12052021ஞா
Last updateச, 09 அக் 2021 9am

ஏகாதிபத்திய பயங்கரவாதமே, அனைத்து பயங்கரவாதத்துக்குமான அச்சாணி

மூலதனம் உலகமயமாகின்ற இன்றைய வரலாற்றுப் போக்கின் உள்ளடக்கமே, மக்களின் வாழ்வியல் மேலான பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதத்தை எதிர்த்து மக்கள் போராட, இதன் மீதான எதிர் பயங்கரவாதம் அவசியமான நிபந்தனையாகின்றது. இந்தவகையில் பாட்டாளி வர்க்கம்; மக்கள் முன்னெடுக்கும் பயங்கரவாதத்தின் உறுதிமிக்க பங்காளியாகவும், அதை தலைமையேற்று நடத்தும் முன்னணிப் படையுமாக, வர்க்க வரலாறு முழுக்க நீடிப்பது அதன் புரட்சிகர வர்க்க குணம்சமாகும்.

உலகைச் சூறையாட ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையிலான போட்டியுடன் ஆப்கான் மீது நடத்திய ஆக்கிரமிப்பு, மேலும் ஆழமான ஏகாதிபத்திய உட்பிளவை அகலமாக்கி வருகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தாக்குதலை தொடங்கவும், மற்றைய ஏகாதிபத்தியங்கள் பல்வேறு வழிகளில் ஆப்கானில் காலூன்றத் தயங்கவில்லை. அந்த மக்களின் சொந்த அவலங்கள் மேல், தமது சொந்த நலனை அடைவதை அடிப்படையாக கொண்டே ஏகாதிபத்தியங்கள் தலையீடுகின்றன. உலக மக்களை ஏமாற்றி, ஆப்கான் மக்களின் அவலத்தை புதிய வழியில் சூறையாடத் தொடங்கிவிட்டனர். ஆப்கான் தேசிய வளங்களையும், அவர்களின் உழைப்பை சூறையாட விரும்பும் ஏகாதிபத்திய மூலதனங்கள், எல்லை கடந்த வகையில் தேசிய நலன்களை அழித்து சூறையாடுவதில் போட்டி போடுகின்றன. இந்த போட்டிகள் ஆப்கானில் கைக் கூலிகளை உருவாக்குவதிலும், அந்த கைக் கூலிகளை உள் முரண்பாட்டில் இருந்தே தேர்ந்தெடுப்பதன் மூலம் புதிய மோதல்கள் தயார் செய்யப்படுகின்றன. அதிகாரப் போட்டிகளை தற்காலிகமாக மூட்டைகட்டி வைக்க கோரும் சர்வதேச நிலைமை, வலுக்கட்டாயமாக ஒரு மூட்டையாக்கியுள்ளனர். ஏகாதிபத்திய முரண்பாடும், உள் முரண்பாடுகளும் இணைந்து, இந்த மூட்டையை சிதறடிக்கும் அளவுக்கு வீங்கிப் போய் கிடக்கின்றது.

40 000 உளவுத் தகவல்களை ஆதாரமாக கொண்டு 279 540 கோடி ரூபா (இலங்கை) செலவில், அமெரிக்க தன்னிச்சையாக பில்லாடனை அழிக்கத் தொடங்கிய யுத்தம், உலகளாவிய அனைத்து நாடுகளையும் ஏதோ ஒரு வகையில்; சம்மந்தப்பட வைத்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களையடையத் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்புக்கு தேவைப்பட்ட பணத்தை, உலக வங்கி, ஐரோப்பிய வங்கி, இஸ்லாமிய வங்கி ஊடாக அறுவடை செய்ய உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகளாவிய மக்களின் அற்ப சேமிப்புகளை எல்லாம் கொள்ளையிட்டு, அந்த மக்களின் உழைப்பை சூறையாடியும், தேசிய வளங்களை வரைமுறையற்ற வகையில் கற்பழித்து வரும் இந்த வங்கிகளே, இந்த ஆக்கிரமிப்புக்கான பணத்தையும் வழங்குகின்றது. ஆப்கான் மக்களின் உழைப்பு, அவர்களின் தேசிய வளத்தை வரைமுறையற்ற வகையில் கற்பழித்து சூறையாடவும், அயல் நாடுகளின் எண்ணை வயல்களை கொள்ளையிடவும் இந்த ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியத்துக்கு அவசியமான நிபந்தனையாக இருந்தது.

முன் கூட்டியே தயாராக இருந்த இந்த ஆக்கிரமிப்புக்கு தேவைப்பட்ட ஒரு காரணத்தை, பில்லாடன் என்ற அடிப்படை மதவாதியின் தனிமனித பயங்கரவாத நடவடிக்கையே துணை போனது. அமெரிக்க இராணுவ தலைமையகம் மற்றும் அமெரிக்க இதயமான பொருளாதார கோபுரங்கள் மேல் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்பை நியாப்படுத்தி நடத்த ஒரு நெம்பாகியது. ஜ.நா ஊடான ஆக்கிரமிப்பை அமெரிக்கா அல்லாத ஏகாதிபத்தியம் முன் மொழிந்த நிலையிலும், அதை நிராகரித்த அமெரிக்க தனியான ஆக்கிரமிப்பையே முன் வைத்து தொடங்கியது. இதற்கு துணை நிற்க மற்றைய ஏகாதிபத்தியத்திடம் அமெரிக்க கோரிய போதும், அதை நிராகரித்த ஏகாதிபத்தியங்கள் தனித் தனியாகவே அவை ஒவ்வொன்றும் ஆக்கிரமிப்பை திட்டமிட்டன. ஐ.நா ஊடான ஆக்கிரமிப்பு ஆப்கானிலும் அயல் நாடுகளிலும் ஏகாதிபத்திய நலன்களை தமக்கிடையில் பங்கிடமுடியும் என்று கருதியே அதை அமெரிக்கா அல்லாத ஏகாதிபத்தியங்கள் கோரின. இதற்கு மாறாக அமெரிக்கவோ நேரடி ஆக்கிரமிப்புக்கு ஊடாக தனது நலனை மட்டும் அடையக் கோருவதை தனது நோக்கமாக கொண்டிருந்தது.

இந்த ஏகாதிபத்திய முரண்பாட்டில் அமெரிக்கா படை தனது ஆக்கிரமிப்பை தொடங்க முன்பே, ருசியா முந்திக் கொண்டது. வடக்கு கூட்டணிக்கு 182 டாங்கிகளையும் (வயமெ), 36 கெலிகளையும், 50 ஏவுகனைகளையும் அதற்கான செலுத்திகளையும், 10000 ஏ.கே ரக துப்பாக்கிகளையும், 150 தொன் மற்றைய ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளையும் முதற் கட்டமாக வழங்கியது. இதன் மூலம் அமெரிக்கா நலன்கள் மேல் பாரிய அடியை ருசியா ஏகாதிபத்தியம் வழங்கியது. இது போன்ற உதவிகளை பல்வேறு குழுக்களுக்கு ஈரான் முதல் ஐரோப்பிய நாடுகளும் வழங்கின. ஐரோப்பிய படைகளும், பிரிட்டிஸ் படைகளும் எல்லை யோரங்கள் முதல் உட்பகுதிவரை தன்னிச்சையாக இறக்கப்பட்டன. அனைத்தும் மனிதபிமான உதவி என்ற பெயரில், உலகத்தின்; முன் சத்தியம் செய்தனர். ருசியா படை தலைநகரில் தீடிரென இறங்கி இராணுவ முகாம் ஒன்றை அமைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. காபூலுகான முதல் உயர் மட்ட மூன்று அமைச்சுகளின் விஐத்தை ருசியா நடத்தியது. ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையில் போட்டியிட்டபடி, ஆப்கானை தனது இராணுவ பொருளாதார செல்வாக்கு மண்டலமாக கொண்டு வரும் தன்னிச்சையான ஆக்கிரமிப்புகளின் தொடர்ச்சியில், ஆழமான முரண்பாடுகள் வெடிப்பதை தடுத்து நிறுத்தவே ஐ.நா தலையீடு தொடங்குகின்றது. ஐ.நாவுக்கு ஊடான கூட்டு ஆக்கிரமிப்பை மறுத்த அமெரிக்கவும், அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பை நடத்த மேற்கு மற்றும் ருசியாவும் முயன்று தோற்ற நிலையில், தன்னிச்சையான படையிறக்கங்களை நடத்தினர். இந்த ஏகாதிபத்திய முரண்பாட்டின் தொடர்ச்சியில் தான், ஐ.நா கொண்டு வரப்படுகின்றது. தத்தம் நலன்களை தக்க வைத்தபடி, இந்த ஆக்கிரப்பின் செலவுகளை ஈடுகட்டவும், உலக மக்களை ஏமாற்றவும், ஐ.நா ஓரு விபச்சார தரகனாக களமிறங்கியுள்ளது. சர்வதேச அமைதிகாக்கும் படை என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளனை ஒருங்கிணைக்கும் ஐ.நா, ஏகாதிபத்திய நலன்களை தக்க வைப்பதை நிபந்தனையாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றது. அதன் அடிப்படையில் தான் சர்வதேச அமைதிப்படை ஆக்கிரமிப்பின் மேல் நிறுவுகின்றது.

