05292023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

இதுதான் போலீசு! ஜி.டி.பி. கிரானைட்ஸ் முதலாளிக்கு அடியாளாகச் செயல்படுகிறது சேலம் நகர போலீசு.

சேலம் மாமாங்கத்திலுள்ள ஜி.டி.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக, கடந்த அக்டோபர் 2007இல் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 53 தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தியபோதிலும் ஆலை முதலாளி அசைந்து கொடுக்காததால், கடந்த ஜனவரியில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பு.ஜ.தொ.மு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர். (பார்க்க: புதிய ஜனநாயகம், பிப்.2011)

 

 

பின்னர் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவும், ஜி.டி.பி. நிர்வாகம் இத்தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்குமாறு  தான் பரிந்துரைப்பதாகவும் அறிவித்தார். மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி மார்ச் 14 அன்று இவ்வாலை முன்பாகத் தொழிலாளர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசு துணை கமிசனர், தொழிலாளர் கோரிக்கை நியாயமானது எனவும் தொடர்ந்து நிர்வாகத்துடன் பேசுவதாகவும் தெரிவித்தார். இதனால் நம்பிக்கை அடைந்த தொழிலாளர்கள் முற்றுகையைக் கைவிட்டனர்.

இதன் பின்னர், வேலைக்கு வராததற்கான விளக்கம் கேட்டு ஜி.டி.பி. நிர்வாகத்திடமிருந்து தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் கடிதம் வந்ததையடுத்து, தொழிலாளர்கள் 26ஆம் தேதி ஆலைக்கு வந்து விசாரித்தனர். ஆலை நிர்வாகமோ, இந்தக் கடிதம் ஜி.டி.பி. தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களை அங்கே வருமாறு கோரப்பட்டுள்ளதால் தாங்கள் எதுவும் பேச இயலாதெனத் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த தொழிலாளர்கள், நாங்கள் இங்கேதான் வேலை செய்தோம், இங்கேயே எங்கள் பதிலை வாங்கிக் கொள் என்று ஆலையை முற்றுகையிட்டு, 26, 27 இரு நாட்கள் அங்கேயே முகாமிட்டனர்.

பின்னர் மார்ச் 28 அன்று,  பு.ஜ.தொ.மு. மாவட்டத் தலைவர்களான தோழர் பரசுராமன், தோழர் நேசன் ஆகியோர் தலைமையில் அணிதிரண்டு ஜி.டி.பி. நிர்வாகத்தின் தலைமை அலுவலகத்திற்கு  பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கு போலீசு குவிக்கப்பட்டது. தொழிலாளர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி தரதரவென இழுத்து சென்று வண்டியில் ஏற்றிய போலீசு, 4 குழந்தைகளுடன் 7 பெண்கள் உட்பட 34 பேர் மீது கொலைமுயற்சி உள்ளிட்டுப் பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பொய்வழக்கு போட்டுக் கைது செய்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு சேலம் போலீசிடம் செல்லுபடியாகவில்லை. ஜி.டி.பி. முதலாளி முத்துவின் உத்தரவைத்தான் போலீசார் செயல்படுத்துகின்றனர் என்பது இத்தாக்குதல் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ஜி.டி.பி. முதலாளியும் போலீசும் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கி விட முடியும் என மனப்பால் குடிக்கின்றன. ஆனால், முதலாளியின் கொட்டமும் போலீசின் அடக்குமுறையும் வென்றதாக வரலாறில்லை. இதை மீண்டும் நிரூபித்துக்காட்டும் வகையில், அனைத்து உழைக்கும் மக்களின் ஆதரவுடன் பு.ஜ.தொ.மு. தலைமையில் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்குத் தொழிலாளிகள் ஆயத்தமாகிவருகின்றனர்.

தகவல்: பு.ஜ.தொ.மு.,  சேலம்