எமக்கு பாதுகாப்பளிக்க முன்வந்த தமிழீழ விடுதலை இயக்கம்(TELO)
புளொட் இராணுவப் பிரிவினரால் கைதடி சுற்றி வளைக்கப்பட்ட பின், கைதடிப் பகுதியிலிருந்து வெளியேறி வேறு இடத்திற்குச் செல்வதற்கென நள்ளிரவு வரை கைதடி வடக்கு நவபுரம் பகுதியில் சண்முகநாதனுக்காக(சண்) காத்துக் கொண்டிருந்தோம். கைதடி வடக்கில் நவபுரம் கிராமம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையாக செப்பனிடப்பட்டிராத வீதி வழியாக நாம் தங்கியிருந்த குடியிருப்பை நோக்கி மினிவான் ஒன்று வந்து கொண்டிருந்தது. புளொட் இராணுவப் பிரிவினர்தான் நாம் தங்கியிருக்கும் இடமறிந்து வந்து விட்டார்களோ என எண்ணிக்கொண்டு ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடுவதற்கு தயாரானோம்.
மினிவானை தொலைவில் நிறுத்திவிட்டு வானிலிருந்து ஆயுதங்கள் சகிதம் இறங்கிய ஒரு குழுவினர் நாம் தங்கியிருந்த நவபுரம் குடியிருப்புப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தனர். மினிவானிலிருந்து இறங்கிவந்த குழுவினருள் சண்முகநாதனும், புளொட் இராணுவப் பிரிவினரால் திருநெல்வேலி சுற்றிவளைக்கப்பட்டபோது அச்சுற்றிவளைப்பிலிருந்து தப்பிய பாண்டியும் கைகளில் ஆயுதம் தரித்திருந்தவர்களுடன் நட்புறவுடனும் பேசியபடி வந்து கொண்டிருந்தனர். இதனால் ஆயுதங்களுடன் வருவது புளொட் இராணுவம் அல்ல என்று ஊகித்துக் கொண்டோம். எம்மிடம் வந்த பாண்டி, ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த இருவரையும் தமிழீழ விடுதலை இயக்க(TELO) உறுப்பினர்கள் எனக் கூறி ஒருவரை ஜே.பீ (தற்போது கனடாவில் வசிக்கிறார்) என்றும் மற்றவர் சிவபெருமான் என்றும் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழீழ விடுதலை இயக்கத்தினர்(TELO) எமக்குப் பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளனர் என்றும் கூறினார். தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) எமக்குப் பாதுகாப்பளிக்க முன்வந்ததையடுத்து நாம் மகிழ்ச்சியடைவதற்குமாறாக எம் எல்லோரிடத்திலிருந்தும் கேள்விகளே எழுந்தன. ஏனெனில் தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள்ளேயே(TELO) உள்முரண்பாடுகளும், சுதன், ரமேஸ், குறித்த பிரச்சனைகளும், மனோ மாஸ்டருடன் இணைந்த ஒரு குழுவினரின் வெளியேற்றமும் நடைபெற்றிருந்த காலகட்டம் அது. தமது இயக்கத்துக்குள்ளேயே முரண்பாடுகளையும் பிளவுகளையும் கொண்டுள்ள ஒரு இயக்கம் என்ன நோக்கத்திற்காக எமக்குப் பாதுகாப்புத் தர முன்வந்துள்ளது என்ற கேள்வி எம்மிடம் இயல்பாகவே எழுந்தது. ஏதாவது உள்நோக்கங்களுடன்தான் எமக்குப் பாதுகாப்பு தர முன்வந்துள்ளனரோ எனக்கூட எண்ணினோம். இதனால் நாம் அனைவரும் ஒன்றுகூடிப் பேசிவிட்டு தமிழீழ விடுதலை இயக்கத்திடம்(TELO) பாதுகாப்பு பெறுவதா அல்லது அவர்கள் செய்ய முன்வந்த உதவியை நிராகரிப்பதா என முடிவெடுக்கத் தீர்மானித்தோம்.
