10032023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

சிறுகதை – கடைசி பிளாட்பாரம்

பவானியும், கார்த்திக்கும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து அம்பத்தூர் இரயில்வே ஸ்டேசனுக்கு கட்டாயம் வரச்சொன்னது மனோகரனுக்கு பதட்டத்தையும், குழப்பத்தையும் வரவழைத்தது. பவானியும், கார்த்திக்கும் தொழில் தெரிந்த கட்டிங் மாஸ்டர்கள். அதை விட அயராத வேலைகளுக்கிடையேயும் தங்களுக்கிடையே காதலையும் கச்சிதமாக எக்ஸ்போர்ட் செய்து கொண்டனர். கட்டிங்கில் பிசிறு இல்லாதது போலவே, அவர்களது காதலிலும் பிசிறு இல்லாமல் பார்த்துக் கொள்ளும் இயந்திரமாகவே அவர்களுக்கு மாறிப்போயிருந்தான் மனோகரன். சமீபத்தில் அயனிங் செக்சனில்  வேலைக்குச் சேர்ந்து நல்ல பெயரெடுத்த மனோகரன் பவானி, கார்த்திக் இருவரின் நெருக்கமான நண்பனாகவும், அவர்களது காதலுக்கு அளவுக்கு மீறிய ஆதரவாளனாகவும் உதவிக் கொண்டிருந்தான். முக்கியமாக அவர்களை யாராவது கம்பெனியில் கேலி, கிண்டல் பேசினால் மனோகரன் முந்திக்கொண்டு சண்டைக்குப் போவதோடு, காதலைப் பற்றி தத்துவ ஆவேசத்தோடு ஏதேதோ பேசவும் ஆரம்பித்தான்.

 

 

டைலர் செக்சனில் இருக்கும் ரவி ஒருமுறை, "மச்சான், இதோட நான் எத்தன பீச பாத்துருக்கேன், ஒவ்வொரு பீசுக்கும் ஒரு ரேட் உண்டுடா மச்சான்', என்று பவானி, கார்த்திக்கைப் பற்றி ஜாடை பேச, மனோகரன் பொங்கி எழுந்துவிட்டான். "நாயே, அடுத்த வங்க லவ்வ கேவலமா பேச நீ யார்றா?' என்று சண்டைக்குப் பாய "ஏய்! சும்மா கெட நீ ஊர் நாட்டான், உனக்கு இன்னா தெரியும்? பெர்சா பாயுற! நான் யாரச் சொன்னேன்னு தெர்யுமா உனக்கு? பெசாம போவியா...' என்று ரவியும் பாய அவர்களை இயல்பு நிலைக்குத் தள்ளிவிட மற்றவர்களுக்குப் பெரும்பாடாய் போனது. இருவரையும் சேர்த்து வாழ வைப்பதை ஒரு லட்சியமாகவே ஆக்கிக் கொண்டவன் போல மனோகரன் நடந்து கொண்டது மற்றவர்களுக்கு ஓவராகப் பட்டாலும், இந்தப் பையன் என்ன வித்தியாசமா ப்ரண்ட் ஷிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான்? என்று ஆச்சர்யமாகவும் பேசிக் கொண்டார்கள்.

•••

அம்பத்தூர் இரயில்வே ஸ்டேசன், கடைசி பிளாட்பாரத்தின் கடைசி இருக்கை காலியாகக் கிடந்தது மனோகருக்கு பூரிப்பை வரவழைத்தது. வழக்கமாக யார் தொந்திரவும் இல்லாது தனியே ஒதுங்கிப் பேச தோதான இடம் அது. வேலைக்குப் போகும் பெண்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட குடும்பக் கதைகள், உழைத்து ஓடாகிப்போன தொழிலாளிகள் தனியே உளறிவைத்த துயரங்கள், எக்ஸ்போர்ட் மற்றும் சிறு தொழிற்சாலைக் காதலர்கள் உருகி உருகிப் பேசியும், சமயத்தில் குலுங்கி குலுங்கி அழுதும் தீர்த்த உணர்ச்சியின் அத்தனைக் கறையும் படிந்தது போல காட்சியளித்தது அந்த இரும்பு நாற்காலி. அதன் கைப்பிடியை மெல்ல யோசனையுடன் வருட மனோகருக்கு பழைய நினைவுகள் விழித்துக் கொண்டன.

