01_2005.jpg

பிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாவடுதுறை இளையமடாதிபதி கைதான போதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை.

 

 "என்னப்பா இது போலி சாமியார்கள் இவ்வளவு பெருத்துப் போய்ட்டாங்க' என்ற அபிப்பிராயத்தோடு முடித்துக் கொண்டார்கள்.

 

 ஆனால் ஜெயேந்திரன் கைதான போதுதான் மக்கள் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள். பொது இடங்களில் இரண்டு நபர்கள் பேசிக் கொண்டால் கண்டிப்பாக அதில் ஜெயேந்திரனின் கைதும் இடம் பெறும்.

 

 "என்ன இந்த ஆளு இவ்வளவு கேவலமா இருக்கானே?' என்ற ரீதியில் ஆரம்பித்து தங்கள் கவலைகளை கொஞ்ச நேரம் மறந்து, ஜெயேந்திரனின் உல்லாச, சல்லாப வாழ்க்கையைப் பற்றி கை கொட்டிச் சிரித்துப் பேசி மகிழ்ந்து விட்டுத்தான் கலைகிறார்கள். (இது ஒன்றுதான் ஜெயேந்திரனால் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி) இத்தனைக்கும், சுவாரஸ்யமாகப் பேசுவதற்கு சதுர்வேதி மீது நிறைய பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் மக்களின் மனதை உற்சாகமாக வைத்திருப்பதில் ஜெயேந்திரனே முன்னணியில் இருக்கிறார். இந்த வகையில் ஜெயேந்திரனுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு.

 

 மக்களின் மனநிலை இப்படி இருக்க தினமலர் நாளிதழ் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் இப்படி செய்தி வெளியிடுகிறது. கீழ்க்கண்ட இந்தச் செய்திதான் தினமலரின் அரசியல், தத்துவம், பத்திரிக்கை தர்மம்.

 

 அதாவது, ஆதாரத்தோடு இருக்கிற செய்திகளை பொய் என்பதும், ஆதாரமற்ற செய்திகளை மெய் போல் வெளியிடுவதும்தான் தினமலரின் பத்திரிக்கை தர்மம். இந்த தர்மம் ஆட்களை பொறுத்து ஆதரவாகவோ, எதிராகவோ வெளிப்படும். இதோ ஆதாரமே இல்லாமல் ஒரு ஆதரவு "செய்தி':


     ""காஞ்சி சங்கரமடத்தை அழிக்க நினைக்கும் சதியின் ஒரு அம்சமாக     சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது அரங்கேற்றப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மட்டும் அல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நேபாள மன்னரை மடத்தின் தீவிர பக்தராக மாற்றியது உட்பட பல தொழிலதிபர்களையும் மடத்தின் தீவிர ஆதரவாளர்களாக்கியது ஜெயேந்திரரின் நடவடிக்கைகள்தான் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்... ஜெயேந்திரரின் இந்த நடவடிக்கைகளால் மடத்தின் புகழ் பரவியது. இதைப் பிடிக்காமல் பலர் மடத்துக்குள்ளேயே குளறுபடிகள் செய்ய ஆரம்பித்தனர். இந்தக் குளறுபடிகளைச் சரி செய்ய முயன்ற போது அவருக்கு எதிராக கோஷ்டிகள் உருவாகின.... திடீர் திடீர் என மடத்து நிர்வாகிகளுடன் பெண்களைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது எல்லாம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... திட்டமிட்டு கொலை வழக்கில் அவரைச் சிக்க வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். மடத்தில் உள்ள கோஷ்டிகளில் சிலர் இப்போது வெளியில் உள்ள மட எதிர்ப்பாளர்களுடன் ரகசிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்துவிட்டு மடத்தைச் சூறையாடவும் ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது...'' (தினமலர், 14.12.04)


 வெட்கங் கெட்டதனத்தின் தமிழ்ப் பத்திரிக்கை வடிவம்தான் தினமலர்.


 கருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ், கிருஷ்ணசாமி, லாலு பிரசாத், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இவர்களை தலைப்பிலேயே கேவலப்படுத்தி  அவமானப்படுத்தி சவடாலாகச் செய்தி வெளியிடும் தினமலர், ஒரு கிரிமினலான ஜெயேந்திரனைப் பற்றி எப்படி பவ்வியமான தொனியில் தலைப்புகள் வெளியிட்டிருக்கிறது பாருங்கள்.