பில்லாடனை பிணமாக்குவது அல்லது உயிருடன் பிடித்தல் என்று கூறியபடி அமெரிக்கா தொடங்கிய ஆக்கிரமிப்பு யுத்தம், மேலும் ஆழமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பில்லாடனை உயிருடன் பிடிக்கவோ, பிணமாக மீட்கவும் முடியவில்லை. அதே நேரம்  ஆப்கானை தனது முழுமையான செல்வாக்கு மண்டலமாக கொண்டு வரவும் முடியவில்லை. ருசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் ஆதாரிக்கப்பட்டு ஆயுதபாணியக்கப்பட்ட கைக்கூலிப் படையான வடக்கு கூட்டணியின் முன்னேற்றம், அமெரிக்காவின் முழுமையான நலன்களை சிதறடித்துள்ளது. தலைநகரான காபூலுக்குள் வடக்கு கூட்டணி உட்புகக் கூடாது என்ற எச்சரிக்கையை மீறி, வடக்கு கூட்டணி காபூலைக் கைப்பற்றியது. ஏகாதிபத்திய மோதல்கள் அப்பட்டமாக தெருவுக்கு வந்த நிலையில், அமெரிக்க உள் நாட்டு மோதலை துரிதப்படுத்தும் புதிய செயல்களிகளில் வலிந்து செயற்படுகின்றது. ஆப்பகானில் தலிபான் மற்றும் அல்காயிதா இராணுவம் சிதறிக்கப்பட்ட நிலையில், வடக்கு கூட்டணி மற்றும் உள்ளுர் குழுக்களும் ஆப்;கானை முழுமையாக கைப்பற்றியுள்ளனர். ஆனால் அமெரிக்கக் குண்டு வீச்சை தாலிபான்கள் அல்லது அல்காயிதா மேலாதாக கூறிக் கொண்டு, மக்கள் மேல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலை கூட கால இடை வெளியில்; நடத்தி, கொத்து கொத்தாக மக்களை கொல்லுகின்றனர். இதன் மூலம் ஈராக்கில் விட்டுவிட்டு நடத்தும் தாக்குதல் போன்று ஆப்கான் மீதும் தாக்குதலை தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம், தொடர்ச்சியாக  ஏகாதிபத்திய முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட ஆக்கிரப்புக்குரிய சூழலை தக்கவைத்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியில் புதிய உலக நெருக்கடிகள், ஆசியாவை சுற்றி அகலமாக வித்திடப்படுகின்றது. இந்தியா பாகிஸ்தான் யுத்த நிலை, இலங்கையில் இனப்பிரச்சனை மேலான தீர்வு ஊடான தலையீடு, ஈராக் மற்றும் ஆப்கான் என்று விரிந்த தளத்தில், ஏகாதிபத்திய மோதல்களை அடிப்படையாக கொண்ட நெருக்கடிகள் ஆசியாவில் குவிய வைத்துள்ளது.

உலகளாவிய ஏகாதிபத்திய மோதல்களும், உள்நாட்டில் அதற்கெதிரான போராட்டமும் கூட உலகளாவிய நிகழ்ச்சிகளாகிவிட்டன. இதன் தொடர்ச்சியல் தனிமனித பயங்கரவாத வலதுசாரி குழுக்கள் தொடங்கி மக்கள் திரளமைப்பைக் கொண்ட வர்க்கப் போராட்டம் வரை உலகளாவிய போராட்ட நிகழ்ச்சித் திட்டமாகிவிட்டது. இந்த நெருக்கடியில் மூலதனம் ஏகாதிபத்தியங்களையும் அதன் கைக் கூலி அரசுககளையும் ஆதாரமாக கொண்டு, சொந்த மக்களை அடக்கியாளவும்  மூலதனத்தை உலகமயமாக்க கோருவதுடன், அதை நிபந்தனையாகவும் விதிக்கின்றது. இதன் தொடர்ச்சியில் உலகெங்கும் பயங்கரவாதக்  கொடூர சட்டங்களை, மக்களுக்கு எதிராக ஜனநாயக பராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமாக்கியுள்ளனர், சட்டமாக்கின்றனர். ஜனநாயக அரசுகள் ஜனநாயகம் என்ற சுரண்டும் வர்க்கம் சார்ந்த சட்ட எல்லைக்குள், தொடர்ந்து சுரண்டவும் தேசிய வளங்களை சூறையாடவும் அதை தக்க வைக்கவும் முடியாத நிலையில், பயங்கரவாத சட்டத்தை ஆதாரமாக கொண்டே மக்களை அடக்கியாள தொடங்கிவிட்டன. இங்கு ஒரு மனிதனுக்கு சுரண்டல் அமைப்பின் எல்லைக்குள் பெற்றிருந்த ஜனநாயக உரிமையை வழங்க மறுப்பதே, பயங்கரவாத சட்டத்தின் அடிப்படையும் உள்ளடக்கமுமாகும்;. அதாவது ஒரு மனிதன் தனது உழைப்புக்கு சொந்தம் கொண்டாடடும் உரிமைக்காக போராடடும் உரிமையையும், தனது உழைப்பின் ஆதாரமான தேசிய வளத்தை பாதுகாக்க போராடும் உரிமையை மறுப்பமே பயங்கரவாத சட்டத்தின் மையமான குறிக்கோலாகும். இதன் அடிப்படையில் ஒரு மனிதன் தான் எழுத, பேச, சிந்திக்க, அமைப்பாக இணைய, அதை அடிப்படையாக கொண்டு போராடும் உரிமையை நசுக்குவதே, இந்த பங்கரவாதச் சட்டத்தின் அடிப்படையான நோக்கமும் குறிக்கோலுமாகும்;. இந்த சட்டமூலம், வரைமுறையற்ற வகையில் ஒரு மனிதனை சிறையில் கேட்பாரின் அடைக்கவும், சித்திரவதை செய்யவும், அவனி;ன் சிந்திக்கும் சிந்தனை ஆற்றலை அழிக்கவுமே, பயங்கரவாதச் சட்டம் இந்த சுரண்டும் ஜனநாயக அரசுகளுக்கு அவசியமாக நிபந்தனையாகவும் இருக்கின்றது. ஆதாரங்கள், சாட்சிகள் மேல் நீதி விசாரணையையே இந்த ஜனநாயக அமைப்புக்குள் கோரும் உரிமையை, இந்த பயங்கரவாத சட்டங்கள் தனி மனிதனுக்கும், அவனைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும் நேரடியாக மறுக்கின்றது. இதன் மூலம் சமூகத்தின் மேல் நேரடியான அடக்குமுறையை ஜனநாயகம் கையாளுகின்றது. இராணுவச் சட்டங்கள் மற்றும் பயங்கரவாதச் சட்டங்கள் இந்த உலகமயமாதலை விரிவாக்க அடைப்படையாகவும் நிபந்தனையாகவும், ஏகாதிபத்தியத்துக்கும் அதன் கைக் கூலியரசுகளுக்கும் அவசியமாகிவிட்டது. அமெரிக்க, பிரிட்டன், கனடா, இந்தியா.... முதல்; ஆர்ஜென்ரீனா வரையிலான உலகெங்கும் இந்த அவசரகாலச் சட்டங்கள் மற்றும் இராணுவ சட்டங்கள் மட்டுமே, அந்த மக்களை அடக்கி ஆளவும் அடிபணிய வைக்கும் ஒரு நவீன ஆயுதமாகிவிட்டது. பயங்கரவாதச் சட்டம் மூலம் மக்களை அடக்கியாள்வதே உலகின் புதிய வகையான ஜனநாயகமாக, சுதந்திரமாக மாற்றப்படுகின்றது.

எஞ்சியுள்ள சொந்த தேசிய எல்லைக்குள் இந்த ஜனநாயக விரோத சட்டங்களை ஆழமான வகையில் வக்கிரமாக கையாளப்படுகின்றது. அகதி, மதம், இனம், நிறம், பால், சாதி, வர்க்கம் என்று முன்னிலைக்கு வரும் முதன்மை சமூக முரண்பாடுகள் மேல், வரைமுறையற்ற கற்பழிப்பை இந்த பயங்கரவாதச் சட்டம் ஜனநாயகமாக்கின்றது. மக்களை அகதி, மதம், இனம், பால், நிறம், சாதி, வர்க்கமாக பிளந்து, அந்த பிளவை நியாப்படுத்தும் வகையில், இந்த பயங்கரவாதச் சட்டம் செயற்படுகின்றது. அப்பாவி மக்கள் முதல் குறிப்பான நபர்கள் வரை பல பத்து என்று தொடங்கி ஆயிரக்கணக்கில் சிறைகளில் தள்ளி சித்திரவதையை இந்த சுரண்டல் அமைப்பு ஜனநாயகமாக்கின்றது. இந்தியாவில் தடா என்ற பயங்கரவாதச் சட்டம் சீக்கிய - காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க என்ற பெயரில், இரண்டு வருட ஆயுளுடன் அழுலுக்கு வந்தது. ஆனால் 1985 முதல் 1994 வரையிலான 9 வருடமாக ஆட்டம் போட்ட இந்த வக்கிர ஜனநாயகம், இந்தியா முழுக்க வரைமுறையற்ற கைதையும் சித்திரவதையையும் நடத்தியது. மொத்தமாக ஒன்பது வருடத்தில் 76 000 பேரை இதன் கீழ் சித்திரவதை செய்து சிறையில் அடைத்தனர். இதில் எந்த விதமான குற்றச் சாட்டுமின்றி 25 சதவீதம் பேரை நீண்ட காலத்தின் பின் விடுவித்தனர். 35 சதவீதமான கைதுக்கே வழக்குகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் 95 சதவீதம் குற்றம் நிரூபிக்கப்படமால் விடுவிக்கப்பட்டனர்.  ஒரு சதவீதத்தினருக்கு குறைவாகவே குற்றம் நிருபிக்கப்பட்டது. 1994 தடா நீக்கப்பட்ட பின்பான 1997 இன் இறுதியில்; கைதானோர் 4528 பேர். இதில் 6 சதவீதம் பேர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 5 சதவீதம் பேருக்கு குற்ற அறிக்கை தாக்குதல் வெய்யப்பட்டது. 89 சதவீதம் பேர் எந்த வழக்குமின்றி சிறையில் அடைத்து சித்திரவதை செய்கின்றனர். அதே நேரம் தடா சட்டத்தின் கீழ் 6 709 பேர் சிறைகளில் அடைத்து வதைத்தனர். இவர்களில் 6 சதவீத வழக்கே விசாரிக்கப்பட்டது. இவற்றில் 65 சதவீத வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்படமால் விடுவிக்கப்பட்டனர். 2.5 வீதம் மட்டுமே குற்றம் நிருபிக்கபட்டது. 2000ம் ஆண்டு மாசி வரையில் காசுமீர் மாநிலத்தில் தடாவின் கீழ் 20000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் எந்த ஒரு வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஒரு பயங்கரவாதச் சட்டத்தின் வெட்டமுகத் தோற்றம் இதுதான். இந்த உலகளாவிய வகையில் இதன் பொதுத் தன்மை ஒன்றேயாகும். புதிய பொடாவும் இதைத் தாண்டி செயற்படுவதில்லை. மக்களின் உணர்வு பூர்வமான சிந்தனைகளை மழுங்கடிக்கவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை நலமடிக்கவுமே, இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகாரத்தில் உள்ள சுரண்டும் வர்க்க சுதந்திரமே ஜனநாயகம் என்பதை, சுரண்டும் வாக்கத்துக்கு ஏற்படும் நெருக்கடிகளின் போது தெளிவுபடவே பயங்கரவாதச் சட்டம் மூலம் நிறுவி விடுகின்றனர்.

