05272023
Last updateபு, 02 மார் 2022 7pm

சட்டமன்றத் தீர்மானம்: ஜெயாவின் கபட நாடகம், புலி ரசிகர்களின் விசில்!

ஈராண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரின் கொடூரங்களை ஆவணப் படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல்4 தொலைக்காட்சி. கல்மனம் கொண்டோரையும் கதறச் செய்யும் இக்கொடூரக் காட்சிகளைக் கண்டு வேதனையும் துயரமும் கொள்ளாதோர் இருக்கவே முடியாது. இலங்கை அரசின் இரக்கமற்ற இந்தப் போரை இந்திய அரசுதான் உற்ற துணைவனாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இயக்கியது.

 

 

போரின்போது மட்டுமின்றி, போருக்குப் பின்னரும் வர்த்தக, பொருளாதார, இராணுவ ஒத்துழைப்பு என்ற பெயரில் இலங்கை அரசையும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலையும் ஆதரித்து நிற்கிறது. கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை மைய அமைச்சர் வாசன் தொடங்கி வைத்துள்ளார். அடுத்த கட்டமாக, இராமேசுவரத்துக்கும் தலை மன்னாருக்குமிடையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் முதலான அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு வர்த்தகம், நட்புறவு குறித்து பேசிவிட்டுத்தான் வருகிறார்கள்.

பாசிச ஜெயா தமிழக முதல்வரானதும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்  என போர்க்குற்றவாளி ராஜபக்சே அரசுடன் கூடிக்குலாவும் இந்திய அரசை வலியுறுத்தி கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று நடந்த தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த நாளில், கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலே நடக்கும் வழக்கிலே தமிழகத்தின் வருவாய் துறையையும் ஒரு மனுதாரராகச் சேர்க்க வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அகதிகளைத் துரத்தி வேட்டையாடி, ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்திய ஜெயா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ் ஈழத்தை ஆதரித்து சவடால் அடித்ததும், தமிழினப் பிழைப்புவாதிகளால் ஈழத் தாயாகத் துதிக்கப்பட்டார். தேர்தலுக்குப் பின்னர் கொடநாடு போய் படுத்துக் கொண்டு, இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக காகித அறிக்கைகூட வெளியிடாத ஜெயா, இப்போது ஈழத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடைவிதிக்கவும், ராஜபக்சே கும்பலைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்ததும் தமிழினப் பிழைப்புவாதிகளால் போற்றப்படுகிறார். ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து பாசிச ஜெயா கும்பலுக்குத் துதிபாடிய வீரமணி கும்பலை எதிர்த்து, தி.க.விலிருந்து விலகி பெரியார் தி.க. எனும் தனிக்கட்சியை உருவாக்கியவர்கள், இப்போது பாசிச ஜெயாவை ஆதரித்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

ஒருக்கால், தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் "நியாயத்தை' உணர்ந்து, மைய அரசு நாடாளுமன்றத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஐ.நா. மன்றத்துக்கு அனுப்புவதாகவும் வைத்துக் கொள்வோம். இந்தத் தீர்மானத்தை ஒருவேளை ஐ.நா. பொதுச்செயலர் பரிசீலித்தாலும், இதனைச் செயல்படுத்த அவர் ஐ.நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபையில் இத்தீர்மானத்தை முன்வைத்து, இதற்கு ஆதரவாக பெரும்பான்மை நாடுகளின் வாக்களிப்பைக் கோரவேண்டும். அதன் பிறகு ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் போர்க்குற்றம் நடந்துள்ளதை நிரூபிக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும். அதன் பிறகு, விசாரணையின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். போர்க்குற்றமிழைத்த இலங்கை அரசு மீது ஒரு காகித கண்டன அறிக்கையைக்கூட இதுவரை வெளியிடாத ஐ.நா.வும் மேற்குலக நாடுகளும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முன்வருமா என்று இன்றைய உலக நிலைமையைச் சற்று யோசித்துப் பார்த்தாலே, இந்த வெற்றுத் தீர்மானத்தின் யோக்கியதை என்ன என்பது தெளிவாகிவிடும். செத்தவன் கையில் வெற்றிலையை வைப்பதற்கும், இந்த வெற்றுத் தீர்மானத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சட்டரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ எவ்வித மதிப்புமில்லாத இத்தகைய தீர்மானங்களால் எந்தப் பலனுமில்லை.

