10032023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

கல்வியை கார்பரேட்மயமாக்கும் சதி

தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விப் பொதுப்பாடத் திட்டம் தரமற்றது என்பது அதனை முடக்குவதற்கு ஜெயலலிதா அரசு கூறியுள்ள காரணம். பொதுப்பாடத்திட்டத்தின் தரத்தை சோதித்துப் பார்த்து உயர்நீதி மன்றத்துக்கு அறிக்கை கொடுப்பதற்கு ஜெயலலிதா நியமித்த குழுவில் தயானந்தா ஆங்கிலோ வேதிக்ஸ்கூல் எனப்படும் டி.ஏ.வி பள்ளியின் தாளாளர் ஒரு உறுப்பினர். இன்னொருவர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் உரிமையாளர் திருமதி பார்த்தசாரதி. அரசுப்பள்ளிசார்ந்த ஒருவர் கூட  இக்குழுவில் கிடையாது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு கோடி ஏழு இலட்சம் பேர். 2,72,000 மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் பள்ளிகளில் படிக்கிறார்கள், என்ற போதிலும் 98சதவீத மாணவர்களின் பாடத்திட்டத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் 2 சதவீத மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

 

 

தரமே தமது தாரக மந்திரம் என்று தனியார் முதலாளிகள் கூறிக் கொண்டாலும், தீவிரமாகத் தனியார்மயம் அமல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் கல்வி உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் தனியார் முதலாளிகள் தரங்கெட்டவர்கள் என்பதுதான் அம்பலமாகியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் 126 இல் 44 தரங்கெட்டவை என்று மத்திய அரசே அறிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இரண்டு சதவீதம் கல்லூரிகள் மட்டுமே தரமானவை என்று ஏ.ஐ.சி.டி.ஈ அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரமே இல்லாமல் இயங்குகின்றன. இருப்பினும் தரநிர்ணயத் தராசை அரசு தனியார் முதலாளிகளிடம் தான் கொடுத்திருக்கிறது.

மழலையர் பள்ளி முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வரை நடத்தும் பல்வேறு படிநிலைகளிலும் உள்ள கல்வி வியாபாரிகளைப் பொருத்தமட்டில் இது கொள்ளை இலாபத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு தொழில். இலாபத்தை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் ஒரு தொழிலில் பண்டத்தின் தரத்தை நிர்ணயிப்பது அதன் விலை. காசுக்கேற்ற தரம் என்பதுதான் தனியார் கல்வி முதலாளிகள் முன்வைக்கும் முழக்கம். பொதுப்பாடத்திட்டம் அமலாக்கப்படுமானால், ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் மெட்ரிக் பள்ளிகள் அந்தக் காசுக்கு ஏற்ற "தரமான கல்வியை' வழங்க முடியாமல் போகும். தங்களுடைய தொழில் வீழ்ச்சி, கல்வியின் தர வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடும் என்பதே மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் முறைப்பாடு.

இலவசக் கல்வியை ஒழிப்பதன் மூலம்தான் தரத்தை நிலைநாட்ட முடியும் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறது பிர்லா, முகேஷ் அம்பானி அறிக்கை. 2001 இல் பா.ஜ.க ஆட்சியின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை ஆரம்பக் கல்வி அளிப்பதுடன் அரசு ஒதுங்கிக் கொண்டு, உயர்கல்வி அனைத்தையும் கார்ப்பரேட் மயமாக்கி, கல்விக் கடனைத் தாராளமாக வழங்கக் கோருகிறது. அசோசெம் என்ற முதலாளிகள் சங்கம் தனியார் பல்கலைக்கழகங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகக் கருதி அவற்றை வழமையான சட்டங்களிலிருநது விடுவிக்கக் கோருகிறது. கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமானால் அதன் விலையை உயர்த்த வேண்டும் என்பதுதான் முதலாளிகள் முன்வைக்கும் வழிமுறை.

உலக வர்த்தகக் கழகம் மற்றும் காட்ஸ் ஒப்பந்த வரையறையின்படி கல்வி என்பது வணிகம் சார்ந்த சேவை. பன்னாட்டு முதலாளிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் திறந்துவிடப்பட வேண்டிய இன்னொரு துறை. உலகமயமாக்கலின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ற ஊழியர்களையும், துறைசார் வல்லுநர்களையும் உலகமெங்கும் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்து தருகின்ற பட்டறைகளே பல்கலைக்கழகங்கள். தனது தேவைகளை இவை நிறைவு செய்கின்றனவா என்பதைக் கொண்டே இவற்றின் தரத்தை அளவிடுகிறது உலக முதலாளித்துவம்.

ஆய்வு நோக்கம், அறிவுத் தேட்டம், சமூக நோக்கம் ஆகிய அனைத்தையும் கல்வியிலிருந்து நீக்கி அதன் தரத்தை தனியார்மயம் வீழத்துகிறது என்பதே உண்மை. கற்பவனுக்கு அது பிழைப்புக்கான கருவி. விற்பவனைப் பொருத்தவரை அது உடனடி இலாபம் தரும் சரக்கு.