Language Selection

மாணிக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘மனிதர்” என்ற உயிர்களுக்கான ஜனநாயக உரிமை பற்றிச் சிந்திக்கவே தெரியாது, அடக்குமுறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாசிச அரசின் இரத்த வடுக்கள், எம்மீது என்றுமே அழியாத வரலாறாகிப் பதிகின்றது. இதில் ‘தமிழ் அரசியல் தரப்புகளின் இராஜ தந்திரிகள் – தூதர்” (Tamils Diplomat) என்போர், எமது மக்களின் அடிப்படை வாழ்வையே பறித்த வரலாறுகள் மீண்டுமோர் பார்வைக்காக மேலெழுந்து வருகின்றது.

ஓர் தேசத்தின் பல்லின மக்களுக்குள் உடைப்புகள் – பிரிப்புகள் செய்து, இலங்கைப் பாசிச அரசின் ‘இன அழிப்புத் திட்டத்தை” இவர்களே ஆரம்பித்தார்கள். தற்போதும் அதற்கான வழிகளையே தேடிச் செல்கின்றார்கள். ஓர் பல்லின மக்கள் வாழும் நாட்டில், அனைத்து இன மக்களையும் சிதறடித்துச் சின்னாபின்னம் ஆக்கியுள்ளார்கள். அந்த மக்களின் அனைத்துப் பலங்களையும் – வளங்களையும் சதிகளால் இழக்கவைத்து, தனித்தனிக் கூறாக்கியுள்ளார்கள். அத்தனை தேசிய இனங்கள் மீதும், இந்த ‘தமிழ்க் குறுந் தேசியத் தந்திரிகள்” அன்றுமுதல் இன்றுவரை ‘தொலை நோக்கு அரசியல்” அற்ற, இலங்கையின் பெரும்பான்மை அரசியல் – பாசிசக் கட்சிகளுடன் எதிரணி கட்டி, அவர்களை ‘பாசிச தேசிய மணிமுடி அரசு” என்ற வரையில் வளர்த்துள்ளார்கள். இந்த வகையில், இதன் பன்முகப் பரிமாணமே, இலங்கைத் தமிழ்த் தேசிய மக்களின் உயிர்களை, ‘சிறிலங்காவின் சிங்கவாள் கொடிக்கு அமைய” பகுதி பகுதியாய் அறுத்து, கணக்கற்று அழித்துப் புதைத்த, யுத்ததிலும் துரோகத்தனம் உச்சமடைந்த இடமான ‘முள்ளிவாய்க்கால்” என்ற வன்னி நிலப்பகுதி, உலகினில் இன்று சர்வதேசப் பெயராகியுள்ளது.

 

 

 

இதற்காக, இலங்கை வரலாறு என எழுதப்பட்ட பௌத்த மடாதிபதிகளின் ‘மகாவம்ச” காலத்திற்கும் முன்பிருந்தே, தமிழ் பேசும் மக்களுக்காக தலைமை தாங்கிய அத்தனை தமிழ்த் தந்திரிகளும், இவை மக்களின் எதிர்கால, சுதந்திர வாழ்வுக்கானது என்பதை விட, இது எனது அரசியல்.., என்ற சுய நலத்தையே பேணியதனால், ஓர் நாட்டில் இணைந்து வாழவேண்டிய பல்கலாச்சார மக்களுக்கிடையே, அவ்வப்போது எழுந்த பிரச்சினைகளை தீர்க்க, இவர்கள் மறுத்தார்கள். மாறாக, தாம் தமது ‘குறுந்தேசிய” இனவெறியை இலகுவாகத் தொடர்வதற்கு, அந்த முரண்பாட்டுத் தீக்குள் எண்ணை ஊற்றிப் பெரிதாக எரியவிட்டு, தமக்கான இலாபத்தை மிக இலகுவாகப் பெற்றார்கள். அதேவேளை இலங்கைப் பாசிசக் கட்சிகளுடன்; மறைமுகக் கூட்டுவைத்து, அந்தப் பாசிசத்துக்கு ஈடாக தமது குறுந்தேசியக் கட்சிகளை வளர்த்தெடுத்தார்கள். அத்துடன் தமது தவறான செயல்களை, எமது விடுதலைக்கான அரசியல் இதுவே என, தமிழ் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்கக் கூறி, தமது மிதவாதத்தினை செயற்படுத்தினார்கள்.

