Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சந்ததியார் தலைமையில் மத்தியகுழு உறுப்பினர்களின் வெளியேற்றம்

தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியின்(NLFT) ஸ்தாபகரும், அதன் மத்தியகுழு உறுப்பினருமான விசுவானந்ததேவனுக்கூடாக கண்ணாடிச்சந்திரன் விபுலுக்கு அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தேன்.

(தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியின்(NLFT) ஸ்தாபகரும் அதன் மத்தியகுழு உறுப்பினருமான விசுவானந்ததேவன்)

 

 

 

கடிதம் மிகவும் சுருக்கமானதாக இருந்தது. உமாமகேஸ்வரன் தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற மத்தியகுழுக் கூட்டத்தில் உமாமகேஸ்வரவரனைச் சுற்றி ஒரு பலமான அராஜகவாதக் கூட்டம் உருவாகியிருந்ததால், மத்தியகுழுக் கூட்டத்தில் எதுவும் பேசவோ விவாதிக்கவோ முடியாத சூழ்நிலை தோன்றியதையடுத்து மத்தியகுழுக் கூட்டத்தின் முடிவில் தாம் புளொட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக கண்ணாடிச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார். சந்ததியார், உசா, டொமினிக், காந்தன்(ரகுமான்ஜான்), காசி(ரகு), மைக்கல், அமீன், நிசாகரன் போன்றோரும் தன்னுடன் வெளியேறிவிட்டதாகவும், தமது வெளியேற்றத்தை அனுமதிக்கத் தயாரில்லாத உமாமகேஸ்வரனும் அவரைச் சுற்றியுள்ள அராஜகவாதிகளும் தம்மை கைது செய்வதற்கு சென்னை நகர் உட்பட தமிழ்நாடெங்கும் கொலைவெறியுடன் அலைந்து திரிவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

வசந்தன் என்கின்ற சந்ததியார் ( கலாதரன் - புதியதோர் உலகம் கதா பாத்திரம்)

1984 பிற்பகுதியில் உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் சங்கிலி என்ற கந்தசாமி தன்னை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று படகில் இருந்து இறங்கியவுடனேயே கைகளுக்கு விலங்கிடப்பட்டு ஒரத்தநாட்டில் இருந்த "B" காம்ப் என்ற சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு பலவாரங்களாக சங்கிலி என்ற கந்தசாமியின் மேற்பார்வையில் முட்டாள்மூர்த்தி, குகன், ஆச்சிராஜன் போன்றோரால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

"B" காம்ப்பில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளின் போது “பெரியய்யாவுக்கு(உமாமகேஸ்வரன்) எதிராகவா தளத்தில் வேலை செய்கிறாய்?"; “ சந்ததியாருக்கும் உனக்கும் என்ன தொடர்பு?" போன்ற கேள்விகளையே தொடர்ந்து கேட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் எம்மை எந்த முடிவானாலும் சுதந்திரமாக மேற்கொள்ளுமாறும், நாம் கருதியிருந்ததுபோல் புளொட்டின் தலைமை ஒரு முற்போக்கானதோ, புரட்சிகரமானதோ அல்ல என்றும் குறிப்பிட்டிருந்த கண்ணாடிச்சந்திரன் எந்தக் காரணம் கொண்டும் இந்தியாவுக்கு சென்றுவிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நான் கடிதத்தைப் படித்து முடித்திருந்தபோது இத்தகைய ஒரு தலைமையை உருவாக்கி விடத்தானா இவ்வளவுகாலமும் பலரின் உயிர்த்தியாகங்களுக்கு மத்தியிலும், அர்ப்பணிப்புகளுக்கு மத்தியிலும், கடின உழைப்புக்கு மத்தியிலும் புளொட் கட்டிவளர்க்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இந்தியாவிலிருந்து கண்ணாடிச்சந்திரனால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதமும், விஜயன், பாண்டி ஆகியோர் எமது தலைமை பற்றி தெரிவித்திருந்த தகவல்களும் எத்திசை நோக்கி தலைமை சென்று கொண்டிருக்கின்றது என்பதை கேள்விக்கிடமின்றி தெளிவுபடுத்தியிருந்தது.