இன்று உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய விரிவாக்க நலன்களை உலகமயமாக்கும் ஜனநாயகத்தை தக்கவைக்க, உலகளவில் பயங்கரவாதச் சட்டம் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்ளப்படுகின்றது. இதை உதிரியான தனிநபர் பயங்கரவாத தாக்குதல்களின் போது அல்லது மக்கள்திரள் பயங்காரவாத போராட்டங்களின் போது அமுல் செய்யப்படுகின்றது.  அண்மையில் அமெரிக்க இராணுவ தலைமையகம் மற்றும் மூலதன கோபுரங்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளில் பயங்கரவாதச் சட்டம் அழுலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் சந்தேகத்தின் பெயரில் 2000 மேற்பட்டோரை சிறையில் தள்ளியுள்ளனர். இவர்கள் வெளியாருடன் தொடர்பு கொள்ள முடியாத, ஜனநாயக இருட்டில் சித்திரவதை செய்து வதைத்து ஒப்புதல் வாக்கு மூலங்கள் பெறப்படுகின்றன. பல வருட சிறை முதல் ஆயுள் தண்டனை மரண தண்டனை என்று அமெரிக்க ஜனநாயக சுதந்திரம், வக்கரித்து கிடக்கின்றது. வெளி நாட்டவர்கள் வரைமுறையற்ற வகையில் கைது விசாரணை என்று அவமானப்படுத்தப்படுவதுடன், சந்தேக கண் கொண்டு நோக்கும் அமெரிக்க கொலிவூட் கலாச்சாரம் பண்படாக மாறிவிட்டது. இந்த வக்கிரத்தை புரிந்து கொள்ள இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் மகனும், எதிர் காலத்தில் ஏகாதிபத்திய இந்தியா கைக் கூலியாக செயற்பட முனையும் குடும்ப வாரிசையும்; கூட, 6 மணி நேரம் சந்தேகத்தின் பெயரில் அமெரிக்க ஜனநாயக பாசிசம் கைது செய்து வைத்திருந்தது. சாதரண மக்களின் கதியை நாம் இதனுடன் ஒப்பிட்டே தெளிவாக புரிந்து கொள்ள முடியும். "அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் எப்போதும் குறுதி படிந்துள்ளது" என்ற எழுதிய விமர்சகர் ஒருவர் எழுதினர். அதை கனடா ஜனநாயக பராளுமன்ற பிரதிநிதிகள், அமெரிக்க எதிர்ப்புவாதி என்று முத்திரை குத்தி கண்டனம் செய்தனர். நான் "அமெரிக்காவை வெறுக்கின்றேன்" ("ஐ hயவந யுஅநசiஉய") என்று கூறியவருக்கு 60 நாள் சிறைத் தண்டனையை அண்மையில் கனடா ஜனநாயகம் வழங்கியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ச் புஸ் "நீங்கள் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக யோசித்த பிற்பாடே சொல்லுங்கள். இல்லையேல் சிக்கல்கள் ஏற்படலாம்" என்று அமெரிக்க ஜனநாயகத்தின் பெயரில் உலகையே மிரட்டுகின்றார். தனிமனிதனின் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதை உலகமயமாக்கின்றார்.

இதன் அப்பட்டமான வக்கிரத்தை இயல்பான வடிவமாக்கின்றன இன்றைய செய்தி அமைப்புகள். டைம்ஸ் பத்திரிகை இந்த தாக்குதலை "மேற்கத்திய நாகரிகம் மற்றும் மதிப்புகளின் மீதான வெறுப்பு" என்று வருணித்து யுத்தவெறியை பிரகடணம் செய்கின்றது. "தொலைக் காட்சிகள் சண்டைக்கு போவதை காட்டுகின்றார்களே, சண்டை நடப்பதாக கூறுகின்றார்களே, ஆனால் சண்டையின் விளைவை காட்டவில்லையே" என்று எனது மகள் ஒரு கேள்வியாக என்னிடம் கேட்டாள். இந்த கேள்வி ஆழமான அறிவியிலடிப்படையில் கேட்காது, தற்செயலாகவே என்னிடம் எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்வி விட்டுச் செல்லும் சமுதாயம் பற்றிய பார்வை ஆழமானவை. யுத்த விளைவையும் அதன் பதிப்பையும், இன்றைய நவீன செய்தியமைப்பு மக்களுக்கு மறுப்பதை திட்டவட்டமாக இந்தக் கேள்வி நிர்வணமாக்கின்றது. யுத்த விளைவுகள் மூலதனத்தின் நகாரிக காடடுமிரண்டித் தனத்ததை, அதன் செய்திப்  படமே அம்பலாப்படுத்திவிடும் என்ற அளவுக்கு யுத்த கொடுரங்கள் வக்கரித்துவிடுகின்றது. செப் 11ம் திகதி தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க சார்பு பத்திரிகை முதல் அமெரிக்காவுக்கு எதிரான முற்போக்கு பத்திரிகை வரை கோபுரத்தை மையப்படுத்தி, அதை மட்டுமே செய்தியாக்கின்றனர். உலக ஆக்கிரமிப்பு தலமையகமான பென்டகன் தாக்குதல் பற்றிய செய்தியை திட்டமிட்டே மறைப்பதில் தொடங்கி உலகமயமாதலுக்கான அமெரிக்கா செய்தியை மீள அனைவரும் வாந்தியாக்கின்றனர். அமெரிக்கா ஆக்கிரமிப்பின் நேரடி விளைவு மற்றும் அதன் விளைவுகளை பற்றிய எந்த செய்தியையும் இந்த செய்தியமைப்பு செய்தியாக்குவதை ஜனநாயக விரோதமாக கருதுகின்றனர். ஆக்கிரமிப்புக்கு எதிரான மேற்கு போராட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் மிகவும் கடினமான நிலையிலும் நாள் தோறும் இடிபாடுகளின் அருகிலேயே நடக்கும் சிறு பிரச்சார பணியிலான எதிர்ப்பு போராட்டங்களை மூடிமறைத்தனர், மூடிமறைக்கின்றனர். அதேநேரம் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான பிதற்றல்களை முன்னிலைப்படுத்தி, ஆக்கிரப்பை நியாப்படுத்தினர். போபுரங்களின் அடியில் 6000 மேற்பட்ட மக்கள் இறந்து போனதாக கொலிவூட் பாணியில் சொல்லி நடத்திய ஆக்கிரப்பு நியாயவாத கதையும் அண்மையில் பொய்யாகி போனதுடன், 3000 உட்பட்ட தொகையினரே இதில் சிக்கியதாக அண்மைய செய்திகள் வெளியாகியுள்ளது. மூலதனத்தின் வாரிசுகளான மேட்டுக்குடி பன்றிகளின்; வக்கிரத்தை நியாப்படுத்தும் வாதங்களையே, இந்த செய்தியமைப்புகள் தமது சுதந்திர செய்தியாக்கினர். இந்த சுதந்திர ஜனநாயகத்தை புரிந்த கொள்ள, இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பன்நாட்டு தொலைக்காட்சியான "சானல் வீ" பம்பாய் வீதியில் பெண்களுக்கு ஒரு போட்டியாக, யார் நடனம் ஆடியபடி தமது உடுப்பை களைந்த அதிகமான அங்கத்தை காட்டுகிறர்களோ, அவர்களுக்கு சுதந்திரத்தின் பெயரில் ஜனநாயகத்தின் பெயரில் பரிசு என பிரகடணம் செய்தது. அதை பம்பாய் வீதியில் இருந்தே தொலைக் காட்சியூடாக வீட்டுக்குள் நேரடியாக ஒளிபரப்பியது. இதன் மூலம் மேட்டுக்குடியின் ஜனநாயகமும் சுதந்திரமும் பீற்றபட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடத் தொடங்கவே, இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த "சானல் வீ" தொலைகாட்சி தயாரிப்பளார்கள் "உங்களுக்கு ஆபாசமாகத் தெரிவது, எங்களுக்குப் பண்பாடாகத் தெரிகின்றது" என்று கூறி, தொலைகாட்சியின் நோக்கத்தை தெளிவுபடவே பிரகடணம் செய்தனர். இதை போன்றே தலிபான் மத அடிப்படைவாத காட்டுமிரண்டிகளிடம் இருந்து ஆப்கான் மக்களை புதிய விபச்சார தரகர்களின் உதவியுடன் அடிமைப்படுத்திய போது, ஆப்கான் மக்கள் ஆபாச படங்களையும், இந்திய மற்றம் அரபு பெண்களின் அங்கங்களை குலுக்கும் நடனத்தை சினிமாவாக பார்த்து ரசிப்பதாக இந்த செய்தியமைப்புகள் செய்தியாக்கின. இதைப் போன்றே கம்யூனிசத்தில் இருந்து மேற்கின் சூறையாடலுக்கு திறந்துவிட்ட ஜனநாயகத்தில் அந்த மக்களும் அனுபவிப்பதாக செய்தியாக்கினர். இதைத் தான் ஜனநாயக தெரிவாகவும், தனிமனித சுதந்திரமாகவும் செய்தியமைப்புகள் கோடிட்டு காட்டின. உண்மையில் செய்தியமைப்புகள் இதை அந்த மக்களுக்கு வக்கிரமான ஒரு பண்பாடாக எடுத்துச் செல்லுகின்றன. இன்றைய கொலிவூட் வக்கிரத்தையே உலகமயமாக்கின்றனர். இதன் மூலம் மக்களின் உணர்வுகளை வக்கரிக்க பண்ணி நலமடிக்கும் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பண்பாடக்கின்றனர். இதை தவிர மக்கள் எதையும் இந்த உலகமயமாதல் ஆக்கிரமிப்பில் இருந்து, இலவசமாக பெறுவதில்லை. இந்த செய்தியமைப்புகள் தான் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் பயங்கரவாதம் பற்றி ஊளையிட்டு, மக்கள் மேல் பயங்கரவாதச் சட்டத்தை இறுக்கின்றது. மக்களின் அவலங்கள், அவர்களின் வாழ்க்கையின் துயரங்கள் எதையும் இந்த செய்தியமைப்பு ஒருக்காலும் மக்களுக்கு முன்வைக்கப் போவதில்லை. மூலதனம் வீறுநடைபோடும் வக்கிரத்தை திசை திருப்பி, மக்களின் சிந்தனைத் தளத்தை ஆபாசமான நுகர்வுத்தளத்தில அனைத்தையும் கட்டமைப்பதே குறிப்பான நோக்கமாக உள்ளது. யுத்த ஆதாரவுடன் கூடிய யுத்த வெறியை பிரச்சாரம் செய்யும் செய்தியமைப்புகள், அதனால்; மக்கள் படும் துன்பத்தை இட்டு ஒரு துளி தன்னும் கவலைப்படுவதில்லை. அடுத்த நேர உணவுக்கு கையேந்தும் மக்கள் வீதியில் யதார்த்தமாக நிர்வாணமாக இருக்க, மூலதனத்தின் தயவில் ஆடம்பரமான வாழ்கையை நடத்தும் நிகழ்ச்சி தயாரிப்பபாளர்களின் செய்தியமைப்புகள் எப்படி குறைந்தபட்சம் நடுநிலையக இருக்க முடியும்? செய்தியமைப்புகள் மூலதனத்தின் எடுபிடியாக அதை விரிவாக்கும் ஒரு கருவியாக, மக்களின் உணர்வுகளை மழுங்கு அடைக்கும் எதிரிகளின் ஒரு ஆயுதமாகவே உள்ளது. மக்கள் விரோதத்தை நியாப்படுத்தும் போக்கில் அமெரிக்க தொலைக்காட்சிகள், எதிர்தரப்பு மத அடிப்படைவாதிகளின் பிதற்றல்களை ஒளிபரப்பாக்கும் போது, அவை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் நோக்கத்தை கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. இதனால் அமெரிக்கா தனது நாட்டின் செய்தியமைப்பை மிரட்டத் தயங்கவில்லை. அதே நேரம் கட்டார் நாட்டு தொலைக்காட்சியை அமெரிக்கா மிரட்டவும் தயங்கவில்லை. அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் கட்டார் நாட்டு அதிபரிடம் "உங்கள் நாட்டு தொலைக் காட்சி நிறுவனமாகிய அல்சிசீராவை அடக்கி வையுங்கள்" என்று எச்சரிக்கின்றார். தனிநபர் பயங்கரவாத அடிப்படைவாதிகளின் பிதற்றல்களே, ஏகாதிபத்திய காட்டுமிரண்டித்தன ஆக்கிரமிப்பை ஆட்டம் காண வைக்கின்றது எனின், மக்கள் திரள் அமைப்புகளின் செய்திகள் இந்த செய்தி அமைப்புக்குள் வரின், ஏகாதிபத்தியம் நொருங்கி தவுடுபொடியாகிவிடும்;.