எந்தவித நிர்ப்பந்தமும் கொடுக்காமல் எம்மை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிப்பதாக இருந்தால் மட்டுமே தமிழீழ விடுதலை இயக்கத்திடம்(TELO) பாதுகாப்புப் பெறுவதென்றும், அதற்கு அவர்கள் உடன்படாத பட்சத்தில் அவர்களது உதவியை நிராகரிப்பதென்றும் முடிவெடுத்தோம். எமது முடிவை தமிழீழ விடுதலை இயக்க (TELO)த்தைச் சேர்ந்த பாண்டியின் நண்பன் ஜே.பி யிடம் தெரிவித்தோம். எமக்குப் பாதுகாப்பளிப்பது என்ற தமது முடிவு நட்புறவின் அடிப்படையிலானது மட்டுமே என்று கூறிய ஜே.பி, நாம் எமது முடிவுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என்று கூறியதையடுத்து புளொட் இராணுவப் பிரிவினரின் தொடர்ந்து வரும் கொலைவெறிச் செயலிலிருந்து தப்புவதற்காக வேண்டி தமிழீழ விடுதலை இயக்கத்திடம்(TELO) பாதுகாப்புப் பெறுவதென முடிவெடுத்தோம். புளொட் இராணவத்தினரின் ஒரு பகுதியினர் எம்மை கொலை செய்வதற்காக அலைந்தவேளையில் அவர்களின் கொலைவெறியில் இருந்து தப்புவதே எமது நோக்கமாக இருந்ததே தவிர எந்தக் கட்டத்திலும் அவர்களை நாம் தாக்குவதாக இருக்கவில்லை. இதனடிப்படையில்தான் குருநகரில் வைத்து எஸ். ஆர் சிவராமிடம் எம்மால் பறித்தெடுக்கப்பட்ட இயந்திரத்துப்பாக்கியால் எஸ் ஆர் சிவராமையும், தீபநேசனையும் நாம் திருப்பித் தாக்கவில்லை. தமிழீழ விடுதலை இயக்கத்தைச்(TELO) சேர்ந்த ஜே.பீ யும் சிவபெருமானும் எம்மை தமது மினிவானில் ஏற்றிக்கொண்டு அளவெட்டியில் அவர்களது இராணுவப் பிரிவினர் தங்கியிருந்த வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். எமக்கு கைதடியில் பாதுகாப்பு தருவதில் முன்னின்று செயற்பட்ட சண்முகநாதன் தொடர்ந்து வீட்டில் தங்கியிருப்பதால் தனக்கும் கூட புளொட் இராணுவப் பிரிவினரால் ஆபத்து நேரலாம் எனக் கருதி எம்முடன் சேர்ந்து கொண்டார். நாம் அளவெட்டியில் தங்கியிருந்த தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமிற்கு வாத்தி(தற்போது கனடாவில் வசிக்கிறார்) என்பவர் பொறுப்பாக இருந்தார். எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கும்வரை தமிழீழ விடுதலை இயக்கத்தினரின்(TELO) பாதுகாப்பிலேயே இருப்பதென முடிவெடுத்தோம்.
"சந்ததியாரின் ஆட்கள்" என சந்தேகிக்கப்படுவோரை "சுத்திகரிப்பு" செய்வதன் மூலம் உமாமகேஸ்வரன் தனது தலைமையை பாதுகாத்துக் கொள்வதையே ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் பயிற்சி முகாம்களிலும் தளத்திலும் "சுத்திகரிப்பு" வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து ஒரு குழுவினர் வெளியேறியிருந்ததாலும், தளத்தில் நாம் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்ததாலும் எம்முடன் தொடர்புடையவர்களாக இருக்கக்கூடும் அல்லது "சந்ததியாரின் ஆட்கள்" ஆக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவிலும் - குறிப்பாக பயிற்சிமுகாம்களிலும் - தளத்திலும் உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்படையினரும் "சந்ததியாரின் ஆட்களை" கண்டுபிடித்து "தண்டனை அளித்தல்" என்ற நடவடிக்கையில் இறங்கினர். இந்தியாவில் "சந்ததியாரின் ஆட்கள்" தலைமைக்கு எதிரானவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் கடத்தப்பட்டு தஞ்சாவூருக்கண்மையில் ஒரத்தநாடு என்ற ஊரிலிருந்த "B காம்ப்" என்ற சித்திரவதைமுகாமில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; அல்லது "காணாமல் போய்விட்டதாக", பயிற்சி முகாமிலிருந்து "தப்பியோடி விட்டதாக" அறிவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் பயிற்சி முகாம்கள் எப்படி சித்திரவதை முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன என்பதையும், புளொட்டிலிருந்து சந்ததியார், டொமினிக்(கேசவன்), கண்ணாடிச்சந்திரன், காந்தன் (ரகுமான் ஜான்) உட்பட ஒரு குழுவினர் வெளியேறிய பின்பு "சந்ததியாரின் ஆட்கள்" என சந்தேகிக்கப்படுபவர்கள் எப்படி சுத்திகரிப்பு செய்யப்பட்டனர் என்பதையும், புளொட்டில் அங்கம் வகித்தவரும், இந்தியாவில் புளொட்டின் பயிற்சிமுகாமில் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்து மரணத்தின் வாயிலிருந்து மீண்டுவந்தவருமான சீலன் "தமிழரங்கம்" இணையத்தளத்தில் எழுதிய " புளொட்டில் நான்" என்ற தொடரைப் படிப்பதன் மூலம் விபரமாக அறிந்து கொள்ள முடியும்.
