ரூப் கன்வருக்கும் மகன் இல்லை. அவளுக்குத் திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. எனவே அவளை உயிருடன் கொளுத்தும் பொறுப்பை மைத்துனன் ஏற்றுக் கொண்டான். சுற்றிலும் நூற்றுக்கணக்கான ராஜாபுத்திரர்கள் நின்று ‘சதிமாதா கி ஜெய்’ என்று ஆர்ப்பரிக்க அவன் ரூப் கன்வருக்குத் தீ வைத்தான். தீயின் நாக்குகள் தன்னைத் தீண்டத் தொடங்கியதும் அவள் சிதையிலிருந்து தப்பி ஓட முயற்சித்தாள். ஆனால் கையில் வாளுடன் சிதையைச் சுற்றி நின்ற ராஜபுத்திர இளைஞர்கள் அவள் தப்பிவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இவையெல்லாம் பம்பாய் பத்திரிகையாளர் குழுவொன்று சம்பவம் நடந்தவுடனே தியோரலா சென்று நேரில் திரட்டிய செய்திகள். ரூப் கன்வருக்கு போதைமருந்து கொடுத்திருந்தார்கள் என்பதும் அவர்கள் முன்வைத்த ஒரு குற்றச்சாட்டு.

சுடுகாட்டுக்குப் பெண்கள் செல்வது ‘இந்து’ பாரம்பரியம் இல்லையே. ரூப் கன்வர் ஏன் சென்றாள்? அவளை புடவை, நகைகள்  அணிவித்து அலங்கரித்தவர்கள் யார்?

அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு முன்னால் அவளுடைய பெற்றோருக்குக் கூட செய்தி தெரிவிக்காததன் மர்மம் என்ன? என்று பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. எனினும் கண்ணால் கண்ட சாட்சிகள் யாரும் இல்லையென்ற காரணத்தால் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. போலீசு தரப்பு சாட்சிகளே தங்கள் கூற்றை மறுத்து விட்டதால் வழக்குக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று தள்ளுபடி செய்துவிட்டார் நீதிபதி.

”நீதி வென்றது. ஒரு வேளை அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் இந்திய ராணுவத்தின் ‘ராஜபுத்திரர் ரெஜிமென்ட்’ கலகத்தில் இறங்கியிருக்கும்” என்று எச்சரிக்கிறார்கள் தியோரலாவின் ராஜபுத்திரர்கள்.

”இதுவரை 8 ‘சதி’ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்காக ஆஜராகியிருக்கிறேன். எல்லாவற்றிலும் நான்தான் ஜெயித்தேன். யாரும் தண்டிக்கப்பட்டதில்லை” என்று மார்தட்டுகிறார் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்.

”குற்றவாளிகளைத் தப்பவிடுவதற்காக போலீசு திட்டமிட்டே வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகளை உருவாக்கி வைத்திருந்தது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் மகளிர் அமைப்பினர்.

”நீதிபதி மனம் வைத்திருந்தால் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வாய்ப்பு இந்த வழக்கிலேயே இருந்தது” என்று முனகுகிறார்கள் அரசு வழக்கறிஞர்கள்.

”மகளிர் அமைப்பினர் சொன்னதைக் கேட்டு இதைக் ‘கொலை வழக்கு’ என்று பதிவு செய்ததுதான் தவறு. ”தற்கொலைக்குத் தூண்டுதல்” என்ற குற்றப்பிரிவில் வழக்கு போட்டிருந்தால் ரூப்கன்வர் கொளுத்தப்பட்ட போது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் உள்ளிட்டு எல்லோரையும் உள்ளே தள்ளியிருக்கலாம். ‘சதி ஊர்வலத்தில் பங்கேற்பவர்களும் தற்கொலையைத் தூண்டும் குற்றத்தை செய்தவர்களே’ என்று கூறும் உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்று ஏற்கனவே உள்ளது ”என்று புது வியாக்கியானம் தருகிறார்கள் டெல்லி வழக்கறிஞர்கள்.

”தியோரலா சம்பவத்துக்குப் பிறகு ‘சதி’க்கெதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம் ரொம்பக் கடுமையானது. ‘சதியை ஆதரிப்பவர்கள் உள்ளிட்டு எல்லோரையும் இச்சட்டத்தின் மூலம் தண்டித்துவிட முடியும். எனவே இனி குற்றவாளிகள் தப்ப முடியாது” என்கின்றனர் ராஜஸ்தான் அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட இடம் சதி ஸ்தல் என்ற புனிதத் தகுதியுடன்தான் இருந்து வருகிறது. ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட நாளில் ஆண்டு தோறும் ‘சுன்ரிமகோத்ஸவ்’ என்ற விழா நடத்தப்பட்டுதான் வருகிறது. முதல் ஆண்டு விழாவில் ராஜஸ்தான் பா.ஜனதா முதல்வர் செகாவத் பங்கேற்றார்.

‘பாரம்பரியமிக்க’ தலைப்பாகையுடன் கையில் வாளேந்திய ராஜபுத்திர இளைஞர்கள் தங்கள் குலப்பெருமையை நிலைநாட்டும் அடுத்த சதிமாதாவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

***

சில்க் ஸ்மிதா

தமிழ்த் திரையுலகம் அடுத்த சில்க் ஸ்மிதாவைத் தேடிக்கொண்டிருக்கிறது. கற்பும் விபச்சாரமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தானே!

