10032023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

திரை விமரிசனம் – தி ரெஸ்ட்லர் : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை

டெர்மினேட்டர்களாகவும், ராம் போக்களாகவும் அவதரித்து தீயவர்களோடு சண்டையிட்டு உலகை மாபெரும் அபாயத்திலிருந்து அமெரிக்கர்கள் காப்பாற்றுவதாக வரும் ஹாலிவுட் திரைப்படங்களின் இடையே எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு. அவ்வாறான ஒரு படம் தான் 2008இல் வெளியான "தி ரெஸ்லர்'.

 

 

நரம்புகள் தளர்ந்து, இரத்தத்தின் வேகம் குறைந்து, வயோதிகத்தின் வாயிலில் நிற்கும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரனின் வாழ்க்கையைப் பேசும் அக்கதையின் நாயகன் ராண்டி. வில்லன் இல்லாத இத்திரைக்கதையில் சூட்சுமமான எதிர்நாயகன் ஒருவனும் உண்டு. பிரமாண்டமான அமெரிக்கப் பொழுதுபோக்குத் தொழில் எனும் அந்த வில்லன் தனது நாயகர்களைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் வலியை இந்தத் திரைப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

நிஜ உலகில் நமக்குக் கடும் ஆச்சரியத்தை உண்டாக்கும் எத்தனையோ அம்சங்களின் மறுபக்கத்தை, நம்மிடம் இருந்து மறைக்கப்படும் பக்கத்தை வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் காட்டுகிறது 'தி ரெஸ்லர்'. அதற்கு முன்ரெஸ்லர் திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தை பார்ப்போம்.

•••

ராண்டி என்கிற ரோபின் ராம்ஸின்ஸ்கி எண்பதுகளில் நட்சத்திரமாய் விளங்கிய தொழில்முறை மல்யுத்த வீரன். இருபது வருடங்களும் இளமைத் துடிப்பும் வழிந்து ரத்தம் சுண்டிப் போன பின் இப்போது அவன் ஒரு பல்பொருள்

அங்காடியின் வேலை செய்து அன்றாட ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் பழைய வாழ்க்கையையும், இரசிகர்களின் ஆரவாரத்தையும், அது கொடுத்த புகழ் போதையையும் மறக்க முடியாத அவன் வார இறுதி நாட்களில் சிறு நகரமொன்றின் சிறிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் பங்கு கொள்கிறான்.

ஒரு கட்டத்தில் அவனது ஒப்பந்ததாரர்கள் அவன் புகழுடன் இருந்த காலத்தில் மல்யுத்த மேடைகளில் அவனது பிரதான  எதிரியாக இருந்த அயதுல்லா கொமேனி என்பவனோடு ஒரு போட்டியை ஏற்பாடு செய்கிறார்கள். இளமை தொலைந்து உடல் தளர்ந்து போன நிலையில் இருக்கும் ரேண்டி, இந்தப் போட்டிக்காக தனது உடலை ஊக்க மருந்துகளின் துணையோடு தயாரிக்கிறான். ஆனால் அந்தப் போட்டிக்கு முன் உடலில் செலுத்திய ஊக்கமருந்துகளின் விளைவாக அவனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

அதன் பின் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளும் ராண்டி, இனிமேலும் மல்யுத்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வது தற்கொலைக்கு ஒப்பானது என்று மருத்துவர்கள் தெரிவித்து விடுகிறார்கள். நட்சத்திரமாய் மிளிர்ந்து ஒளி வீசிய அவனது கடந்தகாலப் பெருமைகளோடு நிகழ்கால எதார்த்தம் முரண்படுகிறது  அதன் முடிவில் எதார்த்த நிலைமைகளே ஜெயிக்கிறது. ராண்டி தனது வார இறுதி நாட்களில் ஒரு அங்காடியில் விற்பனைப் பிரதிநிதியாகப்பணிக்குச் சேர்கிறான்.