"ஜெயேந்திரர், கைதுக்கு எதிர்ப்பு. சாதுக்கள் போராட்டம்',
"ஆந்திராவில் நாளை 80 லட்சம் பேர் உண்ணாவிரதம்',


"ஜெயேந்திரர் கைதால் உலக அளவில் பக்தர்கள் கவலை'  ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேட்டி,
"சகோதரர்கள், பக்தர்கள் உருக்கமான சந்திப்பு',
"வேலூர் சிறையில் ஜெயேந்திரர் சுகவீனம்',


"ஜெயேந்திரர் கைதுக்கு சர்வதேச சதி காரணம்'  பக்தர்கள் பேரவை குற்றச்சாட்டு,
"வேலூர் மத்தியச் சிறையில் தரையில் உறங்கும் ஜெயேந்திரர்,'
"பாம்புகள் நடுவே வாசம்' (பாவம் பாம்புகள்!)

  இப்படி "தானாடவில்லையம்மா தசையாடுது' என்று படிப்பவர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்துகிற தொனியில் செய்தி வெளியிடுகிறது தினமலர்.

 

 சரி, மோசடிப் பேர்வழி இந்து மதச் சாமியார் என்பதால் ஒரு இந்துமதப் பத்திரிக்கை மத உணர்வோடு இப்படி செய்தி வெளியிடுகிறது என்று பார்த்தாலும், இதோ இன்னொரு இந்து மோசடிப் பேர்வழியைப் பற்றி அதே தினமலர் எப்படிப் பாய்ந்து பிடுங்குகிறது பாருங்கள்.


"சாதாரண ஆள் இல்லீங்க இந்த சதுர்வேதி',
"பண்ணை வீட்டில் மாயாஜாலம்',
"செக்ஸ் சாமியார் சதுர்வேதி சதிராட்டம்'

 

  இதுதான் பார்ப்பனிய தர்மம். பார்ப்பனிய ஒழுக்கம் என்பது, அடுத்தவர்களின் ஒழுக்கமின்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை ஒழுக்கமானவர்களாகச் சித்தரித்துக் கொள்வது; ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதல்ல.

 

 பார்ப்பனியத்தின் இந்த மோசடி அவர்களின் இதிகாச, புராணப் புளுகுகளிலிருந்தே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ""இராமனின் மனைவி சீதையின் மீது பிரியப்பட்டான் ராவணன்''  இப்படி அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டதினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பித்து, அவனைக் கொன்று தனது ஒழுக்கத்தை உலகுக்கு அறிவித்த பார்ப்பனியம், இந்திரனை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இந்திரனின் "ஃபுல் டைம் ஒர்க்' அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு கொள்வதே. அந்த உறவுக்காக எதையும் செய்பவனே இந்திரன். குறிப்பாக கடும்தவம் புரிகிற ரிஷி பத்தினிகளோடு உறவு கொள்வதில் கைதேர்ந்தவன் இந்திரன்.

 

 சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்திரன், அந்தக் காலத்து ஜெயேந்திரன்  விஜயேந்திரன்.


 இந்த இந்திரனைத்தான் "தேவர்களின் தலைவன்' என்று கொண்டாடுகிறது பார்ப்பனியம். ""எங்களுக்கு மட்டுமே இந்திர சரஸ்வதி என்ற பட்டம் சொந்தமானது'' என்று பெருமைப் பட்டுக் கொள்கிறது காஞ்சி மடம்.

 

 இந்திரனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ராவணனை ஒழுக்கமானவன் என்று கூடச் சொல்லிவிடலாம். சீதை மீது மோகம் கொண்ட ராவணன் அவள் மீது தன் நிழல் கூடப் படாமல் பார்த்துக் கொண்டான். ராவணனின் முறையற்ற காதலுக்கு மரணதண்டனை வழங்கியது பார்ப்பனியம்.

 

 தினத்தந்தியின் மொழியில் சொல்வதானால் "உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்' என்கிற பாணியில் வாழ்ந்த இந்திரனின் முறையற்ற காமத்தை அங்கீகரிக்கிறது பார்ப்பனியம்.

