01_2005.jpg

"உம்மோடு வராமல் உம்மை விட்டுப்
பிரிந்து போகும்படி என்னை
நீர் வற்புறுத்த வேண்டாம்
நீர் செல்லும் இடத்திற்கே
நானும் வருவேன்;
உமது இல்லமே எனது இல்லம்.
உம்முடைய இனமே எனது இனம்''..
சாவிலும் உம்மைவிட்டு
நான் பிரியேன்;
அப்படிப் பிரிந்தால் ஆண்டவர்
என்னைத் தண்டிப்பாராக!''

 

 விவிலியம்,
பழைய ஏற்பாட்டிலிருந்து.

 

 சங்கரராமன் வதைப் படலம் முடிந்து, ஜெயேந்திரன் ஜெயில் விஜயத்திலிருக்கும் இந்த நேரத்தில் ஸ்வாமிகளின் கோபியர் லீலைகள் குறித்த சத்தியங்கள் அவாள்களை அலங்கோலமாக்கி வருகின்றன. அதிலும் மற்றவர்கள் விதந்தோதுவதற்காக மட்டும் ஆச்சாரத்தை இறுக்கக் கட்டிக் கொண்டு அலைபவர்கள் நிலையோ மெல்லவும் விழுங்கவும் முடியாமல் பீதியில் இருக்கிறது.

 

 "குறையொன்றுமில்லை' என்று செத்துப்போன சீனியரின் அருள் வாக்கை (கல்கி தொடங்கப்பட்டதிலிருந்து?) தினத்தந்தியின் சிந்துபாத் போல நினைத்தபடியும் முடிவின்றியும் வெளியிட்டு சௌபாக்கியமாய் வாழ்ந்து கொண்டிருந்த "கல்கி' பத்திரிக்கையை ஜெயேந்திரனின் நித்திய பாகவதம் படுத்தோ படுத்தென்றும், பட்டுப் பட்டென்றும் படுத்துகிறது. நடப்பு வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி "மகா' பெரியவாளின் அருள் வாக்கை அலசி வெளியிடும் துன்பம் மட்டுமா, காணிக்கை போல காசு கொடுத்து "கல்கி' வாங்கும் மடிசார் மாமிகளுக்கும், ஜீன்ஸ் அப்ஸரஸ்களுக்கும் என்ன பதிலை ஜெபிப்பது?

 

 28.11.04 இதழில் இந்த தவிர்க்க முடியாத கஷ்டத்தை கடைசி பக்கத்திற்கு சாதுரியமாய்த் தள்ளியிருந்த கல்கி ஆசிரியர், இத்தகைய சோதனைகள் இந்து மதத்திற்குப் புதிதல்ல, ஜெயேந்திரர் நீங்கி விஜயேந்திரர் பதவி ஏற்க வேண்டும், பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தற்காலிக அதிர்ச்சியை நீக்கி காஞ்சி மடத்தை ராஜபாட்டையில் பீடு நடை போட வைக்க ஒருவர் உதித்தெழுவார் என்றும், இத்தருணத்தில் மடத்தை இந்து அறநிலையத்துறை மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கையை வன்மையாகக் கண்டித்துமிருந்தார். பதறிப்போன தி.மு.க. தன் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக, ""காஞ்சி மடத்தை அரசு ஏற்க வேண்டுமென கருணாநிதி பேசவில்லை. கல்கி என்ன ஆலோசனை வழங்கியதோ அதையே, மாலுமி சரியில்லை என்றால் கப்பலைக் கவிழ்த்து விடமுடியாது, புதிய மாலுமியுடன் கப்பல் செலுத்தப்பட வேண்டும் எனப் பேசியதாக''வும் 5.12.04 வாசகர் கடிதத்தில் (இது மட்டும் முதல் பக்கத்தில் கட்டம் கட்டப்பட்டு) குறிப்பிட்டிருந்தது. ராத்திரியில் யாரும் பார்க்காதபடிக்கு தெரு ஓரமாய் நின்று கரையும் கல்கி மாமியைக் கூட்டி வந்து முச்சந்தியில் வைத்து, ""நான் ஒரு தப்பும் செய்யவில்லை, மன்னியுங்கோ!'' என்று மன்றாடும் தி.மு.க. உயிர் வாழும் ஒரு செத்த கேஸ். தி.மு.க.வின் கையறு நிலையை விட கல்கியின் கையறு நிலை பரவாயில்லை.

