Language Selection

புரட்சிகர அமைப்பு என்று கூறப்பட்ட புளொட் எதிர்ப்புரட்சிகர வடிவில்

(ஜே.ஆர் ஜெயவர்த்தனா)

அநுராதபுரநகரில் நிராயுதபாணிகளான நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிச் சிங்களப் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கோரத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவமானது " போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்ற சுலோகத்துடன் சிறுபான்மை இனங்கள் மீது வெளிப்படையாகவே இனவாதத்தைக் கக்கியபடி பதவிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சிக்கு விழுந்த பெரும் அடியாக இருந்தது. இந்திய அரசின் முயற்சியால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அலட்சியம் செய்துவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அனுராதபுரம் நகர் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலானது தனது போர் அறைகூவலுக்கான பதிலாக தனது வாசல்படிக்கே வந்திருப்பதை கண்டுகொண்டிருந்தார். இதனால் சிறுபான்மை இனங்கள் மீது போர் தொடுப்பதையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா தற்காலிக "சமாதானம்" வேண்டி திம்புப் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்களைப் பலியெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளும், குமுதினிப் படகிலும் நற்பிட்டிமுனையிலும் அப்பாவித் தமிழ்மக்களைப் பலியெடுத்த இலங்கை அரசும் தமது இரத்தக்கறை படிந்த கரங்களுடன் "சமாதானம்" வேண்டி திம்புப் பேச்சுவார்த்தைக்கு தயாராகினர்.

(திம்புப் பேச்சுவார்த்தை)


இந்தியாவில் தங்கியிருந்த விசுவானந்ததேவனின் வேண்டுகோளுக்கிணங்க தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT)அமைப்பைச் சேர்ந்தவர்கள் தளத்தில் எம்மைத் தொடர்பு கொண்டு பேசியதோடு எமது தற்பாதுகாப்புக்கென கைக்குண்டுகள் தருவதற்கும் முன்வந்தனர். நாம் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே செல்லவேண்டியேற்படின் கைக்குண்டுகள் குறைந்தபட்சமாவது எமது பாதுகாப்புக்கு அவசியமானதெனக் கருதி தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினர் (NLFT) எமக்குத் தர முன்வந்த கைக்குண்டுகளைப் பெற்றுக் கொண்டோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் கைக்குண்டுகளை எடுத்துச்செல்ல முடியாததால் அவற்றை எம்முடன் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்தவர்களின் வீடுகளில் வைத்துவிட்டு தொடர்ந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே எமது நேரத்தை செலவிட்டு வந்தோம்.

தமிழீழ விடுதலை இயக்கத்தினர்(TELO) தமது வட்டுக்கோட்டை முகாமில் எமக்குப் பாதுகாப்புத் தந்தபோது தமிழீழ விடுதலை இயக்க (TELO) அரசியல் பொறுப்பாளர் தயாசேகரமும், சிவமும் நாம் எழுதி வைத்திருந்த "போலி முகத்திரையை கிழித்தெறிவோம்" என்ற துண்டுப்பிரசுரத்தை அச்சிட்டுத் தருவதாக கூறி எடுத்துச் சென்றிருந்தனர். அத்துண்டுப்பிரசுரங்கள் அச்சகத்திலிருந்து எடுத்து வரப்பட்டு கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக தயாசேகரம் எமக்குத் தெரிவித்திருந்தார். அத்துண்டுப்பிரசுரங்களை எடுத்துவந்து நாம் அதில் ஒருபகுதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் விநியோகித்தோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதால் மட்டும் புளொட்டை அம்பலப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்த நாம் அத்துண்டுப்பிரசுரங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வெளியில் மக்கள் மத்தியில் விநியோகிக்க விரும்பினோம். ஆனால் இப்பொழுதோ எம்முடன் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் பலர் எம்முடன் இருக்கவில்லை. உமாமகேஸ்வரனால் இந்தியாவுக்கு அனுப்பிவைக்குப்படி கேட்டிருந்த ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோர் தமக்கு உமாமகேஸ்வரனால் ஏற்பட இருக்கும் உயிராபத்தைக் கருதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி விட்டிருந்தனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சியும் தொலைத்தொடர்பு பயிற்சியும் பெற்று தளம் வந்து உமாமகேஸ்வரனின் அராஜகச் செயல்களை தளத்தில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்களில் ஒருவரும், எம்முடன் புளொட்டிலிருந்து வெளியேறியவருமான பாண்டியும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியிருந்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே சென்று துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதற்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே எம்மில் இருந்தோம். இருந்தபோதும் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினர்(NLFT) எமக்குப் பாதுகாப்புக்குத் தந்துதவிய கைக்குண்டுகளின் துணையுடன்"போலி முகத்திரையைக் கிழித்தெறிவோம்" என்ற துண்டுப்பிரசுரத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே மக்கள் மத்தியில் விநியோகிக்கத் தொடங்கினோம்.