"மனோகர், ஒண்ணு சொல்லுவேன் தப்பா நினைக்க மாட்டியே..!' தயங்கி தவித்தான் கார்த்திக்.

"எங்கிட்ட என்ன பில்டப்லாம் நேரா விசயத்துக்கு வா! என்ன... பவானி யோட சண்டையா..?'

"அதெல்லாம் இல்ல, நேத்து மகாபலிபுரம் போறோம்னு சொல்லிட்டு போனோம்ல, அங்க போவலடா...'

"பின்ன...? நிமிர்ந்து உட்கார்ந்தான் மனோகரன்.

"நம்ம எலக்ட்ரீசியன் பிரபு ரூம் இல்ல, திருவான்மியூர் அங்க போய்.. ஆள் இல்லியா கொஞ்சம் அப்படி, இப்படி இருந்துட்டோம்டா...?

"ஏய்... என்னடா ரொம்ப சாதாரணமா சொல்ற...? ரெண்டு வீட்டுக்கும் இன்னும் லவ் பண்றதே தெரியாது... தெரிஞ்சா பிரச்சினைன்னீங்க.. இதெல்லாம் வேற இப்ப நடந்தா எப்புடிடா..? ஏதாவது குழந்தை கிழந்தென்னு பார்ம் ஆனா பிரச்சனை பெரிசா ஆவாதா? நீங்க இப்படில்லாம் நடந்திப்பீங்கன்னு நினைச்சி கூட பாக்கலடா... இது ரொம்ப பிரச்சனைடா? முகத்தைச் சுழித்து பேசிக்கொண்டே போனான் மனோகரன்.

"டேய், மச்சான் நீயே புரிஞ்சுக்கலேன்னா எப்புடிடா? டயர்டா இருக்கேன்னுதான் அங்க போனோம், சூழ்நிலை.. ரெண்டு பேருமே.. விருப்பப்பட்டு... அப்படி ஆயிடுச்சுடா... ப்ளீஸ்... புரிஞ்சுக்க...

"ஏய், நீ என்னத்தச் சொன்னாலும் ரெண்டு பேருமே அவசரப்பட்டது தப்புடா, நீயாவது பலதையும் யோசிக்க வேணாமா? உங்களுக்கு உதவி செய்ய எங்க ஊர் வரைக்கும் எல்லாம் ரெடிபண்ணி வச்சிருக்கேன். ஆனா மேட்டர் இத மாதிரின்னு கேள்விப்பட்டா... டேஞ்சராயிடும்.'

"அந்த அளவுக்கு இப்ப ஒண்ணும் பிரச்சனை இல்ல, நாங்க பாத்துதாண்டா நடந்துகிட்டோம் சேப்டியாதான் நடந்துகிட்டோம்... இதுக்கு மேல பயப்படா தடா மச்சான்... ஹீ..ஹீ

"எல்லாம் ப்ளான் பண்ணி செஞ்சுட்டே சிரிச்சு மழுப்புற... ரெண்டு பேரும் சேர்ந்து சிக்கல்ல மாட்டாம இருக்கணும்... அப்புறம் எல்லாருக்குமே நல்லதில்ல... ஆமாம்!'

"அந்தளவுக்கு பீல் பண்ணாதடா மச்சான், உங்கிட்ட நாங்க எதையும் மறைக்க விரும்புல, இல்லேன்னா சொல்லுவேனா... பிரச்சனை ஆகுற அளவுக்கு ஒண்ணுமே நடக்கல... மச்சான், நீ தப்பா எடுத்துக்காம... எப்போதும் போல இருடா...' ராசி பண்ணினான்.

"என்னய பத்தி இல்ல, பாதிப்புன்னு வந்தா மொதல்ல பவானிக்குத்தான் அதுவே துணிஞ்சிருக்குன்னா நான் என்னத்த சொல்ல? இனியாவது பாத்து நடந்துக்குங்க?.'