 

 இவைகளிலிருந்து பார்ப்பனியம் சொல்லுகிற நீதி, ""பார்ப்பõனல்லாத ஒருவன் பார்ப்பானின் மனைவியை மனதால் நினைத்தாலும் அவனுக்கு மரண தண்டனை. ஆனால் ஒரு பார்ப்பான் அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு வைத்துக் கொண்டாலும், அது தண்டனைக்குரிய குற்றமல்ல.'' இதுதான் பார்ப்பனிய தர்மம். ஒழுக்கம். இதைத்தான் பார்ப்பனியப் பத்திரிக்கைகளான தினமலர், ஜூனியர் விகடன், துக்ளக் போன்றவை முதலாளித்துவ வடிவத்தில் மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.


                                                      --------------------


 சரவணபவன் ராஜகோபாலின் காதலைக் கண்டறிந்து "அவர் கொலை செய்தார்' என்பதைத் துப்பறிந்து வெளியிட்ட பெருமை தினமலர், ஜூனியர் விகடனையே சேரும். தனக்கு "விளம்பரம் தருகிற பார்ட்டி' என்கிற சமரசம் இல்லாமல் உண்மையைத் துப்பறிந்து உலகுக்குச் சொன்னார்கள். (அண்ணாச்சியோ தினகரன், தினத்தந்தி, நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளை விட "அவாள்' பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார். அது அவரின் சைவத் தொழிலின் ரகசியம். தனிப்பட்ட லாபத்திற்காகவே பலபேர் பார்ப்பன அடிமையாக இருப்பதின் ரகசியமும் அதுவே. இதில் புதுவரவு "தேவி' வார இதழ்.)

 

 ஆனால், "ஜகத்குரு ஒரு ஆளை ஜகத்தை விட்டே அனுப்பிவிட்டார்' என்பதை "நக்கீரன்' துப்பறிந்து தொடர்ந்து எழுதியபோதும் கூட ஜூனியர் விகடன் "துப்புக் கெட்டு'க் கிடந்தது. பிறகு லோக குரு கைதாகி லோல்பட ஆரம்பித்த பிறகே வேறு வழியில்லாமல் "கடவுள்' செய்த கொலையைப் பற்றி செய்திகள் வெளியிடத் தொடங்கியது.

 

 அந்தச் செய்திகளை அது இப்படி வரையறுத்துக் கொண்டு வெளியிடுகிறது. "ஜெயேந்திரன் கொலை வழக்கில் சிக்கி இருப்பதற்குக் காரணம் அவர் கொலை செய்ததால் அல்ல, சங்கர மடத்தின் கோஷ்டி தகராறால்' என்கிற பின்னணியில்.

 

 இதில் ஜூனியர் விகடன் ஜெயேந்திரன் கோஷ்டி. (இந்து என்.ராம், டி.என். சேஷன் போன்றோர் விஜயேந்திரன் கோஷ்டி.) இந்தக் கொலையில் ஜெயேந்திரனின் பங்கை அரசல் புரசலாக எழுதும் போது கூட, "வாசகர்களுக்கு ஜெயேந்திரன் மீது அனுதாபத்தை உண்டு பண்ணுவதுபோல் எழுத வேண்டும்' என்பது விகடன் ஆசிரியர் குழுவிற்கு, ஆசிரியர் இட்ட கட்டளை போலும்! இதோ கழுகார் சொல்லுகிறார்:

 

""ஜெயேந்திரர் அணி, விஜயேந்திரர் அணி என்று இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக கோலோச்சி வந்த கதை இது. இந்த அணிகள் பரஸ்பரம் குழி பறிப்பு வேலையிலேயே மூழ்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குழி பறிப்பின் உச்சகட்டமாகத்தான் இன்று கொலை வழக்கு ரேஞ்சுக்கு அசிங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

"ஜெயேந்திரர் கைதாகி சிறை செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து விஜயேந்திரர் எந்த தங்கு தடையும் இன்றி செயலாற்ற வேண்டும். தேவைப்பட்டால், ஆளும் அரசின் விருப்பங்களையும் சிக்கலில்லாமல் பூர்த்தி செய்யவேண்டும். அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கைது நடவடிக்கை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டது' என்கிறார்கள் இந்த சிலர்!''