இந்த செய்தியமைப்புகளின் எல்லையற்ற ஜனநாயக காவலர்களின் தலைவர் ஜோர்ச் புஷ் "பின்லேடன் குற்றவாளியா இல்லையா என்று விசாரணை நடத்த வேண்டியதேயில்லை. பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்ற ஏற்கனவே சொல்லியாயிற்று. எனவே, அவர்கள் கூறுவதை நிராகரிக்கிறேன்." என்று கூறியபடி, மக்கள் மேல் குண்டு வீசியே ஆப்கானை தூசு மண்டலமாக்ககினர். மற்றவனின் கருத்துக்கு பதிலாளிக்கும் ஜனநாயகம் அவசியமற்றது என்பதே, அமெரிக்கப் பயங்கரவாதிகளின் காட்டுத்தர்பார். இங்கு குற்றவாளியா இல்லையா என்பது, அமெரிக்கவுக்கு அவசியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. இதை எந்த ஒரு செய்தியமைப்பும் இதை ஒரு பிரச்சைனையாக்கியதுதில்லை. ஏகாதிபத்தியமல்லாத ஏகாதிபத்தியத்தக்கு எதிரானவர்கள் இதைச் சொல்லியிருப்பின், முட்டையில் மயிர் புடுங்குவது போல் இந்த செய்தியமைப்புகள் வக்கரித்திருக்கும். மூலதனமே செய்தியமைப்பான பிற்பாடு, அது மக்களையிட்டு ஒரு துள்ளிதன்னும் அக்கறைப்படுவதில்லை. அமெரிக்கா மற்றவனை குற்றவாளியாக நிறுவ ஆதாரம் அவசியமற்றதாக இருக்கின்ற அதேநேரம், தனக்கு எதிரானவர்களை குற்றவாளியாக்குவதில் கொலிவூட் பாணியை பண்பாடாக அடிப்படையாக கொள்கின்றது. சர்வதேச போர் குற்றத்தை விசாரிக்கும் நிரந்தர நீதிமன்றம் ஒன்றை அமைப்பதை எதிர்க்கும் அமெரிக்கா, தனக்கு எதிரானவர்களை விசாரிக்கும் சர்வதேச நீதி மன்றத்தையே தேவைக்கு ஏற்ப அமைக்கின்றது. அத்துடன் "அமைதியை நிலை நாட்டியவர்களின்" போர் குற்றத்தை விசாரிக்க முடியாது என்று கூறுகின்றது. இங்கு போர் குற்றம் என்பது அமெரிக்க மூலதனத்தின் நலன்களுடன் தொடர்புடையதாக வரை முறைக்குள்ளாகிவிடுகின்றது. அமைதியின் பெயரில் மக்களை கொன்று போட்டு கற்பழிக்கும் குற்றத்தை விசாரிக்க முடியாது என்பது, அமெரிக்காவின் ஜனநாயகம் மட்டுமின்றி அதன் சமூக நீதியுமாகும்.

உலகத்தையே கொள்ளையிட்டு ஆளத் துடிக்கும் உலகமயமாதல் விரிவாக்கதின் போது, இழைக்கும் போர் குற்றத்தை விசாரிக்க முடியாது என்பதே அமெரிக்காவின் ஜனநாயகம்;. அதாவது உலகமயமாதலை எதிர்க்கும் அல்லது அமெரிக்காவின் அதிகாரத்துக்கு எதோ ஒரு காரணத்தில் அடிபணிய மறுக்கும் அரசுகளை, நபர்களையே போர்குற்றவாளியாக அமெரிக்கா நிறுவும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் ஜனநாயகத்தையே, அமெரிக்க உலகமயமாக்கின்றது. இதை கௌவ்விக் கொண்டு குலைக்கும் நாய்கள் உலகு எங்கும், இதன் பெயரில் கொக்கரிக்கின்றன.

அமெரிக்காவுக்கு எதிரானவருக்கு எதிராக தனிநபர் பயங்கரவாதத்தை கையாண்ட போது, அவர்களை குற்றவாளியாக என்றுமே கருதுவதில்லை. 1996ம் புரட்டாசி மாதம் அமெரிக்கா அரசு தலிபான் மற்றும் பில்லாடான் பற்றிய தனது அறிக்கையில் "நாட்டை முன்னேற்றுவதில் சரியான பாதையில் செல்கின்றனர்" என்று குறிப்பிட்டனர். அங்கு பெண்கள் மற்றும் மத அடிப்படைவாதத்தின் காட்டு மிராண்டித் தனத்தையிட்டு, ஜனநாயக அமெரிக்கா புலம்பவில்லை. தலிபான் மற்றும் பில்லாடான் மக்களை 1500 வருடத்துக்கு முந்திய மத சட்டத்தின் பெயரில் மக்களை ஒடுக்கி, தனது எண்ணை வழி பாதையை திறப்பதற்கான அங்கீகாரத்தை வேண்டி ஒடுக்கவதை ஆதாரித்து நின்றனர். செய்தியமைப்புகளும் அதன் வழியில் அதன் பின்னால் அதையே முரண்பாடின்றி செய்தனர். இன்று இந்தியாவில் இந்து அடிப்படைவாதிகள், முஸ்லீம் கிறிஸ்தவ மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் நடத்தும் காட்டுமிரண்டித்தனமான அடக்கமுறையையிட்டு, உலக பொலிஸ்காரன் சரி உலக கவலான செய்தியமைப்புகள் சரி  ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. பாபர் மசூதி தகர்க்கபட்ட நிலையிலும், அந்த வானரங்கள் இன்று ஆட்சியில் நடத்தும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் துணையில் தான், அமெரிக்கப் பயங்கரவாதம் உலகமயமாகின்றது. ஏன் பில்லாடனை பயங்கரவாதி என்று உலகுக்கு அறிவித்தபடி உலகை அடக்கியாள, பில்லாடனை மூலதனத்தின்  கைக்கூலியாக  ஆடி 2001ம் ஆண்டு துபாய் வைத்தியசாலை ஒன்றில் பில்லாடனை சிஐஏ சந்தித்து பேச்சு வார்த்தை  நடத்தியது. அப்போதும் சிஐஏ நம்பிக்கையுடன் ஆப்கான் ஊடாக எண்ணைக்கான பாதையை திறக்க கனவு கண்டது. இதற்கு முன்பே சூடான் மற்றும் ஆப்கான் மீது அத்துமீறி தாக்குதலை அமெரிக்க நடத்தியிருந்தும், அதே நபர்களை வளைத்துப் போட மீளவும் முயன்றது. அமெரிக்க எண்ணை வயல் மூலதனங்களை பாதுகாப்பாக பாதுகாத்து விரிவாக்க பில்லாடன் துணை போக தயாராக இருந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்பதே பேச்சு வார்த்தையின் நோக்கமாக இருந்தது.

