அராஜகங்களை அம்பலப்படுத்திய "தீப்பொறி" பத்திரிகை
இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் தளம் வந்ததும் எமது தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனக் காத்திருக்காமல் கண்ணாடிச்சந்திரன் இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருந்த "புதியதோர் உலகம்" நாவலுடன் உமாமகேஸ்வரனினதும் அவரால் தலைமை தாங்கப்படும் புளொட்டினதும் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் இறங்கினோம்.
புளொட்டின் செயற்பாடுகளிலும், அதன் மக்கள் விரோத அரசியலிலும் அதிருப்தியடைந்த புளொட் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூட எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தனர். பலர் எமக்கு ஆதரவளிக்கவும் முன்வந்தனர். இதற்குக் காரணம் நாம் புளொட்டிலிருந்த போது புளொட்டின் கொள்கை என்று பிரச்சாரம் செய்யப்பட்ட ஒன்றிற்காக, குறிப்பாக தோழர் தங்கராஜாவினால் புளொட்டின் கொள்கை என்று சொல்லப்பட்ட ஒன்றிற்காகச் செயற்பட்டிருந்தோமோயொழிய புளொட்டின் தலைமையில் இருந்த எந்தவொரு தனிநபருக்காகவும் செயற்பட்டிருக்கவில்லை என்பதுடன் ஈழவிடுதலைப் போராட்டத்தின் நலன்களுக்காகச் செயற்பட்டிருந்தோமேயொழிய கண்மூடித்தனமான தலைமை வழிபாட்டுடன் செயற்பட்டிருக்கவில்லை.அத்துடன் எமது நடைமுறைச் செயற்பாடுகளுக்கூடாக புளொட் உறுப்பினர்கள் மத்தியில் நாம் எந்த மக்களின் நலன்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருந்தோம் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம். இதனால் புளொட் எம்மீது சுமத்திய அபாண்டமான அவதூறுப் பிரச்சாரம் புளொட் உறுப்பினர்கள் மத்தியிலும் - உண்மையை நேசிக்கும், ஈழவிடுதலை போராட்டத்தின் நலன்களை மட்டுமே முதன்மைப்படுத்திய புளொட் உறுப்பினர்கள் மத்தியிலும் - மக்கள் மத்தியிலும் எடுபட்டிருக்கவில்லை.
புளொட்டில் மக்களமைப்பில் செயற்பட்டவர்களான கரவெட்டியைச் சேர்ந்த சிறி, பத்தன், கைதடியைச் சேர்ந்த ரவி, ஜெயா, வன்னியசிங்கம், கோண்டாவிலைச் சேர்ந்த சிறி, சிவா, கொக்குவிலைச் சேர்ந்த மாத்தன், செட்டி, ஆனந்தன், உலகநாதன், கணேஸ், நாதன், திருநெல்வேலியைச் சேர்ந்த கைலேசன், மகளிர் அமைப்பைச் சேர்ந்த மீரா, மித்திரா, கரோலின், சந்தியா, மாணவர் அமைப்பைச் சேர்ந்த திருமலை சிறீ, விசுவப்பா, ராதன் இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்ற மைக்கல், மனோஜி ஆகியோர் எம்முடன் இணைந்து கொண்டு செயற்பட முன்வந்ததையடுத்து "புதியதோர் உலகம்" நாவலை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விநியோகிக்க ஆரம்பித்தோம்.
ஈழவிடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றினுள் தோன்றி வளர்ந்த அராஜகத்தை முதன்முதலில் வெளிக்கொணர்ந்திருந்த நாவலான "புதியதோர் உலகம்" மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியது. இதேவேளை இந்தியாவில் அச்சிட்ட "புதியதோர் உலகம்" நாவலை தளத்துக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு ஏனைய இயக்கங்களின் உதவியையும் நாடியிருந்தோம். தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி(NLFT), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஈரோஸ்(EROS) ஆகிய இயக்கங்கள் "புதியதோர் உலகம்" நாவலை இந்தியாவிலிருந்து தளம் கொண்டுவந்து தருவதற்கு சம்மதித்திருந்தனர். ஆனால் ஈரோஸ் இயக்கத்தினரும்(EROS), தமிழீழ விடுதலைப்புலிகளும்(LTTE) "புதியதோர் உலகம்" நாவலை எம்மிடம் முழுமையாக ஒப்படைக்கத் தவறியிருந்ததுடன் அந்நாவலை யாழ்ப்பாணத்திற்கு வெளியே விநியோகித்து புளொட்டை அம்பலப்படுத்துவதன் மூலம் தாம் அரசியல் இலாபம் தேட முனைந்தனர்.