இந்தத் தந்திரிகளின் செயல்களை, ஊர்ச் சண்டியரின் கதைகளால் நாம் விளங்கிக் கொள்ளலாம். அதாவது, சண்டியர்கள் எப்போதும் வம்புச் சண்டையை தேடிப் போவார்கள். அல்லது அது அவர்களை தேடி வரும். அதனால் சண்டியர்களுக்கிடையே பலப் பரீட்சைகள் அடிக்கடி நடக்கும். அப்போது சண்டியர்களும் அவர்களின் எடுபிடிகளும் தூசண வார்த்தைகளை தமது வீர வசனமாகப் பேசுவர். அந்தப் பேச்சுகளை மக்கள் கேட்டு இரசிப்பர். மாறாக, என்ன மாதிரியான நாத்தல் பேச்சு பேசுறானுகள்.., எனச் சொல்வர். தவிர, அவர்களையே தமது பாதுகாவலராகவும் – காதலராகவும் சிலர் ஏற்றிருப்பர். அவர்களின் சண்டையில் வெட்டுக் குத்து, சுடுபாடு, தீ வைப்புகளும் நடக்கும். இருந்தபோதும் அந்தச் சண்டைக்குள் மாட்டுப்படும் சில அப்பாவிகள் மட்டுமே அதிகமாக தாக்கப்படுவர். சண்டியர் நேரடியாகத் தாக்குப்படுவது குறைவு. அவர்கள் தாம் வாழ்கின்ற சமூகத்தில் காவல்துறை, நீதித்துறை செய்யவேண்டிய வேலைகளை அவர்களே தமது கையிலெடுப்பர். பின்பு பாதிக்கப்பட்டோரிடமிருந்து பணம் பொருளாய்க் கறப்பர். சமூகத்தை – உறவுகளைப் பிரிப்பர். திருட்டு, கொள்ளை, பாலியல், கொலைகளில் இவர்களது கைத் தடையங்கள் அதிகமாக பதிந்திருக்கும். இவர்கள் சட்டத்திடமிருந்து தப்பிக்கொள்வர். இவர்களுடன் சட்ட அதிகாரிகள் சிலர் மறைமுகத் தொடர்பு வைத்திருப்பர். வேலிப் பிரச்சினை முதல் கோயிற்பிரச்சினை வரை, இந்தச் சண்டியரின் கைகளில் தீர்வுக்காகக் காத்து நிற்கும். இவர்களுக்கு கதை காவிச் சிண்டுமுடிவோர், சதிகள் செய்வோர், எச்சம் தின்போர், …, எனப் பல அடியார்கள் எப்போதுமே இருப்பர். இவர்களால் ஊரின் அமைதி கெடுமே தவிர, உருப்படியாக ஏதும் நடப்பதில்லை. நிலமைகள் தமது கட்டுக்கடங்காதபோது, வேற்றூரிலிருந்து பெரிய சண்டியரை இவர்ளே அழைத்து வருவர். அடாவடியாக சில பெண்களை அவர்களுக்கு கூட்டிக் கொடுப்பர். இதில் தமக்கான தீர்வை மட்டும் தேடிக்கொள்ள இவர்கள் முயற்சிப்பர்.

இதில் சண்டித்தனம் என்ற பலத்தின் மீதான பெயரை, இந்தச் சண்டியர்கள் தமக்கானதாகக் காப்பாற்றவே (இருப்பு) எப்போதும் விரும்புவர். இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் இவைதான்.

இதே போலத்தான் ஏனைய சிற்றினங்களை மும்முரமாக பிரித்து வைப்பதிலும், அழிப்பதிலும், பாசிச அரசுகளுக்கு சோரம் போனவர்கள் இந்த தமிழ்த் தந்திரிகள். இந்த உண்மைகளை, எமது மக்கள் இன்றுவரையும் புரிய மறுக்கின்றனர். அந்த அளவுக்கு பொதுநலம் மறந்த இந்தத் தந்திரிகளின் சுயநலத்தை, அவர்கள் ஏதேதோ அரசியலில் சாகசங்கள் செய்ததாக, அந்த மூடத்தனங்களை எமது மக்கள் தமது மனங்களில் பதிந்து வைத்திருக்கின்றார்கள்.

அந்தக் காலத்தில

சேர்.பொன்.இராமநாதன் ஐயாவை சிங்களப் பெரியவர்கள் பல்லக்கிலை வைச்சுக் காவினவை..!? சேர்.பொன்.அருணாசலம் ஐயாவும் அந்தமாதிரி. ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஐயா கோட்டில வாதிடேக்கை, நீதவானாலை கூட கதைக்கேலாது, அவர் ஒரு பார்வை பார்த்தால் போதும், எதிராளியள் சுறுண்டு விழுவினம். அப்பிடி அந்தாளின்ரை வாதமிருக்கும். அவரொண்டும் சும்மா ஆளில்லை..! அரசாங்கத்தை 50-க்கு 50 கேட்டு, ஒரு மடக்கு மடக்கினவர் பாருங்கோ. அவ்வளவுதான் உடனை அவருக்கு அமைச்சர் பதவி குடுத்தினமெல்லே..!?

