05292023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

கல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்!

 

நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டணப்படி மட்டுமே மாணவர்களிடம் பள்ளிக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும், கட்டண விவரத்தைப் பள்ளிகளில் ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், பல தனியார் பள்ளிகளில் இன்னமும் கூடுதலாகக் கட்டணத்தை வசூலிப்பதும், எதிர்த்துக் கேட்டால் பள்ளியிலிருந்து மாணவரை விலக்கி, நகராட்சிப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஏழைப் பெற்றோரை மிரட்டுவதும் தமிழகமெங்கும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தில் தனியார் கல்விக் கொள்ளையர்களின் கொட்டம் தலைவிரித்தாடிய நிலையில், பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்ட பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் மாவட்டக் கல்வி அதிகாரிக்குப் புகார் மனு கொடுத்து நியாயம் கேட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நீதிபதி கோவிந்தராசன் கமிட்டியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு அனைத்து பள்ளிக்கூட வாயில்களில் விநியோகித்து, பெற்றோரைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி போராட முன்வருமாறு அறைகூவியது. அதன் தொடர்ச்சியாக, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நகரெங்கும் தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட கல்வி அலுவலகத்தை மார்ச் 1 அன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்து எச்சரிக்கை விடுத்தது.

 

 

 

இப்பிரச்சார இயக்கம் வீச்சாகப் பரவி வருவதையறிந்த கடலூர் மாவட்ட தனியார் பள்ளி முதலாளிகள் சங்கம் அவசரமாகக்கூடி, ஆண்டுக்கு 15 சதவீத அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தீர்மானம் போட்டு, மாநாடு நடத்தி கொக்கரித்தது. இந்த அநீதிக்கும் திமிருக்கும் எதிராகவும் சட்டபூர்வ உரிமைக் காகவும் தயக்கத்தையும் அச்சத்தையும் தவிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வீடுவீடாக பெற்றோரிடம் விளக்கி, முற்றுகைப் போராட்டத்துக்கு ம.உ.பா.மையம் அணிதிரட்டியது. மார்ச் முதல் நாளன்று ம.உ.பா.மையத்தின் தலைமையில் திரண்ட பெற்றோர்கள், போலீசு தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து முழக்கமிட்டபடியே ஊர்வலமாக வந்து மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட கல்வி அதிகாரியோ கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கதனக்கு அதிகாரமில்லை என்றார். அதிகாரமுள்ள அதிகாரி விளக்கம் அளிக்கும்வரை முற்றுகை தொடரும் என எச்சரித்ததும், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் நேரில் வந்து விளக்கமளிக்க ஒப்புக் கொண்டார்.

 

ஆய்வாளர் வருவதை ஆட்டோ மூலம் நகரெங்கும் ம.உ.பா.மையம் பிரச்சாரம் செய்ததால், பெற்றோரும் உழைக்கும் மக்களும் பத்திரிகையாளர்களும் இக்கூட்டத்திற்குத் திரண்டு வந்து, தனியார் பள்ளிகளில் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதையும், பெற்றோரை மிரட்டுவதையும், ஆய்வாளர் கண்காணித்து நடவடிக்கை எடுக்காததையும் கொட்டித் தீர்த்தனர். அரண்டுபோன அதிகாரி, அரசுநிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு மேலாக யாரும் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று உறுதிபடக் கூறியதோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

 

அதைத் தொடர்ந்து, குழந்தைகளைப் பணயக் கைதிகளாக்கி கொள்ளையடிப்பதைத் தடுக்க

"தனியார் பள்ளி மாணவர்கள் நல பெற்றோர் சங்கம்' என்ற அமைப்பு பெற்றோர்களால் உருவாக்கப்பட்டு நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். தனியார் பள்ளிகளின் கொள்ளையைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற பெற்றோர்கள், அச்சத்தையும் தயக்கத்தையும் உதறி புதிய நம்பிக்கையைப் பெற்றிருப்பதே ம.உ.பா. மையத்தின் போராட்டத்துக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி. விருத்தாசலத்தில் நடந்ததைப் போல தமிழகமெங்கும் உழைக்கும் மக்கள் அச்சத்தையும் தயக்கத்தையும் தவிர்த்து போராடத் தொடங்கினால், தனியார் பள்ளிகளின் சட்டவிரோத பகற்கொள்ளையும் கொட்டமும் தவிடுபொடியாகிவிடும்.

 

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,

விருத்தாசலம்.