மல்யுத்த மேடையின் ஒளிவெள்ளமும், இரசிகர்களின் ஆரவாரமும் புடை சூழ வாழ்ந்த ராண்டி முதன்முறையாக தனித்து விடப்படுகிறான். கதையில் அவனுக்கு ஒரு தோழியும் இருக்கிறாள். ஸ்ட்ரிப் க்ளப் எனப்படும் உடலைக் காட்டி முக்கால் நிர்வாணத்தோடு நடனமாடுபவளாய் ஒரு பாரில் பணிபுரியும் அவளும் ரேண்டியைப் போலவே நடுத்தர வயதின் வாயிலில் நிற்பவள் தான். உடல் தளர்ந்து தனிமையில் வாடும் ராண்டிக்கு அவளின் நட்பு ஆறுதலாய் இருக்கிறது. அவளது யோசனையின் பேரில் முன்பு அவனால் கைவிடப்பட்ட  ஒரே மகளைச் சந்தித்து மீண்டும் தனது உறவைப் புதுப்பிக்கிறான் ராண்டி.

ஒரு கட்டத்தில் தனது பழைய வாழ்க்கையை மறக்க முடியாத ராண்டி தனது மல்யுத்த நண்பர்களைத் தேடிப் போகிறான். அங்கே போதை மருந்து உட்கொள்ளும் அவன், மகளைச் சந்திக்க வருவதாகச் சொன்ன நேரத்தில் சந்திக்கத் தவறி விடுகிறான். தனது பதின்ம வயதுகளில் தந்தைப் பாசத்திற்காக ஏங்கிய அந்தப் பெண், மீண்டும் சிறிதாய் துளிர்விடத் துவங்கிய அந்த நம்பிக்கை முளையிலேயே கருகியதால் ஏமாற்றமடைகிறாள். ராண்டியைப் புறக்கணிக்கிறாள்.

இதற்கிடையே நடனமாடும் பெண்தோழியிடம் தன் காதலை வெளியிடுகிறான், ராண்டி. ஒரு விடலைச் சிறுவனுக்குத் தாயான அவளோ முதலில் அதை மறுக்கிறாள். காதலும் மறுக்கப்பட்டு மகளும் புறக்கணித்து விடும் சூழலில் கடுமையாக ஏமாற்றமடையும் ராண்டி, சொந்த வாழ்க்கையின் உறவுகள் தனக்கு ஒட்டாது என்று முடிவு செய்கிறான். தனது வாழ்வும், சாவும் மல்யுத்த மைதானத்தில் என்று தீர்மானிக்கிறான். தற்கொலைக்கு ஒப்பான ஒரு முடிவை எடுக்கிறான். மீண்டும் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறான். அது அயதுல்லா கொமேனி எனும் வீரனுடன் முன்பு திட்டமிடப்பட்ட போட்டி.

அந்தப் போட்டியின் துவக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தும் ராண்டி, தன்னை இத்தனை ஆண்டுகளாக ரசித்து ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறான். தனது உலகம் இதுதானென்று அறிவிக்கிறான். போட்டி துவங்குகிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்ட இதயம் போட்டியின் முரட்டுத்தனங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஊசியாய்க் குத்தும் வலியால் தடுமாறும் ராண்டி, ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில், இரசிகர்களின் ஆரவாரத்தோடு (அயதுல்லா பெயர் ஈரானோடு சம்பந்தப்பட்டதால் ரசிகர்கள் யு.எஸ்.ஏ என்று கத்துகிறார்கள்) தட்டுத்தடுமாறி பக்கவாட்டுத் தடுப்பின் மீதேறி தனது எதிரியின் மேல் பாய்கிறான்.. அதோடு திரைப்படம் முடிகிறது.

•••

மல்யுத்தம்:விளையாட்டா,  வெறியா?

