Language Selection

சாதியம் இல்லாததாகப் போகின்றதா? சாதியப் போராட்டம் முற்றுப் பெற்றுவிட்டதா?

கட்டுரைக்குள் செல்லமுன் எனது முந்தைய “வெள்ளாள மாக்சிஸம்” பற்றிய பதிவிற்கு வந்த வெறும் “தலித் ஓதல்களை” விடுத்து,  தோழர்கள்  (இலங்கை-தமிழக-புகலிட) நண்பர்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் கவனத்தில் கொள்வேன். குறித்த கட்டுரை இரு சம்பவங்களை மாத்திரம் கவனத்தில் எடுத்து எழுதப்பட்டது. குறிப்பாக தீபம் தொலைக்காட்சியில் நடந்த உரையாடலையும், தற்போது புகலிடத்தில் தலித்தியம் பேசியபடி இலங்கை அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பற்றியுமே பார்க்கப்பட்டது. அதை விரிவாகப் பார்த்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதாலேயே விமர்சனங்கள் குவித்தன. அவ்விமர்சனங்களை கருத்தில் கொண்டு என் பதிவுகளைத் தொடர்வேன். தவிரவும் விடயத்திற்கு வருகின்றேன்..

கடந்த மூன்று தசாப்தம், முள்ளிவாய்க்கால் பட்டறிவிற்கு ஊடாகவேனும் தமிழத்தேசியத்தின் இளம் துடிப்புக்கள் இன்னும் பாடங்களைப் படிக்கவில்லை. உயர் இந்து மேட்டுக்குடி வோளாளத்தின் (பழையபடி வேதாளக் கதைகள்) சிந்தனை மயமாக்கல்களுக்கூடாகவே தமிழ்ஈழ மீட்புத் தொழிற்பாடுகள் நடைபெறுகின்றன.

முள்ளிவாய்க்காலின் முடிவுரைக்கு ஊடாக தமிழர் தாயகத்தின் சமகால நிலைபற்றிய புரிதல்கள் இன்றிய நோக்கில் இருந்தே அரசியல் கருத்தாக்கங்களுக்கு வந்தடைகின்றார்கள். இன்றைய நிலையில் வடபிரதேசம் மூவின மக்களின் குவிமையமும், சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களையும் தன்னகத்துள் கொண்டதென்ற ஸ்தூலத்தைக் காணத்தவறுகின்றார்கள்.

சாதியம் இல்லாததாகப் போகின்றது?

 

 

இன்றைய வடபிரதேச நிலையின், விகிதாசாரததைக் கண்கொண்டால், ஒடுக்கப்பட்ட மக்களே பெரும்பான்மையினர். இதை வைத்துக்கொண்டும், வெளிநாடுகளில் யாருமற்ற வேளாளக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஓடுக்கப்பட்ட மக்களின் வீட்டு வேலைகளுக்கு கூலி வேலைக்குப் போகின்றார்கள், கலப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு (அந்தியேஸ்டி-திவசம்) சில ஐயர்மார் வருகின்றார்கள்.  எனவே இது சமன் வடபகுதியில் சாதியத்திமிர் இல்லை. அதன் வீச்சில்லை! காலப்போக்கில் இல்லாததாகும். என இப்படியுமொரு கண்டுபிடிப்பு.

இக்கண்டு பிடிப்பினை ஒரு சில “நவீன தலித்தாசிரியர்”கள் எனப்படுவோர் சொல்ல, இதற்கு சிற்சில தமிழ்த்தேசியர்களும், ஆமாப் போட்டு, நீங்கள் சொல்வதை புலிகள் அப்பவே இல்லதாக்கி விட்டார்கள் என சிஞ்சிஞ்பாப் போடுகின்றார்கள். சாதியத்தை இல்லாதொழித்த புலித்தேசியத்தை விடுவோம். இந்த “சாதி இல்லையாம் எனும் “தலித்தாசரியர்”கள், டானியலின் பஞ்சமர் நாவலையும், அவரின் ஏனைய நாவல்களையும் படிக்கவில்லையோ? அவர் பஞ்சமர் பற்றி சொன்னதையாவது கண்டு கொள்ளுங்கள்.

வசதியற்ற உயர் இந்து வேளாள இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உள்ள “பஞ்சமர்” எனப்படுவோர்களின் வீடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றார்களா? கலப்புத் திருமணம் செய்கின்றார்களா? இவர்கள் வீடுகளுக்கு ஐயர்கள் போகின்றார்களா? இதை விடுத்த ஏனைய சமூகத்தவர்களுக்குள்ளேயே மேற்சொல்லப்பட்ட நிகழ்வுகள் நிகழ்கின்றன. இதற்குப் போய் சாதியம், சாதிய வீச்சு, அடக்குமுறை இல்லையென்போர்களின் ஆய்வுகள் நந்திக்கடலுக்குள்ளும் தூக்கி வீசப்படவில்லையோ?  இப்போ இதை கீரிமலைக் கடலிலாவது….

இன்றைய இளம் சமுதாயத்திற்கு, நீங்கள் பிறப்பதற்கு முன் யாழ்ப்பாணத்தில் றெயில் ஓடியதெனச் சொன்னால், அவர்கள் அதை எப்படி மனக்கண் கொண்டு தரிசனை செய்வார்களோ, அதேபோன்று தான் அவர்கள் பிறப்பதற்கு முந்திய சாதிய அடக்குமுறை பற்றிச் சொன்னால்,  இன்றைய தலைமுறையின் மனக்கண் தரிசனையும் அப்படித்தான் இருக்கும்.

