Language Selection

புளொட்டின் அராஜகவாதிகளை நேரடியாக முகம் கொடுப்பதற்குத் தயாரானோம்

புளொட்டிலிருந்து வெளியேறியிருந்த எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் எம்மை கைது செய்து அழிப்பதற்கான முயற்சிகளையும் மட்டுமல்லாமல் புளொட்டின் கடந்தகால அராஜக செயற்பாடுகள் குறித்தும் புளொட்டுக்குள்ளேயே ஒருபகுதியினர் கேள்விகளை எழுப்ப தொடங்கியிருந்தனர். நாம் புளொட்டிலிருந்து வெளியேறிய பின்பு எம்மேல் சுமத்தப்பட்ட உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும், எம்மை அழித்தொழிப்பதற்கு உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் சிரம் தாழ்த்தி வரவேற்று உமாமகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாக காட்ட முற்பட்டு தத்தமது சொந்த நலன்களை இலக்காகக் கொண்டு மற்றொரு பகுதியினர் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஈழவிடுதலைப் போராட்ட நலனில் உண்மையான அக்கறையுடனும் ஈழவிடுதலைப் போராட்டம் சரியான ஒரு தலைமையினால், சரியான திசைவழியில் செல்ல வேண்டும் என்ற நோக்குடன் புளொட்டுக்குள் ஒரு பகுதியினரால் - மத்தியகுழுவில் அங்கம் வகித்திராத, "அனுபவ முதிர்ச்சி" பெற்ற "இடதுசாரிகள்" என்று தம்மை இனம் காட்டிக் கொண்டிராத ஒரு பகுதியினரால் - முன்வைக்கப்பட்ட கேள்விகளையும் விமர்சனங்களையும் அலட்சியம் செய்த உமாமகேஸ்வரனும் அவரது விசுவாசிகளும் எம்மை அழித்தொழிப்பதன் மூலம் புளொட்டை "மறுசீரமைக்க" முடியும் எனக் கருதி செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) அளவெட்டி முகாமில் "வாத்தி" என்றழைக்கப்பட்டவரின் பொறுப்பில் பாதுகாப்பாக இருந்த நாம் சிலநாட்கள் அங்கு தங்கியபின் இரவோடு இரவாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO)வட்டுக்கோட்டை முகாமுக்கு மாற்றப்பட்டோம். மதன்லால், மோகன்லால், போன்றோர் வட்டுக்கோட்டை முகாமுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர். இலங்கை அரசபடைகளின் தேடுதல் நடவடிக்கைகளிலிருந்தும், கைதுகளிலிருந்தும் தப்புவதை நோக்கமாகக் கொண்டு கிராமங்கள் விட்டு கிராமங்கள் மாறி வாழ்ந்த வாழ்க்கை போலவே, இப்பொழுது தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்ட புளொட்டின் தேடுதல் நடவடிக்கைகளிலிருந்தும் அவர்களால் கைது செய்யப்படுவதிலிருந்தும் தப்புவதற்காக கிராமங்கள் விட்டுக் கிராமம் மாறிய நாம், இறுதியில் தமிழீழ விடுதலை இயக்க(TELO) பாதுகாப்பிலும் வெவ்வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தோம். இலங்கை அரசின் இனஒடுக்குமுறைக்காகவும் ஈழவிடுதலைக்காகவும் போராட்டக் களத்தில் குதித்த எமது சுதந்திரம் இப்பொழுது புளொட் என்ற அமைப்பினால் - இலங்கை அரசபடைகளால் அல்ல - பறிக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகப் புறப்பட்ட நாம், தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு தமது தலைமையைக் பாதுகாக்க போராடிக்கொண்டிருந்த புளொட்டினால் தமிழ்மண்ணிலேயே கைதிகளாக்கப்பட்டு, எமது செயற்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலை இயக்க (TELO)முகாமுக்குள் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தோம்.

தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமுக்குள் நாம் செயலற்று இருந்தபோதும் வெளியே நிலைமைகள் அனைத்தும் மாற்றமடையத் தொடங்கி விட்டிருந்தன. இந்தியாவால் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் இலங்கை அரசபடைகளுக்கெதிரான தாக்குதல்களை அதிகரிக்கச் செய்திருந்ததுடன் அத்தாக்குதல்களில் வெற்றியும் பெற்றுக்கொண்டிருந்தனர். சித்திரை 10, 1985 கிட்டுவின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் முழுமையாக தாக்கி அழித்து அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றியிருந்தனர். தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) கார்த்திகை 20, 1984 சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தை மிசோ(ஞானசேகரன் - காரைநகர்) தலைமையில் தாக்கி அழித்து அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றி வெற்றிபெற்றிருந்ததுடன் தை 19, 1985 இலங்கை அரசபடையினர் பயணித்த புகையிரதம் மீது முறிகண்டியில் வைத்து தாக்குதல் நடத்தியதன் பின்னான பெரியளவிலான தாக்குதலாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அமைந்தது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் இத்தகைய இராணுவரீதியான வெற்றிகள் தமிழ்மக்கள் மத்தியில் ஈழவிடுதலைப் போராட்டம் அதன் வெற்றியை நோக்கி படிப்படியாக சென்று கொண்டிருக்கின்றது என்றொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

ஆனால் ஈழவிடுதலைப் போராட்டத்தின் மற்றொரு பக்கத்தை, தவறானதும் ஆபத்து நிறைந்ததுமான பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டதை கண்டுகொள்ளவதிலிருந்து மக்களும், ஈழவிடுதலைப் போராளிகளும் கூட தவறியிருந்தனர்.

புளொட்டுக்குள் மட்டுமல்லாமல் ஏனைய இயக்கங்களுக்குள்ளும் கூட அரசியல் வறுமையால் தோன்றிவிட்டிருந்த உள்முரண்பாடுகளும் அந்த உள்முரண்பாடுகளில் இருந்து தோன்றிய குழுவாதமும் மேலோங்கி வளர்ந்து விட்டிருந்ததையோ, ஈழவிடுதலை இயக்கங்கள் பெரும்பாலானவற்றுக்குள் அரசியலை புறந்தள்ளிய இராணுவக் கண்ணோட்டம் மேலோங்கி விட்டிருந்ததையோ, ஈழவிடுதலை இயக்கங்களுக்குள் ஜனநாயக மறுப்பும், அராஜகமும் தோன்றி வளர்ந்துவிட்டிருந்ததையோ, சிங்கள மக்களுடனும் சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் கைகோர்த்துச் செல்லப்பட வேண்டிய ஈழவிடுதலைப் போராட்டம் சிங்கள மக்களையும் சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஈழவிடுதலைப் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தும் செயலை ஆரம்பித்துவிட்டிருந்ததையோ எம்மில் பெரும்பாலானவர்கள் கண்டுகொள்ளத் தவறியிருந்தனர்.

இத்தகைய தவறான போக்குகள் ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள் தோன்றி வளர்ந்து வருவதை விமர்சித்தவர்கள், சுட்டிக்காட்டியவர்கள் எள்ளி நகையாடப்பட்டனர் அல்லது அழித்தொழிக்கப்பட்டனர்.

இலங்கையின் பேரினவாத அரசுக்கெதிராக போராடுவதாகக் கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) நிராயுதபாணிகளான அப்பாவிச் சிங்கள மக்களை இலக்காகக் கொள்ள ஆரம்பித்ததன் மூலம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கிவிட்டிருந்தனர். கார்த்திகை 24, 1984 கென் பாம், டொலர் பாமில் தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) 60 சிங்கள கிராமவாசிகளை வெட்டியும் சுட்டும் கொலைசெய்ததன் மூலமும், கார்த்திகை 29, 1984 கொக்கிளாய் நாயாற்றில் 59 சிங்களக் கிராமவாசிகளை கொன்றொழித்ததன் மூலமும் ஈழவிடுதலைப் போராட்டம் இலங்கையின் இனவாத அரசுக்கெதிரானதேயொழிய சிங்கள மக்களுக்கெதிரானதல்ல என்று முற்போக்கு சக்திகள் கூறிவந்த கருத்துக்களை நடைமுறையில் தகர்க்கும் செயற்பாடுகளை மேற்கொண்டதுடன், சிங்கள மக்களையும், சிங்கள முற்போக்கு சக்திகளையும் எமது போராட்டத்தின் நட்பு சக்திகள் என்ற நிலையிலிருந்து அந்நியப்படவைக்கும் செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, தமிழர் விடுதலைக் கூட்டணியினர்(TULF) தமது பிரச்சார மேடைகளில் வானதிர முழங்கிவந்த "சிங்களவரின் இரத்தத்தில் நீந்தி தமிழீழம் காண்போம்" என்ற இனவாத அரசியல் கனவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) நடைமுறை வடிவம் கொடுக்கத் தொடங்கியிருந்தனர்.

சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் குறுந்தேசிய இனவாதம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) "அகிம்சை" வழியில் அல்லாமல், ஆயுத வன்முறை வழியில் தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) குரூரமாக முன்னெடுக்கத் தொடங்கியிருந்தனர்.

கென் பாம், டொலர் பாம், கொக்கிளாய், நாயாறு போன்ற இடங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால்(LTTE) அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழி தீர்க்கும் முகமாக மார்கழி 01, 1984 முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒதியமலையில் 27 தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். தமிழ், முஸ்லீம் மக்கள் இலங்கை இனவாத அரசிலிருந்து விடுதலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈழவிடுதலைப்போராட்டம் தமிழீழவிடுதலைப் புலிகளின்(LTTE) செயற்பாடுகளால் தடம்மாறி குறுந்தேசிய இனவாதப் போராட்டமாக மாற்றமடையத் தொடங்கியிருந்தது.

தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமில் நாம் தங்கியிருந்தபோதும் புளொட்டினால் எம்மீது தொடர்ச்சியான விசமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டவண்ணம் இருந்தன. புளொட்டின் இத்தகைய பிரச்சாரங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், உண்மை நிலையை மக்களுக்கும், புளொட்டில் அங்கம் வகிப்பவர்களுக்கும் எடுத்துச் சொல்லும் வகையிலும், உமாமகேஸ்வரனினதும் அவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்படும் புளொட்டினதும் போலித்தனங்களையும் இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தும் வகையிலும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட வேண்டியதன் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்தோம்.

ஆனால் இத்தகையதொரு துண்டுப்பிரசுரத்தை எப்படி அச்சிட்டு வெளியிடுவதென்று முடிவெடுத்திராதபோதும் எம்முடன் இருந்த அனைவரது கருத்துக்களையும் தொகுத்து  "போலி முகத்திரையைக் கிழித்தெறிவோம்"" என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை ஜீவனும் நானும் எழுதியிருந்தோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் செயற்பட்டவரும், புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் பின் தமிழீழ விடுதலை இராணுவம்(TELA) என்ற இயக்கத்தை உருவாக்கி செயற்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால்(LTTE) படுகொலை செய்யப்பட்ட ஓபரோய்தேவனின் சகோதரனும், தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) அரசியல் பிரிவுப் பொறுப்பாளராகக் செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான தயாசேகரமும், அவருடன் அரசியல் பிரிவில் செயற்பட்டுக் கொண்டிருந்த சிவமும் நாம் தங்கியிருந்த தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமுக்கு அவ்வேளையில் வந்திருந்தனர். எம்முடன் பேசிய தமிழீழ விடுதலை இயக்க(TELO) அரசியல் பொறுப்பாளர் தயாசேகரம், நாம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறோம்? எமது எதிர்காலத்திட்டங்கள் என்ன? போன்ற பல விடயங்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களின் தொடர்புக்காக காத்திருக்கின்றோம் என்று கூறிய நாம், அவர்களுடன் பேசிய பின்பே எமது அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து முடிவுசெய்வோம் என்று கூறினோம். அத்துடன் எம்மீதான புளொட்டின் விசமத்தனமான பிரச்சாரங்களுக்கு பதிலளிக்குமுகமாக ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தோம். இதற்கு கருத்து தெரிவிக்குமுகமாக பதிலளித்த தமிழீழ விடுதலை இயக்க(TELO) அரசியல் பொறுப்பாளர் தயாசேகரம் இந்தியாவில் சந்ததியாரின் தலைமையில் வெளியேறிவர்கள் தமது இயக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்றும், இந்தியாவிலிருந்து தளம் வந்திருக்கும் தமது இயக்கத்தைச் சேர்ந்த சுபாஸ் என்பவர் சிலதினங்களில் எம்மை சந்தித்துப் பேசுவார் எனவும் கூறியதோடு துண்டுப்பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட தன்னால் உதவமுடியும் என்றும் கூறினார். தமிழீழ விடுதலை இயக்க(TELO) அரசியல் பொறுப்பாளர் தயாசேகரம் எமக்கு செய்ய முன்வந்த உதவியை ஏற்றுக்கொண்ட நாம், ஏற்கனவே எம்மால் எழுதிமுடிக்கப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தை அச்சிடுவதற்கு தயாசேகரத்திடம் கையளித்தோம்.