தளத்தில் நிலைமைகள் சற்று மாறுபட்டனவாக இருந்தன. மத்தியகுழு உறுப்பினரும் கரைப்பொறுப்பாளராக செயற்பட்டு வந்தவருமான குமரன் (பொன்னுத்துரை) தளநிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதே காலப்பகுதியில் மத்தியகுழு உறுப்பினர் பெரியமுரளி, 1985 பெப்ரவரி மாதம் நடைபெற்ற மத்தியகுழுக் கூட்டத்தில் மத்தியகுழுவுக்குத் தெரிவாகியிருந்த அசோக் (யோகன் கண்ணமுத்து) ஆகியோர் தளத்தில் இருந்தனர். மத்தியகுழு உறுப்பினரும், உமாகேஸ்வரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும், மட்டக்களப்பு வாசுதேவாவின் வலதுகரமாக செயற்பட்டவருமான ஈஸ்வரன் தளத்தில் உமாமகேஸ்வரனின் தலைமையைக் காப்பாற்றுவதற்கான திட்டங்களுடனும், "சந்ததியாரின் ஆட்கள்" என சந்தேகிப்போரை களையெடுப்பதற்கான திட்டங்களுடனும் தளம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். தளத்தில் உமாமகேஸ்வரனின் தலைமையை காப்பாற்றுவதற்கான அனைத்து திட்டங்களும் மத்தியகுழு உறுப்பினரான ஈஸ்வரனின் தலைமையிலேயே நடைபெற்றது. பதவிவேட்கையுடனும், கொலைவெறியுடனும் அலைந்து திரிந்த எஸ்.ஆர் சிவராம் தனது திட்டங்களை நிறைவேற்ற பொருத்தமான ஒரு ஆளாக இருப்பதை ஈஸ்வரன் இனம்கண்டு கொண்டார். உமாமகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாகவும் இராணுவப் பொறுப்பாளராகவும் செயற்பட்ட சின்னமென்டிஸுக்கு (சின்னமென்டிஸ் ஒரு மத்தியகுழு உறுப்பினர் அல்ல, உமாமகேஸ்வரனின் முடிவுகளையும் மத்தியகுழு உறுப்பினர்களின் முடிவுகளையும் செயற்படுத்திய ஒருவர்) அனைத்துக் கட்டளைகளும் இந்தியாவிலிருந்து உமாமகேஸ்வரனாலும் தளத்தில் ஈஸ்வரனாலும் வழங்கப்பட்டு வந்தன. தனது திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்த ஈஸ்வரன் ஒருவகை வெறித்தனத்துடன் தளத்தில் தலைமறைவான எம்மைக் கைது செய்து கொலை செய்வதற்கு தனது முழுமையான நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டதோடு "சந்ததியாரின் ஆட்கள்" எனப்படுவோரை களையெடுப்பதன் மூலமாக உமாமகேஸ்வரனையும் அவரது பிற்போக்குத் தலைமையையும் காப்பாற்றியே தீர்வதென்று உறுதிபூண்டிருந்தார்.
