எனக்கு வலப்பக்கம் சாலையில் ஒரு பெண் நடந்து கொண்டிருக்கிறாள். இன்னொருமுறை திரும்பிப் பார்க்க வைத்த பெண்.
சுடிதாரின் துப்பட்டாவை இடுப்பில் இறுக்கிக் கட்டி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவள் எடுத்து வைக்கும் அடிகள் அழுத்தமும், அதிர்வும் ஏற்படுத்துபவைகளாக இருந்தன. கைகால்களிலிருந்த உடைகளை வேகமாக மேல் நோக்கிச் சுருட்டி விட்டுக் கொண்டும், குனிந்து கைகளை படார், படார் என்று துடைகளில் அறைந்து கொண்டும் நடந்தாள். ஏதோ சில கோபமான வார்த்தைகள் தெளித்துக் கொண்டிருந்தன. அவளுடைய உயரம் நிச்சயமாக ஆறடி இருக்கும். கருத்த நிறம், கூர்மையான மூக்கு பின்னிய கயிறு போன்ற நீண்டு தொங்கும் குதிரைச் சடை. அணிந்திருந்த சுடிதார், ஒரு ஆண் பேண்ட் சட்டை போட்டதைப் போலிருந்தது. எலும்புகளாலான உடம்பு. ஆனால் இரும்பு போன்ற எலும்புகள், கைகளிரண்டும் வீச்சரிவாள் போல நீண்டு தொங்கிக் கொண்டிருந்தன. அவளுக்குப் பின்னால் வாலைப் போலத் தொடரும் இரண்டு குட்டிக் குழந்தைகளும் அவளுக்கு இணையான வேகத்தில் வளைந்து துருதுருவென்று நடந்து கொண்டிருக்கிறார்கள். அவள் நின்றதும் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அலை ஓசையைத் தவிர சுற்றிலும் அமைதி.
அமைதியைக் குலைக்கும் விதமாக வந்தது அந்தச் சத்தம். சாலையின் வலப்பக்கமாக நடந்து கொண்டிருந்த அவளுக்கு பின்னாலிருந்து வெறித்தனமாய்க் கத்திக் கொண்டே வேகமாய் வந்த ஒருவன் வந்த வேகத்தில் அவள் மீது பாய்ந்து இரண்டு கையாலும் அவளுடைய குதிரைச் சடையை பிடித்து வட்டமாகச் சுழற்றினான். தலை கிறுகிறுக்கும்படி தரையில் பல சுற்று சுற்றிவிட்டு பிறகு நேராக நிறுத்தி வைத்து அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதைவிட்டான்.
அவளிடமிருந்து எந்தச் சத்தமுமில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்ற இடத்திலேயே உட்கார்ந்து விட்டாள். பிறகு ஏதோ திட்டினாள். குழந்தைகள் இரண்டு பேரும் அவளை மிரண்டு போய்ப் பார்த்தார்கள். பிறகு அவள் பின்னால் போய் நின்று கொண்டார்கள். அவள் அடிவாங்கி நிலை குலைந்து போயும் குழந்தைகள் அழவில்லை. அவளும் வயிற்றைப் பிடித்து வலியை அடக்கிக் கொண்டாள்.
அடுத்த கணமே சற்றும் எதிர்பார்க்காதபடி வேகமாக எழுந்தவள் ஒரே பாய்ச்சலில் அவனுடைய சட்டையைச் சுருட்டிப் பிடித்தாள். ஒரு கை சட்டையைப் பற்றியிருக்க, மறுகையால் அவனுடைய வயிற்றிலும் மூக்கிலும் மாறிமாறிக் குத்தினாள். அவளுடைய நீண்ட கைகளின் வேகமான வீச்சு அவனுடைய உடம்பில் கனமாக இறங்கியது. இடைவிடாமல் குத்தியதில் நிற்க முடியாத நிலையில் துவண்டவனை கீழே தள்ளிவிட்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு மூச்சிரைக்க நின்று திட்டிக் கொண்டிருந்தாள்.