கொலையா தற்கொலையா என்ற ஆராய்ச்சி இங்கேயும் தொடர்கிறது. இருப்பினும் தற்கொலைதான் என்று கோப்பினை மூடிவிட்டது காவல்துறை. தற்கொலை என்றே வைத்துக்கொண்டால் ரூப் கன்வரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளைப் பிடிக்க முடியாதது போலவே, ஸ்மிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளையும் பிடிக்க முடியவில்லையாம்.

ஆனால் இறந்த மறுநாளே ஸ்மிதா உயிர்த்தெழுந்தாள்- பத்திரிகைகளிலும், திரையரங்குகளிலும். ஆனால் இப்பொழுதும் அவளுக்கு முழு ஆடையை அனுமதிக்க பத்திரிகைகள் தயாராக இல்லை. இருப்பினும் எல்லோரும் கண்ணீர் வடிக்கத் தவறவும் இல்லை. அது வேசியைச் சாகக் கொடுத்த விடுதிக்காரியின் கண்ணீர். தரகுக் காசை இழந்த தரகனின் கண்ணீர். அவளுடன் கழித்த நாட்களை எண்ணி வாடிக்கையாளன் வடிக்கும் கண்ணீர். கண்ணீர் வற்றியது. தற்கொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கப் போதிய ஆதாரமில்லாததால், எது காரணம் என்ற உளவியல் ஆய்வில் இறங்கினார்கள்.

”ஸ்மிதாவுக்குப் போதிய படிப்பறிவு இல்லை அதுதான் காரணம்” என்றார் நடிகை சுகாசினி. இனி கல்வியறிவு இல்லாத யாரையும் கவர்ச்சி நடிகையாக்கக் கூடாது என்றுதான்  கோடம்பாக்கத்தின் முடிவோ! அல்லது விபச்சாரம், அவமானம், ஆணாதிக்கம், முகத்துதி, துரோகம், நடிப்பு, நயவஞ்சகம் போன்ற திரையுலகின் அத்தனை இழிவுகளையும் தாங்கிக் கொண்டு உயிரோடிருப்பதற்குத் தேவையான அறிவைக் கல்வி அளித்துவிடுமா?

இதே- நியாயத்தை ரூப் கன்வருக்கும் பொருத்தலாம். தீயில் வெந்தது அவளுடைய மூடநம்பிக்கையின் விளைவு என்று வழக்கை முடித்து விடலாம். அதைத்தான் ராஜபுத்திரர்களும் விரும்புகிறார்கள். ”உடன் கட்டைப் பழக்கத்திற்காக இந்து மதத்தை ஏன் சாடுகிறீர்கள்? எல்லோருமா உடன் கட்டை ஏறுகிறார்கள்” என்று கேட்கிறார்கள் இந்து சனாதனிகள். ”ஸ்மிதாவின் தற்கொலைக்காகத் திரையுலகத்தை ஏன் குற்றம் சொல்கிறீர்கள், எல்லோருமா தற்கொலை செய்து கொள்கிறார்கள்?” என்பதுதான் சுகாசினி வகையறாவின் வாதம். சாக்கடையைக் குற்றம் சொல்லாதீர்கள். கொசுவர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை கிருமிகளுக்கும், புழுக்களுக்கும் இந்தச் சாக்கடை வாழ்வளிக்கிறது!

ஸ்மிதா போன்ற கல்வியறிவற்றவர்கள் எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்க தாய்லாந்தின் முன்னுதாரணத்தைக் கோடம்பாக்கமும் பின்பற்றலாம். தாய்லாந்தில் எயிட்ஸ் நோயைக் கொண்டு வந்தவர்கள் அமெரிக்கர்கள்தான் என்பதால் லட்ச ரூபாய் கொடுத்தாலும் அமெரிக்க வாடிக்கையாளரை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்களாம் தாய்லாந்தின் படிப்பறிவற்ற விலைமாதர்கள். கல்வியறிவற்ற விலை மாதர்களால் தோன்றியுள்ள இந்த நெருக்கடியைச் சமாளிக்க அவர்களுக்கு ‘எயிட்ஸ் கல்வி’ அளிக்கும் பொருட்டு விளக்கப் படங்களுடன்  கூடிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளதாம் ஒரு தொண்டு நிறுவனம்.

அமெரிக்கர்கள்தான் எயிட்ஸ் பேர்வழிகள் என்பது தவறு. யார் வேண்டுமானாலும் அப்படி இருக்கலாம். எனவே அமெரிக்கர்களை மட்டும் புறக்கணிப்பது தவறு. நாம் எச்சரிக்கையாக இருப்பதும், ஆணுறையைப் பயன்படுத்தச் சொல்வதும்தான் தீர்வு என்கிறது அந்த எயிட்ஸ் ‘கல்வி’ நூல்.  எயிட்சுக்கெதிரான அமெரிக்கப் பிரச்சார முழக்கமும் இதுதான்; ”விளையாடுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை; ஆனால் பாதுகாப்பாக விளையாடுங்கள்”

இதைத்தான் சுகாசினியும் சொல்கிறார். ஆனால் தியோரலாவின் ராஜபுத்திரர்கள் கேட்கிறார்கள், ”பாதுகாப்பாகக் கொளுத்துவது எப்படி?”

___________________________________________

புதிய கலாச்சாரம்,  ஜனவரி – 1997.