வடக்கில் சாதித் திமிருடன் கூடிய அடக்குமுறை கொண்ட, உயர்-இந்து வேளாளத்தில், புத்தூர் மழுவராயர்-சித்த மணியகாரன்-உடையார் பரம்பரையும், அவர்களின் அரவணைப்பாளர்களின் அனர்த்தனங்கள் கொடுமைகள் இன்றைய நவீன சாதிச்சங்க-புலிச்சங்கக்காரர்களுக்கு பெரிதாகத் தெரியாது.

அன்றைய உயர் சமூகப் பெண்கள் மேற்சட்டையுடன் கூடிய உயர்தரச் சாறியை அணியலாம், ஒடுக்கப்பட்ட பெண்கள் மேற்சட்டை அணியக் கூடாது, சேலையை அவர்களின் மார்பகங்கள தெரியாமல் அணிய வேண்டும். ஓர் தாயானவள் சுகவீனத்தின் நிமித்தம் மேற்சட்டை அணிந்ததிற்கு, அத்தாயின் சட்டையை கையால் கிழிக்கவில்லை. கொக்கத்தடி கொண்டு கிழித்தெறிந்தார்கள். கண்பார்வை குறைந்த வயோதிபர் ஒருவர் வீதியால் சென்ற பொழுது, தன்னைக் கண்டு தோழிற் சால்வை எடுக்கவில்லையென, இவரை மரத்தில் கட்டி அடித்த சாதித் திமிரும், சாதிவெறியும், கடந்த மூன்று தசாப்த புலிப் பாசிஸத்தின் ஒட்டுமொத்த சமூக ஓடுக்கலுக்குள், நீறு பூத்த நெருப்பாகவே இருந்தது.

இன்றும் புலிப்பாசிசம் போன்றதோர், ராணுவப் பாசிஸக் கட்டமைப்பிலேயே வடபகுதியின் சமூகக் கட்டுமானம் உள்ளது. இக்கட்டுமானத்தை  மேலெழுந்தவாரியாக பார்த்தால், அதிலும் இங்கிருந்து செல்லும் “நவீன வித்துவான்களுக்கு” சாதியம் நெகிழ்ந்ததென்ற மாயையைத்தான் கொடுக்கும்.

இன்று வடபகுதியில் மீள்குடியேற்றம் அதற்குள் அகப்பட்டு, பஞ்சம்-பசி-பட்டினியால் வாடுகின்ற, காணாமல் போன சொந்த-பந்த-உறவுகளை தேடியழுகின்ற, மானிடத்திற்கு உதவமறுக்கும், புலம்பெயர்ந்ததின் சிலதுகள், கோவில் கட்டி, பெரும் கோபுரம் கட்டி, கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து தேரும் கட்டியிழுக்கின்றார்கள். இவையெல்லாம் இந்துத்துவ வைதீக ஆகமங்களுடன் கூடிய நெறிமுறைகள் கொணடதல்லவா?

இந்த நெறிமுறைகளின் உள்ளடக்கங்கள் எதைத்தான் கொண்டுள்ளன?. இதற்குள் சாதியத்தை நிலை நிறுத்தும் சமூகக் கூறுகளும் செயற்பாடுகளும் அல்லவா உள்ளது. இன்றும் இப் பெரும் கோவில்களின் சாமியைக் காவும், தேரில் ஏற்றும் “பாக்கியம்”, பஞ்சமர் எனப்படும், ஏகப்பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு

இன்றும் இல்லை.  இன்னும் இதுபோன்ற பற்பலவான சாதிய நிலை நிறுத்தக் கட்டுமானங்களை இப்பொழுதும் எம்சமூகம் தன்னகத்தே கொண்டுதான் உள்ளது.

எந்தவொரு சமூகவியக்க ஓட்டத்திலும்,  அதன் சமூக கலாச்சார-பண்பாட்டியியல், மக்கள் இயங்கு தளத்தில் கேட்பாரற்ற நிலையில் இயங்கும் போதுதான், அதன் அதிகாரவெறி கொண்ட உண்மைத் தன்மையைக் காணமுடியும். எம்சமூகத்திலுள்ள உயர்-இந்து வேளாளத்தின் அதிகாரவெறி கொண்ட கேட்பாரற்ற “சுதந்திரவோட்ட”மும்

செயற்பாடும், காலம் காலமாக இருந்தவொன்று. அது தன்குணம் கொண்டு சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கிய அதிகார வெறியை புலிகள் எப்படி எத்தளத்தில் இல்லாதாக்கினார்கள்? எதற்கூடாக எப்படி சாதியமைப்பு தகர்ந்தது.?

சாதிய தீண்டாமை அடக்கி-ஒடுக்கல்களுக்கு எதிராக, (சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஐன இயக்கம்) ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உருவான தனிநபர் போராட்டங்களாலும் சரி, ஸ்தாபனப்-போராட்டங்களாலும் சரி, சாதி அமைப்பு தகரவில்லை.

மாறாக சாதிய-தீண்டாமைக் கொடுமைகளை உடைப்பதற்கான பாதைகளைத் திறந்தன. எனினும் அதை நோக்கி செல்ல வேண்டிய நீண்ட நெடிய, புரட்சிகர வெகுஐனப் போராட்டப்பாதை இடையில் தடைப்பட்டது. அதுவும் தமிழ்த்தேசிய அரசியலின் செயற்பாட்டால் தடைப்பட்டது.

-தொடரும்

05/02/2012