Language Selection

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட முன்னோடிகள்

“ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை” இக்கோசம் 70-ம். ஆண்டு தேர்தல் காலத்திலும், வட்டுக்கோட்டை மாநாட்டிலும் “தமிழ் ஈழத்திற்காக” ஓங்கி ஒலித்தது. தமிழர் கூட்டணியின் அன்றைய பிரச்சார மேடைகளின்” ஆஸ்தான கவிஞர் காசியண்ணா அவர்களால் இளைஞர்களை உசுப்பேத்துவதற்கும் பாடிய வரிகளாகும்.

இலங்கையில் தமிழ்-சிங்கள மன்னர்கள் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக ஆண்ட வரலாறு என்ற ஒன்றில்லை. அப்படியானால் இந்ந ஆண்டபரம்பரைகள், பரம்பரை பரம்பரையாக யாரைத்தான் ஆண்டுள்ளது? சாதியரீதியான ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர வேறு யாரையுமல்ல என்பதே நிதர்சனமாகும்.

யார் இந்த ஆண்ட பரம்பரைகள்?

ஆண்டாண்டு காலமாகவும், அதன் வழி-வழி வந்த உயர்-இந்து மேட்டுகுடி வேளாளம் ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி அடக்கி ஒடுக்கியது என்பதை பின்நோக்கிப் பார்ப்போம்.

1845-ல் உயர் இந்து வேளாளத்தின் மேட்டுக்குடியின் பிதாமகனாக ஆறுமுகநாவலர் அரங்கிற்கு வருகின்றார். நாவலரைப்பற்றி நாம் பாடசாலைகளில் எதைத்தான் படித்தோம்? சைவத்தையும்-தமிழையும் இரு கண்களாக பாதுகாத்த பெருமகனார் என்றே சொல்லித் தந்தார்கள்.

இதற்கப்பால் காலனியத்தின் வருகையால், மிசனரிப் பாடசாலைகளின் வருகையால், அதன் ஆங்கிலக் கல்வியால், தமிழ்மக்களின் இன-மத-மொழி, கலை கலாச்சாரப் பண்பாட்டியலில் ஏற்பட்டு வந்த உருக்குலைவிற்கு எதிராக போராடினார். இதை இலங்கையின் பல வரலாற்ராசிரியர்களும் பதிவு செய்துள்ளனர். இதற்கப்பால் அவர் கொலனிய எதிர்பாளர் ஆகவும் சொல்லப்படுகின்றார். இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை.

இதை தமிழ்மக்கள் மத்தியில் உள்ள சைவ-வேளாள ஆசிரியர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள், பெரும் புலவர்களால் அடித்துச் சொல்லவும் முடியும், பெருமை கொள்ளவும் முடியும். ஆனால் இவர்களைப் போன்று ஓடுக்கப்பட்ட மக்களால், நாவலர் கொலனிய எதிர்ப்பாளர் என ஏற்றிப்போற்றி பெருமை கொள்ளமுடியுமா?

நாவலருக்கு முந்திய அல்லது பிந்திய, அவரின் ஆண்ட பரம்பரைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் எத்தனை கல்விமான்களை உருவாக்கிற்று.  ஆறுமுகநாவலர் என்ற பெயரையோ, அவர் எழுதிய புத்தகங்களைக்கூட எழுதப் படிக்கத் தெரியாததோர், பாமரப் பஞ்சமப் பரம்பரையையே உருவாக்கி, அவர்களை அடிமை-குடிமை எனும் வாழவிற்கூடாக  ஆண்டாண்டு காலம் ஆண்டிற்று.

இவ்வகையில் நாவலரின் அன்றைய கொலனிய எதிர்ப்பு என்பது உயர்-இந்து வேளாளத்தின், சைவத்-தமிழ் பாதுகாப்பு என்ற ஒன்றுக்குள்ளேயே குறுக்கப்பட்டு, தன் கருமங்களை ஆற்றிற்று. உண்மையான கொலனிய எதிர்ப்பானால், அதில் ஒடுக்கப்பட்ட மக்களும் பங்கெடுத்திருக்க வேண்டும். ஆனால் நாவலரின் அன்றைய செயலாற்றல் ஒடுக்கப்பட்ட மக்களை சாதிய ரீதியாக புறந்தள்ளியது.