"ஏய் மச்சான் கூல்டா.. நீ இந்த அளவுக்கு ஃபீல் பண்ணுவேன்னு நினைக்கலடா? கம்பெனியிலேயே நீதாண்டா எங்க பர்சனல் எல்லாம் தெரிஞ்சவன், அடுத்தவங்க லவ்வுக்கு இந்த அளவு ஹெல்ப் பண்றவன் உன்ன மாதிரி யாரும் கிடையாதுடா... இனிம உன் அட்வைஸ் படி பாத்துக்கு றேன்டா... நீ மட்டும் எப்போதும் போல இருடா.. ப்ளீஸ் ஓ.கேயா?' கார்த்திக் உருக்கத்தோடு பக்கத்தில் இருந்த மனோகரனின் தொடையை அழுத்தமாய் தட்டினான்.

திடுக், திடுக் என மின்சார ரயிலின் ஓசை கடந்து போக பழைய நினைவுகளிலிருந்து மீண்டவனாய் இமைகளை உதறி இருவரது வருகையை எதிர்பார்த்து அவசரகதியில் கால்களை ஆட்டினான் மனோகரன்.

அவசரமாய் வரச்சொன்னது எதற்காக இருக்கும்? ஒருவேளை இருவரும் தனியாகப் போய் தங்கியதில் ஏதும் விளைவுகள் உருவாகி இருக்குமோ? இல்லை வீட்டுக்கு விசயம் தெரிந்து பிரச்சினையாகி, ஓடிப்போய் விடலாம் என்று முடிவுக்கு வந்திருப்பார்களோ? எப்படி இருந்தாலும் இருவரையும் யாருக்கும் தெரியாமல் ஊர்ப்பக்கம் அனுப்பி விடலாம். ஏற்கெனவே, அங்குள்ள நண்பர்களுக்கு சொல்லி வைத்திருக்கிற மாதிரி ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து வைத்து எங்காவது பாதுகாப்பான இடத்தில் கொஞ்ச நாளைக்குத் தங்க வைக்க வேண்டியதுதான். ஏதும் தெரியாதது போல் கம்பெனியில் இருப்போம்.. இல்லை, வேலையே  போனாலும் பரவாயில்லை... பவானியும், கார்த்திக்கும் சேர்ந்து வாழ எந்த எல்லைக்கும் போவது என மனதில் பலவாறு திட்டமிட்டுக் கொண்டே... எதற்காக இவ்வளவு அவசரமாக வரச் சொன்னார்கள்? என்று மனோகரன் இருப்பு கொள்ளாமல் தவித்தான்.

"ரொம்ப நேரமாயிடுச்சா? சாரி.. மனோகர்..' பவானி, கார்த்திக் இருவருமே ஒத்தாற்போல வழக்கமான உற்சாகக் குரலின்றி தயங்கியவாறு பேசினர்.

அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் வேறு எதையும் பேசவிடாமல், "வேற ஒண்ணும் ஆயிடலையே ! எதுக்கும் பயப்பட வேணாம்! எப்ப வேணாலும் நீங்க புறப்பட்டுப் போய் பத்திரமா இருக்க எல்லா ஏற்பாடும் இருக்கு! நீங்க வேற எதுக்கும் கவலப்படாதீங்க..! முழு தைரியம் கொடுத்துப் பேசினான்.

அவனது படபடப்பையும், எதிர் பார்ப்பையும் பார்த்து மகிழ்ச்சிக்குப் பதில் சற்று தயங்கிய கார்த்திக், பவானியைப் பார்த்து "நீயே சொல்லு' என்று தூண்டினான்.

இருவரின் தயக்கத்தினாலும் குழம்பிப்போன மனோகரன் "என்ன பவானி... எங்கிட்ட யோசிக்கிறீங்க... நீயாவது என்னன்னு சொல்லு? எதுக்கு அவசரமா புறப்பட்டு வரச் சொன்னீங்க..?