இப்பொழுது எம்முன் இருந்த பிரச்சனை ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியாவுக்கு அனுப்புவதிலிருந்து தவிர்ப்பதென்பதாக இருந்ததோடு அதுவொன்றும் இலகுவான விடயம் அல்ல என்பதும் தெரிந்திருந்தது. தளத்தில் புளொட்டினுடைய வளர்ச்சி, இந்தியாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்களால் இராணுவப்பிரிவு ஓரளவு பலம் பெற்ற நிலை போன்றவையும் நாம் புரட்சிகர அமைப்பு என்று கூறப்பட்ட புளொட்டில் புரட்சிகர நடைமுறை என்பதற்கே இடமில்லை என்றானதோடு, உமாமகேஸ்வரனினதும் அவரால் ஊட்டி வளர்க்கப்பட்ட உளவுப்பிரிவினரதும் அராஜகம் அதன் உச்சநிலையை அடைந்துவிட்டிருந்த நிலையில் எப்படி இந்த விடயத்தை கையாள்வது என்பது மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாக இருந்தது.

உமாமகேஸ்வரன் உள்நோக்கமும் கபடத்தனமும் கொண்டு ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியாவுக்கு அழைப்பது உடுவில் சிவனேஸ்வரனுக்கு ஏற்பட்ட கதியையே ஏற்படுத்தும் என்பதில் எனக்கு ஐயமேதுமிருக்கவில்லை. எனவே நீண்டகாலமாக புளொட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களான ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியாவுக்கு அனுப்பி புளொட்டின் சித்திரவதைமுகாமில் பலிகொடுக்க நான் விரும்பவில்லை.

விபுலும் நானும் பல்வேறு கோணங்களிலிருந்து பிரச்சனையை அணுகிப் பார்த்தோம். அத்துடன் இந்த விடயத்தை ஜீவனுக்கும், சிவானந்திக்கும் உடனே தெரியப்படுத்தி அவர்களின் கருத்துக்களையும் பெற்றபின் ஒரு முடிவுக்கு வரலாம் என்றிருந்தோம். விபுலும் நானும் சனசமூகநிலையத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜீவன் சனசமூகநிலையத்துக்கு வந்துசேர்ந்தார்.

உமாமகேஸ்வரனிடமிருந்து வந்த தகவலை சின்னமென்டிஸ் என்னிடம் தெரிவித்துவிட்டு திரும்பும் வழியில் ஜீவனைச் சந்தித்ததாகவும் உடனடியாக இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென்று சின்னமென்டிஸ் தன்னிடம் கூறியதாகவும் ஜீவன் எம்மிடம் தெரிவித்தார். தன்னிடமிருக்கும் ஆவணங்களை ஒழுங்குபடுத்தி கையளித்துச் செல்வதற்கு தனக்கு காலஅவகாசம் வேண்டும் என்று சின்னமெண்டிஸுக்கு பதிலளித்ததாக ஜீவன் கூறினார். இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை யாழ்பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர்களை ஒன்றிணைத்து எம்மால் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழுவில் அங்கம் வகித்தவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த வருமான ஜீவனின் மிகவும் நெருங்கிய நண்பரிடம் ஜீவன் தெரிவிக்கச் சென்றபோது, அந்த நண்பரிடம் ஜீவனுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் காத்திருந்தது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியுமான மகளீர் அமைப்பை சேர்ந்தவருமான சத்தியா, சிலமணி நேரங்களுக்கு முன் திருநெல்வேலியைச் சேர்ந்த யாழ்பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவனான ஜீவனின் நண்பரைச் சந்தித்துப் பேசியபோது “ஜீவன், நேசன் போன்றோருடன் தொடர்புக வைத்துக்கொள்ள வேண்டாம்; அது உங்களுக்குப் பிரச்சனையாக வரும்" என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்தத் தகவலை ஜீவனைச் சந்தித்தவுடன் ஜீவனின் நண்பனான திருநெல்வேலியைச் சேர்ந்த மருத்துவபீட மாணவன் தெரிவித்திருந்ததோடு புளொட் தலைமையினுடைய இத்தகைய போக்கு தவறானதென்றும் இத்தகைய மோசமான அமைப்பை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கடும்கோபத்துடன் தெரிவித்திருந்தார்.

