Language Selection

"நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இன வெறியர்களால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்த போது, அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.

இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள். அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

 

 

சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்று கேட்கும் போதெல்லாம், எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள் இருந்து எம்மக்களை மீட்க வேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப்போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்

"முருகனின் அவதாரமாம், சூரியத்தேவன் எனும் தம்பி பிரபாகரன்" நான் ஏன் ஆயுதம் ஏந்தினேன், ஏன் போராளியானேன் என்பதற்கு சொல்லும் காரணங்கள்.

இவ்வளவற்றையும் கண்டு கேட்டறிந்த, இவ் முருக அவதாரத்திற்கு, தமிழ்-மக்கள் மத்தியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை தெரியாது. சிங்களப் பேரினவாத இன-வெறியர்கள் போல், வடபகுதியின் உயர்சாதி வெறியர்களும் மேற்சொன்ன நெஞ்சையுருக்கும் பலவற்றைச் செய்தார்கள். இவையெல்லாவற்றையும் கேட்டு அறிந்திருந்தாலும், எனதாட்சியில் உது சரிவராது……?

இதனால் தான் இப்போராளி, தலைவனாயிருந்த மூன்று தசாப்தத்தில், தமிழர் சமுதாயத்தில் சாதியமும்-தீண்டாமையும் இல்லாமலே இருந்ததாம், இப்போ மீண்டும் தலைதூக்கியுள்ளதாம். இப்படியான சமூக-விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்களும் உள்ளார்கள். இது யாழ் சமூகம் பற்றிய புரிதலின்றிய உளறல்கள் ஆகும்.

1966-அக்டோபர் எழுச்சியும் அதன் போராட்டங்களும், சாதி_தீண்டாமை-அதன் அடியொட்டிய அடிமை-குடிமை முறைகளின் அகோரத்திற்கு பலத்த அடிகொடுத்து, அதை நெகிழ வைத்ததேயொழிய, முற்றாக இல்லாதொழிக்கவில்லை. இதன் அடுத்தகட்டப் பாய்ச்சல் தொடர்ந்திருந்தால் சாதி-தீண்டாமைக் கொடுமைகளின் பலவற்றை அடித்து உடைத்தெறிந்திருக்கும். "தமிழர்களில் இரண்டு விதமான தமிழர்கள்" எனும்; நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால் அன்றைய ஆண்டபரப்பரை அரசியல் இதைக் கண்டு அஞ்சிற்று. இதை தடுத்து நிறுத்த பெரும் பிரயத்தனங்களைச் செய்தது. அதில் (இதன் விபரத்தை இனி வரும் பகுதிகளில் பார்ப்போம்) வெற்றியும் கண்டது.

வெற்றியின் ஆரம்பம் தமிழ் ஈழமாகி, புலிகளின் மூன்று தசாப்த அரசியலுக்கு வித்திட்டது. புலிகளின் முப்பதாண்டு அரசியலில், இரண்டுவிதமான தமிழர்களின் மத்தியில் இருந்த சமூக முரண்பாடுகளும், அதன் தொழிற்பாட்டு செயற்பாட்டகமும் தமிழர் சமுதாயத்தில் மேல்வராவண்ணம், அடித்து இருத்தப்பட்டது. இதன் பரிணாமம் நீறு பூத்த நெருப்பாகவே இருநது வந்தது.

தவிரவும் "தம்பியின்" கால அரசியலில் தேசிய இனப்பிரச்சினையே தமிழ்-மக்களின் பிரதான முரண்பாடாகவும், அரசே பிரதான எதிரியென்ற வடிவத்தையும் எடுத்தது. இவரின் அரசிற்கெதிரான போராட்ட (தாக்குதல்) முறையால், தமிழ்மக்கள் சாதி-மத பேதமின்றியே தாக்கப்பட்டார்கள். புலிகளின் போராட்ட மார்க்கமும், அரசின் இனவெறி கொண்ட தாக்குதல்களின் உச்சமும், முழுத் தமிழ்மக்களையும் தமிழ்த்தேசியத்திற்குள் செல்ல வைத்தது. சாதிய-மத வேறுபாட்டிற்கு அப்பால் ஒன்றிணைத்தது. இதனாலேயே ஓடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்த ஏகப்பெரும்பான்மையான இளைஞர்களும்- யுவதிகளும் புலிகளின் படையணியில் (சாதியம் கடந்து) இணைந்தார்கள். இவ்வொன்றிணைந்த ஓட்டத்திற்கு தமிழ் மக்களும் பச்சைக்கொடியையே காட்டினார்கள்.

தமிழ் மக்களின் காலாகாலமான அரசியல், தமிழ்த்தேசியத்திற்கு வாக்களித்ததே. அவர்களும் கால-காலமாக தமிழ்மக்களுக்கு சொன்னது எங்களுக்கு வாக்களியுங்கள், உங்கள் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்பதேயாகும். இவ்வரசியல் ஓட்டத்திற்கு வங்குறோத்து வர, அது ஈழமாகியது.

மிதவாதத்தின் கையிலிருந்த ஈழம், ஆயத இளைஞர்களின் கைக்குவர அவர்களும் மிதவாதம் சொன்னதையே சொல்லி, வாக்குகளை இளைஞர்களாக அளியுங்கள் என்ற ஒன்றையே வித்தியாசமாக கேட்டார்கள். இளைஞர்களும்-யுவதிகளும் கேட்காமலேயே சென்றார்கள்.

தமிழ் மக்களும் "இந்தா பெடியன்கள் தமிழ்ஈழம் பெறப்போகின்றார்கள்" எனும் கனவோட்டத்தில் இளைஞர் இயக்கங்களை தம் பூமிப் பரப்பின் விளைபொருளாக்கினார்கள். இவ்விளை பொருள்களில் "பெரும் பொருள்" தானேயென (மற்றவைகளை இல்லாதாக்கி) தம்பி தளத்திற்கு வந்தார்.