தற்காப்பு நடவடிக்கை அல்லது சண்டை என்பது எப்போது விளையாட்டாகிறது  எப்போது கலையாகிறது? உடலின் இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட லயத்தில் தொடர்ச்சியாக இயங்கும் போது உண்டாகும் நளினம் உடற்தசைகளோடு ஊறி, உடலையும் மனதையும் ஒரு பக்குவத்திற்குக் கொண்டு வந்து ஒரே நேர் கோட்டில் நிறுத்துகிறது. அப்போது அதன் உள்ளடக்கமாய் இருக்கும் வன்முறை என்பது இயல்பாகவே உதிர்ந்து, ஒரு கலையாகப் பரிணமிக்கிறது. இதுவே ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட, பாதுகாப்போடு நடக்கும் போது விளையாட்டாகிறது.

கலை எனும் அம்சத்தில் புறவயமாயுள்ள சமூக உலகின் சவால்களுக்கு ஒருவனின் அகநிலைமைகளைத் தயாரிக்கிறது  விளையாட்டு எனும் அம்சத்தில் புற உலகின் அழுத்தங்களில் இருந்து கண நேர விடுதலையையும், உடலுக்கும் மனதுக்குமான புத்துணர்வையும் அளிக்கிறது. பல ஆண்டு தொடர் பயிற்சிகளின் ஊடாக ஒருவனுக்குக் கிடைக்கும் ஆற்றல் புறநிலையில் மனிதர்களின் மீதான அன்பாக மிளிர்கிறது.

அதே கலை வணிகமாகவும், இலாபமீட்டும் தொழிலாகவும் மாறும்போது அது தன்னோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் உண்டாக்கும் விளைவுகளைத் தான் ரெஸ்லர் திரைப்படம் நேர்மையாகக் காட்சிப்படுத்துகிறது. வீரன் ஒருவனுடன் ராண்டி மோதும் காட்சியைக் காணும் நமக்கு நரகலைக் கண்டது போல் அருவெறுப்புத் தோன்றக்கூடும். கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் வைத்துத் தாக்கிக் கொள்கிறார்கள். அந்த வீரன் ஸ்டாப்லரின் சிறிய ஊசிகளைக் கொண்டு ரேண்டியின் உடலெங்கும் குத்துகிறான். சுற்றியிருக்கும் இரசிகர்களோ கத்தி வெறியேற்றுகிறார்கள்.

அந்த அரங்கத்திலிருந்த இரசிகர்களின் தேசியவெறியை மேலும் தூண்டி, தன்மேல் ஒரு பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்ள ரேண்டி தன் உடலில் காயங்களை தானே உண்டாக்கிக் கொள்கிறான்.

மல்யுத்தம் என்பது விளையாட்டு என்பதைக் கடந்து தொழிலாகவும், அதிலும் குறிப்பாகக் கேளிக்கைத் தொழிலாகவும் இருப்பதன் இரகசியம் இந்த இரத்த இரசிகர்களின் வக்கிர ரசனையின் அடிப்படையில் தான் இருக்கிறது. றுறுநுஇ வுஊறுஇ வுNயு போன்ற கார்ப்பரேட் மல்யுத்தக் கேளிக்கை நிறுவனங்கள் அந்த இரசனையை மேலும் மேலும் வெறியேற்றிப் பயன்படுத்திக் கொள்கின்றன. காசுக்கு ஏற்ற தோசை என்பது போல் அதிக வலியையும், வேதனையையும் தன் உடல் மேல் ஏற்றுக் கொள்பவரே திறன்மிக்க வீரராக இரசிகர்களால் போற்றப்படுகிறார்.

