Language Selection

புதிய ஜனநாயகம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழுகிறது, மத்திய கினியா.

 

 

மத்திய கினியா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சிறியதொரு நாடெனினும், 'புதிய குவைத்' என அழைக்கப்படும் அளவிற்கு எண்ணெய் வளம் மிக்கது. ஆப்பிரிக்க கண்டத்தின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ள இந்நாட்டின் தனிநபர் வருமானம்

ஆண்டுக்கு 15 இலட்சம் ருபாய்க்கும் அதிகமென்றும் தனிநபர் வருமானத்தில் உலகிலேயே  இரண்டாவது இடத்தில் இந்நாடு இருக்கிறதெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கச்சாஎண்ணெய் ஏற்றுமதி மூலம் அந்நாட்டிற்குக் கிடைக்கும் வருமானத்திற்கும், அந்நாட்டு மக்களின் வாழ்நிலைக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதையும், 1990  களில் மத்திய கினியாவில் கச்சா எண்ணெய் வளம் கண்டெடுக்கப்பட்ட பின், அந்நாட்டின் பொருளாதாரம் எந்தளவிற்கு "வளர்ச்சி' அடைந்ததோ, அந்தளவிற்கு அந்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதையும் உலக வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 177 நாடுகளின் மனிதவள மேம்பாட்டுத் தர வரிசையில் இந்நாடு 121ஆவது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் 70 சதவீதம் பேர் நாளொன்றுக்கு 50 ருபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வருவதாக  இன்னொரு புள்ளி விவரம் சொல்கிறது.

1968ஆம் ஆண்டு ஸ்பெயினின் காலனியாதிக்கத்திலிருந்து "விடுதலை' அடைந்த மத்திய கினியா, 1979 ஆம் ஆண்டு வரை பிரான்சிஸ்கோ மக்கியாஸ் என்ற சர்வாதிகாரியால் ஆளப்பட்டது. பின்னர் 1979இல் நடந்த அரண்மனை புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய, தற்போதைய அதிபர் தியோடொரோ ஓபியாங், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.

அதேசமயம், கினியாவில் தேர்தல்களும் நடத்தப்படும். 2009  ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 95 சதவீத வாக்குகளைப் பெற்று, மீண்டும் அதிபரானார் ஓபியாங். கினியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிதான் நடைபெறுகிறது எனக்காட்டுவதற்குத் தேர்தலைவிட, வேறு மாயமந்திரம் எதுவும் தேவையில்லையே!

1996ஆம் வருடம் இந்நாட்டில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் வளர்ந்தது. பல எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டோடு தொடங்கப்பட்டன. அவையனைத்தும் அதிபர் ஓபியாங், அவரது குடும்பம் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. இதைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் கச்சா எண்ணெய் வருமானத்தில் பெரும்பகுதியை இக்கும்பலே கொள்ளையடித்துவிடுகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி காரணமாகத் தாராளமாகப் பணம் புழங்கும் அரசுத் துறையில் இலஞ்சமும், ஊழலும், பகற்கொள்ளையும் தலைவிரித்தாடுகிறது. ஆட்சியாளர்கள் எண்ணெய் உற்பத்தி  ஏற்றுமதியில் மட்டும் அக்கறை காட்டி வருவதால், பாரம்பரிய கொக்கோ, காபி விவசாயம் சீரழிந்து மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டனர்.

மற்றொரு பக்கம் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் கேள்விக்கிடமற்றதாக இருக்கிறது. சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் போராடக் கூட வேண்டாம், ஆட்சிக்கு எதிராக முணுமுணுத்தாலே போலீசின் சிறப்பு கவனிப்புக்கு ஆளாக நேரிடும். கறுப்புக் கடற்கரைச் சிறைச்சாலையில் அடைக்கப்படும் அரசியல் கைதிகளின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்வது சர்வசாதாரணமானது. சித்திரவதைகளைக் கண்காணிக்கும் ஐ.நா. குழுவினர் இந்தச் சிறைச்சாலையைச் சோதனையிடச் சென்ற போது, பொலீசார் சித்திரவதைக்   கருவிகளை ஒளித்துக்கூட வைக்கவில்லை. உங்களால் செய்ய முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள் எனக் குழுவினரின் கண்களில் படும்படி அனைத்துக் கருவிகளையும் மேசை மீதே வைத்திருந்தனர்.

அரசியல் கைதிகளைச் சித்திரவதை செய்வதை அரசின் கொள்கையாகவே கொண்டுள்ளது,  கினியா. எனினும், கினியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், "கினியாவிற்கு நீதி குறித்துப்  போதிப்பதைக் கைவிடவேண்டும்; மற்றவர்கள் குறிப்பிடும் அளவிற்கு அந்நாட்டில் இலஞ்சமோ, வறுமையோ தாண்டவம் ஆடவில்லை' என அமெரிக்க அரசிற்கு கமுக்கச் செய்தி அனுப்பியதாக, விக்கி லீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சிறப்பு ஆலோசகராக இருந்த  லானி  ஜே. டேவிஸ், கினியாவின் சர்வாதிகாரி ஓபியாங் குறித்து உலகநாடுகள் மத்தியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஒரு பிரச்சார இயக்கத்தையே நடத்தினார். இதற்காக, ஓபியாங்கிடமிருந்து பல கோடி அமெரிக்க டாலர்களைச் சன்மானமாகப் பெற்றுக் கொண்டார், அவர்.

முன்னாள் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் இன் நெருங்கிய கூட்டாளியும் அமெரிக்க  ஐரோப்பிய கூட்டுப் படைகளின் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பாண்ட்ஸ் எம். கிராட்டாக்குச் சொந்தமான எம்.பி.ஆர்.ஐ., என்ற தனியார் கூலிப்  படை  நிறுவனம் தான் மத்திய  கினியாவின் இராணுவத்திற்கும், போலீசிற்கும் பயிற்சியளித்து வருகிறது. இத்தனியார் படை மத்திய கினியா போலீசாருக்குப் பயிற்சி கொடுப்பதை அமெரிக்க உள்துறை ரத்து செய்தாலும், அதிபர் புஷ் அப்பயிற்சிக்குப் பின்னர் ஒப்புதல் அளித்தார்.

செவ்ரான், மாராத்தான் ஆயில், நோபிள் எனர்ஜி ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில்தான் மத்திய கினியாவின் எண்ணெய் வளம் சிக்கிக் கொண்டுள்ளது. அதே சமயம், லிபியாவின் அதிபர் கடாஃபியோ, தனது நாட்டில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான், ஓக்ஸிடென்டல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் உரிமத்தை சென்ற ஆண்டு அக்டோபரில் புதுப்பிக்க மறுத்தார். கினியாவில் ஓபியாங்கின் சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்கா பக்கபலமாக இருப்பதற்கும், லிபியாவில் அதிபர் கடாஃபியைத் தூக்கியெறியும் நோக்கத்தோடு அமெரிக்க  ஐரோப்பிய கூட்டுப் படைபோர்  தொடுத்திருப்பதற்கும் பின்னுள்ள காரணம் இதுதான்.

. அழகு