இப்படியான வாதாட்டங்களும் பிரச்சினைகளும், எமது உண்மையான வரலாறுகளை அழித்தொழித்த சேர – சோழ – பாண்டியர் காலத்திலிருந்து சங்கிலியன் வரையும் இவைதான் நடந்தது. இவர்கள் அன்று வித்திட்டவைதான் இன்றும் தொடர்கின்றது. எல்லாளனுக்கு எதிரான துட்டகைமுனுவின் போரிலும், முதலாம் விஜயபாகுவுக்கு எதிரான சோழரின் படையெடுப்பிலும், ஆறாம் பராக்கிரமபாகுவுக்கு எதிரான ஆரியச் சக்கரவர்த்திகளின் யுத்தத்தாலும் அறுபட்டு அழிந்தவர்கள் எமது மக்கள்தான்.

எல்லாளன் – துட்டகைமுனுவுக்கு முற்பட்ட காலத்திலும் எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன. அன்றிலிருந்து கடந்துபோன 2009-இல் நடந்து முடிந்த ஈழப் போரின் பின்பாகவும், மனித வாழ்வுக்கான எந்த அடிப்படைகளையும், எந்த அரசியல் தந்திரிகளும் முன்வைக்கவில்லை. அதற்கான அடிப்படைக் கருத்தியலைக்கூட இதுவரை மக்களுக்கு முன்வைக்கவுமில்லை. அப்படியான உயர் கருத்தியல் பற்றி இந்தத் தந்திரிகளுக்கு தெரியவே தெரியாது.

இயற்கைக் கோள்களை கடவுளாக – உயிர்களாகப் பார்ப்பவர்களுக்கு..! அவை பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்கும் அறிவியல் திறமைகள் ஏதாவது இருக்கின்றதா என்றால்..?

என்னப்பா..! எங்களின் நாட்டுக்குச் சனியன் பிடித்துவிட்டது எனக் கதையளக்கும் இந்தத் தந்திரிகள், தாங்கள்தான் இதற்கான காரணிகள் (முடச்சனியன்) என்பதை ஏற்பதில்லை. இந்தக் குறுந் தேசியப் போக்கின் அதீத சுயநலம், தேடல் – அறிவியலற்ற நிலையில் இந்தத் தந்திரிகள் நாண்டுகொண்டு நிற்பதனால், மக்களுக்கான புதிய சிந்தனை, மாற்றங்களை ஏற்க மறுக்கின்றார்கள். அதனால் தமது குறுந் தேசியத்தைக் காப்பாற்ற, பெரும் பாசிசத்தின் ஒற்றர்களாக (தந்திரிகள்) தமது அரசியலை தொடர்கின்றார்கள்.

இதேபோல, போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் – ஆங்கிலேயரின் நேரடிக் காலனித்துவ காலத்தில், இவர்கள் சோரம் போன தன்மைகளைப் பாருங்கள். அந்த வெள்ளையர்கள் தமது சுயதேவைக்காக, இலங்கையின் சமூக வாழ்வியலில் மிகமிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தமது மதத்தினை போதித்து, கல்வி புகட்டி, கலாச்சார மாற்றம் செய்து, தங்களின் நிர்வாகத்தை மேம்படுத்த முனைந்தார்கள். அதனால் அந்த மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கியபோது, இந்தத் தமிழ்த் தந்திரிகள் வேறு எவருமே தங்களை மேவக்கூடாது என்ற மக்கள் மீதான துரோகத் தன்மையில் நின்று, அந்த காலனிக்காரர் எதிர்பார்த்ததை விடவும் அவர்களுக்கு அதிகமாக வாரி அள்ளித் தருவதாக, அந்தக் கட்டமைப்புகளை இந்தத் தந்திரிகள் தமக்குக் கீழேதான் நிறுவினர். அதற்குள் தமது சாதி – மத – பிரதேச வெறியையும், தமக்கான சமூகச் சீரழிவுக் கட்டுக் கோப்புகளையும் தொடர்ந்து காப்பாற்றுவதில் இந்தத் தந்திரிகள் முன்னிலை வகித்தார்கள். இப்படி அன்னியர்களை அத்தனை வகையாக மகிழ்ச்சிப்படுத்தி, எமது அடித்தட்டு மக்களைத் தொடர்ந்தும் தரைமட்ட மக்களாக்கி, அவர்களை எழஎழ அடித்து வீழ்த்தினார்கள்.