மேடைகளில் காட்டும் வெறித்தனம் மட்டுமே போதாது என்பதால், இக்கேளிக்கை விளையாட்டை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வீரர்களிடையே நடக்கும் மோதல்களுக்கு நாடகம் போல ஒரு கதைப் பின்னணியையும் உருவாக்குகின்றன. அதற்காகவே ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் போல் கதை எழுதவென்றே தனிப்பிரிவையும் அமெரிக்காவில் மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான கூட சம்பளம் கொடுத்துப் பராமரிக்கின்றன. உதாரணமாக, எதார்த்த உலகில் அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் போல் சித்தரிக்கப்படும் மல்யுத்த வீரர்கள் வில்லன்களாகவும், அமெரிக்க வீரர்கள் நல்லவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இவ்வகையில் தான் சாமானிய விளையாட்டு ரசிகர்களான அமெரிக்கர்களைக் கூட போதை தலைக்கேறிய வெறியர்களாக திட்டமிட்டு மாற்றுகிறார்கள். பே பெர் வ்யூவ் எனப்படும் காசு கொடுத்து மல்யுத்தப் போட்டிகளைக் காண்பவர்கள் மூலம் கிடைக்கும் வருமானமே இந்த பில்லியன் டாலர் தொழிலில் பிரதானமானது எனும் செய்தியிலிருந்தே இது சராசரி அமெரிக்கர்களிடையே எந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சுமார் ஐந்தாயிரம் கோடிகளைக் குவிக்கும் இத்தொழிலில் விற்பனை செய்யப்படும் பண்டம் வெறித்தனமும், மிருகத்தனமும். அமெரிக்காவில் மட்டுமல்ல  அதை நுகர்வது உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் இரசிகர் பட்டாளம் என்பது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது தான் உண்மை. அமெரிக்காவின் மேலாதிக்க அரசியல் நலனுக்கேற்ற விதத்தில் இத்தகைய கேளிக்கைத் தொழில்கள் உலகெங்கும் தமது சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கின்றன.

ரத்தம்.. மேலும் ரத்தம்... மேலும் மேலும் ரத்தம்..!

அமெரிக்காவில் மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான தொழில்முறை மல்யுத்த வீரர்களும், தொழில் முறை பாடி பில்டிங் வீரர்களும் அனபாலிக் ஸ்டிராய்டுகளின் பயன்பாட்டினால் மரணமடைந்துள்ளனர். இது மட்டுமல்லாமல், தங்கள் உடலின் மேல் தாங்களே வலிந்து திணித்துக் கொள்ளும் வலியைப் போக்க அதீதமான வலி நிவாரணி மருந்துகளையும் உட்கொள்கிறார்கள். 2004ஆம் ஆண்டு யு.எஸ்.ஏ டுடே எடுத்த நேர்காணலில் தான் நாளொன்றுக்கு 200 வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வதாக ஸ்காட் லெவி என்ற வீரர் தெரிவிக்கிறார்.

போதை மருந்துகளாலும், ஊக்க மருந்துகளாலும் செத்துப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் நம் நாயகன் ராண்டியைப் போலவே நடுத்தர வயதினர் அல்லது நடுத்தர வயதைக் கடந்தவர்கள். உடலின் ஒத்துழைப்பு விடைபெற்றுச் செல்லும் காலகட்டத்தில் நுகர்வோர்களான ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மருந்துகளின் துணையின்றி வேறு வழியில்லை. வயோதிகத்தின் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு ஒரு சராசரி வாழ்க்கையை இவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் பல்பொருள் அங்காடியில் வேலைக்குச் செல்ல முயலும் ராண்டிக்கு ஒவ்வொரு கணமும் மல்யுத்த மேடையின் ஜொலிக்கும் ஒளி வெள்ளமும், ஆரவாரிக்கும் ரசிகர்களின் கூச்சலும் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இறுதிக்காட்சியில் ராண்டி தற்கொலைக்கு ஒப்பான அந்த முடிவை எடுக்க பழைய வாழ்வின் மீதான ஏக்கம் ஒரு காரணம் என்றால், இன்னொரு புறம் ரசிகர்களும் காரணம். இது ஒருவிதமான கையறு நிலை. தானே உருவாக்கிக் கொண்ட மரணக்குழி.