நிலைமைகள் அனைத்தும் முன்பையும் விட மிகத்தெளிவாக எமக்குத் தெரியவரத் தொடங்கின. இந்தியாவிலிருந்து வந்திருந்த விஜயனாலும் பாண்டியாலும் கூறப்பட்டவை அனைத்தும், கண்ணாடிச்சந்திரனால் விபுலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த அனைத்தும் எவ்வளவு உண்மையானவை என்பதை நாம் இப்போது எமது நேரடி அனுபவத்தில் முகம் கொடுக்கத் தொடங்கியிருந்தோம். இந்தியாவில் பயிற்சிமுகாம்களை வதைமுகாம்களாக்கி, விடுதலைப் போராட்டத்திற்காக எம்முடன் இணைந்து செயற்பட்ட பலரை சித்திரவதைகளுக்கும் கொடுமைககளுக்கும் உள்ளாக்கியதோடு, அவர்களை படுகொலை செய்த உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்படையும் இப்பொழுது அத்தகைய செயற்பாடுகளை தளத்தில் எமது அமைப்புக்குள், அதுவும் அமைப்பின் வளர்ச்சிக்காக பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் முழுநேரமாக செயற்பட்டவர்களை, இந்தியா கொண்டு சென்று சித்திரவதை செய்து கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

ஜீவனும், விபுலும், நானும் சனசமூகநிலையத்திலிருந்து அடுத்து என்ன செய்வது என்பது பற்றிப் பேசினோம். ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோர் இந்தியாவுக்கு செல்வது என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்பது மட்டும்தான் தெளிவாகத் தெரிந்தது. இதனால் ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியாவிற்கு அனுப்பிவைப்பதில்லை என்றும் இது குறித்து சிவானந்திக்கு தெரியப்படுத்தி நாம் இதுவரை அங்கம் வகித்த புளொட் என்ற அமைப்பிலிருந்து வெளியேறி புளொட்டை அம்பலப்படுத்துவதென்றும் முடிவெடுத்தோம். ஆனால், இது ஒரு இலகுவான காரியமல்ல என்பதையும், தனது பிற்போக்குத் தலைமையைக் காப்பாற்றுவதற்காக கொடூரத்தனத்துடனும் கொலைவெறியுடனும் அலைந்து திரியும், நன்கு ஆயுதம் தரித்த, தம்மை விடுதலைப்போராளிகள் என்று நாகூசாமல் அழைத்துக்கொள்கின்ற ஒரு குழுவுடனான கடுமையான போராட்டத்துக்கூடாகத்தான் நடக்கவேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டோம்.

நாம் புளொட்டிலிருந்து வெளியேறினால் எம்முடன் நெருக்கமாக மக்கள்அமைப்பில் செயற்பட்டவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படும் எனக் கருதியதால் எமது வெளியேற்றம் குறித்து அவர்களுக்கு தெரிவித்தோம். இதில் சிலர் தாமும் எம்முடன் சேர்ந்து வெளியேறுவதாகத் தெரிவித்தனர். ஆனால் இப்பொழுது பல கேள்விகள் எம்முன் எழுந்தன. எப்படி வெளியேறுவது? எங்கு செல்வது? அராஜகவாதிகளிடமிருந்து எப்படி எம்மைப் பாதுகாப்பது? எத்தகைய முடிவையும் மூன்று நாட்களுக்குள் எடுத்தாக வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கு ஏற்கனவே புளொட்டிலிருந்து வெளியேறி இருப்பவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்தலாம் என ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் மரபுவழி சிந்தனையில் செயற்பட்டோம்.

இலங்கை அரச படைகளால் தேடப்பட்டவுடன் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து மரபாக இருந்து வந்தது . எனவே நாம் இந்தியாவுக்கு செல்வதென்றால் யாருடைய உதவியுடன் செல்வது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் ஈரோஸுடனும் பேசி அவர்களின் உதவியுடன் இந்தியா செல்லலாம் என முடிவெடுத்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் விபுலும் நானும் பேசுவதென்றும், ஜீவனும் பாலாவும் ஈரோஸ் அமைப்புடன் பேசுவதென்றும் முடிவெடுத்து சனசமூகநிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றோம்.