சிறிதுநேர அமைதிக்குப் பிறகு மீண்டும் கத்திக் கொண்டே எழுந்தவன் வேகமாக அவளை நெருங்கி இரண்டு கைகளையும் பிடித்து முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு முரட்டுத்தனமாக முறுக்கினான், முறுக்கிய நிலையிலேயே வைத்துக் கொண்டு நடு முதுகிலேயே ஓங்கி ஓங்கிக் குத்தினான். அவள் தாங்க முடியாத வலியால் பச்சை பச்சையாகத் திட்டிக் கொண்டே கத்தினாள். அவனோ எதையும் கண்டு கொள்ளாமல் வெறி பிடித்தவன் போலப் பல்லைக் கடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டேயிருந்தான்.
அவள் உடலை ஒரு சுழற்று சுழற்றி தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். என் முகத்தில் "சப்'பென்று துப்பியது போலிருந்தது. விடுபட்ட அதே வேகத்தில் அவனைக் கீழே தள்ளியவள் வயிற்றிலேயே குடல் கூழாகும்படி மிதிமிதியென்று வெறி தீரும் வரை மிதித்துத் தள்ளினாள். மீண்டும் எழமுயன்றவனை நிமிர்த்தி வைத்துக் கொண்டு தன் காலுடைகளை மேலே சுருட்டி விட்டுக் கொண்டாள், பிறகு அவனுடைய நடு நெஞ்சிலேயே ஓங்கி ஒரு உதைவிட்டுவிட்டுக் கராத்தே வீரர்கள் நிற்பது போல ஒரு காலை முன்னாலும், பின்னாலும் அதேபோல கைகளையும் வைத்துக் கொண்டு நின்றாள். கூட்டம் இரண்டு பேரையும் சுற்றி பாதுகாப்பு வளையம் போல வட்டமாகக் கூடிவிட்டது.
அரசுக் குடியிருப்புகளின் மாடிகளில் நின்றுகொண்ட வாய் பிளக்கப் பார்த்துக் கொண்டிருந்த குடும்பப் பெண்மணிகள் அதிர்ச்சியால் மிரண்டு போயிருந்தார்கள். இருவருக்கும் என்ன பிரச்சினை ஏன் சண்டை என்று கூட அறிந்து கொள்ள முடியவில்லை. அவனை யாரும் இப்படி அடித்து விட முடியுமா என்றெண்ணி எல்லோரும் மலைப்பாகப் பார்த்தனர். கீழே விழுந்தவன் அதே நிலையில் அசைவின்றிக் கிடந்தான். அவனை வாய் ஓயுமளவுக்குத் திட்டித் தீர்த்துவிட்ட பிறகு கலைந்து போயிருந்த தலைமுடியை வாரி முடிந்து கொண்டாள் அப்பெண். பிறகு அவனை அலட்சியமாக ஒரு எத்து எத்தி விட்டு நகர்ந்தாள். குழந்தைகளும் ஓடிப் போய் அவளோடு ஒட்டிக் கொண்டு நடந்தன.
காற்று வேகமாக வீசியதில் சாலைப் புழுதியும் பழைய குப்பைகளும் சுழன்றடித்தன. லேசான தூறலும் விழுந்து கொண்டிருந்தது. தரையில் கிடந்தவன் அசைந்தான். எதையோ எதிர்பார்த்து நின்ற கூட்டம் நகரவில்லை. கண்களைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் அதேநிலையில் கிடந்தவன் சில நொடிகளில் எழுந்தான். சுற்று முற்றும் பார்த்துவிட்டு சாலையின் மூலையில் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் கருங்கற் குவியலை நோக்கி நடந்தான். குனிந்து கைகளுக்கு அடக்கமும் கனமுமான ஒரு கருங்கல்லை தேடி எடுத்தான். பிறகு அவளை நோக்கிக் கத்திக் கொண்டே ஓடினான்.