அந்தக்கால திண்ணைப் பள்ளிகளில் இந்த மக்களுக்கு அனுமதி தர மறுத்தார்கள். இந்த மக்களுக்காகவும் அன்னியரின் மதப் பள்ளிகள் வழியைத் திறந்து விட்டபோது, இந்தத் தந்திரிகளின்; எடுபிடிகளால் அந்தப் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் மிக வன்மையாகத் தண்டிக்கப்பட்டனர் – துன்புறுத்தப்பட்டனர். அதனைத் தடுக்க முயன்ற பெற்றோரை பாலியல் வக்கிரம் செய்தனர். அதற்கும் மேலாக கொலைகளும் செய்தனர்.

இப்படியாக அந்த மக்கள் ‘பொது வீதிகளில் நடமாடத் தடை – சுடலைகளில் சொந்தங்களின் பிணமெரிக்கத் தடை – பொதுத் தாபனங்களில் உள்ளே செல்லத் தடை – சூத்திரம் என்ற சைக்கிள் ஓடத் தடை – வணக்கத் தலங்களுக்குச் செல்லத் தடை – மேளம் அடிக்கத் தடை – மீசை வளர்க்கத் தடை – ஆண்களுக்கான கடுக்கன் என்ற தோடு அணியத் தடை – பொதுக் கேணி, குளங்களில் குளிக்கத் தடை – பந்தல் போட்டு வெள்ளை கட்டத் தடை – முளங்காலுக்குக் கீழ்வரை வேட்டியணியவும், மேலங்கி அணியவும், சால்வை போடவும் தடை – வண்டில் ஆசனத்தட்டில் இருக்கத் தடை – புகையிரதம், பஸ் போன்ற பொது வாகன ஆசனங்களில் இருக்கத் தடை – கடைவைத்து வியாபாரம் செய்யத் தடை – செய்த வேலைக்குக் கூலி கேட்கத் தடை – குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை – பால்மாடு வளர்க்கத் தடை – விறுமர், அண்ணமார், காளி, பெரிய தம்பிரான், வீரபத்திரர், வைரவர், நாச்சிமார், காத்தவராயர் ஆகிய பெயர்களைவிட ஏனைய பெயர்களில் கோவில்கள் அமைக்கத் தடை – குடை பிடிக்கத் தடை – வெள்ளை வேட்டி அணியத் தடை – செருப்பு அணியத் தடை – பெண்கள் குடுமி போட்டுக்கொள்ளத் தடை – தாவணி போடத் தடை – தங்கத்தாலி, நகை அணியத் தடை” இப்படி இன்னும் எத்தனையோ தடைகள்.

இவற்றையெல்லாம் எப்படித் தொடராகத் தமக்குள்ளே காலத்துக்குக் காலம் தக்க வைப்பதென்ற திட்டங்களுக்கு உள்ளேதான், மேற் சொன்ன அனைத்து ‘தடை”களும் ‘தமிழ்க் குறுந்தேசியம்” என்ற மாபெரும் ‘டைனோசோர் மிருகம்” இந்தத் தந்திரிகளுக்குள் அடங்கிக் கிடக்கின்றது.

அந்த ஏழ்மைத் தமிழ் மக்களுக்கான பொதுக்காணி நிலப் பங்கீட்டிலும், வைத்தியம் உட்பட உணவுப் பங்கீட்டிலும் கூட, இந்தத் தந்திரிகள் தாமே அவற்றை அபகரித்தார்கள். சாதி – ஊர் – குடும்பப் பின்னணி ரீதியாக, தொழில் வளங்களைப் பிரித்தார்கள். இப்படி சொந்தத் தமிழ் மக்களையே தொடர்ந்தும் அடிமைப் படுத்தியவர்கள், இந்தச் சமுகப் பொறுப்பற்ற தமிழ்த் தந்திரிகளேயாகும். இந்தத் தந்திரிகள் தான், தமக்கு பேரினவாத ஒடுக்கு முறையிலிருந்து ‘தனிநாடும் – விடுதலையும்” வேண்டும் என்கின்றனர்.