 

 — இதுதான் ஜெயேந்திரன் வழக்கை ஜூனியர் விகடன் துப்பறியும் பாணி, சீனியர் விகடனும் இதே பாணிதான். அதுதான் ஆளையே மாத்திடும் (பைத்தியக்காரனா மாத்திடும்) ஆனந்த விகடன்! உதாரணத்திற்கு ஆ.வி.யில் இருந்து ஒரு சில பிட்டுக்கள்:

 

""ஜெயேந்திரரின் ஜாதகக் கட்டங்களைப் புரட்டிப் பார்த்த விசுவாசிகள், புது விஷயம் சொல்கிறார்கள். "பெரியவாளுக்கு எட்டுல சனி, டிசம்பர் 20ஆம் தேதிக்கு மேல் கஷ்டமெல்லாம் பனியாப் பறந்துடும். அவரை இந்தப் பாடு படுத்தறவாளுக்கு வர்ற ஜனவரியிலிருந்து கஷ்ட தசை ஆரம்பம். இன்றையநிலைமை புது வருஷத்தில் அப்படியே தலைகீழாகும்' என்கிறார்கள்.

 

 இது எப்படி இருக்கு?

 

 இந்தப் பாணியிலேயே எழுதிகிட்டே வந்து, இன்னும் கொஞ்ச நாளில் "சங்கரராமனை ஆள் வைத்துக் கொன்னது அவரு சம்சாரம்தான்'னு எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன்னா, அதான் ஆளையே மாத்தற ஆனந்த விகடனாச்சே!

                                                       ------------

 

 ஜெயா டி.வி.யிலே "அரிகிரி அசெம்பிளி'ன்னு ஒரு அநாகரிகமான நிகழ்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள். அந்த அநாகரிகமான நிகழ்ச்சியிலே ரெண்டு பைத்தியங்கள் நிகழ்ச்சி நடத்தியதையும் கவனித்திருப்பீர்கள். அதுல ஒண்ணு மொட்டை அடிச்சிக்கிட்டு இருக்கும். அது பேரு பாஸ்கி. இந்தப் பைத்தியம் ஆனந்தவிகடனில் சோகமான மனநிலையோட ஒரு நகைச்சுவைப் பக்கம் எழுதியிருக்கு. இதோ அது செய்த "ஜாலி கற்பனை':

 

"போலீஸ் விசாரணை' என்கிற பேரில் ஜெயேந்திரர் மீது கேஸ் மேல் கேஸ் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்! போகிற போக்கைப் பார்த்தால், இனிமேல் கீழேவரும் கேஸ்களில் கூட அவரைச் சந்தேகப்படுவார்களோ, என்னவோ?!

 

மடத்துக்குத் தேவையான சந்தன சப்ளையில் வீரப்பன் மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரர், வீரப்பனைத் தீர்த்துக் கட்டிவிட்டார் என்கிறது எஸ்.டி.எஃப் போலீஸ்!


"ராஜீவ் காந்தியைக் கொன்ற தற்கொலைப் படைப் பெண்மணி தணுவின் கையில் இருந்த பூமாலைகூட ஜெயேந்திரர் வழக்கமாகப் பூ வாங்கும் பூக்காரி தொடுத்ததோ?' என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.


இவை தவிர மகாத்மாகாந்தி, ஆப்ரஹாம் லிங்கன், கென்னடி போன்றோர் கொல்லப்பட்ட வழக்குகளில் கூட ஜெயேந்திரருக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்று இன்டர்போல் ஆராய்ந்து வருவதாகக் கேள்வி!

 

 இது நகைச்சுவையாம்! இதைப்படிக்கிற சங்கரமட பக்தருக்கு ஜெயேந்திரன் மீது பரிதாப உணர்வு வரும். நமக்கு கோபம் வருகிறது. இந்த எழுத்தை அது "ஜாலியாக கற்பனை' செய்ததாம். இந்த ஜாலியில் பாஸ்கியின் ரத்தக் கண்ணீர் தெரிகிறது.

