06082023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒசாமா பின்லாடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்!

அரபு நாடுகளில் ஜனநாயகத்திற்காக நடைபெற்று வரும் போராட்டங்கள், அல்காய்தா போன்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகள் அம்மக்களிடம் செல்வாக்கு செலுத்தவில்லை என நிரூபித்து வரும் வேளையில், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுட்டுக் கொன்றுள்ளது. போர்க் குற்றமாகக் கருதத்தக்க இப்படுகொலையை, ஏதோ வரலாற்றுச் சாதனையைப் போலப் பீற்றி வருகிறது, அமெரிக்கா. மேலும்,  அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றதன் மூலம், அமெரிக்காவில் செப்.11,2001 அன்று நடந்த தாக்குதல்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாகக் கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா.  பின்லேடன் நிராயுதபாணியாக இருந்த நிலையில், அவரை அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சட்டவிரோதமாகச் சுட்டுக் கொன்றதைப் பற்றியோ, இத்தாக்குதலின் பொழுது பாகிஸ்தானின் இறையாண்மை மீறப்பட்டிருப்பது பற்றியோ கேள்வி எழுப்பாத முதலாளித்துவப் பத்திரிகைகள், அமெரிக்க ஆளும் கும்பலைப் போலவே இப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றன.

 

 

இன்று பயங்கரவாதியாகவும், தீய சக்தியாகவும் அமெரிக்காவால் முன்னிறுத்தப்படும் ஒசாமா பின்லேடனை உருவாக்கி, வளர்த்துவிட்டதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் என்பதையும்; அல்காய்தாவின் பயங்கரவாதப் படுகொலைகளைவிட, தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவும், அதனின் ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் ஆப்கானிலும், இராக்கிலும், பாகிஸ்தானிலும் நடத்திவரும் போரும் பயங்கரவாதப் படுகொலைகளும்தான் உலக மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பின்லேடனின் மரணத்தைப் பற்றிப் பேச முடியாது. எனினும், அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் அடிவருடி அரசுகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் இந்த சமீபகால வரலாற்று உண்மைகளை மூடிமறைப்பதில் குறியாக இருக்கின்றன.

அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தக மையத்தின் மீதும், பெண்டகன் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அல்காய்தாவும், தாலிபானும்தான் காரணமெனக் குற்றஞ்சுமத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் முக்கியமான ஆதாரங்கள் எதையும் இதுநாள்வரை முன்வைக்கவில்லை. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.இன் தலைவராக இருந்த ராபர்ட் முல்லர், இத்தாக்குதல்கள் தொடர்பாக 2002ஆம் ஆண்டு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில், "வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மிகத் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், இத்தாக்குதல்கள் தொடர்பான சதித் திட்டம் ஆப்கானில் தயாரிக்கப்பட்டாலும், அது ஐக்கிய அரபுநாடுகள் மற்றும் ஜெர்மனியில் இருந்துகொண்டுதான் செயல்படுத்தப்பட்டதாகத் தாங்கள் நம்புவதாக' அறிவித்தார்.

இந்த நம்பிக்கையையும், இந்தத் தாக்குதல்களைத் தாங்கள்தான் நடத்தியதாக அல்காய்தா அளித்த சுயவாக்குமூலத்தையும் தவிர, வேறெந்த ஆதாரமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் கிடையாது. எனினும் அமெரிக்கா, தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைப் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்கு முன்பே, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கான் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அல்காய்தாவுக்கும் இராக்கின் அதிபராக இருந்த சதாம் உசேனுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறி, இராக் மீதான ஆக்கிரமிப்புப் போரையும் நியாயப்படுத்தியது. ஆனால், அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்து, சதாம் உசேன் ஆட்சியைத் தூக்கியெறிந்த பிறகுதான், அந்நாட்டில் அல்காய்தாஉருவாகி வளர்ந்தது.