இந்தத் தந்திரிகள்தான், இலங்கைப் பெரும்பான்மை மக்களை ‘மோட்டுச் சிங்களவர்” என்று, எமது மக்களுக்கு கதைகள் சொன்னவர்கள். அதன்போது தாங்களெல்லாம் ‘பீ|-த்தமிழர் என்ற உண்மைக் கதையைச் சொல்ல மறுத்தவர்கள். ‘இந்து மத மந்திரங்களை மக்களும் விழங்கிக்கொண்டால் அதன் பொட்டுக்கேடு தெரிந்துவிடும்” என்ற உண்மையைப் போல, ‘சிங்களம் – தமிழ்” ஆகிய மொழிகளை இருசாராரும் கற்றுக்கொள்ளக் கூடாதென, கங்கணம் கட்டியவர்களும் இந்தத் தந்திரிகளின் சூழ்ச்சிதான். அதனால் எழுந்த இன முரண்பாட்டை தீயாக்கி, அதில் இந்தத் தந்திரிகள் குளிர் காய்ந்துகொண்டு, எமது மக்களை இன அழிவுக்குள் மாட்டிவிட்டார்கள். தாங்கள் மட்டும் காணி – தோட்டம் – பங்களா – பணம் – பேர் – புகழ் என்ற பரம்பரை வாரிசுகளுக்கான அரசியலைச் செய்பவர்கள்தான் இந்தத் தமிழ்த் தந்திரிகள். இவர்களை நம்பிக் கெடுகின்றவர்கள் வேறு யாருமல்ல..!? எமது மக்கள்தான்.

இவர்களுக்கு எதிர்கால அரசியல் ஞானம் என்பது அறவே கிடையாது. அதெல்லாம் இதுகளுக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரி. அன்று முதல் இந்தத் தந்திரிகள் விதைத்தவற்றின் விளைச்சலைத்தான், இன்றைய நவீன கால முள்ளிவாய்க்காலில் வைத்து, சிறிலங்காப் பாசிச அரசுடன் கூட்டுச் சேர்ந்த அனைவரும் அறுத்துப் போட்டார்கள். அன்று அதனை விதைத்தோரும், இன்று இதனை அறுத்தோரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்க..! இதில் அறுபட்ட அப்பாவி மக்களின் – போராளிகளின் நிலை..? அவர்கள் இவர்களால் இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட மொழிபேசும் மிருகங்களாகிப் போயினர்.

இப்படித் தான், நாமெல்லாம் யானை கட்டிச் சூடடித்த இனமென்றும், அதைவிட கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்த குடியென்றும், இந்தத் தறுதலைத் தந்திரிகள் மேடைபோட்டு (மேடைச் செலவு அடியாருக்குரியது) மார் தட்டிச் சொன்னார்கள். அதைக் கேட்ட மகிழ்ச்சியால் நம்பிக் கெட்ட எமது இனத்தின் மீது, பல நாட்டு யானைகள் ஒன்றாகச் சேர்ந்து ஏறியிருந்து சூடடித்துவிட்டது. அந்த வேளையில் இந்தத் ‘தமிழ்க் குறுந்தேசிய ஆதிகால ~கல்வாள்’ வெட்ட முடியாமல் நொருங்கிப்போனது. அந்த வாள் ‘வருமுன் காப்போன்” என்ற அறிவாற்றல் மிக்க அரசியலோடு இருந்திருந்தால்..? நிச்சயமாக அது தன்னை முற்கூட்டியே கூர்மையாக்கியிருக்கும். ஆனால் அவை அந்த இரும்புக் காலத்துக்கும் முற்பட்ட ‘கல்வாள்” என்பதால், அவை ‘தமிழ்க் குறுந்தேசியம்” என்ற திருகுதாள மாயைக்குள் மாட்டிக் கொண்டன. இறுதியில் தமக்கு மட்டும் தேவையான நீரும் – நெருப்பும் – மண்ணும் – காற்றும் – வெளியுமாகிய ஐம்பெரும் பூதங்களை காப்பதே அவர்களுக்கு முக்கியமாகியது. அதற்காக சொந்த மக்களின் மரண ஓலங்களே அவர்களின் அடிநாதமாகியது. இவர்களே எமது மக்களின் ‘ஆயுத அணிகலன் பூண்ட தந்திரிகள்.”

இதற்குள் தான், உழைப்புக்கு வழியற்ற பிச்சைக்காரர் – மனநோயால் தெருக்களில் அலைந்த எத்தனையோ பேரை கொன்று புதைத்த, …? விபரங்களும், தன் சொந்த இனத் தோழரினை வம்பிலே பிறந்ததாக, தூய தமிழான ‘தமிழ்க் குறுந்தேசிய” தூசணங்களால் பேசிப்பேசி சுட்டுத் தொலைத்த, தான் தின்ற வீட்டுச் சட்டிக்குள் பீச்சியடித்த ‘சுய தமிழின அழிப்பு” அத்தனைக்குமான பதிவுகளாக, மக்களாகிய நாமே உள்ளோம்.