தர்மலிங்கம், பாலா, விஜயன், சுரேன், இடிஅமீன்(ஞானம்), செல்வன், ரஞ்சன் ஆகியோருடன் நானும் இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள இடங்கள் உட்பட, யாழப்பாணம்-பலாலி வீதிவழியாக புன்னாலைக்கட்டுவன் வரை சென்று துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தோம். புன்னாலைக்கட்டுவன் சந்தியில் எம்மை எதிர்கொண்ட புளொட் அராஜகவாதிகள் சிலர் எம்மிடமிருந்த துண்டுப்பிரசுரங்கள் மக்கள் மத்தியில் சென்றடையாது தடுக்கும் முகமாக அவற்றை பறித்தெடுப்பதற்கும், எம்மைக் கைது செய்வதற்கும் முயன்றனர். புளொட்டின் அராஜகங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதெற்கென வீதியில் இறங்கிவிட்ட எமக்கு புளொட் அராஜகவாதிகளுடன் போராடி முன்னேறுவதைத்தவிர வேறுவழியெதுவும் இருந்திருக்கவில்லை.

"போலி முகத்திரையைக் கிழித்தெறிவோம்" என்ற துண்டுப்பிரசுரத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே சென்றுவந்த நாம் படிப்படியாக எமது வீடுகளுக்கும் சென்றுவர முற்பட்டோம். தர்மலிங்கம், பாலா, விஜயன் ஆகியோர் தமது வீடுகளுக்கு சென்றுவர ஆரம்பித்திருந்தனர். நானும் எனது வீட்டுக்குச் சென்றுவர விரும்பியதால் கொக்குவில் ஆனந்தனை (கொக்குவில் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டபோது பார்த்தனுடன் தப்பிவெளியேறியவர்) வரவழைத்து நானும் ஆனந்தனும் எனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தோம். நாம் கொக்குவில் கேணியடி சனசமூக நிலையத்துக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் பொழுது கேணியடி சனசமூக நிலையத்துக்கு முன்னால் அமைந்திருந்த கொத்துரொட்டிக் கடையில் (இக் கடைக்கு "புலிகளின் கடை" என இலங்கை இராணுவத்தினர் பெயர் சூட்டியிருந்தனர்) குவிந்திருந்த புளொட் இராணுவப் பிரிவினர் (கொக்குவில் ரவிமூர்த்தி, காண்டீபன், மது, கதிர், ராஜ் ஆகியோரும் அடங்கியிருந்தனர்) ஏ.கே.47 மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் எம்மை வழிமறித்தனர்.

இலங்கை அரசின் இனவொடுக்குமுறைக்கெதிராக போராடியதால் இலங்கை இராணுவம் கொக்குவிலைச் சுற்றிவளைத்து என்னைக் கைது செய்யமுயன்ற அதே இடத்தில் இப்பொழுது புளொட்டினுடைய அராஜகங்களுக்கும் கொலைவெறிக்கும் எதிராகப் போராடியதால் புளொட் இராணுவப்பிரிவினரால் வழிமறிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டோம். நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த நான் சைக்கிளிலிருந்து இறங்கி தற்பாதுகாப்புக்காக என்னிடமிருந்த கைக்குண்டின் கிளிப்பை கழற்றி எடுத்துவிட்டு "முடிந்தால் எம்மைக் கைது செய்யவும்" என கூறியபடி புளொட் இராணுவப் பிரிவினரை முகம் கொடுத்தோம். புளொட் இராணுவப் பிரிவினருக்கும் எமக்குமிடையில் வாக்குவாதம் ஆரம்பமாகியது. தகாத வார்த்தைப் பிரயோகங்களை புளொட் இராணுவப்பிரிவினர் எம்மீது உதிர்த்தனர். எமக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதத்தை அவதானித்த ஊர்மக்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டனர். ஊர்மக்களின் தலையீட்டால் புளொட் இராணுவத்தினரின் பிடியிலிருந்து எம்மால் தப்பிக்க முடிந்தது. (பல வருடங்களின் பின் என்னைச் சந்தித்த காண்டீபன், மது, கதிர் ஆகியோர் தமது தவறுகளுக்காக வருந்துவதாகத் தெரிவித்தனர்).