இங்கு மூலதனத்தை விரிவாக்கும் நலன்களை அடிப்படையாக கொண்டே குற்றத்தை வரையறை செய்தது. 1960 முதல் 1970 வரை அமெரிக்கவின் செல்வாக்கு மண்டலங்களில், 12 மக்கள் விரோத ஜனநாயக விரோத தேசிய பாதுகாப்பு அரசுகள் தோற்றவித்து பாதுகாத்தது. அத்துடன் உலகளவில் சித்திரவதையை ஜனநாயகமாக அரசின் சுதந்திரமாக கொண்டு அதைக்  கையாண்ட 35 அரசுகளில், 29 அரசு அமெரிக்கா அரசை சார்ந்து  ஜனநாயகத்துக்கு புது விளக்கம் கொடுத்தது. இங்கு இவர்கள் யாரும் மனித உரிமை மீறலுக்காக நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இங்க யாரும் பயங்கரவாதிகளாக இருக்கவில்லை. ஈராக் சதாம் குசைன், கியுபா பிடல் கஸ்ரோ, ஆப்கான் ஒமார்... என்று அமெரிக்க தயாரிக்கும் பட்டியல் மட்டும் தான், மக்களின் எதிரியாக காட்டப்படுகின்றது.

அமெரிக்கா கைக்கூலியாக செயற்பட்ட ஈரான் ஷா துக்கியெறியப்பட்ட பின், ஈரானை பழிவாங்க ஈராக்கை அமெரிக்க யுத்தத்தில் ஈடுபடுத்தியது. 1988 இல் ஈராக்கு உதவச் சென்ற அமெரிக்கா போர் கப்பல், ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டு 290 அப்பாவி மக்களை கொன்றது. இந்த போர்க் கப்பல் தளபதிக்கு 1990 இல் "ஒப்பற்ற சேவைக்கு" லிஜியன் ஆப்மெரிட் பதக்கம் வழங்கப்பட்டது. அமெரிக்க மூலதன நலனுக்கு சேவை செய்யும் மனித விரோத குற்றவாளிகள் போற்றப்பட்டு, பதக்கம் வழங்குவதே ஏகாதிபத்திய பயங்கரவாத்தின் குறிப்பான நடைமுறையாகும். இதையே உலக பண்பாடாக கருதுவதும் போற்றுவதும் பொது நடைமுறையாக உள்ளது. இன்று அமெரிக்க உலகெங்கும் 50 நாடுகளில் தனது இராணுவ தளத்தை நிறுவி, உலகமயமாதலை விரிவாக்கி மறுகாலனியதிக்கத்தை விரைவுபடுத்தி வருகின்றது. இந்த விரிவாதிக்க ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மூலதனத்தை குவிக்கின்றது. இதனால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் திடீரென உயர்வடைகின்றன. அமெரிக்காவில் கொலிவூட் வாழ்க்கை வாழும் மக்கள், ஆயுதங்களை வாங்கி குவிக்கும் தன்மை அதிகாரித்துள்ளது. மறுதளத்தில் ஒரு டொமோ ஹாக் ஏவுகணையின் விலை 10 லட்சம் டாலர். குறி தவறமால் வீசும் குண்டின் விலை 20000 - 30000 டொலராகும். இதனால் ரேதியொன், லாக்கெட் மாhட்டீன் போன்ற ஆயுத நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு யுத்ததால் கொழுக்கின்றன. ஆப்கான் ஆக்கிரமிப்பு என்பது சர்வதேச எண்ணை வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் உரிமை மற்றும் மூலதனக் குவிப்பினை அடிப்படையாக கொண்டது. அந்த எண்ணை வளம் சார்ந்த இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் பின்னணியில் காப்புறுதி நிறுவனங்களின் கொள்ளை என்று, ஒரு தொடர் சங்கிலியாக பன்னாட்டு தேசங்கடந்த உலகமயமாதல் மூலதனத்தின் நலன்களை அடங்கிகிடக்கின்றன.

இந் நிலையில் "சுதந்திரத்தைக் காப்பற்றவே ஆப்கான் மீது யுத்தம்" என்று அமெரிக்க அமைச்சர் கூறுகின்றார். ஆப்கானின் எந்த சுதந்திரத்தை பாதுகாக்க என்று யாரும் கேட்பதில்லை. ஆப்கான் மக்கள் தமது தேசிய லளத்தை சார்ந்த தன்னிறைவான தேசியத்தை கட்டியெழுப்பும் சுதந்திரத்தை அல்ல என்பது, அனைவருக்கும் தெரிந்ததே. உண்மையில் ஏகாதிபத்தியங்கள் ஆப்கான் தேசிய வளத்தையும், மக்களின் உழைப்பையும் வரைமுறையின்றி கொள்ளையிடும் தமது சுதந்திரத்தையே, இங்கு சுதந்திரமென்று கூறுகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக ஜோர்ச் புஸ் "பயங்கரவாதத்திற்கு எதிரான உலக யுத்தம்" என்று கொக்கரிக்கின்றான். பயங்கரவாதத்தை உலக ஜனநாயமாக கொண்ட அமெரிக்க கொலிவூட் பாணி தனிமனித கவர்ச்சி அரசியலை அடிப்படையாக கொண்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாக பிதற்றுகின்றான். பயங்கரவாதத்தை உருவாக்கியபடி அதை ஒழிப்பதாக அமெரிக்கா போன்ற முட்டாள்களின் நாடுதான் கூறமுடியும்;. இங்கு பயங்கரவாதம் என்பது, மக்களின் அடிப்படை உரிமையாக உள்ளது. பயங்கரவாத நடைமுறை என்பது இன்றைய மக்கள் விரோத அரசுகளை எதிர்த்து, மக்கள் தமது அதிகாரத்தை மீளக் கைப்பற்றம் ஒரு அரசியல் வழியாக, பாதையாக, நடைமுறை ரீதியான ஒரு போராட்ட மார்க்கமாக உள்ளது. இங்கு இந்த பயங்கரவாதத்தை பாட்டாளி வர்க்கம் ஆதாரித்து தலைமை தாங்கி போராடும் அதேநேரம், தனிமனித கவர்ச்சிகரமான பயங்கரவாதத்தை எதிர்த்தே போராடுகின்றது. அராஜக வாத வழியிலான பயங்கரவாதம் முதல் மக்கள் திரளை நிராகரித்த தனிமனித பயங்கரவாதத்தை எதிர்த்து, மக்கள் திரள் பயங்கரவாதத்தை ஆதாரித்து நிற்கின்றது. பயங்கரவாதம் என்ற பொது கோட்பாட்டில் அதன் கோட்பாட்டு அடிப்படைக்காக, அது கற்பழிக்கப்படுவதற்கு எதிராக நாம் போராடுவோம்;. சுரண்டும் அரசு மற்றும் ஏகாதிபத்திய பயங்கரவாதத்துக்கு எதிராக, மக்கள் பயங்கரவாதத்தை கையாளுவதையும் அதை கட்டியெழுப்புவதை பாட்டாளி வர்க்கம் சொந்த வர்க்க கடமையாக நடைமுறையாக கொள்கின்றது. நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மட்டுமின்றி மக்கள் மேலான அனைத்து பயங்கரவாதத்தையும் எதிர்த்து, பயங்கரவாத வழியில் போராடும் ஜனநாயக உரிமையை பாதுகாத்து அதன் வழியில் போராடுகின்றோம்.

ஏகாதிபத்தியம் இதை எதிர்த்து கொக்கரிக்கின்றது. உலக நாடுகளையும் மக்களையும் ஜோர்ச் புஸ் "நீங்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும். இல்லையெனில் பயங்கரவாதிகள் பக்கம்  இருப்பதாகவே கருதப்படுவீர்" என்று பயங்கரவாத வழிகளில் மிரட்டுகின்றார். இந்த மிரட்டலுக்கு உலக நாடுகளில் வீற்றிருக்கும் கைக்கூலி அரசுகள், எடுபிடி செய்தி மீடியாக்கள், எடுபிடி எழுத்தாளர்கள் அடிபணிந்து உலகமயமாதல் சமுதாயத்துக்கு இசைந்து செல்லுகின்றது. ஆனால் பாட்டாளி வர்க்கம் உலகம் தளுவிய வகையில் தனித்துவமிக்க வழிகளில், இந்த மிரட்டலை எதிர்த்து மக்கள் திரள் வன்முறையை ஆதாரித்து போராடுகின்றது. இதை உலக அளவில் மூடி மறைப்பதில், உலகாளவில் ஜனநாயகம் இரும்பு திரையிட்டுள்ளது. உதாரணமாக 18.11.2001 அன்று லண்டனில் 50000 மேற்பட்ட மக்கள் யுத்தத்துக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பட்டம் செய்தனர். இப்படி உலகு எங்கும், இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக பல நூறு போராட்டங்கள் நடத்தப்பட்டன, நடத்தப்படுகின்றன. ஏகாதிபத்தியம் தனது சொந்த மக்களுக்கும், உலகத்துக்கும் இதை ஜனநாயக பூர்வமாக கொண்டு செல்ல இரும்புத் திரையிட்டபடி தான், தனிமனித சுதந்திரம் பற்றி பீற்றுகின்றனர். ஆனால் தனக்கு எதிரானவர்களுக்கு எதிரான தனிமனித முயற்சியைக் கூட, பெரிதாக வீங்க வைக்கும் வக்கிரமே இந்த ஜனநாயக அறிவித் துறையின் பொது நடைமுறையாகும்.