தமிழ்ச் சமுதாயம் பிற்போக்கானதா?

இப்போ புலம்பெயர்வில் பிரபாகர உச்சாடனம் உசத்தி உச்சரிக்கப்படுகின்றது. காரணம் ஐயர் எழுதிய "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" எனும் நூலின் அறிமுகக் கூட்டச்சீசன் கொண்ட காலமாகும்! அண்மையில் கனடாவில் நடந்த இக்கூட்டமொன்றில் ரகுமான் ஜான் வாத்தியார் தமிழ் சமுதாயம் பற்றி பெரும் வகுப்பொன்று எடுத்துள்ளார்.

"இந்தவகையில் பார்த்தால் தமிழ் சமுதாயமானது மிகவும் ஒரு பிற்போக்கான சமூகமாகும். யாழ் சைவ வேளாள ஆணாதிக்க சிந்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருப்பதாகும். இதனைவிட விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூகமாகும். அரசாங்க உத்தியோகம், சிறு அளவிலான விவசாயம், மீன்பிடி மற்றும் உள்ளூர் சில்லறை வர்த்தகம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ள ஒரு பொருளாதார வளர்ச்சியற்ற ஒரு சமுதாயம். எமது சமுதாயத்தில் உயர்கல்வியை நாடுபவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமே என்ற போதிலும், அந்த கற்றலானது வெறுமனே நிபுணத்துவம் சார்ந்த கற்றல் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்டதாக அமையவில்லை என்பது வெளிப்படையானது"

டொனாமூர் ஆட்சிக்காலத்தில், அவ்வாட்சியினர் இலங்கைக்கு வாக்குரிமை கொடுக்க முன் வந்தபோது, டொனாமூர் ஆணைக்குழு முன் தோன்றி சேர் பொன்னம்பலம் அதற்கு எதிராக சாட்சியமளித்தார். வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்பதற்கு சொல்லப்பட்ட பெரும் காரணங்கள் "இலங்கைச் சமுதாயம் விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூகமாகும்" எனும் பாங்கிலேயேயாகும்


 

இராமநாதனின் வாக்குரிமை எதிர்ப்பானது, அது சிங்கள மக்களுக்கு கிடைப்பதென்பதைவிட, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்ற கவனத்தின் பாற்பட்டதே. இங்கே ஜான் வாத்தியாரும் இராமநாதன் போன்றே முழுத் தமிழ் சமுதாயத்தையும் பார்க்கின்றார். சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஓர் சமூகமாக்கின்றார்.

இது "சிங்களவர்கள் எல்லாம் மோடர்கள்" என்ற ஜி. ஜி. பொன்னம்பலம் முதல், இன்றைய தமிழ்த்தேசியம் வரையிலானவர்களின் கணிப்பிற்கு ஒப்பாகும்.

1966-ன் அக்டோபர் எழுச்சியின் பின், கிராமங்களை நோக்கி, தீண்டாமை ஒழிப்புப் வெகுஐன இயக்கப் போராட்டங்களை நகர்த்த முற்பட்டவேளை, கம்யூனிச கட்சிக்குள் ஓர் மாபெரும் விவாதம் நடைபெற்றது. இன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் களத்தில், அம்மக்களின் எதிரி யார்? நண்பர்கள் யார்? என்பதே.

தமிழர் சமுதாயத்தைப் பொறுத்தவரை, நிலமானிய ஆதிக்க சக்திகளான, உயர்-இந்து வேளாள மேட்டுக்குடியும், அதன் தொங்குதசைகளான சாதி வெறியர்களுமே, ஓடுக்கப்பட்ட மக்களின் எதிரிகளாக இருக்க முடியுமே தவிர, முழு உயர்சாதி மக்களும் அல்லர் என்ற முடிவோடும், ஒடுக்கப்பட்ட மக்கள் தமது போராட்டங்களில், உயர் சமூக மக்கள் மத்தியிலுள்ள, சாதிய முறையை எதிர்க்கும் ஐனநாயக, முற்போக்கு நல்லெண்ணம் கொண்டவாகளையும், ஐக்கியப்படக்கூடிய ஓடுக்கப்படும் அடித்தட்டு மக்களையும் அரவணைத்துப் போராட வேண்டும் எனும் முடிவிற்கும் வந்தது.

இம்மார்க்கம் கொண்டதோர் ஐக்கிய முன்னணிப் போராட்ட மார்க்கமே அக்காலகட்டத்தில் ஓடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தது.

இங்கேதான் தமிழர் சமுதாயம் பற்றிய பகுப்பாய்வில் ஜான் "மாஸ்ரர்" கற்றுக்குட்டி மாணவனாகின்றார். "தன்னியல்பு மற்றும் பிரக்ஞை ஆகியவற்றிற்கு இடையிலான உறவென்பது இயங்கியல் ரீதியானது" எனும் "ஆய்வாளர்" தமிழ் சமூகம் பற்றிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயங்கியல் பற்றிய ஆய்வுப் புரிதலில் ஓர் பதினேழு வயதுப் பிரபாகரனாகின்றார். ஏனெனில் அவர் முள்ளிவாய்க்காலில் விட்டுச்சென்றதை, (மே) பதினெட்டாக்கி குறுக்கினால் வரும் விடை இப்படித்தான் இருக்கும். ஏனெனில் நம்புங்கள் ஜான் மாஸ்ரரின் மே-18 தமிழ் ஈழமும் நாளை கிடைக்கும்.

1.சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)

2.சாதியமும் தமிழ்த்தேசியமும் (பகுதி-2)