அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்கவும், அரசு சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை வீழ்த்தவும், கார்ப்பரேட் கொள்ளையர்களையும் ஊழல் அரசியல் வாதிகள் அதிகாரிகளைத் தண்டித்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணிதிரள அறைகூவி ம.க.இ.க் வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக மே நாளைக் கடைபிடித்தன.

 

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து, சென்னைபூந்தமல்லியில் மே நாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. காலை 10 மணியளவில் பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் தொடங்கிய பேரணி, உழைக்கும் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் வழியே சென்று பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்துக்குப் பின் முன்னணியாளர்கள் உரையாற்றினர்.

கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து மே நாளன்று மாலை 4 மணியளவில் கோவை  சிவானந்தா காலனியிலிருந்து சித்தாபுத்தூர் வரை செங்கொடிகள் விண்ணில் அசைந்தாட எழுச்சிமிகு பேரணியையும், அங்கு மேனன் தெருவில் பொதுக்கூட்டத்தையும் நடத்தின. திடீரென பெருங்காற்றுடன் மழை பெய்த போதிலும், இடர்ப்பாட்டைப் பொருட்படுத்தாமல் வர்க்க உணர்வோடு குடும்பம் குடும்பமாகத் தொழிலாளர்கள் செஞ்சட்டையணிந்து பங்கேற்ற இப் பேரணியும் பொதுக்கூட்டமும், துவண்டு கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்குப் புதிய நம்பிக்கையையும் பேருற்சாகத்தையும் ஊட்டுவதாக அமைந்தது.

திருச்சி, தஞ்சை, கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து திருச்சி  உறையூர் ஜெயந்தி பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து புத்தூர் நாலுரோடு வரை பறையொலியும் முழக்கங்களும் எங்கும் எதிரொலித்த பேரணியை நடத்தின. பேரணியின் முகப்பில் பறைமுழக்கமும் சிறுவர்களின் தப்பாட்டமும், கார்ப்பரேட் முதலாளிகளின் காலடியில் எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்ளும் நாய்களாக ஓட்டுப் பொறுக்கிகளைச் சித் தரித்துக் காட்டிய காட்சியும், மறுகாலனியாக்கத்துக்கு எதிரான அரசியலை மக்களிடம் பிரச்சாரப்படுத்தின. பேரணியின் முடிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னணியாளர்களும் இணைப்புச் சங்கத்தின் தலைவர்களும் உரையாற்றினர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து ஓசூரில் பிரம்மாண்டமான மே நாள் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஓசூர் எம்.ஜி.ஆர். சிலை அருகிலிருந்து ராம்நகர் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செஞ்சட்டையுடன் செங்கொடி ஏந்திவிண்ணதிரும் முழக்கங்களுடன் நடத்திய இப்பேரணியின் இறுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னணியாளர்கள் உரையாற்றினர்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து கடலூரில் மே நாள் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கடலூரில் பெரியார் சிலை அருகிலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை நடைபெற்ற பேரணியில் இறுதியில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து உசிலம்பட்டியில் மே நாள் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தின. தேர்தல் ஆணையத்தின் விதிகளைக் காட்டி அனுமதி மறுத்து, போலீசுதனது வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி தடுத்த போதிலும், தடையை மீறி ஆவேசத்துடன் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் பேருந்து நிலையம் வரை தோழர்கள் உணர்வோடு பேரணியை நடத்தினர். அங்கு செங்கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தை நடத்தி முன்னணியாளர்கள் உரையாற்றியபோது, தோழர்களை மறித்து கைது செய்த போலீசு, பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தது.

• பு.ஜ.செய்தியாளர்கள்.