சனசமூகநிலையத்துக்கு முன் மகளீர்அமைப்பை சேர்ந்தவர்களுடன் இன்னமும் சத்தியா பேசிக்கொண்டிருந்தார். இடையிடையே மகளீர்அமைப்பை சேர்ந்த ஜென்னி, செல்வி, நந்தா, வனிதா, ரீட்டா, சுந்தரி போன்றோர் வந்து சென்று கொண்டிருந்தனர். சின்னமென்டிஸிடம் மூன்று நாட்களில் ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியாவுக்கு அனுப்புவதாக கூறியிருந்தேன். அதில் ஒருநாள் முடிவடைந்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளை சந்திக்கும் முகமாக விபுலும் நானும் அவர்கள் இரவில் பாதுகாப்பாக தங்கிவிட்டு காலையில் புறப்பட்டு வரும் வீதியில் எதிர்பார்த்து நின்றோம். மோட்டார்சைக்கிளில் வந்த கிட்டுவையும் திலீபனையும் இடைமறித்த நாம் அவர்களுடன் பேசவேண்டும் எனக்கூறினோம். சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலை எம்மவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது கிட்டுவும் திலீபனும் பல தடவைகள் எம்மிடம் வந்து பேசியிருந்தனர். ஆனால் கிட்டுவும் திலீபனும் எமது பதில்களில் எள்ளளவும் திருப்தி அடைந்திருக்கவில்லை. சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு அப்படுகொலைகள் எமது இராணுவப் பிரிவின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரியவந்த பின் எமக்கிடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

சுந்தரம் படுகொலையும் இறைகுமாரன் உமைகுமாரன் படுகொலைகளும் தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எமக்கும் இடையில் ஏற்படுத்தியிருந்த முறுகல்நிலையை 1983 நடுப்பகுதியில் யாழ்பல்கலைக்கழகத்துக்குள் எமது அமைப்பிற்காக செயற்பட்டுக் கொண்டிருந்த கேதீஸ்வரன், ஜோதி போன்றோர் யாழ்பல்கலைக்கழகத்துக்குள் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் இரு அமைப்புகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்கள் நடைமுறைகளில் நாம் உடன்பாடானாவர்களாக இல்லாதிருந்தபோதும் கூட ஒரு குறைந்த பட்ச புரிந்துணர்வுடன் செயற்பட்டு கொண்டிருந்தோம். நிர்வாகப் பொறுப்பேற்று தளம் வந்திருந்த டொமினிக்கை கண்ணாடிச்சந்திரனும் முல்லைத்தீவு பொறுப்பாளர் வரதனும் முல்லைத்தீவுக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தபோது வட்டுவாகல் பகுதியில் அவர்கள் பயணித்த வாகனம் வெள்ளத்தில் புதையுண்டது. அருகில் எதுவித உதவியுமின்றி மூவரும் இருந்த நிலையில் இத் தகவலை அறிந்துகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்தையாவின் உத்தரவின் பேரில் புதையுண்ட வாகனத்தை மீட்டெடுத்துக் கொடுத்து தளத்தில் எமக்கிடையே நிலவிவந்த பரஸ்பர புரிந்துணர்வையும் நட்புறவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலை ஆறாதவடுவை தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் ஏற்படுத்தி இருந்ததோடு எமது இரு அமைப்புகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் நிலையை ஏற்படுத்தி எமக்கிடையில் முரண்பாடுகளையும் தோற்றிவிட்டிருந்தது. இருந்தபோதும் கிட்டுவும் திலீபனும் எம்முடன் பேசினர். நாம் எமது நிலைமையை மிகவும் தெளிவாக அவர்களுக்கு எடுத்து கூறினோம். புளொட்டினுள் அராஜகம் ஓங்கி வளந்துவிட்டது என்பதையும், அந்த அராஜகப்போக்குகளுடன் நாம் உடன்பாடானவர்கள் அல்ல என்பதையும், நாம் புளொட்டில் இருந்து வெளியேறி இந்தியா செல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டு இந்தியா செல்ல எமக்கு உதவி செய்ய முடியுமா எனவும் கேட்டோம். இருவரினது கண்களிலும் ஆச்சரியம் மேலிட எம்மை உற்று நோக்கினர். அவர்களை இருவராலும் நாம் சொன்ன விடயத்தை ஜீரணிக்க முடியவில்லை.

சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலைபோல் அடுத்த சதிக்கான ஒத்திகையோ என எண்ணினார்களோ என்னவோ உண்மையாகவே உங்களுக்குள் பிரச்சனைதானா எனக் கேள்வி எழுப்பினர். எமது உண்மை நிலை இதுதான்; நீங்கள் விரும்பினால் எங்களுக்கு இரண்டு நாட்களுக்குள் உதவி செய்ய வேண்டும் என்று கிட்டுவையும் திலீபனையும் கேட்டுக் கொண்டோம்.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24