இப்படி பீற்றிய படி தான் "அமெரிக்காவின் எதிரிகள் சுதந்திரத்தின் எதிரிகள். அவர்கள் ஏன் நம்மை வெறுக்கின்றார்கள் என்று சில அமெரிக்கர்கள் கேட்கிறார்கள். அவர்கள் நம்மை வெறுப்பதற்குக் காரணம் அவர்கள் சுதந்திரத்தை வெறுப்பதுதான். நம் நாட்டில் உள்ள மத சுதந்திரம், கருத்து சுதந்திரம், வாக்களிக்கும் சுதந்திரம், கருத்து வேறுபடுவதற்குள்ள சுதந்திரம் ஆகியவற்றை அவர்கள் வெறுக்கின்றர்கள், அதனால் தான் நம்மை வெறுக்கிறார்கள்" என்று ஜோர்புஸ், செப் 20திகதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பேசுகின்றார். என்ன மனித வக்கிரம். அமெரிக்காவின் எதிரி சுதந்திரத்தின் எதிரி என்பது, கொலிவூட் அறிவின் உச்சம். அமெரிக்காவின் சுதந்திரம் என்பதும், அதுவே உலக சுதந்திரம் என்பது நகைப்புக்குரிய செய்தி. அமெரிக்க கொலிவூட் தனிமனித வக்கிரத்தை அடிப்படையாக கொண்ட அறிவும், உலக ஆதிக்கத்தை நியாப்படுத்தும் அறிவைத் தாண்டி, பொது சமூக அறிவு என்பது அமெரிக்க மக்களுக்கு கிடையாது. அமெரிக்க மக்கள் பலருக்கு பிரான்ஸ் எங்கே இருக்கின்றது? என்ற பொது அறிவு கூட கிடையாது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு, வாக்களிக்கும் உரிமை மறுக்பட்ட ஒரு நிலையிலேயே, இதைச் சொன்ன ஜனாதிபதி புஸ் ஆட்சிக்கு வந்தவர். இந்த ஜனநாயகம் கவர்ச்சியை அடிப்படையாகவும், குண்டர்கள் தயவிலும், தேர்தல் மோசடியிலும், பணத்தை ஆதாரமாக கொண்டே, தனக்கு சார்பான அதிகார வர்க்கத்தின் துணையுடன்;, நிறவெறியை ஆதாரமாகவும் அடிப்படையாக கொண்டே, இன்றைய ஜனாதிபதி ஜோர்ச் புஸ் அதிகாரத்துக்கு வந்தவர். இந்த சுதந்திரத்தை, ஜனநாயகத்தை வெறுக்கும் பயங்கரவாதிகளே, அமெரிக்காவை தாக்குகின்றார்களாம்;. என்ன வேடிக்கை. இந்த ஜனநாயகத் தேர்தலில் பங்கு கொள்ளும் வேட்பளாரக தெரிவு செய்ய, உட் கட்சிக்குள் 750 கோடி ரூபா (இலங்கை) லஞ்சம் வழங்கியே ஜோர்ச் புஸ் வேட்பாளராக தெரிவானவர். தேர்தலின் போது கறுப்பின மக்களை வாக்களிக்க விடமால் தடுத்தும், தனக்கு எதிரான பகுதிகளுக்கு பழுதடைந்த இயந்திரத்தை அனுப்பியுமே, சொந்த ஜனநாயகத்தை பாதுகாத்தவர். இறுதியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் 7:2 என்ற வீதத்தில் வென்றவர். இந்த 7 நீதிபதியையும் இன்றைய ஜனாதிபதி புஸ்சின் அப்பா அதிகாரத்தில் இருந்த போது நியாமனம் பெற்றவர்கள். மற்றைய இரண்டு நீதிபதிகளும் கிளிண்டனால் நியாமிக்கப்பட்டவர்கள்;. நீதி மற்றும் நீதி மன்றத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்க நீதி சந்தி சிரித்தது. தொலைக்காட்சிகளின் ஒரு பக்க சார்பான பிரச்சாரத்தில், முதல் இரண்டு வேட்பளாரையும் முன்னிலைப்படுத்தி செய்த பிரச்சாரம், மற்றும் விவாதம் என்று ஜனநாயகத்தை நலமடித்த பல கோமாளிக் கூத்தில் தான், இன்றைய ஜனாதிபதி சுதந்திரமாக தெரிவு செய்யப்பட்டார். இந்த ஜனாதிபதியின் அறிவு, சாதாரண கொலிவூட் அமெரிக்க பாணி மக்களின் அறிவு போல் ஒரு மக்குத்தான். இந்த மக்கு ஜனாதிபதி "நைஜீரியா நாட்டை ஒரு கண்டம்" என்று  அறிவித்தவர். இவர்தான் இன்றைய உலக ஜனநாயகத்தின் தலைவன்;. உலக பயங்கரவாதத்தை ஒழிக்கும் தளபதி.

இந்த மக்கு தளபதி ஜோர்ச் புஸ் ஆக்கிரமிப்பு யுத்தத்தை "இந்த யுத்தம் இஸ்லாமிற்கு எதிரானதல்ல" என்ற கூறியபடி, உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு புது விளக்கம் கொடுக்கின்றார். தொடர்ந்தும் "சிலுவை யுத்தம், முடிவற்ற நீதி, இந்த யுத்தத்தில் கடவுள் நடுநிலைமை வகிக்கமாட்டார்" என்கின்றார். அமெரிக்க ஜனதிபாதிகளின் அறிவியல் என்பது மத அடிப்படை வாதத்ததுக்கள் இருந்து நிறவாதத்தை ஆதாரமாக கொள்கின்றனர். சிலுவை யுத்தம் என்பது அடிப்படையில் முஸ்லீம் மதத்துக்கு எதிரான மத யுத்தம் தான். நிற வாதத்ததையும், கிறிஸ்தவ மதவாதத்தையும் அடிப்படையாக கொண்ட அமெரிக்கா இராணுவம், ஆக்கிரமிப்பு யுத்த கோசங்கள் ஊடாகவே ஆப்கானை ஆக்கிரமித்துள்ளது. கடவுள் நடுநிலை வகிக்க மாட்டார் என்பதன் மூலம், கிறிஸ்தவ மத அடிப்படைவாத்தில் இருந்து தான் மற்றைய நாடுகளை நாடுகளாகவே மதிப்பதில்லை. இதையே 10 கோடி சிவப்பிந்திய மக்களை மக்களாக கருதாது அழித்து, அந்த இரத்தத்தின் மேல் அமெரிக்காவை நிறுவிய முந்திய பரம்பரையின் இன்றைய வாரிசுகள் பழைய வழியில் உலகை அழிக்க ஆர்ப்பாரிக்கின்றனர். உலகத்தை கிறிஸ்தவம் முதலாம், இராண்டாம் ஆயிரம் ஆண்டுகளில் சூறையாடிய வரலாற்றின் தொடாச்சியில் தான், முன்றாவது ஆயிரம் ஆண்டை ஆசியாவில் ஏகாதிபத்தியங்கள் தொடக்கி வைத்துள்ளன. இதை அழகாகவே போப் 2000 ஆண்டு இந்தியா சென்ற போது கூறினர். "முதலாவது ஆயிரம் ஆண்டில் ஜரோப்பாவில் கிறித்துவம் பரப்பப்பட்டது@ இராண்டாவது ஆயிரம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் கிறித்துவம் பரப்பப்பட்டது@ இந்த மூன்றாவது ஆயிரம் ஆண்டில் ஆசியாவில் கிறித்துவம் பரப்பப்பட வேண்டும்" என்றார். இதையே நடுநிலை வகிக்காத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஆதாரவான கடவுள் துணையுடன், அமெரிக்க தலைமையிலான சிலுவை யுத்தத்தை ஆசியாவில் தொடங்கி வைத்துள்ளனர். இந்த சிலுவை யுத்தம் என்பது உலகமயமாதல் விரிவாக்கத்தை அடிப்படையாக கொண்ட, மூலதன யுத்தம்தான். இப்படி அறிவித்தபடி தமது ஆக்கிரமிப்பை நியாப்படுத்த பலவிதமான விளக்கத்தை அடிக்கடி முரண்பட்டபடி கூறுகின்றனர்.