இந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்த சந்ததியார் தவிர ஏனையோரான காசி (ரகு), அமீன், நிசாகரன் ஆகியோர் தளம் வந்ததைத் தொடர்ந்து டொமினிக் (கேசவன்), காந்தன் (ரகுமான் ஜான்) ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கத்தினரின்(TELO) உதவியுடன் தளம் வந்து சேர்ந்தனர். தளத்தில் புளொட்டிலிருந்து வெளியேறிய நாமும் இந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டு கொக்குவில் பகுதியிலிலுள்ள நந்தாவிலில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தோம்.
இக் கூட்டத்தின் நோக்கம் புளொட்டின் கடந்தகாலத் தவறுகள் குறித்த ஒரு மதிப்பீட்டைச் செய்வதுடன் ஒரு செயற்குழுவை உருவாக்கி எமது அரசியற் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதாக இருந்தது. புளொட்டின் மத்தியகுழுவில் அங்கம் வகித்திருந்த டொமினிக் (கேசவன்), கண்ணாடிச்சந்திரன், காந்தன்(ரகுமான் ஜான்) உட்பட புளொட்டிலிருந்து வெளியேறியிருந்த அனைவரும், அத்துடன் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தவர்களும் கலந்துகொண்ட கூட்டத் தொடரில் விமர்சனங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தன.
புளொட்டின் மத்தியகுழுவில் அங்கம் வகித்தவர்களான டொமினிக், கண்ணாடிச்சந்திரன், காந்தன்(ரகுமான் ஜான்) ஆகியோரை நோக்கியதாக பெரும்பாலான விமர்சனங்கள் அமைந்திருந்தன. புளொட்டின் தவறான போக்குகளுக்கும், உமாமகேஸ்வரன் அனைத்து அதிகாரங்களையும் தன்வசமாக்கி அராஜகம் புரிந்ததற்கும் மத்தியகுழுவில் அங்கம் வகித்த நீஙகளும் ஒரு காரணம் என டொமினிக், கண்ணாடிச்சந்திரன், காந்தன் (ரகுமான் ஜான்) மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
தோழர் தங்கராஜாவின் வழிகாட்டலில் தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கான செயற்திட்டங்களோடு, கொள்கை, கோட்பாடு என்று நாம் தளத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தியாவில் தோழர் தங்கராஜாவைக் கைது செய்து, பயிற்சி முகாம்களில் அரசியலை மறுத்த, புளொட்டுடன் இணைந்த பல போராளிகளைக் கொன்றொழித்த உமாமகேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்து மத்தியகுழு உறுப்பினர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை எனவும், இந்தியாவில் உபசெயலதிபராக உமாமகேஸ்வரனுக்கு உதவியாக செயற்பட்டவரும், கட்டுப்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்தவரும், அனைத்து முகாம்களின் ஆலோசகராக பணியாற்றியவருமான காந்தனுக்கோ (ரகுமான் ஜான்), அல்லது உமாமகேஸ்வரனுடன் இந்தியாவில் செயற்பட்டு வந்த அரசியற்துறை செயலரும் கட்டுப்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்தவருமான சந்ததியாருக்கோ இவை குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லையா என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த நாம், எம்மிடம் சரியான அரசியல் தெளிவில்லாத போதும் கூட புளொட் தலைமையின் தவறான போக்குகளுக்கெதிராக அமைப்புக்குழுக் கூட்டங்களில் மட்டுமல்லாது தளம் வந்திருந்த செயலதிபர் உமாமகேஸ்வரனுடனும், படைத்துறை செயலர் கண்ணனுடனும் மற்றும் தளநிர்வாகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட டொமினிக்குடனும், எமது கருத்துக்களை முன்வைத்தும், புளொட்டின் தவறான போக்குகளுக்கெதிராகவும், போராடியபோது, மத்தியகுழுவில் அங்கம் வகித்த அரசியல் ரீதியில் வளர்ந்த நீங்கள் மிகவும் பொறுப்பாகவும், விழிப்பாகவும், சரிவர செயற்படுவீர்கள் என எண்ணித்தான் நாம் தளத்தில் நம்பிக்கையுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தோம், ஆனால் இன்றோ புளொட்டை ஒரு பலமான இயக்கமாக வளர்த்து உமாமகேஸ்வரனிடம் மட்டும் அனைத்து அதிகாரங்களையும் கொடுத்துவிட்டிருக்கின்றோம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
எமது விமர்சனங்களுக்கு காந்தனிடமிருந்தும் (ரகுமான் ஜான்), கண்ணாடிச்சந்திரனிடமிருந்தும் வந்த பதிலோ நாம் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. எமது விமர்சனங்கள் குறித்து எந்தவித எதிர்க்கருத்தையும் முன்வைக்காத காந்தன் (ரகுமான் ஜான்) தான் தவறிழைத்துள்ளதை ஏற்றுக் கொண்டிருந்ததோடு, "நாம் அரசியலில் வளர்ச்சியடைந்தவர்கள் எனக் கருதுவது தவறானது, நீங்கள் எண்ணுவது போல் நாம் அரசியல் வளர்ச்சியடைந்தவர்களல்ல, அரசியல் நூல்கள் சிலவற்றைப் படித்துள்ளோம், நாமும் உங்களைப் போல்தான்" என்ற கருத்தை முன்வைத்தார்.