விளையாட்டு என்பது தொழிலாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், அதன் நுகர்வோரின் சந்தையின் முன் ரகரகமான வகையினங்களைக் கடைபரப்ப வேண்டிய தேவை எழுகிறது. அமெச்சூர் மல்யுத்தத்தில் ஒரு வீரரின் தொழில் நுணுக்கமும், அறிவாற்றலும் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றால், இங்கே மனித இயல்பைத் தாண்டிய அசுர பலம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஒரு வீரன் எத்தனை அடி வாங்குகிறான், எத்தனை ரத்தம் சிந்துகிறான், அந்த வலியையும் தாண்டி எப்படி ஜெயிக்கிறான் என்பதில் இருந்தே அவன் தனது வாடிக்கையாளர்களான ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு மனித உடலின் சாத்தியங்களையெல்லாம் கடந்த ஒரு வலிமையும், கொடூரத்தனமும் தேவைப்படுகிறது. இயல்பான மனித உடலால் அது சாத்தியப்படாது என்கிற நிலையில் தான் போதை மருந்துகளை வீரர்கள் நாடுகிறார்கள். பார்வையாளர்களின் மன வக்கிரங்களை ஆற்றுப்படுத்த மேடையிலேயே இரத்தம் சிந்திக் காட்ட வேண்டும். இதற்காக கையுறைகளுக்குள் சிறிய பிளேடுகளை மறைத்து வைத்துக்கொண்டு தங்கள் முகங்களைத் தாங்களே கீறி இரத்தம் சொட்டச் சொட்ட மேடையில் நிற்கும் மல்யுத்த வீரனை வெறியுடன் கூடிய ரசிகர் கூட்டம் ஆரவாரித்துப் போற்றுகிறது. படத்தில் ராண்டியும் இந்த உத்தியைக் கையாள்கிறான்.

பண்டைய ரோம நாகரீகத்தில் கிளாடியேட்டர்கள் எனப்படும் அடிமைகளை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு அவர்கள் மடிந்து விழுவதைக் கண்டு ரசிக்கும் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தின் நவீன வடிவம் தான் தொழில்முறை மல்யுத்தம். அன்றைய ரோம கிளாடியேட்டர்களின் கதை ஓரிரு போட்டிகளில் முடிந்து விடும். வலியும், வேதனையும் கண நேர அவஸ்தைதான். ஆனால், தொழில்முறை மல்யுத்த வீரர்கள் சுலபத்தில் இறந்து விடுவதில்லை. இந்த நரக வேதனையையும் மரணவஸ்தையையும் தங்களோடு சுமந்து திரிகிறார்கள்  தமது சுற்றாத்தாருக்கும் அதையே பரிசளிக்கிறார்கள்.

கிறிஸ் பென்னோய்ட் தொண்ணூறுகளிலும், இரண்டாயிரங்களின் மத்தியப் பகுதி வரையிலும் கூட மல்யுத்த மேடைகளைக் கலக்கிய கனேடிய வீரர். ஒவ்வொரு போட்டியிலும் அவரது இறுதித் தாக்குதலான கிரிப்லர் க்ராஸ் பேஸ் எனும் பாய்ச்சலுக்கு மயங்காதவர் கிடையாது. அதீதமான ஊக்க மருந்துகளை உட்கொண்டதால் மூளை பாதிக்கப்பட்ட பென்னோய்ட், 2007ம்ஆண்டு ஜூன் மாதம் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராண்டியின் வாழ்வுக்கும், பென்னோய்ட்டின் வாழ்வுக்கும் சாராம்சத்தில் வேறுபாடு ஏதுமில்லை. பென்னோய்ட் தனது மனைவியையும் குழந்தைகளையும் நேரடியாகக் கொன்றார் என்றால், ராண்டி தனது மகளுக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய பாசத்தை அளிக்காமல் புறக்கணித்து உளவியல் ரீதியில் கொல்கிறார். பென்னோய்ட்டின் தற்கொலையும் ராண்டி மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்வதும் கூட சாராம்சத்தில் ஒன்றே தான்.