 

 சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், ஆனால் இவர் சிரித்துக் கொண்டே அழுகின்றார்.


 இந்தக் காரியப் பைத்தியம் பாஸ்கி வேறு யாரும் அல்ல. தலைவர் ஸ்டாலினைப் பற்றி கேவலமாக எழுதிய, நம்ம "கக்கா' மதன், அதான் "ஆய்' மதன்  இவருக்கு அத்திம்பேர்!

                                                                        ---------------


 மொட்டைத்தலை என்றவுடன்தான் "சோ'வின் யோக்யதை ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயேந்திரன் கைதில் "சோ' என்ன சொல்லியிருப்பார்? அவர் எதுவும் சொல்லாமல் இருந்தாலே "அவர் கருத்து இதுவாகத்தான் இருக்கும்' என்பது முன் முடிவான ஒன்று. கழுதை வாய்திறந்தால் குயில் போலவா கூவும்?

 

 ஆனாலும், துக்ளக்கைப் படிக்கும்போதுதான் ஜெயேந்திரன் கைதில் இன்னொரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது. அதாவது "சோ'வுக்கு பைத்தியம் பிடித்திருப்பது.

 

 சங்கரமடம் அவரின் உயிராக இருக்கிறது. இப்படி ஒரு கைது நடந்திருப்பதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி சோவுக்கில்லை. பதட்டத்தோடு இருக்கிறார். பதட்டத்திலும் அவர் கருணாநிதியை வசைபாடுவதை, பெரியார் கொள்கைகளை திட்டித் தீர்ப்பதை நிறுத்தவில்லை. (பார்ப்பான் பைத்தியக்கார நிலையில் இருந்தாலும் பெரியாரைத் திட்டுவதில் மட்டும் தெளிவு இருக்கும்போல.)

 

 ஜெயேந்திரனைக் கைது செய்தது ஜெயலலிதா. சோ திட்டுவது கருணாநிதியை. (சோவிற்கு கடா பல்லில் வலி வந்தால் கூட கருணாநிதி சிரித்து சந்தோசமாக இருக்கிறார், அதனால்தான் எனக்குப் பல் வலிக்கிறது என்பார் போலும்.)

 

 "ஜெயேந்திரன் கொலை செய்திருக்கமாட்டார்' என்று உறுதியாக நம்புகிறார். ஆனாலும் "அரசு ஆதாரமில்லாமல் கைது செய்திருக்காது' என்றும் மிரளுகிறார். சோ குழம்புகிற குழப்பத்தில் அவர் மொட்டைத் தலையில் "மயிரே' முளைத்து விடும்போல் தெரிகிறது. அதனாலேயோ என்னவோ அவரின் "கேள்வி  பதில்' பகுதி வழக்கத்தைவிட அருவெறுக்கத்தக்க நிலையில் கேவலமாக இருக்கிறது.

 

 வி.எஸ். கவிதா மீனா,
செட்டிப்புலம்


கே: ஜெயேந்திரரை, சங்கரராமன் தொடர்ந்து ப்ளாக் மெயில் செய்து மிரட்டிக் கொண்டே இருந்திருக்கிறாரே! அது குற்றமில்லையா?


ப: பத்திரிகைச் செய்திகளை வைத்துப் பார்க்கிறபோது, சங்கரராமன் செய்தது "கிரிமினல் இன்டிமிடேஷன்' என்கிற குற்றத்திற்கான பிரிவின் கீழ் வரக்கூடிய தன்மை படைத்த செயல் என்று கூறலாம். இதைத் தவிர, வேறு பெயரில் மறைந்து கொண்டு, சம்பந்தப்பட்ட கடிதங்களில் சிலவற்றை எழுதியதால், அது தனிப் பிரிவின் கீழ் வரும். இரண்டுமே குற்றங்கள். ஒவ்வொரு குற்றத்திற்கும், இரண்டாண்டு காலம் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால் சங்கரராமன் உயிருடன் இல்லாதபோது, இது சட்டத்தை அறிந்து கொள்கிற சமாச்சாரமே தவிர, நடவடிக்கை கேட்கிற கோரிக்கை அல்ல.