அங்கிருந்து சற்று தூரம் கூட கடந்திடாதவள் சத்தம் கேட்டுத் திரும்பினாள்; அவன் கல்லுடன் நிற்பதைக் கண்டு தயங்கித் தயங்கி முன்னால் வந்தாள். அவன் அடிக்கப் போவது போல கைகளை உயர்த்தி ஓங்கியதும் குழந்தைகளைத் தனக்குப் பின் மறைத்தபடி மேலும் முன்னே வந்து நின்றாள்.
""தோ பார் நீ ஆம்பளின்னா ஒத்தக்கி ஒத்த நில்லு. ""பொட்ட மேரி கல்லெடுத்துனு வர்றாத'' என்று கைகளால் மார்பில் அறைந்து கொண்டு சவால் விட்டாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளை நெருங்கியவன் அடிப்பதற்கு வாகாக மிக அருகிலேயே நின்று கொண்டு அவருடைய கண்களுக்குக் கீழேயும் மூக்குக்கு மேலேயுமான நடு இடத்தில் வசமாக கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஓங்கி ஒரே இறுக்காக இறுக்கி விட்டான். ""சத்'' என்ற ஒரே ஒரு சத்தம் தான், கூழுக்குள் கல்லைப் போட்டால் விலகுவது போல கருங்கல்லின் கூர்மை சதையை பிளந்து கொண்டு இறங்கியது.
கூட்டம் எவ்வித அதிர்ச்சிக்கும் ஆட்படாமல் அதேபோல பார்த்துக் கொண்டிருந்தது. இவ்வளவு பேரில் யாருக்குமே தடுக்க மனம் வரவில்லையா, இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே. அடுத்த கணமே அவன் ஓடிவிட்டான்.
கைகளால் முகத்தைப் பிடித்தபடி உட்கார்ந்தவளின் வேதனை முகக் கோணலிலும், லேசான அனத்தலிலும் மட்டுமே தெரிந்தது. கண்கள் லேசாகக் கலங்கியிருந்தாலும் சொட்டுக் கண்ணீர் கூட வெளியேறவில்லை. குழந்தைகளும் விழித்தபடி கூட்டத்தையும் அவளையும் பார்த்தனவே தவிர அழவில்லை. நானும் கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்திருந்தேன். இந்தக் குழந்தைகளுக்கு அழவே தெரியாதா என்று அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
இரண்டே நிமிடம்தான் அவளுடைய அமைதி, பிறகு கடுங்கோபத்தோடு எழுந்தவள் ஊற்றைப் போல் பெருக்கெடுக்கும் இரத்தத்தை வழித்து வழித்து உதறினாள், முகத்தில் கைகளைக் கொண்டு காயத்தை தொடும்போது வெள்ளைச் சதை வெளியே தொங்கியது. பொட்டுக் கண்ணீர் கூடச் சிந்தாமல் எப்படி இவளால் கல்லைப் போல் இருக்க முடிகிறது?
தொடர்ந்து காயத்திலிருந்து வெளியேறி முகத்தின் வழியே இறங்கும் இரத்தத்தால் அவளுடைய பற்களெல்லாம் சிவப்பாகிப் போயிருந்தன. இரண்டு கைகளிலும் உள்ளங்கையிலிருந்து முழங்கை வரை இரத்தம் நீளமான கோடுகளை இழுத்திருந்தது. சுற்றிலும் தெறித்து விழுந்த இரத்தத் துளிகள் குழந்தைகளின் முகத்திலும் தெளித்திருந்தன. இரத்தங்கலந்த எச்சிலைக் காறித் துப்பிவிட்டு எழுந்தவள், அவன் ஓடிய பக்கம் ஓடினாள்.
அம்மா அருகில் இல்லை என்றாலே அழத் துவங்கி விடும் குழந்தைகளைப் போல அவர்கள் அழவில்லை, ஏதோ புரிந்து கொண்டதைப் போல அமைதியாகி நின்றார்கள். ஓடியவள் சில நிமிடங்களிலேயே கோபமாகத் திட்டிக் கொண்டே திரும்பி வந்தாள்.