மைய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தில், கச்சத்தீவு பிரச்சினையை 2008இல் அன்று வாதியாக இருந்த ஜெயா, மைய அரசையும் மாநில அரசையும் சேர்த்திருந்தார். இன்று அவர்தான் வாதி, மாநில ஆட்சிப்பொறுப்பில் அவரே இருப்பதால், அவரே பிரதிவாதி. இந்தக் கேலிக்கூத்து நடுவே வருவாய்த்துறையையும் அவர் வாதியாகச் சேர்த்துக் கொண்டுள்ளார். மே.வங்கமுதல்வராக இருந்த பி.சி.ராய் முயற்சியில் பெருபாரிதீவு எப்படி அன்றைய மே.பாகிஸ்தானிடமிருந்து (இன்றைய வங்கதேசம்) மீட்கப்பட்டதோ அதே போல, கச்சத்தீவை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வழங்கியது தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் நியாயங்களும் தமிழக அரசுக்கு நிறையவே இருக்கின்றன என்று கூறி, இந்த கோமாளித்தனம் வெற்றிபெற வாழ்த்துகிறது, தினமணி.

இது, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்ளையின் அடிப்படையில் உருவான இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம். மைய அரசின் வெளியுறவுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியும் எனில், அமெரிக்காவின் அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தையே ஒரு வழக்கு தொடுத்து முறியடித்திருக்கலாமே! அதனால்தான், பாசிச ஜெயாவின் சித்தாந்த வழிகாட்டியும் ஆலோசகருமான துக்ளக் சோ கூட, இந்தத் தீர்மானம், இந்தப் பிரச்சினையைப் பற்றி தமிழகத்தில் எல்லா கட்சிகளும் கவலைப்படுகின்றன என்று காட்டுவதற்கு உதவும், அதற்கு மேல் கச்சத்தீவையே திரும்பப் பெற்றுவிட இந்தத் தீர்மானம் வழிசெய்துவிடாது என்கிறார். இருப்பினும், சீமான், பழ.நெடுமாறன், வைகோ, உருத்திர குமாரன், சத்தியராஜ், மணிவண்ணன், கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன்  என நீளும் தமிழன ஆதரவாளர்கள், வெற்றுத் தீர்மான அட்டைக் கத்தியை ஏந்திச் சுழற்றிக் கொண்டு புறப்பட்டுவிட்ட ஜெயாவை, புறநானூற்றுத் தாயைக்கண்ட திருப்தியில் புளகாங்கிதம் அடைந்து நிற்கின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, மனிதகுல வரலவாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொடிய இனப்படுகொலை பற்றி அடுத்தடுத்து பல உண்மைகள் வெளியாகிவரும் இத்தருணத்தில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக் கருத்தை உருவாக்குவதும், அக்கும்பலைத் தண்டிக்கக் கோரி மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்துப் போராட்டங்களின் மூலம் உலக நாடுகளை நிர்ப்பந்திப்பதும்தான் இன்றைய அவசியமான கடமையாக உள்ளது. ஆனால், மக்களை அணிதிரட்டிப் போராடத் தயாரில்லாதவர்களும், ஒரு கட்சித் தலைவர் மனது வைத்தால் இன அழிப்புப் போர்க் குற்றவாளிகளைத் தண்டித்துவிட முடியும் என்று முட்டாள்தனமாக நம்புபவர்களும்தான் சிறீரெங்கநாயகியின் தயவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி எழுதிய கடிதங்கள் ஈழத்தமிழின அழிப்புப் போரை வேடிக்கை பார்ப்பதாக முடிந்தன. ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானங்ளோ கேலிக்கூத்தாகி நிற்கின்றன.