கண்ணாடிச்சந்திரனும் இதனையொத்த கருத்தையே தெரிவித்திருந்தார். உண்மைதான். மத்தியகுழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது நாமும் கூட இந்த விடயத்தில் - அரசியலைக் கற்றல், அரசியல் ரீதியில் எம்மை வளர்த்துக் கொள்ளல் என்ற விடயத்தில் - பெரும் தவறை இழைத்துவிட்டோம் என்பதை உணர முடிந்தது. நாம் எம்மை அரசியல் ரீதியில் வளர்த்துக் கொள்வதற்கு மாறாக, புளொட்டின் பிரச்சாரங்களை முழுமையாக நம்பியதுடன், மத்திய குழு உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக வளர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன், மத்தியகுழு உறுப்பினர்கள் வெகு அவதானத்துடனும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அமைப்பைச் சரியாக வழிநடத்துவர் என எண்ணியிருந்தோம். இந்தத் தவறின் பெறுபேறாக, அதற்கான பெரும் விலை கொடுக்க வேண்டியவர்களாக இருந்தோம்.
ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக ஆயிரக்கணக்காக அணிதிரண்ட இளைஞர்களையும் யுவதிகளையும் நாம் தவறான திசைவழியில் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், ஈழ விடுதலைப் போராட்டத்தின் பேரால் நூற்றுக்கணக்கான போராளிகள் இலங்கை அரசபடைகளாலும், இயக்கத் தலைமையாலும் பலிகொல்லப்பட்டிருந்தனர். அப்பாவிப் பொதுமக்கள் "பயங்கரவாதிகள்" என்ற முத்திரையிட்டு இலங்கை அரசபடைகளாலும், "சமூக விரோதிகள்", "துரோகிகள்" என்ற முத்திரையிட்டு புளொட் உட்பட ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதனால் ஈழ விடுதலைப் போராட்டம் அதன் உண்மையான அர்த்தத்தில் சரியான அரசியல் தலைமை கொண்டு, சரியான அரசியல் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவேண்டிய வரலாற்றுத் தேவையாய் எம்முன் இருந்தது.
புளொட்டினுடைய தவறுகள் அனைத்தினதும் ஊற்றுமூலம் புரட்சிகர அரசியலையும், புரட்சிகர நடைமுறையையும் கொண்டிராததே எனவும், எனவே இன்று எம்முன்னுள்ள உடனடிப்பணி புரட்சிகர அரசியலைக் கற்பதும் அதன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிகரமான பாதையில் - உள்ளடக்கத்தில், அதன் உண்மையான அர்த்தத்தில் புரட்சிகரமான பாதையில் - முன்னெடுத்துச் செல்வதுமே எனவும் கருதினோம். எமது சந்திப்பின் இறுதியில் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய எமது கருத்துக்களை வெளிக்கொணரும் முகமாகவும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் புளொட்டின் அராஜகங்களையும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள் பொதுப் போக்காக வளர்ந்து கொண்டிருந்த அராஜகத்தையும் மக்களுக்கு எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்யும் முகமாகவும் ஒரு பத்திரிகை வெளிக்கொணர்வது எனவும் முடிவானது.
