05292023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

அண்ணா ஹசாரே- கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

"நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை.  எங்கள் சானல் வழியா கத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம் கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன.

 

 

முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே'  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி)

கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார். அதாவது சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஊர்ப்புறங்களில்  ராப்பகலாக சைக்கிள் மிதிக்கும் சைக்கிள் வீரர் நிகழ்ச்சியையே பெரிய சைஸில் நடத்தியது போலிருந்த இந்தப் போராட்டத்தில், கொட்டு அடித்து நோட்டீஸ் கொடுக்கும் நபரின் பாத்திரத்தை கிரண் பேடியும் அருண்கேஜ்ரிவாலும் செய்தனர். ஓயாமல் தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த கிரண் பேடி, "நம்முடைய அண்ணா நன்றாக இருக்கிறார்' என்று அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் கூடியிருந்த கூட்டம், ஐஸ் கிரீம், பாப்கார்ன், நொறுக்குத்தீனியைத் தின்றபடியே, "அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று கூறி தேசியக் கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சிக் கொடி, அரசியலையை வெறுக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு தேசியக் கொடி போலிருக்கிறது!

ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றவில்லையென்றால், "உணவைத் துறப்பேன்' என்று ஹசாரே ஒருபுறம் எச்சரிக்க, "மசோதாவை நிறைவேற்றவில்லையென்றால் நான் உடையைத் துறப்பேன்' என்று அரசை எச்சரித்தார் விளம்பர நடிகை சலீனா வாலி. ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களோ தங்களது வருமானத்தையே துறந்து, ""ஊழலுக்கு எதிராகப் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க, யாரும் காசு தர வேணாம்' என்று அறிவித்தன. இப்படி பல வகையறாக்களின் ஆதரவையும் பெற்றிருந்த ஹசாரே, அவர் யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ அந்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

ஆகஸ்டு 16  ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக  ஹசாரேயை அழைத்து வந்து  மேற்படி  போராட்டக் களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது  ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.

என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று

கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதா வைத்தயாரித்தனர். பிரதமர்,   நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். "எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்'  அதாவது பட்டினிப் போர் என்று அறிவித்தார் ஹசாரே.

தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், "அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்' என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன்,  ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.

"மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்'  என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்' என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் "சும்மனாச்சிக்கும்' ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு,  மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.

குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக  வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, "வெற்றி வெற்றி' என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.

ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே  பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து  அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி "செபி'யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.

இப்பேர்ப்பட்ட  யோக்கியர்கள் திடீரென்று ஒரு "மாபெரும்' ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின் நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச் சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ்  நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும் இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பது  சிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள். இன்று தனியார்மயக் கொள்கைகள், ஊழலே முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன.  எனினும் "தனியார்மயத்தை ஒழி' என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.

ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜி லென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று "சர்வ வல்லமை பொருந்திய' ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணி யாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.

கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மயதாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட "புனிதர்கள்' சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரே யின் அணி.

. தொரட்டி