தற்போது எமது மண்ணில் பிச்சைக்காரர் – மனநோயாளர் – காட்டிக் கொடுத்தோர் – துரோகியர் எனவும், கல்வியாளர் – சிந்தனையாளர் – சமூகப் பற்றாளர் என்றோரில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் களைந்து சுட்டதில், ஓர் சுத்தமான – சுதந்திரமான ‘தமிழ்க் குறுந்தேசியத் தமிழீழம் என்ற நாடு” அப்படியே புடம் போட்ட பொன்னாக, இந்திய வடிகாலுக்குள் பளபளத்து மின்னுகின்றது..!?

இப்படி இந்த தமிழ்க் குறுந் தேசியத் தந்திரிகள் ‘மகாவம்ச” புரட்டுகளை விடவும், தமது ‘புலிவம்ச” புரட்டுகளை தொடர்ச்சியாக எமது மக்களிடம் முடுக்கி விட்டனர். அதற்காக எத்தனையோ கோயபல்சுகளை உருவாக்கினர். இச் சந்தர்ப்பத்தை பாவித்து, சிலபலர் புலிச் சாமியார்களாக உருவெடுத்து, மக்களை கதையால் மயக்கி, சமூக அரசியல் சீரழிவுகளை செய்தனர் – செய்கின்றனர்.

இப்படி இறுதியில் வெள்ளைக் கொடியேந்திய ‘புலிவம்சத் தந்திரிகள்” வரையாக, உலக நாட்டுத் தெருக்களில் புலிகளை விடுதலை செய்யக் அதன் கொடி பிடித்த அத்தனை பேர்களும், அந்தக் குறுந் தேசியப் போராட்டத்தின் உள்ளார்ந்த – சொந்த இன அழிப்புக்கான அடிப்படையை புரிந்துகொள்ளவேயில்லை.

இதில் சிறிலங்கா பாசிச அரசின் தமிழின அழிப்பில் ‘முள்ளிவாய்க்கால்” என்பது, ஓர் புள்ளி மட்டுந்தான். இன்னும்.., இதை விடவும், இலங்கையின் பாசிச வலுவைக் கொண்ட அரசின் கபடத்தன ஆற்றலால், பௌத்தமற்ற ஏனைய தேசிய இனங்கள் மீதான திட்டமிட்ட அழிப்புகள் தொடரும். இதற்காகவே இந்தப் பாசிச அரசின் துணைப் படைகள் அனைத்து இடங்களிலும் பரவி நிற்கின்றது. இந்தப் படைகளுக்குப் பொறுப்பு வகிக்கின்ற அதிகாரிகளில் பலர், நடந்து முடிந்த ‘சிறிலங்கா – தமிழீழம்;” என எதிர்முனை கட்டிய ‘தமிழ்த் தேசிய இன அழிப்பு” யுத்தத்தில், வக்கிரங்களை மக்கள் மீது செய்தவர்களாகும். இவற்றை எதிர்த்து, மக்களைக் காக்க முடியாத – திட்டமிட்ட பாசிசக் குடியேற்றங்களையாவது நிறுத்த முடியாத, இந்த ‘தமிழ்க் குறுந் தேசியத் தந்திரிகள்” எப்போதுமே எமது மக்களுக்கு ஒரே வேளையில் ‘இருதோணி”யில் பயணப்படுங்களென மாற்றுவழி காட்டுபவர்களாகும். இதனாலேயே இந்தத் ‘தந்திரிகள்” அரச பாசிசத்தின் தானைத் தலைவனான மகிந்தவின் காட்டுத் தர்பாரில், கூட்டமைத்துக் கூத்தடிக்கின்றனர்.

‘மக்களே..! தந்திரிகளாகிய நாம், இதுவரை காலமும் தங்களுக்கு காட்டிய அரசியல் வழி பிழையானது. தற்போது நாம் ‘முள்ளிவாய்க்கால்” அழிவிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களினால் எழுதப்பட்ட புதிய அரசியல் விஞ்ஞாபனத்தினை, தங்களுக்கு முன்வைத்துள்ளோம். இதனை அனைவரும் விமர்சியுங்கள். தங்களின் விமர்சினத்தினால், மக்களுக்கான அரசியலை – மக்களுக்காக – மக்கள் மூலமாக நடைமுறைப்படுத்துவோம். இதுவரை காலமும் எம்மால் நடாத்தப்பட்ட, அரசியல் ரீதியான வரலாற்றுத் தவறுகளை தொடர்வதற்கு இனியும் நாம் விரும்பவில்லை.” இப்படி இதுவரை எந்தக் குறுந்தேசிய வாதிகளாவது தமது மனந்திறந்து அறிக்கை வெளியிட்டார்களா..?