 

 இதற்கிடையே ஜெய ஜெய சங்கர சங்கதிகள் கலரு, ஃபிகரு என்று கலாய்க்கத் தொடங்கியவுடன் 5.12.04, 12.12.04 இதழ்களின் தலையங்கங்கள் வேறு ஒரு "லைனில்' பேசின. அதன்படி இந்நிகழ்வு தமிழக மக்களை உணர்வுபூர்வமாகப் பாதிக்கவல்லது, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என நிரூபிப்பதற்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன, பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம் மீடியா மலிவாக வியாபாரம் செய்கிறது, எல்லோரும் வாயையும், பேனாவையும் மூடிக் கொண்டு வழக்கை விரைந்து முடித்து நீதி நிலைநாட்டப்படுவதற்கு உதவவேண்டும், இல்லையேல் பாரம்பரியம்மிக்க சங்கரமடம் இழிவுபடுத்தப்படும் என்று நைச்சியமான பார்ப்பன நடுநிலைமையுடன் சற்றே ஒழுக்கம், புலம்பல், அவலம், திமிர் கலந்து நெல்லை சாந்தி சுவீட்ஸ் மிச்சர் கணக்காய் கல்கியின் தலையங்கம் வெளிவந்தது.

 

 ஸ்வாமியின் ஆட்டம் அம்பலமானதற்குப் பின் தமிழக மக்களை அரவணைக்கும் தந்திரம் ஒருபுறம் இருக்கட்டும். பிரேமானந்தா முதல் ஜெயலட்சுமி வரை இதே மீடியா மலிவாய் வியாபாரம் செய்தபோது இதே கல்கியின் கண்ணியவான்கள் கடைசிப் பக்கத்திலேனும் இலைமறைகாய்மறைவாக நாசூக்காகவாவது கண்டித்திருக்கிறார்களா? இல்லையே. இப்போது எல்லாரையும் வாயை மூடச் சொல்லும் கல்கி, கடந்த ஆகஸ்ட் மாதத்திலாவது ஜெயேந்திரனின் "செல்'வாய், செவிவாய், கண் வாய், முகவாய், கீழ்வாய் அப்புறம் "அந்த' வாய்களையெல்லாம் "சீல்' பண்ணச் சொல்லியிருந்தால் இப்போது ஃபீல் பண்ணத் தேவையில்லையே, கூலாக இருக்கலாமே. அல்லது ஜெயேந்திரர், சங்கரராமன் இருவரிடமும் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று தனித்தனியாகப் பஞ்சாயத்தாவது செய்திருக்கலாமே.

 

 ஒன்றை மட்டும் ஒப்புக் கொள்ள வேண்டும். செத்துப் போன சீனியருக்கு மட்டும் விசுவாசமாக இருக்கும் கல்கி அவ்வப்போது கேள்வி  பதில் போன்ற துக்கடாப் பகுதிகளில் ஜெயேந்திரனின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளைப் போற்றவில்லை என்பதாகப் பதிவு செய்திருக்கிறது. அதற்கிணையாக ஆர்.எஸ்.எஸ்.இன் பிடியிலிருந்து பா.ஜ.க. நழுவி வந்து மத வெறியை விடுத்து ஒரு நல்ல இந்து தேசியக் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதும் கல்கியின் கொள்கையாகும். சமீபத்திய இதழில் கூட (ஜெயேந்திரரின்) ""கைது அரசியலாக்கப்படுவது எதற்காக'' என்ற கட்டுரையின் இறுதியில், ""இந்த நிகழ்வுகள் ஒரு விசயத்தைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. உலக நன்மைக்காக இறைவனை வழிபடும் ஒரு துறவி  மடாதிபதி  எந்தக் காரணம் கொண்டும் அரசியல்வாதிகளோடும், நிழல் மனிதர்களோடும் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பதே உத்தமம்'' என்று தெரிவித்திருந்தது.