இந்தியாவுக்கு பயிற்சி பெறச் சென்று, தோழர் தங்கராஜாவின் அரசியல் பாசறைகளில் பங்குபற்றி, சந்ததியாரால் அரசியல் வகுப்பு எடுக்கவென தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட டானியல் (தற்போது கனடாவில் வசிக்கிறார்) உமாமகேஸ்வரனின் உளவுப்படையினரால் "சந்ததியாரின் ஆள்" என முத்திரை குத்தப்பட்டிருந்தார். தளத்தில் அரசியல் வகுப்புகளையும் கருத்தரங்குகளையும் மேற்கொண்டு வந்த டானியல் அராலிப்பகுதியில் நடந்த கருத்தரங்கொன்றில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், "தலைமை பிழையாகச் சென்றால் மத்தியகுழு தலைமையை மாற்றும்" எனக் கருத்து தெரிவித்திருந்தார். டானியலால் தெரிவிக்கப்பட்டிருந்த இந்தக் கருத்தை தளத்திலிருந்த உமாமகேஸ்வரனின் உளவுப்பிரிவால் உமாமகேஸ்வரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து டானியலை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும்படி உமாமகேஸ்வரன் கேட்டிருந்தார். தளத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட டானியலை வாமதேவன் சித்திரவதை முகாமான "B காம்புக்கு" கொண்டு சென்று கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கிட்டு சித்திரவதை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(LTTE) முன்னோடியாக சித்திரவதை முகாம்களை அறிமுகப்படுத்திய உமாமகேஸ்வரனின் உளவுப்படையினரால் டானியல் " B காம்ப்" என்ற சித்திரவதை முகாமில் கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருந்த அதே நேரம் உடுவில் சிவனேஸ்வரன், பவான் என்று அழைக்கப்பட்ட சோதி, சுண்ணாகம் அகிலன் ஆகியோர் உமாமகேஸ்வரனின் உத்தரவின் பெயரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். டானியலை சித்திரவதை செய்து "மகிழ்ந்தவர்கள்" இடிஅமீன் மற்றும் குகன் ஆகியோராவர். இரண்டு வாரங்களாக டானியலை "B காம்பில்" வைத்து சித்திரவதை செய்தபின்னர், புளொட் என்ற அமைப்பு உருவாகுவதற்கு மூலகாரணமாகவிருந்த சுந்தரம் பற்றி டானியல் இயற்றிப் பாடிய பாடலால் "கருணை" கொண்ட பெரியமென்டிஸால் (பாலமோட்டை சிவம்) டானியல் உயிர் தப்பினார்.
சாவகச்சேரி அமைப்பாளராகச் செயற்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு பயிற்சிக்கென சென்று தொலைத்தொடர்பு பயிற்சியையும் இராணுவ பயிற்சியையும் முடித்து வந்திருந்தவரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவருமான சாவகச்சேரி மைக்கல் மோட்டார் சைக்கிளில் கொக்குவில் பொற்பதி வீதியால் சென்று கொண்டிருக்கும் போது அவரை வழிமறித்த காண்டீபன், மைக்கலை சின்னமென்டிஸ் சந்தித்துப் பேசவிரும்புவதாக கூறி, உடுவிலில் இருக்கும் சின்னமென்டிஸின் முகாமுக்கு அழைத்துச் சென்றிருந்தார். உடுவிலில் சின்னமென்டிஸின் முகாமில் வைத்து மைக்கலை விசாரணை செய்த சின்னமென்டிஸ் விஜயன், பாண்டி, மைக்கலுடன் மகளிர் அமைப்பைச் சேர்ந்த சத்தியா, ரீட்டா, சுந்தரி ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தியபோது சத்தியாவால் இரகசியமாகப் பதிவுசெய்யப்பட்ட தெளிவற்றிருந்த ஒலிப்பதிவு நாடாவை கேட்கச் சொல்லிவிட்டு, பாண்டியும், விஜயனும் மகளிர் அமைப்பினரிடம் என்ன கூறினர் என கேட்டதுடன் "படிச்சஆட்கள் என்ற தலைக்கனத்தில்தான் இயக்கத்திற்கெதிராக வேலை செய்கிறீர்களா?" எனக் கேள்வி கேட்டும், "ரீட்டாவுக்கு என்ன நடந்தது/" என்ற கேள்வி கேட்டும் நீண்டநேர விசாரணையின் பின் சின்னமென்டிஸால் மைக்கல் விடுவிக்கப்பட்டார்.