""பொட்ட பாடு பையா, நீ சீனிவாசபுரத்துக்கு வராமலா பூடுவ. வா உனுக்கு அங்க வச்சிக்கிறேன்'', ""ஆம்பிளியாடா நீ கல்லெடுத்துனு அடிக்கிறயே தூ, பாடையில பூடுவ நீ'' என்று மீண்டும் காறித் துப்பிவிட்டு உடைகளைச் சரிசெய்து கொண்டாள். பிறகு உட்கார்ந்து குழந்தைகளின் முகத்தில் தெறித்திருந்த இரத்தத் துளிகளைத் துடைத்து விட்டு அவளைத் திட்டிக் கொண்டே நடந்தாள். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இப்போது கூட்டம் ஓரளவு கலைந்து போயிருந்தது. அவள் பக்கம் எந்தக் குற்றமிருப்பதாகவும் உணரமுடியாமல், அவள் பக்கம்தான் ஏதோ நியாயம் இருப்பதாகவும் நினைத்து மீதிக் கூட்டம் மனம் கனத்து நின்றது.
கூட்டத்தோடு கூட்டமாக நின்று இதுவரை சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த நான்கைந்து பேர் கொண்ட கும்பலிலிருந்த ஒருவன், ""யார்ரா அவ, அவ பாட்டுக்கும் அட்சினு போயினேருக்கா, கொரலுக்குடு அவளுக்கு'' என்றான். உடனே கும்பலிலிருந்த இன்னொருவன் பலமாகக் கையைத் தட்டி கத்தினான். ""ஏய்... இங்க வாம்மே'' அந்தக் கும்பல் நன்றாக குடித்திருந்தது. அவர்களில் சிலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆடி ஆடி நேராக நிற்க முயன்று கொண்டிருந்தார்கள்.
போய்க் கொண்டிருந்தவள் நின்று திரும்பிப் பார்த்தாள்.
""ஒன்னத்தாம்மே இங்க வா'' என்று கத்தினான்.
""இன்னா'' என்றபடி அங்கேயே நின்று கொண்டு கேட்டாள்.
""இன்னாவா'' என்றபடி அவளை நோக்கி நடந்தவர்கள், ""இன்னா இன்னான்ற, அறிவில்ல உனக்கு, யார் மேலன்னா கல்லு பட்டிச்சின்னா இன்னா பண்ணுவ'' என்றான். அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் இன்னமும் லேசாக வழிந்து கொண்டேதானிருந்தது. அதைத் துடைத்துவிட்டுக் கொண்டே சொன்னாள்.
""ஐய நானா மொதல்ல கல்லெடுத்துனு அட்சேன், என்னான்ட கேக்குற, அவன போயி கேளு'' என்று சாதாரணமாகக் கூறிவிட்டுக் கிளம்பினாள். உடனே கூட்டத்திலிருந்த இன்னொருவன் ""நீதாண்டி மொதல்ல கல்லெடுத்துனு அட்ச, பொம்பளியா நீ பஜாரி, பஜாரி'' என்றான். நடந்தவள் வேகமாகத் திரும்பி ""தோ பார் வாடி போடின்றதெல்லாம் ஒன் வீட்டாண்ட வச்சிக்க. என்னான்ட வாணாம் மர்ரியாத்த கெட்டுடும்'' என்றாள். அம்பு போன்று வந்த அவளுடைய வார்த்தைகளைச் சீரணித்துக் கொள்ள முடியாத கும்பல்,
""ங்கோத்தா பொம்பளன்னு பாத்துனுகீறோம். மொவளே அட்சா கண்ணு முழி பேந்துடும். எங்கள இன்னா ஒம் புருசன் மாரி பொட்டப்பயன்னு நெனச்சினியா போடி... போடின்னா...'' என்று அடிக்கப் பாய்ந்து கொண்டு வந்தார்கள். அவள் பாதுகாப்பாக கைகளை முகத்துக்கு குறுக்கே வைத்துக் கொண்டாள். அந்தக் கும்பலைச் சிலர் தடுக்கவும் அமைதியானது. பிறகு கூட்டத்திலிருந்த சிலர் ""இன்னாம்மா நீ பொம்பளியாட்டமா கீற பத்ரகாளியாட்டம் ஆடுறியே'' என்றார்கள். அந்த நிலையிலும் அவள் அதைக் கிண்டல் செய்தாள். ""இன்னாது? அப்போ பத்ரகாளி பொம்பள இல்லியா இன்னா'' என்றாள்.