ரெஸ்லர் திரைப்படத்தைப் பார்த்த பிரபல மல்யுத்த வீரரான ரவுடி ரோடி பைப்பர் கதறி அழுதிருக்கிறார். இவ்விளையாட்டுக்காகவும், ரசிகர்களின் அன்பைப் பெறுவதற்காகவும் தன்னைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்கள் செய்த தியாகங்களை இத்திரைப்படம் தனக்கு நினைவூட்டியதாகப் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.  தான் பிரபலமாயிருந்த காலத்தில் தனது உணவே பெயின் கில்லர் மாத்திரைகளாக இருந்ததையும், அதிலிருந்து விடுபட தான் போராடிய அந்த நினைவுகளும் இந்தத் திரைப் படத்தைக் காணும் போது வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அவருக்கு நினைவில் வராத இன்னொரு அம்சமும் உள்ளது. திரைப்படத்தின் இறுதியில் ராண்டியின் உரை படத்தின் ரசிகர்களிடம் உண்டாக்க விரும்பும் அனுதாப உணர்ச்சியாகட்டும், ரவுடி ரோடி பைப்பரின் அழுகையாகட்டும் ஒரே தளத்தில் தான் நிற்கிறது. அது தன்னலமிக்க "தியாக'த்தைக் குறித்து அவர்களே கொண்டிருக்கும் சுய கழிவிரக்கம் தான். எதார்த்தத்தில் ஆயிரக்கணக்கான மல்யுத்த வீரர்களையும், பாடி பில்டர்களையும், அமெரிக்க கால்பந்து வீரர்களையும் ஸ்டிராய்டுகளை நோக்கியும் பிற போதை வஸ்துக்களை நோக்கியும் தள்ளியது அவர்களது தியாகம் அல்ல. அது இத்தொழிலின் நுகர்வோரான ரசிகர்களின் வெறிகொண்ட விருப்பமும், இதை நடத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறியும் தான்.

படம் நெடுக அரூபமாய் உலாவந்து ராண்டியோடு வினையும், எதிர்வினையும் புரியும் அவனது எதிர்நாயகன் இவ்விரு அம்சங்கள் தான். திரைப்படத்திலும் சரி எதார்த்தத்திலும் சரி, தொழில்

முறை மல்யுத்த வீரர்கள் தோற்றுப்போய் தாங்கள் வாழ்வை இழப்பது இவைகளிடம் தான். ஆனால், அந்த அடிமைத்தனத்தைத் தியாகமாகவே அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ரோடி பைப்பரின் கண்ணீர் சொல்லும் செய்தி அது தான். அதனால் தான் இறுதிக் காட்சிகளில்  தனது அறியாமையையும், அடிமைத்தனத்தையும் தியாகமாக நினைத்துக் கொண்டு ராண்டி நிகழ்த்தும் அந்த உரை நமக்குள் கண்ணீரைக் கோரவில்லை  பரிதாபத்தைக் கோருகிறது.

பண்டைய க்ளாடியேட்டர்கள் ஒரு வகையில் இந்த முதலாளித்துவ க்ளாடி யேட்டர்களினின்றும் உணர்வுத் தளத்தில் மேம்பட்டவர்களாயிருந்தார்கள். தாம் அடிமைகள் என்கிற குறைந்தபட்சப் புரிதல் அவர்களுக்கு இருந்ததாலேயே பின்னர் விடுதலை என்பதை நோக்கிய அவர்களின் முன்னேற்றம் சாத்தியமானது. ஆனால், இவர்களோ தங்களது எதிரி  யாரென்று கூடத் தெரியாமல் நிழலோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை வாசகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். தொலைக்காட்சியில் அமெரிக்க மல்யுத்தப் போட்டிகளுக்கு அடிமையாகி இருக்கும் நமது சிறார்களை எப்படி மீட்க முடியும் என்பதைக் கற்பதற்காகவாவது அனைவரும் இந்தப் படத்தைக் காண வேண்டும்.

வீரனை மெல்லக் கொன்றும், ரசிகனை விரைவாக வெறியனாகவும் மாற்றும் இந்த கேளிக்கைத் தொழிலின் இருண்ட பக்கங்களை இந்தத் திரைப்படம் காட்டுகிறது. அது காட்டத் தவறிய அரசியலை நாம் கண்டுபிடிப்பதற்கும் அதுவே உதவி செய்கிறது.

• தமிழரசன்