"புதியதோர் உலகம்" நாவலுடன் தளம் வந்த கண்ணாடிச்சந்திரன்

இந்தியாவில் "புதியதோர் உலகம்" நாவல் அச்சிடும் பணிகள் முடிவுற்றதும் "புதியதோர் உலகம்"நாவலுடன் கண்ணாடிச்சந்திரன் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் விசுவானந்ததேவனுடன் தளம் வந்திருந்தார். தளம் வந்திருந்த கண்ணாடிச் சந்திரனை குருநகரிலுள்ள நண்பர் தாசனின் வீட்டில் சந்தித்துப்பேசிய நாம், இந்தியாவில் நடைபெற்ற புளொட்டின் மத்தியகுழுக் கூட்டத்தில் நடந்தவற்றைப் பற்றியும், புளொட்டிலிருந்து வெளியேறிய பின் நடந்தவை பற்றியும் கேட்டறிந்து கொண்டதோடு தொடர்ந்து நாம் என்ன செய்வது என்பது குறித்தும் பேசினோம். இந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களான சந்ததியார், டொமினிக்(கேசவன்), காந்தன் (ரகுமான் ஜான்), காசி(ரகு), அமீன், நிசாகரன் போன்றோர் விரைவில் தளம் வந்து அரசியலில் ஈடுபட தயாராக உள்ளனர் என்றும், நாம் புளொட்டினுடைய அராஜகத்தையும் மக்கள்விரோத அரசியலையும் அம்பலப்படுத்தும் அதேவேளை ஒரு அமைப்பை உருவாக்க முடியும் என்றும், இதற்காகவேண்டி ஒரு பத்திரிகையை வெளிக்கொணர வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

கண்ணாடிச் சந்திரன் பேசியவற்றை மிகுந்த ஆவலுடனும் பொறுமையோடும் செவிமடுத்த எமக்கு அராஜகவாதிகளை முகம் கொடுத்து தொடர்ச்சியாக அரசியல் செய்வதில் ஒரு நம்பிக்கை எழுந்தது. அத்துடன் இலங்கை அரசின் அநீதிகளுக்கெதிராகப் போராடிய நாம், எம்மால் வளர்த்துவிடப்பட்டிருந்த அமைப்பின் அநீதிகளுக்காகப் போராடிவேண்டிய கடப்பாட்டையும் கூட கொண்டவர்களாய் இருந்தோம். அராஜகத்துக்கெதிரான போராட்டம், புளொட்டை அம்பலப்படுத்துதல், புதியதொரு அமைப்பை உருவாக்குதல் என்பனவவெல்லாம் மிகவும் கடினமான பணியாகவே இருக்கும் என்பதை நாம் அறிந்திருந்தோம். இருந்தபோதும் இவை அனைத்தும் எம்மால் செய்யக்கூடியவை தான் என நம்பிக்கை கொண்டோம். ஆனால் இதற்கு முன் பல கேள்விகளுக்கு நாம் விடை காணவேண்டியிருந்தது.

புரட்சிகர கருத்துக்களையும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பல்வேறு அமைப்பு வடிவங்களையும் வேலைத்திட்டங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த புளொட்டுக்குள் அராஜகம் வளர்ச்சியடைந்து கோலோச்சியதெப்படி? புரட்சிகரகருத்துக்களிலிருந்தும் அதன் நடைமுறையிலிருந்தும் புளொட் தடம் விலகிச் சென்றதெப்படி? பயிற்சி முகாம்கள் வதைமுகாம்களாக மாற்றம் பெற்றதெப்படி? இவை அனைத்திலும் எமது பக்கத் தவறென்ன? இவற்றின் ஊற்றுமூலம் எது?

நான் புளொட்டில் இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் சத்தியமூர்த்தி, பெரியமுரளி, தோழர் தங்கராஜா, கேதீஸ்வரன் போன்றோர் புளொட்டைப் பற்றிக் கூறிய கருத்துக்களுக்கும் பிற்பட்ட காலங்களில் புளொட்டின் நடைமுறைக்கும் இடையில் எந்தவித ஒற்றுமையையும் காணமுடியவில்லை. புளொட்டில் தனிமனிதனுக்கு அதிகாரமில்லை, தனிமனிதன் முடிவுகள் எடுப்பதில்லை மாறாக, அனைத்து முடிவுகளும் குழுமுடிவுகளே, கூட்டுமுடிவுகளே என்று கூறியிருந்தனர்.இதற்காகவே மத்தியகுழு, கட்டுப்பாட்டுகுழு என இரண்டு குழுக்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் மத்தியகுழு, கட்டுப்பாட்டுகுழு என இரண்டு குழுக்கள் இருந்திருந்த போதும் உமாமகேஸ்வரனே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ஒருவராகவும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒருவராகவும் விளங்கியிருந்தார்

புளொட்டின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் கருத்துசுதந்திரம், விமர்சன சுதந்திரம் உள்ளது என கூறியிருந்தனர். ஆனால் புளொட்டுக்குள் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தவர்களை வதைமுகாமிற்கு கொண்டு சென்று சித்திரவதைகளின் பின் கொன்று புதைத்தார் உமாமகேஸ்வரன்.