1929ஆம் ஆண்டான அந்தக் காலத்தில், ஆங்கிலேயக் காலனித்துவ அரசியல் அமைப்பில், ‘தமிழருக்குள் தமிழரால், பண்டைத் தொழில் – இந்துமதக் கட்டமைப்பால், சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மழுங்கடிப்பை மாற்றி அமைக்க, டொனமூர் கமி~ன் தமது முன்மொழிவுகளை முன்வைத்தது. அந்த மொழிவுகளை ஏற்றால்..! அவை சிறுபான்மை மக்களின் மரணத்துக்கு சமானம்..!? என, முன்னெச்சரிக்கை செய்த சேர். பொன். இராமநாதன் என்ற தந்திரி, அந்த மொழிவுகளை தடுப்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்றாராம். அந்த வேளையில், இலங்கையின் ‘ஏனைய தமிழ்த் தந்திரிகள்” அந்தக் கமி~னின் முன்மொழிவுகள் விடயமாக முடிவெடுக்க ஒரு கூட்டம் போட்டனராம். அதில் சிந்திக்கத் தெரிந்த சில மனிதர்கள், அந்த முன்மொழிவுகளை ஏற்பதுதான் சரி என்று தீர்மானித்தனராம். அவ்வளவுதான், அக்கூட்டத்துக்கு காலந்தாழ்த்தி வந்து சேர்ந்த ‘தமிழ்க் குறுந்தேசிய – காங்கிரசு” தந்திரியான 50-50 ஜீ.ஜீ.பொன்னம்பலம், அத்தீர்மானத்தின் மீது ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தாராம். அதாவது டொனமூர் கமிஷனின் சிபார்சுகளை ஏற்கக்கூடாது என்பதுதான் அது.

அன்றைய இலங்கையின் சமூக அறிவியல் சூழலில், ‘கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி தடையாய் நிற்பானாம்” என்பதுபோல, ஒரு தந்திரி இங்கிலாந்துக்கு ஓடுகின்றான். மற்றத் தந்திரி இங்கிலாந்தில் படித்து வந்த கையோடு தனது சொந்த நாட்டின் ‘ஏழை” மக்களை தொடர்ந்தும் அடிமையாக்கி, பொது அறிவியலற்ற மந்தைக் கூட்டமாக ஆக்கிவைக்க துடியாய்த் துடித்திருக்கின்றான். இப்படியான ‘குறுந் தமிழ்த்தேசிய” தமிழ்த் தந்திரிகளின் பெயர்கள் எமது வரலாற்றுப் பதிவில் நிறையவே உண்டு. இவர்களை நாம் அனைவரும் வரலாற்று ரீதியாக, அறிவாற்றலுடன் பகுப்பாய்வு செய்து, இப்படியான ‘சாதி – சமய – இன வெறி”த் தந்திரிகளின் பெயர்களை பெரிதாக எழுதி..!?

ஆம், ஆண்டுதோறும் ‘தமிழ்க் குறுந்தேசிய துக்கதினம்” என்ற ஓர் நாளைத் தெரிவுசெய்து, அதில் இவர்களின் வரலாற்றுத் துன்பவியல்களை விமர்சிக்கவேண்டும். அந்த நாளை மக்களே தீர்மானிக்கவேண்டும். அதற்காக அனைவரும் கடந்தகால உண்மை வரலாறுகளை கற்றாயவேண்டும். அத்துடன், தமிழருக்குள் தமிழர் எப்படிப் பிரிக்கப்பட்டனர், சாதி – சமயம் என்பதெல்லாம் உண்மையானதா..? அவை சரிதானா..? இப்படி அறிவியலான கேள்விகளை கேட்கவேண்டும்.