""எப்பா, பொம்பளைக்கு இருந்தாலும் இவ்ளோ வாயி இருக்கக் கூடாதுப்பா'' என்றும். ""என்னா திமிரா பேசுறா'' என்றும் திட்டினார்கள். மீண்டும் குடிகார கும்பலிலிருந்த ஒருவன், ""பொம்பளியா இவ பஜாரி... பஜாரி ஆம்பளிய அடிக்கிறாள்னா இன்னா கொயுப்புடா இவளுக்கு'' என்றான். நெருப்பாய் தகித்துக் கொண்டு கிளம்பும் அத்தனை ஓங்கிய குரல்களுக்கும் மத்தியில் அவள் குரல் சற்று கம்மிப் போயிருந்தது.
""யோவ் இன்னாய்யா பெரிசா நாயம் பேசுற? அவன் என்ன அட்சான், நானும் அட்சேன், உங்களுக்கு இன்னாத்துக்கு இம்மாங்காண்டாக்கீது.'' அவள் பேசி முடித்த அடுத்தகணமே குடிகார கும்பலிலிருந்த ஒருவனுக்கு கடகடவென்று சூடு மண்டைக்கு ஏறிவிட்டது.
""ங்கொம்மாள இன்னாடி உனுக்கு இவ்ளோ திமிரு, தேவிடியா வுட்டா எங்களியே அட்சிடுவ போலிருக்கே'' என்று கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வேகமாகப் பாய்ந்து காயம்பட்ட இடத்திலேயே முட்டியைக் குவித்து ஓங்கி ஒரு இறக்கு இறக்கினான்.
அய்யய்யோ... எம்மாஆ... என்று வீறிட்ட அவளுடைய அலறல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த உணர்ச்சிகளை மொத்தமாகக் கட்டவிழ்த்து விட்டது, அழுகை பீறிட அப்படியே தரையில் விழுந்தாள். உப்புக் காற்றில் உறைந்து கொண்டிருந்த இரத்தம் சூடாகி மறுபடி வெளியேறி முகம் முழுவதும் வழிந்தோடியது. அழுகை அவளுடைய கட்டைக் குரலிலிருந்து வெறித்தனமாக வெளிப்பட்டு ஒலித்தது. அவள் யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. விரிந்த தலைமுடியும், சிவப்புச் சாயத்தில் முக்கி எடுத்தது போல முகமும் தோற்றத்தைப் பயங்கரமாக்கியிருந்தது.
முதுகு குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். முகத்திலிருந்து இரத்தமும், உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டை இழந்து சுரக்கும் கண்ணீரின் கரிப்பும் கலந்து ஓடி தரை மணலில் விழுந்து நிலத்தைச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. மழை நின்ற பிறகு குடிசையிலிருந்து சொட்டும் நீரைப் போல கொட்டிக் கொண்டிருந்தது இரத்தம். அவள் துடைத்து விட்டுக் கொள்ளவில்லை.
அடித்துவிட்டுப் போனவர்களை வெறிகொண்டு வாங்கடா என்று அழைப்பது போல ஆவேசத்துடன் அழுதாள். அம்மாவின் அழுகையைப் பார்த்தவுடன் குழந்தைகளும் அலறி அழ ஆரம்பித்தன. அழுகையானாலும் அவர்கள் குரல் நிற்கவே இல்லை.
குழந்தைகளுடைய முகத்தில் தெறித்திருந்த இரத்தத் துளிகளை துடைத்து விட்டபோது அவள் முகத்தில் இரத்தம் இழுத்து விட்டிருந்த சிறு சிறு கோடுகளின் வழியே கண்ணீர் வழிந்தோடியது. அதை தங்களுடைய பிஞ்சுக் கரங்களால் துடைத்து விட்டுக் கொண்டே அந்தக் குழந்தைகள் அழுதன.
· பாண்டியன்