தமிழீழ விடுதலை இயக்க(TELO) அரசியல் பொறுப்பாளர் தயாசேகரம் எம்மைச் சந்தித்து பேசி ஒரு சில நாட்களின் பின் நாம் தங்கியிருந்த தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமுக்கு மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் வந்த ஒருவர் தன்னை சுபாஸ் என்று அறிமுகம் செய்துகொண்டார். தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TELO) இந்தியாவில் செயற்பட்டு வந்ததாக கூறிய திருகோணமலையைச் சேர்ந்த சுபாஸ் இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டில் இருந்து வெளியேறியவர்கள் தமது அமைப்புடன் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் விரைவில் தளம் வரவிருப்பதாக எமக்குத் தெரிவித்தார். தள நிலைமைகளை அறிந்து செல்வதற்காகவே தான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகக் கூறிய சுபாஸ் நாம் எதுவித பயமுமின்றி தமது முகாமில் தங்கலாமெனவும் கூறினார். தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள்(TELO) சுதன், ரமேஷ் பிரச்சனை எழுந்தபோது தானே அந்தப் பிரச்சனையை கையாண்டதாக பெருமையுடன் கூறிய சுபாஸ், எம்மில் நீண்டகால உறுப்பினர் யாரென்றும், தளத்தில் வெளியேறிய உங்களில் தலைவர் யாரென்றும் கேள்விகளை எழுப்பியிருந்தார். சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் விரைவில் தளம் வரவிருக்கின்றனர் என்ற ஒரு நல்ல செய்தியை எமக்குத் தெரிவித்த சுபாஸ், சுதன், ரமேஸ் பிரச்சனை அமைப்புக்குள் தோன்றியபோது அப்பிரச்சனையை தானே கையாண்டதாக கூறியதும், எம்மில் நீண்டகால உறுப்பினர்கள் யார்?, எமக்குள் தலைவர் யார்? என்று கேள்விகள் எழுப்பியதும் எம்மில் பலருக்கு சுபாஸின் உள்நோக்கம் என்னவாக இருக்குமோ என சந்தேகத்தையும் பயத்தையும் கூட ஏற்படுத்தியது.

இதன் காரணத்தால் தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமில் தொடர்ந்து இருப்பதற்கு எம்மில் பலர் விரும்பவில்லை. ஜீவன், சிவானந்தி, பாண்டி, ரஞ்சன் ஆகியோர் தமது வீடுகளுக்கு செல்லப் போவதாகக் கூறி தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமிலிருந்து சென்று விட்டனர். தமது வீடுகளுக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர்கள் நிலைமைகள் படிப்படியாக மாறிவந்து கொண்டிருப்பதாகவும், மக்கள் மத்தியிலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் எமக்கு ஆதரவும், எம்மீது அனுதாபமும் இருப்பதாகவும் தகவல் அனுப்பினர்.

இதனால் தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமில் செயலற்று இருப்பதை விட, அன்றைய கால கட்டத்தில் ஓரளவு பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் இருந்து புளொட்டின் அராஜகங்களை அம்பலப்படுத்தும் நோக்கோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குச் சென்றோம். தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமிலிருந்து நாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குச் சென்றதும் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் எம்மீது ஒருவகை அனுதாபத்துடன் கூடிய ஆதரவை காணக்கூடியதாக இருந்தது.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் மனிதாபிமானமும், முற்போக்குச் சிந்தனையும் கொண்ட மாணவ மாணவிகளின் ஆதரவை நாம் பெற்றுக் கொண்டிருந்த அதேவேளை, புளொட்டின் அராஜகங்களுக்கு துணைபோய்க் கொண்டிருந்தவர்களின் வெறுப்புடன் கூடிய பார்வையும் கூட எம்மீது படர்ந்து கொண்டிருந்தது. புளொட்டின் அராஜகங்களிளிருந்து தப்புவதற்காக தலைமறைவாகியிருந்த நாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் பகிரங்கமாக செயற்பட ஆரம்பித்ததன் மூலம் புளொட்டின் அராஜகவாதிகளை நேரடியாக முகம் கொடுப்பதற்கு தயாரானோம்.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31