சாதிய அமைப்பு முறையானது, சங்கிலியன், ஆறுமுகநாவலர், இராமநாதன், அருணாசலம், பொன்னம்பலம், சுந்தரலிங்கம் இப்படியான எத்தனையோ தந்திரிகளால் ஊருக்கூர் அழியாது பார்க்கப்பட்டன. தமிழ் பேசும் ஒரே இன – மத மக்களுக்கான சுயவாழ்வை மறுத்த இந்தத் தந்திரிகளின் குறுந்தேசிய அரசியல்..!? இன்று பாசிச தேசியத்திடமிருந்து சுதந்திரம் – விடுதலை – தனிநாடு – சுயநிர்ணய உரிமை என ஏதேதோ கேட்கின்றது. இதற்குள் இந்தச் சுய நிர்ணய உரிமைக்கும், தமிழ்க் குறுந்தேசிய அரசியலுக்குமான உறவு என்பது, மொட்டந்தலைக்கும் முழங்காலுக்குமானது. சரி இந்தத் தந்திரிகள் இப்படியான கோரிக்கைகளை முன்வைக்கும்போது, தமதினத்துக்குள் தாங்கள் சாதிய ரீதியாக அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் மக்களின் ‘சுய நிர்ணய உரிமை” பற்றி எப்போதாவது சிந்தித்திருப்பார்களா..!?

ஐயோ..! எமது மக்களை கொத்தணிக் குண்டெறிந்து – விசவாயு அடிச்சு கொல்கிறார்கள். இவை மனிதாபிமானமற்ற செயல். ஒரு நாட்டுக்குள் தமிழ் இனத்தின் மீது செய்யும் துரோகம்.

சர்வதேசமே..!? இதனை நிறுத்த ஆவன செய். என கூக்குரலிட்டவர்கள் இந்த குறுந்தேசிய அரசியல் தந்திரிகள்தான். அதே வேளையில், இந்தத் தந்திரிகள் உதவிகோரிய நாடுகளில் பல, இவர்களின் குறுந்தேசிய அரசியலுக்கு எதிராக, அந்தக் குண்டுகளை மக்கள் மீது மழையாகப் பொழிந்து கொண்டிருந்தது என்பதுதான் உண்மை.

இந்தச் சர்வதேச நாடுகள், தாங்கள் உற்பத்தி செய்த நவீனரக குண்டுகளை, எந்தவித அனுமதிகளுக்கும் – எதிர்வுகளுக்கும் அப்பால், தடைகளற்ற ஆயுதப் பரீட்சார்த்தத்தை மிகவும் இலகுவாக நடாத்தின.

இன்று என்னவென்றால்..? இலங்கைப் பாசிச அரசியலாலும் – தமது குறுந்தேசிய அரசியலாலும் – சர்வதேச ஆயுதப் பரீட்சார்த்தத்தாலும் ஏதுமே வன்னியில் நடக்கவில்லை.!? எதிரணி இராணுவத்தில் சிலர் செய்த ‘யுத்த மீறல் குற்றங்களை” ஆய்வு செய்து அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் என, இந்தத் தந்திரிகள் ‘சர்வதேச போரியல் குற்றவாளிகளை நீதிபதிகள் என ஆக்குகின்றார்கள்.”

இதற்குள் ஒரு பகுதியினர் ஒபாமாவை தலையில் தூக்கி வைத்து சன்னதமாடுகின்றனர். இப்படி ஆடுகின்ற சாமிகள், ஈராக் – ஆப்கான் – லிபியா – பாலஸ்தீனம் .., வரை தொடர்ச்சியாக நாறடிக்கப்படுகின்ற நிகழ்வுகளுக்கு யார் காரணமென்னு சிந்திக்கத் தவறுகின்றனர்.

இதேவேளை மாபெரும் கொலைஞர் கருணாநிதியுடன் கன்னித் தெய்வம் ஜெயா அம்மாவையும், அத்தனை அடிவருடிகளையும் ‘தமிழீழ மக்களின் காவற் தெய்வங்களாக – மீட்பர்களாக இன்றைய இலங்கைத் தமிழ்த் தேசிய மக்களின் அழிப்பினை, தங்களின் சுய தேவைக்கான அரசியலாக்க, இந்த சர்வதேச அரசியல் மாபியாக்களை, எமது மக்களின் அழிவின் மீது தீர்வு வழங்குமாறு, இன்றைய கால தமிழ்த் தந்திரிகள் ஓயாத அலையாக அலைகின்றார்கள்.”

 

இதிலிந்த ‘தமிழ்க் குறுந்தேசிய – பாசிசத்துக்கு ஒப்பான துவேச அரசியலை” அடியோடு அழித்து, ‘இலங்கைத் தேசத்துக்கான பல்லினத் தேசிய அரசியல்” என்ற, மக்களின் சுய வாழ்வை வென்றெடுக்கும் நேர்மையான அரசியலை வளர்த்தெடுத்து, அதனை நிலைநாட்டும் வரை, இலங்கையின் இனங்கள் மீதான அழிப்புகள் தொடரும் என்பதே உண்மை.

- மாணிக்கம்.