Language Selection

புதிய ஜனநாயகம் 2011

கடும் குளிரையும் பனிப் பொழிவையும் மீறித் தொடர்ந்து கொண்டிருக்கிறது வால் ஸ்டிரீட் போராட்டம். வால் ஸ்டிரீட் போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்கும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் திரளின் கோபத்தில் ரோம் தீப்பிடித்தது. சம்பளவெட்டு, ஆட்குறைப்பு, ஓய்வூதிய வெட்டு, மக்கள் நலத்திட்டங்கள் ரத்து, பொதுத்துறை   விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் நடத்திய போராட்டத்தில் கிரீஸ் பற்றி எரிந்தது. எகிப்தின் மக்கள் முபாரக்கின் இராணுவ டாங்குகள், போர் விமானங்களுக்கு  அஞ்சவில்லை.  முபாரக்கின் கூலிப்படைகள் முதல் குதிரைப்படைகள் வரை அனைத்தையும் எதிர்த்து நின்றார்கள். அன்றைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தின் தலைநகரம், இளைஞர்களின் கலகத்தால் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தது.

 

 

கண்டங்கள், நாடுகள், நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், குறுக்கு நெடுக்காக உலகம் முழுவதும் மக்களின் கோபத் தீக்கு எண்ணெய் வார்த்திருக்கிறது முதலாளித்துவம். முபாரக்கின் சர்வாதிகாரம், கிரீஸ் அரசின் சிக்கன நடவடிக்கைகள், ஒபாமாவின் வரிகள், வேலையின்மை, கல்வி  மருத்துவ மானியவெட்டு, சுற்றுச்சூழல் அழிவு என்று ஆயிரம்பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டாலும், அவை அனைத்தின் மூல காரணம் உலக முதலாளித்துவம்தான்.

போராடும் மக்களுக்கு இது தெரியாமல் இல்லை. "முதலாளித்துவம் ஒழிக!, வங்கி முதலாளிகளைக் கைது செய்!' என்று அமெரிக்காவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்குகிறார்கள். உணவு, உடை, இருப்பிடம், வேலை, பொழுதுபோக்கு, நுகர் பொருட்கள்,   கல்வி, சுகாதாரம், போலீசு, இராணுவம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். தனி மனித முயற்சியின் மூலம் யாரும் வெற்றி பெற முடியும்மென்ற "அமெரிக்க கனவும்' அமெரிக்க ஜனநாயகமும் பொய் என்பதை அவர்கள் தம் சொந்த அனுபவத்தில் பட்டு உணர்ந்திருக்கிறார்கள்.

எனினும், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்று ஒப்புக் கொள்வதில் அவர்களுக்குத் தயக்கமிருக்கிறது. தன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவம் வெற்றி பெற முடியவில்லை. எனினும், பல பத்தாண்டுகளாக விடாப்பிடியாக நடத்திய அவதூறுப் பிரச்சாரத்தின் விளைவாக, மக்கள் மனதில் கம்யூனிசத்தின் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் அது உயிர் வாழ்கிறது. கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், தனிநபர் ஊக்கம் மற்றும் உரிமை மறுப்பு, அதிகாரவர்க்க ஆட்சி என்ற பொய்களை மக்கள் மனதில் நிலைநாட்டி பீதியூட்டியிருக்கிறது. ரசிய, சீன சோசலிசங்களின் சீரழிவு இந்தப் பொய்களுக்கு புனுகு தடவிவிட்டது. அவற்றின் தோல்வியோ ஊனமுற்ற முதலாளித்துவத்துக்கு ஊன்று கோலாகப்பயன்படுகிறது.

முதலாளித்துவத்தின் பேராசை, கொள்ளை, பித்தலாட்டம், போர்வெறி ஆகியவற்றை அமெரிக்காவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். எனினும், திட்டவட்டமான மாற்று ஒன்றை முன்வைத்துப் போராடாதவரை, இவையெல்லாம் ஆற்றாமை தோற்றுவிக்கும் புலம்பல்களாகவே முடிகின்றன. சியாட்டிலில் தொடங்கி கடந்த பத்து ஆண்டுகளாக அடுத்தடுத்து பல முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் மேற்குலகில் நடந்த போதும், அவை முன்னேற முடியாமல் தேங்குவதற்கு இதுதான் காரணம். இந்தத் தேக்கம் தொடருமாயின், அது சோர்வையும் அவநம்பிக்கையையுமே மக்களிடம் பரப்பும். அவ் வகையில் அராஜகவாதிகள், பின் நவீனத்துவவாதிகள், டிராட்ஸ்கியவாதிகள், தன்னார்வக்   குழுக்கள் உள்ளிட்ட பலரும் முதலாளித்துவத்தின் கையாட்களாக இருந்து மக்களைச் சிதறடிக்கிறார்கள். விரக்திக்குத் தள்ளுகிறார்கள். முதலாளித்துவத்திடம் சரணடையச் செய்கிறார்கள்.

வால் ஸ்டிரீட் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்ப்பதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பு. அதனை சோசலிசத்தின் மீதான விருப்பமாக மாற்றுவதன் மூலம்தான் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்தியமாகவும், மேல்நிலை வல்லரசுகளாகவும், ஒற்றைத்துருவ மேலாதிக்கமாகவும், உலக வர்த்தகக் கழகமாகவும் அரசியல்பொருளாதாரஇராணுவ ரீதியில் மென்மேலும் மையப்படுத்தப்பட்ட ஒரு கொடிய வன்முறை எந்திரமாக மாறிவரும் உலக முதலாளித்துவத்தை உதிரியான கட்சிகளும், கலவையான முழக்கங்களும், தொளதொளப்பான அமைப்பும் வீழ்த்த முடியாது.

முதலாளித்துவத்துக்கு எதிரான மார்க்சிய லெனினிய சித்தாந்தம், ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கட்சி, அதன் தலைமையில் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட மக்கள்திரள்  இவையில்லாமல் எந்தவொரு நாட்டிலும் முதலாளித்துவத்தின் சர்வாதிகாரத்தை வீழ்த்த இயலாது. மக்களின் கோபம் ஒரு சுனாமியைப் போன்ற ஆற்றலுடன் மேலெழுந்தாலும், ஆளும் வர்க்கம் அந்த சுனாமிக்கும் ஒரு வடிகாலைத் தயாரித்துவிடும். வீரம் செறிந்த எகிப்து மக்களின் போராட்டம் எப்படி மடைமாற்றப்பட்டதென்பது நம் கண்முன் தெரியும் சமகாலச் சான்று.

முதலாளித்துவத்துக்கு எதிரான கம்யூனிசத்தின் சித்தாந்தப்போர், போல்ஷ்விக் உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட கட்சி இவ்விரண்டு அவசரத் தேவைகளையும் நிறைவு  செய்யக் கோருகின்றன உலகெங்கும் எழுந்து வரும் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள்.

.தொரட்டி