ரீட்டாவின் விவகாரம் புளொட்டினுடைய திட்டமிட்ட ஒரு சதியே என்பதுடன் ஜென்னி "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - எனது சாட்சியம்" என்ற தொடரில் குறிப்பிட்டிருந்தது போல சில "கறுத்த ஆடுகளின்" வேலையாக இருக்கக்கூடும். ஆனால் அந்தக் "கறுத்த ஆடுகள்" அல்லது "பசுத்தோல் போர்த்த புலிகள்" புளொட்டுக்குள்ளேதான் இருந்தார்கள் என்பதே உண்மையாகும்.
புளொட்டுக்குள் களையெடுப்பு வேலையை தளத்தில் மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை தாங்கி அவரது நெருங்கிய சகா எஸ்.ஆர் சிவராமுடன் திட்டங்களை வகுத்து செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஈஸ்வரனினதும் எஸ்.ஆர் சிவராமினதும் நோக்கம் பதவிவேட்கையும் உமாமகேஸ்வரனின் தலைமையைக் காப்பாற்றுவதும் மட்டும்தான்.
அப்படியானால் தளப்பொறுப்பாளராகப் பொறுப்பேற்று வந்த மத்தியகுழு உறுப்பினர் குமரன்(பொன்னுத்துரை), மத்தியகுழு உறுப்பினர் பெரியமுரளி, புதிதாக மத்தியகுழுவுக்குள் உள்வாங்கப்பட்ட அசோக் (யோகன் கண்ணமுத்து) போன்றோரும், தாம் மார்க்சிய பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் எனப் பெருமையுடன் கூறிக்கொண்டிருந்த சுப்பையா என்றழைக்கப்பட்ட கௌரிகாந்தன், பாசறை ரவி என அழைக்கப்பட்ட முத்து, பிரசாத் போன்றோரும் புளொட்டுக்குள் நடந்தவை பற்றியும் நடந்து கொண்டிருந்தவை பற்றியும் என்ன நிலைப்பாட்டை கொண்டிருந்தனர்?
புளொட்டினுள் அராஜகம் அதன் உச்சநிலையை அடைந்துவிட்டிருந்த நிலையில், உட்கட்சி ஜனநாயகம் என்பது முற்றாக அற்றுப்போய்விட்ட நிலையில், புளொட் உறுப்பினர்களின் நியாயமான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் சித்திரவதை முகாம்களும் கொலைகளுமே பதிலாக அமைந்தவேளையில், உமாமகேஸ்வரனால் வளர்த்து விடப்பட்டிருந்த கொலைவெறி பல உயிர்களை காவு கொண்டுவிட்டிருந்ததொடு மேலும் பல உயிர்களை காவு கொள்வதற்காக அலைந்த வேளையில் புளொட்டுக்குள்ளே இருந்து போராடுவதென்பது தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்ற காரணத்தால் நாம் தளத்தில் புளொட்டிலிருந்து வெளியேறினோமே ஒழிய, " புளொட்டில் நான்" என்ற தொடரில் சீலன் குறிப்பிட்டிருந்தது போல "நாம் மட்டும் தப்பிக்கொண்டால் போதும்" என்பதற்காக அல்ல. அத்துடன் நாம் புளொட்டிலிருந்து திடீரென வெளியேறியது ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரின் உயிருக்கு உமாமகேஸ்வரனால் ஏற்பட இருந்த உடனடிஆபத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. நாம் புளொட்டிலிருந்து வெளியேறியது எமது உயிர்களை மட்டும் காப்பாற்றுவதை ஒரே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக புளொட்டின் அராஜகங்களையும் கொலைவெறிச் செயல்களையும் அம்பலப்படுத்தி அவற்றுக்கெதிராக போராடுவதும், பயிற்சி முகாம்களில் "சிறை" வைக்கப்பட்டிருக்கும் தோழர்களை விடுவிப்பதும், தளத்தில் புளொட்டை ஒரு புரட்சிகர அமைப்பாக நம்பிக்கொண்டிருப்பவர்கைள விழிப்பேற்றுவதும்தான். ஒட்டுமொத்தத்தில் எமது வெளியேற்றமானது புளொட்டை முழுமையாக அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததோடு ஒரு தவறான தலைமையிலிருந்து அந்தத் தலைமையின்கீழ் அணிதிரண்டிருந்தவர்களையும் அந்தத் தலைமையால் "கைதிகளாக்கப்பட்டிருந்தவர்களையும்" விடுவிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததே தவிர "நாம் மட்டும் தப்பிக் கொண்டால் போதும்" என்பதை ஒருபோதும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29