பின்லேடன் பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத் நகரில் இரகசியமாகத் தங்கியிருந்ததையும், மே 1 அன்று நள்ளிரவில் அவர் தங்கியிருந்த பங்களாவைச் சுற்றி வளைத்து, 40 நிமிட நேரத்திற்குள் அவரைச் சுட்டுக்கொன்று, அவரது பிணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றதையும் ஏதோ வரலாற்றுச் சாதனை போலவும், மயிர்க்கூச்செறியும் சாகச நடவடிக்கை போலவும் அமெரிக்காவும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் மாய்ந்துமாய்ந்து சொல்லி வருகின்றன. அமெரிக்கா பின்லேடனைப் பிடிப்பதற்கு இப்படி கஷ்டப்பட்டிருக்கவும் வேண்டியதில்லை; பத்தாண்டு காலத்தையும், ஏறத்தாழ 65 இலட்சம் கோடி ரூபாயையும் வீணடிருத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பின்லேடன் அல்காய்தா இயக்கத்தை 1988ஆம் ஆண்டே தொடங்கிவிட்டாலும், அமெரிக்காவிற்கும் பின்லேடனுக்கும் இடையே இருந்துவந்த உறவு, முதல் இராக் ஆக்கிரமிப்புப் போருக்குப் பிறகுதான் முறியத் தொடங்கியது. முதல் இராக் ஆக்கிரமிப்புப் போருக்குப் பின் சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்லேடன், சூடானில் தஞ்சமடைந்தார். பின்லேடன் சூடானில் தங்கியிருந்த நாட்களில், அவர் தனது குடும்பத் தொழிலைத்தான் கவனித்து வந்தாரேயொழிய, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என சூடான் அரசு கூறியிருக்கிறது. எனினும், அமெரிக்கா பின்லேடனை சூடானிலிருந்து வெளியேற்றக் கோரி, அந்நாட்டு அரசிற்கு நிர்பந்தம் கொடுத்தது. சூடான் அரசு பின்லேடனை சவூதி அரேபியாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ ஒப்படைக்கத் தயாராக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்லேடனை சோமாலியாவுக்கு அனுப்பக்கூடாது என்று மட்டுமே கூறியது. இதனையடுத்து, பின்லேடன் மீண்டும் ஆப்கானுக்குச் செல்ல, தாலிபான் அரசு அவருக்குத் தஞ்சம் அளித்தது. அமெரிக்கா அளித்த இந்த வாய்ப்பை, பின்லேடன் தனது இயக்கத்தை வளர்ப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்குப் பின், "தகுந்த ஆதாரங்களை அளித்தால், பின்லேடனை சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது ஏதாவதொரு மூன்றாம் உலக நாட்டிலோ ஒப்படைத்து விசாரிப்பதற்குத் தயாராக இருப்பதாக' தாலிபான் அரசு அறிவித்தது. அமெரிக்கா, தாலிபானின் இந்தக் கோரிக்கையை வேண்டுமென்றே நிராகரித்தது. அமெரிக்கா வசம் அல்காய்தா மற்றும் தாலிபானுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதனால்தான் அமெரிக்கா தாலிபானின் இக்கோரிக்கையை நிராகரித்ததாகக் கருத முடியாது.  உலக நாடுகளின் மீது தனது மேலாதிக்கத்தை இறுக்கிக் கொள்ளவும், அதற்காகத் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துவதற்குக் கிடைத்த வாசூப்பாகவே செப்.11 தாக்குதல்களைக் கருதியதால்தான், அமெரிக்கா இக்கோரிக்கையை நிராகரித்தது.

பின்லேடனின் அல்காசூதா இயக்கம் அமெரிக்காவில் நடத்தியதாகச் சொல்லப்படும் தாக்குதல்களில் இறந்த வெள்ளையர்களைவிட, அல்காய்தாவை அழிப்பது என்ற பெயரில் அமெரிக்கா ஆப்கானிலும், இராக்கிலும், பாகிஸ்தானிலும் நடத்திவரும் கொத்துக் குண்டு வீச்சு, செறிவுகுறைந்த அணுகுண்டு தாக்குதல், ஆளில்லா விமானத் தாக்குதல், இரவு நேர தேடுதல் வேட்டைகள் போன்ற தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஏழை நாட்டு மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

•  கடந்த பிப்ரவரி மாதம் நேடோபடைப் பிரிவினர் ஆப்கானின் குனார் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், 13 வயதுக்கும் கீழான 40 குழந்தைகளும், 22 பெண்களும் உள்ளிட்டு 65 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மார்ச் 1 அன்று அதே குனார் மாகாணத்தில் நடத்தப்பட்ட மற்றொரு வான்வழித் தாக்குதலில் 14 வயதுக்கும் கீழான 9 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

• 2009ஆம் ஆண்டில் 184 ஏவுகணைகளும், 66 லேசர் குண்டுகளும் ஆளில்லா விமானங்களின் மூலம் வீசியெறியப்பட்டுப் பல ஆப்கான் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இரவுநேர தேடுதல் வேட்டைகளில் கொல்லப்பட்ட ஆப்கான் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.

• வீக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட அமெரிக்க இராணுவ ஆவணங்களின்படி, அமெரிக்கா தலைமையிலான நேடோ படை 2004ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டு முடிய நடத்திய தாக்குதல்களில் 20,000 ஆப்கான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இராக்கில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப்போரில் 2008 முடிய 1,51,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. அதே சமயம், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செட் என்ற மருத்துவ அறிவியல் இதழ் இராக்கில் நடந்து வரும் ஆக்கிரமிப்புப் போரில் 6,50,000 பேர் வரைக் கொல்லபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

• அமெரிக்கா, பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் அல்காய்தா தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொல்வதற்காக, 2009ஆம் ஆண்டில் ஆளில்லா விமானங்கள் மூலம் 44 தாக்குதல்களை நடத்தியது. இந்த 44 தாக்குதல்களில் ஐந்து அல்காய்தா தலைவர்கள் கொல்லப்பட்ட அதே சமயம், இத்தாக்குதல்களால் உயிரிழந்த அப்பாவிகளின் எண்ணிக்கையோ 708ஐத் தொட்டது.

• பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பைதுல்லா மெஹ்சூத் என்ற முக்கியமான தாலிபான் தலைவரைக் கொல்வதற்காக ஆளில்லா விமானங்கள் மூலம் 15 தாக்குதல்களை நடத்தியது, அமெரிக்கா. இந்த ஒருவரைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட இந்த 15 தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 350 ஆகும். இதுபோல, கடந்த ஜனவரி 2010இல் மட்டும் பாகிஸ்தானில் 12 ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி, மூன்று அல்காய்தா தலைவர்களையும், 123 அப்பாவி பொதுமக்களையும் கொன்றது, அமெரிக்க இராணுவம்.

அமெரிக்காவும், உலகமெங்கும் உள்ள அதனது அடிவருடிகளும் அல்காய்தாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை ஊதிப் பெருக்கி, அமெரிக்காவின் இந்தப் போர்க் குற்றங்கள் அனைத்தையும் நியாயப்படுத்துகின்றனர்; "பின்லேடனைப் போல பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் மற்ற தீவிரவாதிகளையும், இது போன்ற அதிரடித் தாக்குதல்களை நடத்தி அழிப்போம்' எனத் திமிராக அறிவிக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. பின்லேடன் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, பாகிஸ்தான் மீது மற்றொரு ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தி, 12 அப்பாவி பொதுமக்களைக் கொன்றுள்ளது, அமெரிக்கா. "வீடியோ கேம்'களில் காணப்படும் போர் விளையாட்டுக்களைப் போல இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது, அமெரிக்கா. இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அமெரிக்கச் சிப்பாய்களின் சாவு எண்ணிக்கையைக் குறைத்துவிட்டதாகப் பீற்றிக் கொள்ளும் ஒபாமா, அத்தாக்குதல்களின் பொழுது கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் ஏழைநாட்டு மக்களின் உயிரை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை.

சதாம் உசேனுக்குத் தூக்கு தண்டனை வழங்குவதற்காக ஒரு மோசடியான விசாரணை நாடகத்தை நடத்திய அமெரிக்கா, பின்லேடனுக்கு அந்த வாய்ப்பைக்கூட வழங்கவில்லை. "நிராயுதபாணியாக இருந்த பின்லாடனைப் பிடித்து, அதன் பிறகே அவரைச் சுட்டுக் கொன்றதாக' இந்தத் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த பின்லேடனின் 12 வயதான மகள் தமது குடும்பத்தை விசாரித்துவரும் பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். "யூத இனப் படுகொலையை நடத்திய நாஜி கிரிமினல்கள்கூட ஒரு நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கும்பொழுது, பின்லேடனை இப்படிச் சட்டவிரோதமான முறையில் கொல்ல வேண்டிய அவசியமென்ன?' என்ற கேள்வியைப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த தாலிபான் அமைப்பின் தலைவரான ஹகி முல்லா மெஹ்ஸ{த், "அமெரிக்கா பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் நடத்திவரும் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்தும் வரை, எமது தற்கொலைத் தாக்குதல்கள் தொடரும்' என அறிவித்திருப்பதையும்; ஆப்கானைச் சேர்ந்த தாலிபான் அமைப்பு , "அந்நியப் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை எமது தாக்குதல்கள் தொடரும்' என அறிவித்திருப்பதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான்பார்க்க வேண்டும்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது செப்.11 தாக்குதலுக்குக் கிடைத்த நீதி என்றால், இராக்கிலும், ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் அமெரிக்காவாலும், அதனின் ஐரோப்பியக் கூட்டணி நாடுகளின் இராணுவத்தாலும் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு எந்த வழியில் நீதியைப் பெறுவது? என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் யாரும் தப்பிவிட முடியாது. இராக் மற்றும் ஆப்கானிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு அரபு நாடுகளிலும் இராணுவத் தளங்களை அமைத்துத் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவம் அந்நாடுகளிலிருந்து வெளியேறுவதோடு, இந்நாடுகளில் அமெரிக்க இராணுவம் நடத்தியிருக்கும் போர்க் குற்றங்களுக்காக, அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் (சீனியர்) தொடங்கி தற்போது அதிபராக இருக்கும் ஒபாமா வரை அனைவரையும் போர்க் குற்றவாளிகளாக அறிவித்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதைத் தவிர, இக்கேள்விக்கு வேறு பதில் எதுவும் இருக்க முடியாது.

ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவோ இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவது என்ற நாடகத்தை நடத்தியிருக்கிறார்; ஆப்கானில்அமெரிக்க இராணுவத் தளத்தை அமைத்துவிட்டு, 2014 க்குள் படைகளை வெளியேற்றுவது எனத் திட்டமிட்டு வருகிறார்; இதற்காக, பாகிஸ்தான் மூலம் தாலிபானோடு ஒரு சமரச உடன்பாட்டை செய்து கொள்ள முயன்று வருகிறார், ஒபாமா. ஒருபுறம் இது போன்ற பஞ்சு மிட்டாய் நடவடிக்கைகளின் மூலமும், இன்னொருபுறம் அல்காய்தா தலைவர்களைக் குறிவைத்துக் கொன்றொழிப்பதன் மூலமும் முசுலீம் பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.

• செல்வம