 

 காலச்சுவடு முதல் கல்கி வரை மேற்கண்ட விளக்கத்தை மறைபொருள் இரகசியம் போல் ஓதுகின்றனர். மேலும் செத்துப்போன மகாபெரியவாள் இத்தகைய ஆர்ப்பாட்டங்களின்றி ஹமாம் போல நேர்மையாகவும், கோல்டு வின்னர் போல ஆரோக்கியமாகவும் வாழ்ந்தவர் என்பதையும் கல்கி அவ்வப்போது ஜபித்திருக்கிறது. 1994இல் மகா பெரியவாள் சமாதியாகும் போது சொத்து மதிப்பு 64 கோடியிலிருந்தது. இன்று 6000 கோடிக்குத் தாவியிருக்கிறது. இதில் மகா பெரிசால் ஆதாயம் அடைந்த சிலர் புதுப் பெரிசின் சாம்ராச்சியத்திற்குள் நுழைய முடியவில்லை. அதேபோல புதுப்பெரிசால் கொட்டை போட்டவர்கள் பாலபெரிசுடன் நெருங்கிப் பழம் தின்ன முடியவில்லை. பாம்புகள் ஒரே விதம் என்ற நிலையில் மகாப் பெரிசு "நல்ல' பாம்பாகவும், மற்றதுகள் மலை விழுங்கி மலைப்பாம்பாகவும் படங்காட்டி, பக்தர்களின் எச்சில் தகராறை பெரிசுகளின் ஆளுமை கொள்கைத் தகராறாகச் சித்தரிப்பது விஷமத்தனமாகும்.

 

 ஜெயேந்திரனின் தலித்துகள்  பகுதி விஜயம், ஸ்திரீகள் அந்தப்புர விஜயம், லோ கிளாஸ் ரவுடி தோஸ்த் தவிர சகல அரசியல், மேட்டுக்குடி நிழல் உறவு, அதிகாரத் தரகு, பார்ப்பனிய மேலாண்மை அனைத்தையும் மகா பெரிசு செய்து வந்தது. என்ன, இப்போது இருப்பது போல கேபிள் டி.வி., செல்யுகம் அப்போது இல்லை என்பதால் விளம்பரம் குறைவு என்று மட்டும் சொல்லலாம். மணிக்கொரு தடவை சரவணா ஸ்டோருக்காக, "ஜொலிக்குதே' என்று இளிப்பதற்கு சிநேகாவும், "அந்த அழகு பெண் நான், அந்த ஆரோக்கியமான அட்வைஸ் கோல்டு வின்னர்'என்று உளறுவதற்கு கோபிகாவும் இருப்பதை இன்றைய "தொழில்நுட்பப் புரட்சி' சாத்தியமாக்கியிருக்கிறது. இவையே அந்தகால டி.கே.எஸ். ரத்தினம் பட்டணம் பொடிக்கும், அங்குவிலாஸ் புகையிலைக்கும் சாத்தியமில்லை என்பதில் கொள்கைப் பிரச்சினை என்ற வெங்காயம் எங்கேயிருந்து வந்தது?

 

 திருபாய் அம்பானி உயிரோடு இருந்தபோது 83இல் ரிலையன்சின் ஆண்டு விற்பனை 5000 கோடியாக இருந்தது. இன்று அவர் மறைவிற்குப் பின்னர் அவர் வாரிசுகள் காலத்தில் ஆண்டு விற்பனை ஒரு லட்சம் கோடியாக மாறியிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இதை 5 லட்சம் கோடியாக மாற்றுவதாக முகேஷ் அம்பானி சபதம் எடுத்திருக்கிறார். கூடவே அவர் தம்பி அனில் அம்பானியுடன் சொத்துச் சண்டையும் எழுந்திருக்கிறது. இங்கே  திருபாய் நல்லவர், சொத்து குறைவாக வைத்திருந்தார், முகேஷûம் அனிலும் அவர் மாதிரியில்லை என்று எந்தக் கடைந்தெடுத்த முட்டாளாவது கனவிலும் உளற முடியுமா? கிட்டத்தட்ட இந்தியாவின் நிழல் அரசாங்கத்தை நடத்திவரும் ரிலையன்ஸ் கம்பெனியின் இன்றைய வாரிசுகள் இக்கலையை தந்தையிடம்தான் கற்றார்கள். ஆளும் வர்க்க அமைப்புக்களுடன் நெருக்கமின்றியோ, முறைகேடான உறவுகளின்றியோ ஒரு மடமோ, முதலாளியோ உருவெடுக்க முடியாது;  உயிர் வாழவும் முடியாது.

 

இன்று கல்கியின் அட்டைப்படத்தில் நடிகைகள் இடம்பெறும்போது அதே நடிகைகள் மடத்தின் அந்தப்புரத்தில் நுழைவதில் என்ன தவறு இருக்கிறது?

 

வேல்ராசன்