இப்படியாக புரட்சிகர அமைப்பு என்று கூறப்பட்ட புளொட் எதிர்ப்புரட்சிகர வடிவில் எம்முன் எழுந்து நின்றது. புளொட்டில் இந்த நிலை தற்செயலானதோ அல்லது திடீரென தோற்றம் பெற்ற ஒன்றோ அல்ல. உமாமகேஸ்வரனினால் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்துக்கும், எதிர்ப்புரட்சிகர அரசியலுக்குமான அடித்தளம் மிகவும் பலமானது என்பதே உண்மை. அதன் ஆணிவேரைக் கண்டறிந்தால் மட்டுமே உமாமகேஸ்வரனையும், புளொட்டில் அவரது பாத்திரத்தையும் இனம் கண்டுகொள்ள முடியும் என்பதோடு ஈழ விடுதலைப் போராட்ட அரங்கிலிருந்து புளொட் ஓரங்கட்டப்பட்ட நிகழ்வையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் கருவறையில் தோன்றி, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் கருத்தியல் ஆதிக்கத்திற்குட்பட்ட மத்தியதரவர்க்க சிந்தனையுடைய இளைஞர்களைக் கொண்டதொரு குழுவாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றிருந்தது. வெறுமனவே ஆயுதங்களிலும் இராணுவ நடவடிக்கைகளிலுமே நம்பிக்கை கொண்டிருந்த தனிநபர் பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவையடுத்து அதிலிருந்து தோற்றம் பெற்றதே புளொட் என்ற அமைப்பாகும். "புதிய பாதை" ஆசிரியர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புளொட் என்ற அமைப்பை உருவாக்குவதற்கு காரணமாக விளங்கியிருந்தார்.

சுந்தரத்தின் முயற்சியில் புளொட்டை உருவாக்கியபோது அதில் சந்ததியாரும் இணைந்து கொண்டதன் மூலம் புளொட்டின் முதல் மத்தியகுழுவில் சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார், ஜயர், சாந்தன் ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் பின் புளொட்டை உருவாக்குவதில் முன்னணி வகித்த சுந்தரம் இடதுசாரி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும், இடதுசாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிக் கொண்டிருந்தவராகவும் மார்க்சிய நூல்களை தேடிக் கற்கும் ஒருவராகவும் திகழ்ந்தார். புளொட்டின் மத்தியகுழுவில் இடம்பெற்ற சந்ததியார் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றில் தீவிர செயற்பாட்டாளராக இருந்திருந்தபோதும், யாழ்ப்பாண நகர மேயர் அல்பிரட் துரையப்பா கொலைவழக்கில் சந்தேகநபராக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பின்னாட்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் அரசியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு "காந்தீயம்" அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளைத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அதன் தலைவராகச் செயற்பட்டவரும், ஜயர் தனது தொடரில் குறிப்பிட்டது போல் இடதுசாரி அரசியலில் எந்தவித ஆர்வமும் கொண்டிராத, ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கல்கியின் "பொன்னியின் செல்வன்" போன்ற நூல்களை படிப்பவராக உமாமகேஸ்வரன் காணப்பட்டதன் மூலம் இடதுசாரி அரசியலுடன் எந்தவித ஆர்வமும் அற்றவராக காணப்பட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களாக விளங்கிய ஐயர், சாந்தன் போன்றோர் தமிழீழ விடுதலிப் புலிகளுடன் செயற்பட்டபோது பெற்ற அனுபவங்களுக்கூடாக சுத்த இராணுவக் கண்ணோட்டத்திலிருந்து முற்றுமுழுதாக துண்டித்துக் கொள்வதை நோக்கியவர்களாக காணப்பட்டனர்.  இத்தகைய வெவ்வேறு அரசியல் பின்னணியை, அரசியல் பார்வைகளை கொண்டவர்களால் உருவான புளொட்டின் மத்தியகுழுவில் இடம் பெற்ற விவாதங்கள் இரண்டு விதமான போக்குகளை வெளிப்படுத்தியிருந்தது. சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்தியார் போன்றோர் இராணுவ ந்டவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய அதேவேளை ஐயர், சாந்தன் ஆகியோர்  மக்கள் அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கருத்தை முன் வைத்திருந்தனர். இத்தகைய கருத்து முரண்பாடுகளால் புளொட்டின் முதலாவது மத்தியகுழுவில் அங்கம் வகித்த ஐயர் சாந்தன் ஆகியோர் புளொட் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34