எம்மால் வெளிக்கொணரும் பத்திரிகை "தீப்பொறி" என்ற பெயரைக் கொண்டதாக இருக்கும் என முடிவானதோடு ஒரு செயற்குழுவும் கூடவே தெரிவானது. இச் செயற்குழுவில் டொமினிக் (கேசவன்), தர்மலிங்கம், பாலா, கண்ணாடிச்சந்திரன், காந்தன் (ரகுமான் ஜான்), நிசாகரன், ஆகியோருடன் நானும் இடம் பெற்றிருந்தேன். சந்ததியார் சில மாதங்களில் தளம் வருவதாக இருந்ததால், சந்ததியார் தளம் வரும்போது "தீப்பொறி"யின் செயற்குழுவில் அவரையும் இணைத்துக் கொள்வதென முடிவெடுத்திருந்தோம். புளொட்டின் தவறான போக்குகளுக்கு ஒரு காரணம் - ஒரே காரணம் அல்ல - புளொட் தலைமை சொந்த மக்களில் இருந்து அந்தியப்பட்டு இந்தியாவில் தங்கியிருந்ததாகும் என நாம் கருதியிருந்ததால், சந்ததியார் தளம் வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என எம்மால் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.
"தீப்பொறி" யின் செயற்குழு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து எமது அரசியற் செயற்பாடுகளும் தீவிரமடையத் தொடங்கின. எமது அரசியல் பிரச்சார ஏடான "தீப்பொறி" பத்திரிகையை வெளிக்கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் ஆரம்பமாகின. டொமினிக் (கேசவன்), கண்ணாடிச்சந்திரன், காந்தன் (ரகுமான் ஜான்) ஆகியோர் "தீப்பொறி" க்கான தகவல்களைத் திரட்டுவதிலும் கட்டுரைகளை எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததோடு ஏற்கனவே "புதிய பாதை" பத்திரிகையை வெளியிட்டு அனுபவம் கொண்டிருந்தவரான கண்ணாடிச்சந்திரன் "தீப்பொறி" பத்திரிகையை அச்சிட்டு வெளிக்கொணர்வதற்காக முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
அத்துடன் புளொட்டினால் செல்வன், அகிலன் படுகொலை செய்யப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக டொமினிக்கால் எழுதப்பட்ட "செல்வன் அகிலன் படுகொலை" (தமிழீழ விடுதலைப் போராளிகள் செல்வன் அகிலன் ஆகியோருக்கு எமது இதய அஞ்சலிகள் )என்ற துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்ததோடு யாழ்ப்பாணம் எங்கும் பரவலாக விநியோகிப்பதென்றும் முடிவெடுத்தோம். நாம் புளொட்டிலிருந்து வெளியேறிய பின் முதல்தடவையாக யாழ்நகருக்கு " செல்வன், அகிலன் படுகொலை" துண்டுப்பிரசுரத்தை கொண்டு சென்று மக்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டிருந்தோம்.
நாம் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டிருந்ததையறிந்து புளொட் இராணுவப் பிரிவினர் யாழ்நகருக்கு வந்தனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் நாம் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருக்கும் போது மினிவானிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்த புளொட் இராணுவப் பிரிவினர் எம்மைக் கடத்தி கொண்டு செல்வதற்கு முற்பட்டதோடு எம்மிடமிருந்த துண்டுப்பிரசுரங்களையும் பறித்தெடுக்க முனைந்தனர். தர்மலிங்கம், விஜயன், பாலா, ரஞ்சன் போன்றவர்களுடன் நானுமாக, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியினர் (NLFT)எமது பாதுகாப்புக்குத் தந்துதவிய கைக்குண்டுகளுடன் மட்டுமே நன்கு ஆயுதம் தரித்திருந்த புளொட் இராணுவப் பிரிவினரை இப்பொழுது முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்தோம். புளொட் இராணுவப் பிரிவினரோ எம்மை எப்படியாவது கடத்துவதென்று கங்கணம் கட்டி நின்றனர். புளொட் இராணுவப் பிரிவினருக்கும் எமக்குமிடையில் வாக்குவாதத்தில் ஆரம்பித்து இழுபறிநிலையெனத் தொடர்ந்து கொண்டிருந்தது. புளொட்டின் அராஜகவாதிகளுடன் இறுதிமுடிவு வரை போராடுவதென முடிவெடுத்து செயற்படத் தொடங்கிவிட்ட நாம் கைகளில் AK47 தாங்கியிருந்த புளொட் இராணுவப் பிரிவினரினருடன் போராடினோம். இந்நிலையில் எம்மைச் சூழ்ந்துகொண்ட மக்கள் எமக்கிடையிலான இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டுவந்ததோடு விடுதலைப் போராளிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். ஈழவிடுதலைப் போராட்டத்துக்காக இராணுவப் பயிற்சியைப் பெற்று மக்களுக்கு முன்மாதிரியாகவும், மக்களை வழி நடத்தியும் செல்ல வேண்டிய புளொட் இராணுவப் பிரிவினர் ஒற்றுமையைப் பற்றி மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். மக்கள் மத்தியிலான எமது செயற்பாடுகளும், மக்கள் எம்மை நன்கு இனம் கண்டுகொண்டமையும்தான் புளொட் இராணுவப் பிரிவினர் எம்மை அழித்தொழிக்க முயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் தலையிட்டு எம்மை ஆயுதம் தாங்கிய புளொட் இராணுவப் பிரிவினரிடமிருந்து காப்பாற்ற காரணமாக அமைந்திருந்தது.