நாவலர் அன்று சைவத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டபோது, அவரால் வகுக்கப்பட்ட “சைவ சித்தாந்த ஆகமங்கள், ஆண்டாண்டு காலமாக பேணப்பட்டு வந்த சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கும், வர்ணாச்சிரம முறைக்கும் மேலும் வலுச்சேர்த்தது.

 

நாவலர் தன் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை சைவ-சித்தாத்தத்தின், வர்ணாச்சிரமத்தின் துணைகொண்டு, ஒடுக்கும் ஓர் உயர்-இந்து வேளாள சாதிவெறியராகவே செயற்பட்டார். அதற்கு நாவலரின் வர்க்கக் குணாம்சமும் பெருங்காரணி. ஒவ்வொரு மனிதனின் சமூக செயற்பாட்டிற்கும் பின்னால், அவனது வர்க்க குணாம்சம் பொதிந்திருக்கும்.

 

வர்க்க சமுதாயத்தில், அதன் சமூக ஓட்டத்தின் அன்றைய சமகால நிலையில் எது சமூக மேலாண்மையை தன் கையில் எடுக்கின்றதோ, அதன் மேலாதிக்கம், இன-மத வெறியாக, அதிகார வெறியாக, சாதிவெறியாக தனிநபரிலிருந்து, அதன் ஒட்டுமொத்த சமுதாயம்வரை வியாபித்திருக்கும். இதை சேர் பொன்னம்பலம் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம் முதல் இன்றைய தமிழ்த்தேசியம் வரை காணமுடியும்.

 

இதில் ஒன்றை விட்டு (சாதி-வர்க்கம்) ஒன்றைப் பார்ப்பது, முழுமையை விட்டு பகுதியைப் பார்ப்பதாகவே முடியும். ஒடுக்கபபட்ட மக்கள் மத்தியில் இதைக் கணக்கில் எடுக்காத சமூக முன்னெடுப்பாளர்கள்;பலர், இடறி விழுந்தெழுந்து,  “வல்லை வெளியின் முச்சந்தியில” நிற்கின்றார்கள். இதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.

1848-ல் யாழ்-வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆரம்பிக்கின்றார். இதனைத் தொடர்ந்து வடபுலம் முழவதும், இதே போன்ற சைவத் தமிழ் பாடசாலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இவைகள் யாவும் அமைக்கப்படும் இடங்களிலுள்ள உயர் சாதியினராலேயே அமைக்கப்படுகின்றன.

இப்படி அமைக்கப்படும் உயர் பாடசாலைகளில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு நினைத்துக்கூட பார்க்கமுடியாது. இக்காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சிவில் சமூக-வாழ்வும், தேசவழமைச் சட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே செயற்பட்டன.

காலம் காலமாய், நிலமற்ற மக்களாய், உயர்சாதியினரின் நிலங்களில் அடிமை-குடிமை வாழ்விற்கூடாக,  அவர்கள் கொடுப்பதை பெற்று இழிநிலை வாழ்வையே வாழ்ந்தார்கள். உயர்சாதியினரின் சாதி வெறி கொண்ட மேலாண்மையால், “உங்களுக்கா? உங்களுக்கேன் கல்வியறிவு? எனும் திமிர்ப்போக்கால், கல்வியறிவற்ற கைநாட்டுக்காரர்களாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இது கொலனியல் ஆடசிகள் வரை தொடராய்த் தொடர்ந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி

1844-ல் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில், அவர்கள் கொண்டு வந்த அடிமை ஒழிப்பு சட்டத்தின் ஊடாக, அவர்களின் சில மிசனரிப் பாடசாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு ஆங்காங்கே படிப்பதற்கு இடமளித்தார்கள்.