அமெரிக்க உட்துறை அமைச்சர் "அமெரிக்கா மீது இத்தகைய தாக்குதல் நடத்தியவர்களை நாங்கள் வேட்டையாடாமல் விடமாட்டோம்" என்று ஒருபக்கம் பிதற்றுகின்றார். ஜனாதிபதி ஜோர்ச் புஸ்சோ "சர்வதேச பயங்கரவாதி ஓசாமா பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும் வரை இந்தப் போர் ஓயாது.." என்ற கொக்கரித்து ஒய முன்பே  "தலிபான் அரசை வீழ்த்துவதே ஆப்கான போரின் நோக்கம்" என்று கூறி புலம்பல் முடிய முன்பே "ஒரு நபரையோ அல்லது ஒரு அமைப்பையோ அழிப்பதல்ல நமது நோக்கம். ஒட்டு மொத்தமாக பயங்கரவாதத்தையே இந்த உலகத்தை விட்டு ஒழிப்பதே நமது இலக்கு. எனவே இந்தப் போர் ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ, ஏன், ஓராண்டிலோ முடிந்து விடாது. பத்தாண்டுகளோ, பல பத்தாண்டுகளோ ஆகலாம். போர் தொடரும்..." என்று ஜோர்ச் புஸ் ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்டபடி புலம்பிய போதும், ஆக்கிரமிப்புக்கான நோக்கத்தைச் சொல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. இந்த யுத்தத்தின் நோக்கம் தெட்ட தெளிவாக தெரிந்ததே. உலகை உலகமயமாக்கம் போராட்டத்தில், அமெரிக்கா மூலதன நலனை உலகில் நலனாக்குவதாகும். அதாவது உலகின் அனைத்து தேசியவளங்களையும் அமெரிக்கா சூறையாடவும், உலகின் அனைத்து உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டவும் உள்ள உரிமையை, ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் கொண்ட உலக ஒழுங்கு உருவாகும் வரை, இந்த பயங்கரவாத யுத்தம் தொடரும் என்பதே அமெரிக்காவின் அறிவிப்பு. பல பத்தாண்டுகள் என்பது ஏகாதிபத்திய முரண்பாடுகள் நீடிக்கும் வரை, இந்த யுத்தம் தொடரும் என்பதையே குறிக்கின்றது. ஏகாதிபத்தியங்களும் அதற்கிடையிலான முரண்பாடு நீடிக்கும் வரை, தேசியங்களும் நீடிக்கும். இந்த தேசியங்கள் நீடிக்கும் வரை அதை பயங்கரவாதமாக அறிவிப்பதும், அதை அடக்குவதும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகுரிய அடக்குமுறையின் சுதந்திர கடமையாக கொள்கின்றது. அமெரிக்க மக்களின் யுத்த ஆதாரவுக்கான தயாhரிப்பு மனநிலையை வளர்த்தெடுக்க, பீதியை கிளப்பிவிடுவது ஒரு வடிவமாக கொலிவூட் கண்ணோட்டம் கையாளப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியில், அந்த்ராக்ஸ் என்ற உயிரியல் ஆயுதம் பற்றிய பீதியை கட்டமைத்தனர். இந்த நோய்க்குரிய உயிரியல் ஆயுதத்தை அமெரிக்க நிறவெறி இனவாத குழுக்களான நாசிகளால் பரப்பட்டதாக செய்திகள் வந்த நிலையிலும், பீதியை விதைத்து மக்களின் உணர்வுகளை யுத்த ஆதாரவாக மாற்றினர். அந்த்ராக்ஸ் போன்ற என்னற்ற உயிரியல் ஆயுதங்களை யார் செய்கின்றார்கள்? ஏன் செய்கின்றீர்கள்? யாரைக் கொல்ல செய்கின்றீர்கள்? எப்படி தனிநபர்களிடம் இவை கொண்டு செல்லப்படுகின்றன? உயிரியல் ஆயுதங்களை ஏகாதிபத்தியங்கள் உற்பத்தி செய்வதன் நோக்கம்;, மூலதனத்தை உலகமயமாக்கவும் அதை எதிர்க்கும் மக்களை கொல்லவுமே. இந்த உற்பத்தியில் ஈடுபடும் மனித குல எதிரிகளான விஞ்ஞானிகளின் இயல்பான நிறவெறி இனவெறி சார்ந்து, மூலதனங்கள் மேல் நக்கிப் பிழைக்கும் நுகர்வின் வேட்கையும் இணைந்தே, தனிநபர் பயங்கரவாத குழுக்களின் நோக்கம் கருதியும் நோகமற்றும் சென்றடைகின்றது. உண்மையில் அந்த்ராக்ஸ் என்ற உயிரியல் ஆயுதத்தை உலக மக்களுக்கு எதிராக அமெரிக்கா செய்வதையிட்டு எந்தப் பீதியும் ஏழுப்பப்படவில்லை. அவை மக்களுக்கு எதிராக பாவிப்பதை அங்கீகரிக்கும் அமெரிக்க கொலிவ+ட் வக்கிர அரசியலையே அரங்கேறியது. இந்த அந்த்ராக்ஸ் என்ற உயிரியல் ஆயுதத்தின் வரலாறு என்ன.

1915ம் ஆண்டு ஜேர்மனி "பல்ரிமோர்" என்ற உயிரியல் ஆயுத தொழிற்சாலையை நிறுவி, முதலாம் உலக யுத்தத்தில் எதிரியின் கால நடைகளை அந்த்ராக்ஸ் கொண்டு படு கொலை செய்தனர். 1941 இல் பிரிட்டிஸ் எகாதிபத்தியம் ஸ்கொட்லாந்தில் ~குரூனர்டு| தீவுகளில் அந்திராக்ஸ் குண்டுகளை வெடிக்க வைத்த பரிசோதித்தது. அந்த பகுதிக்குள் மக்கள் செல்ல 50 வருட தடையை வேறு விதித்தது. இன்றும் அங்கு மக்கள் செல்ல தடையுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பானும் இரண்டாம் உலக யுத்தத்ததில் இந்த ஆயுதத்தை பாவித்திருந்தன. ஏகாதிபத்தியமான அமெரிக்காவும், சமூக ஏகாதிபத்தியமான சோவியத்தும் பனிப்போரில் ஈடுபட்ட காலத்தில், உயிரியல் ஆயுதம் அவர்களின் மிக முக்கிய ஆயுத உற்பத்தியாக திகழ்ந்தன. 1979 ஆண்டு 2ம் திகதி மஸ்கோவுக்கு கிழக்காக 840 மைல் தொலைவில் இருந்த ஸ்வேர்டோஸ்க் உயிரியல் ஆய்வு மையத்தில், வெளிப்போக்கிக்கு வடிகட்டியை பொருத்த மறந்தால், அந்திராக்ஸ் காற்றுடன் கலந்து போனது. இதனால் 94 பேரை இது தாக்கியது. அதில் 64 பேர் இறந்த போனார்கள். குடியிருப்பு அற்ற பிரதேசத்தில் இந்த ஆய்வு மையம் இருந்தால் மட்டுமே, அன்று பல ஆயிரம் மரணங்கள் தவிர்க்கப்பட்டன. 1993 இல் உயிரியல் ஆயுதமான அந்திராக்ஸ் கிருமியை ஜப்பானிய அடிப்படை மதவாதிகள் பரவி விட எடுத்த முயற்சியின் போது, கிருமிகள் செயல் இழந்தால் படு கொலைகள் தவிர்க்கப்பட்டது. இவர்களே சுரங்க ரெயிலில் இரசாயன ஆயுதமான விஷ வாயுவை அனுப்பி 12 பேரை கொன்றனர்.

வரலாற்று ரீதியாக கி.பி 80 களில் ஆசியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி புலம் பெயர்ந்த ஹீனர்களின் 40000 குதிரைகளும், ஒரு லட்சம் மாடுகளும் அந்திரதக்ஸ்சுக்கு (இதை நாம் ~அடைப்பான்| என்று தமிழில் அழைக்;கின்றோம்.) பலியாகின. இந்த கிருமி விலங்கில் இருந்து வெளியேறிய காற்றில் கலந்தவுடன், ஒரு உறையை போத்தி வித்திகள் என்ற அமைப்பு வடிவத்தை பெறுகின்றது. சூரிய ஒளி, வெப்பம், கிருமிநாசி என கடுமையான சூழல் நிலையை எதிர் கொண்டு, மண்ணில் உறங்கு நிலையை அடைகின்றது. இந்த உறங்கு நிலையில் இருந்து, 80 வருடங்கள் பின்பு கூட வீரியத்துடன் தாக்கக் கூடியது. உலகு எங்கும் மிருங்களை தாக்கும் 1200 குல வகையான அந்திராக்ஸ் கிருமிகள் இருப்பதாக அறிவியல் அறிவித்துள்ளது. ஒரு கிராம் அந்திராக்ஸ் தூளில் 100 கோடிக்கு மேற்பட்ட அந்த்ராக்ஸ் வித்திகள் இருக்கின்றன. 1995ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற அறிவியல் மகாநாடு ஒன்றில் அந்திராக்ஸ் கிருமியையும், உணவை நஞ்சடையாச் செய்யும் பக்கிரியவுடன் இனைத்து, புதிய மரபனுக்களை உருவாக்கியுள்ளதாக ருஷ்சிய அறிவித்தது. இதன் மூலம் புதிய உயிரியல் ஆயுதங்களை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா அந்திராக்ஸ்சின் வீரிய ரகக் உயிரியல் ஆயுதத்தை உற்பத்தி செய்ய, பென்டகன் நிவேடா பாலைவனத்தில் 2000ம் ஆண்டு ஒரு உயிரியல் ஆயுத தொழிற்சாலையை நிறுவியுள்ளது. சி.ஜ.ஏ அறிக்கை ஒன்றின் படி தன்னை விலத்தியபடி, உலகில் 17 நாடுகளில் இந்த உயிரியல் ஆயுதம் உள்ளதாக அறிவித்துள்ளனர். 1997 அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ உயிரியல் ஆயுத பரிசோதனையில் நேரடியாக இறங்கியது. சி.ஐ.ஏ யின் உயிரியல் ஆயுத விஞ்ஞானியான ஜீன் ஜேபன்சன் தலைமையில் நடத்திய அந்திராக்ஸ் பரிசோதனையில் பின், 2000 ஆண்டு அதை பரிசோதித்து பாத்தனர். இப்படி உலக மக்களை கொன்று குவிக்க, உயிரியல் ஆயுதத்தை மக்களின் உழைப்பை சூறையாடும் மூலதனத்தில் இருந்து உற்பத்தி செய்தபடிதான், அதைப் பற்றிய பீதியை விதைக்கின்றனர்.