"செல்வன், அகிலன் படுகொலை" துண்டுப்பிரசுரம் யாழ் மாவட்டத்துக்குள் பல பகுதிகளில் புளொட்டின் இராணுவப்பிரிவினரின் மிரட்டலையும் முகம்கொடுத்து விநியோகித்து முடித்திருந்தோம். ஆனால் புளொட்டின் அராஜகத்தை யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வெளியேயும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டியவர்களாக இருந்தோம். ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் சென்று எமது வெளியீடுகளை விநியோகிப்பது ஓரளவு ஆபத்து நிறைந்ததொன்றாக இருந்த அதேவேளை எம்மால் அவசியம் செய்யப்படவேண்டிய ஒரு வேலையாகவும் இருந்தது.
"தீப்பொறி" பத்திரிகையின் முதலாவது இதழ் அச்சாகி வெளிவந்திருந்தது. உமாமகேஸ்வரனினதும் அவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்படும் புளொட்டினதும் அராஜகங்களையும், உமாமகேஸ்வரனால் பயிற்சிமுகாம்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும், புளொட்டின் ஆரம்பகால உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் நெருங்கிய சகாவுமான உடுவில் சிவனேஸ்வரன் படுகொலையையும் தாங்கி வந்த "தீப்பொறி" இதழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த அராஜகம் குறித்தும், இந்த அராஜகம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குவது குறித்தும் எச்சரிக்கை செய்திருந்தது.
"சரியான அரசியல் மார்க்கமும் இராணுவ மார்க்கமும் தன்னியல்பாகவும் அமைதியாகவும் தோன்றுவதில்லை. அவை போராட்டப் போக்கிலேயே தோன்றுகின்றன" என்ற மேற்கோளை "தீப்பொறி" பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளியிட்ட நாம், போராட்டம் பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியுமான நம்பிக்கையுடன், "தீப்பொறி" பத்திரிகையை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றோம்.
எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தவர்கள் அனைவரையும் வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து கிராமங்கள் தோறும் "தீப்பொறி" பத்திரிகையை விநியோகித்தோம். ஆனால் பத்திரிகையை கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்லும்போது பல்வேறு நெருக்கடிகளையும், குறிப்பாக புளொட்டிலிருந்த அராஜகவாதிகளின் எதிர்ப்புக்கும் மிரட்டல்களுக்கும் மத்தியிலுமே பத்திரிகையை விநியோகிக்க முடிந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவின் பின் புளொட்டை உருவாக்கியவர்கள் எப்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலைகளுக்கும், கொலை முயற்சிகளுக்கும் உள்ளானார்களோ, அதேபோன்றதொரு நிலை இப்பொழுது புளொட்டிலிருந்து பிளவுபட்டு வந்த எமக்கு ஏற்பட்டது.
பிரபாகரனும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எப்படி தமது இயக்கத்திலிருந்து பிரிந்து அரசியல் செய்வதை "துரோகம்" எனப் பிரகடனம் செய்து அவர்களை அழித்தொழிக்க கொலைவெறி கொண்டு அலைந்தனரோ அதே போலவே தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறையிலிருந்து வெளியேறி புளொட் என்ற அமைப்பை சுந்தரம், சந்ததியார் போன்றோருடன் இணைந்து உருவாக்கி தன்னை ஒரு "புரட்சிவாதி" யாக வெளிக்காட்டிய உமாமகேஸ்வரனும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் பின்பற்றி வந்த அதே கொள்கையை புளொட்டிலிருந்து வெளியேறியவர்களான எம்மீது கடைப்பிடித்ததன் மூலம், கருத்து மற்றும் நடைமுறையில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஒத்தவராகவே விளங்கினார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33
34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34
35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35
36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36
37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37
38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38
39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39
40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40