 

 கொலை செஞ்சதுக்கு என்னய்யா தண்டனைன்னு கேட்டா, இவரு ப்ளாக் மெயிலுக்கான தண்டனையைப் பத்தி எழுதுறாரு. அப்போ சங்கரராமன் என்ன தற்கொலையா செஞ்சிக்கிட்டாரு? சோவின் இந்த வக்கிரத்தைப் படிக்கும்போது நமக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. ஒரு திரைப்படத்தில் சிவாஜி, சோவைப் பார்த்துப் பாடுவார், ""போட்டாளே, போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே'' என்று. இந்தப் பாடல் சோவின் கதாபாத்திரத்தைப் பார்த்துப் பாடிய பாடலாகத் தெரியவில்லை.

 

 ஜெயேந்திரன் கம்பி எண்ணுகிறார்; சோ பைத்தியக்காரனாகி இருக்கிறார். மக்கள் கை கொட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள். ஒரு சம்பவம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதில்லை. சிலர் உளறுவார், பலர் மகிழ்வார்.

 

                                                                       ---------------------


 கடைசியாக ஒன்று:


 பக்தர்கள் ஜெயேந்திரனை நம்ப வேண்டாத நேரத்தில் நம்பினார்கள். நம்ப வேண்டிய நேரத்தில் நம்ப மறுக்கிறார்கள். ஜெயேந்திரனை நாம் எப்போதுமே நம்பியதில்லை. ஆனால் இப்போது நம்புகிறோம். அவர் இந்தக் கொலையைச் செய்திருப்பார். இன்னும் இதற்கு மேலே பல கிரிமினல் வேலைகளையும் செய்திருப்பார்.

 

"அக்கிரகாரத்து அழகிகள்'

பார்ப்பனியம் மற்ற சாதிக்காரர்களுக்குச் செய்த தீங்கை விடவும் தன் சொந்தச் சாதிப் பெண்களுக்குச் செய்த தீங்கு சொல்லித் தீராது. விதவைகளை அவமானப்படுத்தி, கொடுமைப்படுத்தி, உயிரோடு கொளுத்தியிருக்கிறது பார்ப்பனியம். கங்கை நதியின் வற்றாத தன்மைக்குக் காரணம், அதில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட பார்ப்பன விதவைப் பெண்களின் கண்ணீரே என்றாலும் மிகையாகாது.

 

 சிறுமிகளை கிழட்டுப் பார்ப்பானுக்கு மணம் முடித்துக் கொடுமைப்படுத்தியது பார்ப்பனியம். பார்ப்பனத் திருமணங்களில் பெண்ணை தந்தை தன் மடியில்  உட்கார வைத்துத் "தாரை வார்த்துக் கொடுப்பது' பால்ய விவாகத்தின் மிச்ச சொச்ச பழக்கம்தான். சிறுமி மணமேடையில் அமராமல் விளையாட்டுத்தனமாக எழுந்து ஓடி விடாமல் தடுக்க, தந்தை மடியில் உட்கார வைத்துப் பிடித்துக் கொண்டதனால் ஏற்பட்ட பழக்கம் அது.

 

 "ஆணுக்குப் பெண் மட்டமில்லை'யென்று பர்ப்பனப் பெண்கள் கருதலாம். உண்மையும் அதுதான். அவர்கள் பிரதமர் பதவியில் கூட அமர முடியும், ஆனால் சங்கராச்சாரியாக முடியாது. ஏன் சங்கர மடத்தில் ஒரு குமாஸ்தா வேலை பார்ப்பதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி கிடையாது. ""வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்'' என்பது ஜெயேந்திரனின் "அருள் வாக்கு'. பார்ப்பனியம் என்பது மற்ற சாதியினரை மட்டுமின்றி பார்ப்பனப் பெண்களையும் கொடூரமாக ஒடுக்கி வந்திருக்கிறது. இந்தக் கணம் வரை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும், பார்ப்பனியத்திற்கு எதிரானவராகத்தான் இருப்பார். இருக்க வேண்டும். இதற்கு மேலும் பார்ப்பனப் பெண்கள் ஜெயேந்திரனுக்காக உண்ணாவிரதமிருந்தால், அவர்களை "அக்கிரகாரத்து அழகிகள்' என்றுதான் அழைக்க வேண்டி வரும்.


—  வே. மதிமாறன்