உயிரியல் மற்றும் இரசாயண ஆயுத உற்பத்திக்கான தடையை கொண்டு வர 1899ம் ஆண்டு முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1925ம் ஆண்டு ஜெனிவா பிரகடனமே இதற்கெதிரான முதல் முயற்சியாகும். 1972 இல் உயிரியல் ஆயுதத்துக்கு எதிரான தடை, 1993 இல் இரசாயண ஆயுதத்துக்கான தடையும் பிரகடணமாக வெளிவந்தது. ஆனால் இவற்றை ஏகாதிபத்தியங்கள் துச்சமாகவே கருதி மக்களுக்கு எதிரான பயங்கரவாத ஆயுதத்தை உற்பத்தி செய்கின்றன. மனித குலத்தை படுகொலை செய்து அழிக்கும் கொடுரமான ஆயுத உற்பத்தியில், மக்களின் உழைப்பு பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக எனது நூலான ~ஆணாதிக்கமும் பெண்ணியமும்| என்ற நூலில் எடுத்துக் காட்டியதில் இருந்து இதைப் பார்ப்போம்;. உலகில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஏற்படுத்தவும், அடிப்படை தேவையை பூர்த்தி செய்யவும் யுனிசேவ் 1995 இல் ஒரு அறிக்கையை முன்வைத்தது. ஆரம்ப கல்விக்கு 1300 கோடி டொலரும், சுத்தமான தண்ணீருக்கு 600 கோடி டொலரும், சுகாதாரத்துக்கு 900 கோடி டொலரும், குடும்ப கட்டுப்பாட்டுக்கு 600 கோடி டொலருமாக மொத்தம் வருடம் 3400 கோடி டொலர் இருப்பின், உலகில் குழந்தைகளின் நிலமையை மேம்படுத்த முடியும். ஆனால்  உலகமயமாதலின் சுரண்டல் அமைப்பில் இது சாத்தியமில்லை. சுரண்டலை பாதுகாக்கவும், தனிமனித வக்கிர உணர்வுகளை தீர்க்கவும், சமூக விரோதத் தன்மையை வளர்க்கவும், செலவு செய்;யும் தொகை மனித குலத்துக்கு எதிராக கையாளப்படுகின்றது. புகைக்கும் சிகரெட்டுக்கு 40000 கோடி டொலரும், குடிக்கு (பீர், வைன்) 24500 கோடி டொலரும், பணக்கார சீமான்கள் விளையாடும் கோல்ஃப் விளையாட 4000 கோடி டொலரும், உலக மூலதனத்தை பாதுகாக்கவும் விரிவாக்கவும் உதவும் இராணுவதுக்கு 80000 கோடி டொலரும் வருடாந்தம் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஏ.கே துப்பாக்கி செய்யும் பணத்தைக் கொண்டு 3000 பேரின் குருட்டுக் கண்ணை நிவர்த்திக்கும் விட்டமின் ஏ குளிசையை வாங்க முடியும். ஒரு கோடி கண்ணி வெடியைக் கொண்டு அதாவது 10 கோடி டொலர்களைக் கொண்டு, ஆறு விதமான குழந்தை தடுப்பூசியை 77 லட்சம் குழந்தைக்கு ஏற்றமுடியும். எப்-16 ரக 23 விமானத்தைக் கொண்டு அதாவது எண்பது கோடி டொலர் கொண்டு, 160 கோடி மக்களுக்கு 10 வருடத்துக்கு அயடின் குறைவால் ஏற்படும் மனவளர்ச்சி குன்றலை தடுக்கமுடியும். 240 கோடி டொலர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் கொண்டு 4.8 கோடி மக்களின் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தமுடியும். சுமூகத்தையிட்டும் குழந்தைகளையிட்டும் அக்கறைப்படாத உலக ஜனநாயகத்தில், 1990இல் 2.5 லட்சம் குழந்தைகள் கொரில்லாப் போராட்ட களத்தில் இயங்கினர். 10 கோடி குழந்தைகள் பாடசாலை செல்ல வசதியற்றவர்களாக இருக்கின்றனர். 15 கோடிக் குழந்தைகள் பட்டினியுடன் படுக்கையை நாடுகின்றனர். 3 கோடிக் குழந்தைகள் வீடற்ற நிலையில் வீதியில் படுத்துறங்கின்றனர். இவைகளால் 40 ஆயிரம் குழந்தைகள் இறந்து போகின்றனர். ஐந்து கோடி குழந்தைகள் உணவற்ற நிறைகுறைவினால் மரணத்தின் பிடியில் சிக்குகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மையின் பால்சுரப்பை 4 முதல் 6 மாதத்துக்கு நீடிக்கும் வகையில் உணவைக் கொடுப்பதன் மூலம், உலகில் 10 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்கமுடியும். 1984க்கு முந்திய பத்து வருடத்தில் 50 லட்சம் குழந்தைகள் யுத்தத்தினால் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். 50 லட்சம் பேர் வதிவிடத்தை இழந்தனர். நியூயார்க்கில் 3000 பேர் உயிரிழந்த அதே நாளில், எயிட்ஸ் நோயினால் 8000 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் 8000 பேர் இறக்கின்றனர். ஆனால் உலக அரங்கில் எது பேசப்பட்டது அமெரிக்க இழப்பு. பேசப்படாதது இந்த ஏழை நாடுகளின் மனித உயிரிழப்பு. அமெரிக்க உயிர் பொன்னானது. மேலானது. உலகில் பட்டினியாலும் இவர்களால் ஏவிவிடப்படும் அட்டூழியப் போராலும் கொல்லப்படும் ஏழைநாட்டு மக்களின் உயிர் என்பது கோடிக்கணக்கானாலும் நியாயப்படுத்தப்படக்கூடியது. இதுவே அமெரிக்க மேற்குலக ஆயுதப் பயங்கரவாதிகளின் கொள்கை. மக்களின் வாழ்வை சூறையாடும் உலகமயமாதல் கொள்கைக்கு ஏற்ப, மனிதப் பலியீடுகள் மூலதனத்துக்கு அவசியம் என்பதே, இந்த நாகரிகத்தின் பண்பாடு. இதையே மேல் உள்ள புள்ளிவிபரங்கள் தெளிவாக காட்டகின்றன.

இந்த மேற்கு பயங்கரவாத்தை எதிர்க்கும் தனிமனித பயங்கரவாத குழுக்களும், எப்போதும் மக்களையிட்டு வெறுப்பையே கொள்கின்றனர். இதுவும் அந்த அந்த குழு எதை அடிப்படைவாத கண்ணோட்டத்துடன் தொடர்புடையதாக கருதுகின்றதோ, அதன் அடிப்படையில் மக்களை பிளந்து எதிரியாக காட்டுகின்றது. அமெரிக்க முதல் கட்டிடத்தை விமானம் மூலம் தாக்கி அழித்த முகமது அட்டா, தனது உயில் ஒன்றில் தனது இறுதியத்திரையின்; போது பெண்கள் பங்கு கொள்ளக் கூடாது, தனது புதைவிடத்துக்கு பெண்கள் செல்லக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் "கர்ப்பமான பெண்களும் அழுக்கான மனிதர்களும் எனக்குப் பிரியாவிடை தரக் கூடாது, அவர்களை நான் மறுக்கின்றேன்; எனது உடலைக் கழுவுபவர்கள் தூய இஸ்லாமியாகளாக இருக்க வேண்டும்" என்று கூறும் இவர்கள், உயர் குடி இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளாக, குறுகிய நலன் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்;. இந்த மேட்டுக் குடி அடிப்படைவாதிகள் ஆப்கானில் ஆட்சி அமைத்த போது, பெண்களை அடக்கியொடுக்குவதில் காட்டு மிராண்டிகளாக இருந்தனர். அடிப்படைவாதிகளுக்கு எதிரான ஆப்கான் பெண்களின் போராட்டம் என்பது வரலாற்று ரீதியானது. 1919ம் ஆண்டில் அமனுல்லா கான் ஆட்சியெறியதைத் தொடர்ந்து, சோவியத்யூனியனுடன் நெருங்கிய உறவை வளர்த்தார். அவர் 1923ம் ஆண்டு உருவாக்கிய அரசியல் அமைப்பில் பெண்களின் உரிமைக்கு முக்கியத்துவமளித்தார். பெண்களின் விடுதலையே ஆப்கான் விடுதலைக்கு அவசியமானது என்றார். பெண்களின் கல்வி, பல மனைவி முறை ரத்து, முகத்திரையை நீக்கும் சட்டம் என பலவற்றை கொண்டு வந்தார். 1929ம் ஆண்டு இவரின் அரசாட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் மீண்டும் மறுக்கபட்டது. 1965 இல் ஆப்கானில் இடது தன்மை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சியே பெண்களின் உரிமை பற்றி பல போராட்டங்களை நடத்தியது. 1978 இல் ஆட்சிக்கு அவர்கள் வந்ததைத் தொடர்ந்த உட்பூhசலில் சிக்கிய நிலையில், அதன் ஒரு பகுதி சார்பாக சோவியத் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. இதைத் தொடாந்து பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 1980 இல் காபூல் பல்கலைகழகத்தில் பெண்களின் பங்கு 65 சதவீதமாக அதிகாரித்தது. மற்றும் பலதுறைகளில் பெண்களின் பங்கு மற்றும் பல முக்கிய துறைகளில் பொறுப்புகளிலும் பெண்கள் முன்னிலையில் இருந்தனர். சமூக ஏகாதிபத்தியமான சோவியத் ஆப்கானில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, இவை அனைத்தும் மீண்டும் முடிவுக்கு வந்தது. ஒரு மக்கள் புரட்சி இன்றி நடைபெறும் சில சீர்திருத்தங்களின் ஆயுள், பழமைவாதிகளால் குறுக்கப்படுகின்றது என்பதையே வரலாறு மீண்டும் காட்டுகின்றது. மத, இனம், நிறம் என்று நீண்ட அடிப்படைவாத பிற்போக்கு அரசியல் உள்ளடக்கம், சிலவேளை பிரதான எதிரியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போதும், அதை ஆதாரிக்க முடியாத மக்கள் விரோத கண்ணோட்டம் தடையாக மாறுகின்றது. இன்று ஏகாதிபத்தியம் உலகமயமாக்கும் பயங்கரவாத்தை முறியடிக்க, மக்களை அணிதிரட்டி போராடுவதே ஒரேயொரு சரியான அரசியல்  வழியாகும்;. உலகளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவும், உலக மக்களின் ஐக்கியத்தை கட்டியெழுப்பவதுமே இன்றைய வரலாற்று புரட்சிகர பணியாகும்.

குறிப்பு: காஸ்சுமீரை முன்வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தம் என்ற நிலைக்குள்  சென்றுள்ளனர். அமெரிக்கா பாணியில் இந்தியா யுத்தம் என்ற நிலைக்குள் ஆக்கிரமிப்பை செய்யத் துடிக்கின்றது. காஸ்சுமீர் மக்களின் அபிப்பிராயத்தை நிராகரிக்கும் இந் நாடுகளும், செய்தி மீடியாக்களும் வரலாற்றை திரித்து எழுப்பும் யுத்த வெறியை, இந்த இதழில் இடமின்மையால் இதில் முன்வைக்க முடியவில்லை. காஸ்சுமீர் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போதோ, அவர்கள் பெற்ற போலிச் சுதந்திரத்தின் போதும் சரி, இரண்டு நாட்டுடனும்; வரலாற்றில் இணைந்து இருக்கவில்லை. காஸ்மீர் ஒரு தனிநாடாகவே எப்போதும் இருந்தது. இதை பற்றி அடுத்த இதழில் விரிவாக பார்ப்போம். நீங்களும் அதற்கிடையில் இந்த உண்மையை  நீங்கள் புரிந்து கொள்ள முனைவது உங்கள் சமூக கடமையாகும்.