இப்படி அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், அங்கும் அவர்கள் புறக்கணிப்பிற்கும், இரண்டாந்தர வாழ்விற்கூடாகவுமே, கல்வியைக் கற்றார்கள். காற்சட்டை-சேட் அணிந்தோ, உயர்சாதி மாணவர்களுடன் (அம்பேத்கார் போன்று) சமமாக இருந்தோ படிக்க முடியாது. மானத்ததை மறைத்தால் போதுமெனும் உடுப்புடன், வெறும் நிலத்திலேயே இருந்தும் கல்வி கற்றனர். படிக்கும் பாடசாலைக் கிணறுகளில் தண்ணீர் அள்ளிக் குடிக்கவோ, அப்பாடசாலைகளின் விடுதிகளில் தங்கிப் படிக்கவோ இப்பிள்ளைகளுக்கு இடமேயில்லை. காரணம் இப்பாடசாலைகளின் நிர்வாகமும் சாதி அகம்பாவம் கொண்டவர்களின் (சைவ-வேளாள அதிபர்கள்-ஆசிரியர்கள்) கைகளிலேயே இருந்தது. இந்நிலையிலேயே வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஓடுக்கப்பட்ட சமூகத்தின் மாணவன் ஓருவன் தெரிவாகின்றான்.

 

வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியின் முதலாவது ஒடுக்கப்பட்ட மாணவன்!


1910-ம் ஆண்டு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எஸ். ஆர். ஜேக்கப் (ஜேக்கப் காந்தி) அவ்வூரின் யாழ்ப்பாணக் கல்லுரியில் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் மாணவனாகின்றார். அப்பாடசாலையின் அன்றிருந்த அதிபர் ஓர் பாதிரியாராக இருந்மையினாலும், அப்பாடசாலையில் இவரின் தந்தையார் ஓர் வேலையாளாக வேலை செய்ததாலுமே, இம்மாணவன் அப்பாடசாலையில் சேரமுடிந்தது.

ஜேக்கப் மாணவனாக சேர்ந்தவுடனேயே, சாதி அகம்பாவம் கொண்ட மாணவர்கள், அதைக் கண்டித்தும், பாடசாலையில் இருந்து நீக்கக் கோரியும், பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். “சேர்க்கப்பட்ட மாணவன் தனியொருவனாக பாடசாலையில் படிக்கும் வரை தொடர்ந்து பாடசாலையை நடாத்துவேன் என கூறி நின்ற அந்த அதிபரின் உறுதிநிலைபாட்டால், இவர்களின் பகிஸ்கரிப்பு நிறுத்தத்துடன் கல்வியைத் தொடர வேண்டியதாயிற்று.

இம்மாணவனே தன் நடுத்தரவயதில் கதர் ஆடை அணிந்து, சாதி-தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்து போராடிய ஜேக்கப் காந்தியாவார். இவருடைய நடை-உடை-பாவனையால் மக்கள் இவரை காந்தி என அழைத்தனர்.

இவரைப்போன்று, ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து மிசனரிப் பாடசாலையில் கல்வி கற்று சாதி-தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்துப் போராடிய மேலும் இருவரைப் பதிவு செய்யமுடியும். அவர்கள் தெல்லிப்பளை யோவல் போல், வட்டுக்கோட்டை ஏ.பி. இராஜேந்திரா ஆகியோர்கள் ஆகியோராவர்.

யோவல் போல் தெல்லிப்பளை மிசனரிப்பாடசாலையில் கல்வி கற்று, சிறிதுகாலம் ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆசிரியத் தொழிலில் மேலே செல்லவிடாது, உயர்சாதி அகம்பாவம் அவரைத் தடுத்தது. அதனால் அத்தொழிலையே தூக்கியெறிந்துவிட்டு, கட்டிட ஒப்பந்தக்காரர் ஆகினார். அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் முதலாவது ஸ்தாபன அமைப்பையும் உருவாக்கினார். அதன் மூலம் தன் வாழ்நாள் பூராக சாதிய-தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தீரத்துடன் செயற்பட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அத்தியாயத்தில் இம்மூவர்களின் அடியொற்றியே அடுத்த கட்டப்போராட்டங்கள் பரிமாணம் பெறுகின்றன.

-தொடரும்

20/02/2012

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)