தயக்கத்தை உடைத்துக்கொண்டு பவானி திடமான முடிவோடு பேசினாள். "மனோகர்.. எங்க வீட்ல மாப்பிள்ள பாத்துட்டாங்க.. எங்க தூரத்து ரிலேசன்தான்.. வீட்டு நிலைமை.. தங்கச்சி படிப்பு எல்லாத்தையும் பாக்குறப்ப... நல்ல  வேலைல இருக்குற அவரா வந்து கேக்குறப்ப.. என்னால மறுக்க முடியல... மேலும் எங்க ரெண்டு வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க.. வீணா சண்டை ஆகி.. ஒருத்தருக்கொருத்தர் பிரச்சனை ஆகுறத விட எங்க வீட்டுப் பிரச்சினைக்கெல்லாம்.. இந்த மேரேஜ் ஒரு நல்லா முடிவா படுது... அதான்... கார்த்திக்கும், நானும் கலந்து பேசி மேக் கொண்டு லவ்வ கண்டினிவ் பண்றத விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டோம்...'

ஒருகணம் அதிர்ச்சியில் தொண்டை தூர்ந்து போனவன் மாதிரி பேச்சற்றுப் போனவன்.. வியப்பும், தன் மேலே வெறுப்பும் கொண்டவனாக கார்த்திக்கைப் பார்க்க,

"ஆமாண்டா மச்சான்.. எங்க வீட்லயும் ஏகப்பட்ட சிக்கல்டா, இப்ப இருக்குற நிலமைல உடனே மேரேஜ் பண்ணவும் முடியாது.. தவிர தனியா போய் வீட்ட எதுக்குற அளவுக்கு முடியாது.. அதான் ரெண்டு பேருமே பிராக்டிகலா யோசிச்சு முடிவு பண்ணிட்டோம்...'

அவனது பேச்சுக்கு அதிர்ச்சியுடன் பவானியின் பிரதிபலிப்பை எதிர்பார்த்தான் மனோகரன், பவானி எந்தப் பதட்டத்துக்கும் ஆட்படாமல், "மனோகர்.. நீ ஷாக் ஆகாம.. வழக்கம் போல எங்களுக்கு நல்லது செய்யணும்னா... கடைசியா ஒரு உதவி செய்யணும்.. ப்ளீஸ் செய்வியா மனோகர்...?'

மனோகரின் எந்தக் கருத்தையும் எதிர்பார்க்காமல், தங்களது முடிவுக்கு இருவருமே மாறி மாறி உதவி கோர.. குரல் கம்மி பதிலேதுமின்றி கனைத்துக் கொண்டான் மனோகரன். பவானி பளிச்

சென  நேரச் சிக்கனத்தோடு பேசினாள், "மனோகர்.. எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிட்டதால இனி எந்தப் பிரச்சனையும் வராம இருக்கணும்னா.. ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட  போட்டோஸ் செல்போன்ல உள்ள போட்டோ, மெசேஜ் எல்லாத்தையும் உன் முன்னாடியே ரெண்டு பேரும் அழிச்சிடணும், இத வச்சி இனி ஒருத்தருக்கொருத்தர் எந்த பிளாக் மெயிலும் பண்ணக் கூடாது.. நீதான் சாட்சி... எங்க பர்சனல் உனக்கு மட்டுந்தான் தெரியும்? நீ எங்களுக்கு நல்லது தான் செய்வ.. இருந்தாலும் உங்கிட்டயும்.. இதோட எல்லாத்தையும் மறந்துட்டு எப்பவும் போல நாம ப்ரண்ட்ஸா இருப்போம்னு சொல்லிடலாம்னுதான் வரச் சொன்னோம்... இதுல எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல... மனோகர் நீ வேஸ்ட்டா டிஸ்டர்ப் ஆகாம இருந்தாலே, அது போதும் எங்களுக்கு...?

ஏதோ பேச எத்தனித்த மனோகரிடம் "ஆமாண்டா மச்சான்... நாங்க டிசைட் பண்ணிட்டோம். நீ இந்த விசயத்திலயும் எங்களுக்கு ப்ரண்டா ஹெல்ப் பண்ணுடா மச்சான்.. நாளைக்கு கம்பெனில பார்ப்போம்...' பதிலை எதிர் பார்க்காமல் இருவரும் தனியே பிரிந்து நடந்தனர்.

மேற்கொண்டு பேசுவதற்கு எந்தவாய்ப்பும் இல்லாமல் அவர்கள் சென்ற திசையையே உற்றுப் பார்த்து இமைக்க மறந்தவனை... உராய்வு ஒலி எழுப்பி நின்ற மின்சார ரயில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.

• துரை. சண்முகம்