08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

கொழும்பு நகரவாசிகளின் நிலத்தை ஆக்கிரமிக்கும் யுத்தம் தொடங்க உள்ளது

இன யுத்தத்தை நடத்திய அதே இராணுவக் கட்டமைப்பு மூலம், கொழும்பு வாழ் மக்களிடமிருந்து நிலத்தை அரசு அபகரிக்கும் திட்டம் தயாராகின்றது. இதை மகிந்தாவின் தம்பி கோத்தபாய முன்னின்று வழி நடத்துகின்றார். கொழும்பு வாழ் மக்களிடம் இருந்து நிலத்தை ஆக்கிரமிக்கும் இன்னுமொரு யுத்தம், மிகவிரைவில் இலங்கையில் தொடங்க இருக்கின்றது. இந்த நில ஆக்கிரமிப்பை மூடிமறைக்க, நவீன வீடுகள் மூலம் அந்த மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கோத்தபாயவின் அறிவிப்பு வேறு வெளிவந்திருக்கின்றது. இதன் பின்னணியைப் புரிந்துகொள்ள, இனவழிப்பு யுத்தத்தின் பின்னான சூழலை புரிந்து கொள்வது அவசியம்.

 

 

 

யுத்தத்தின் மூலம், புலியழிப்பின் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று கூறி, இனவழிப்பு யுத்தத்தை நடத்தியதன் மூலம் மக்கள் சொத்துகளை வகைதொகையின்றி அழித்தவர்கள், அவர்களை அகதியாக்கி திறந்தவெளிச் சிறைகளில் அடைத்தனர். இதன் மூலம் அந்த மக்களின் சொந்த வாழ்விடத்தை ஆக்கிரமிக்க, தொடர் குடியிருப்புகளை அமைக்கவுள்ளதாக அறிவித்ததுடன், வன்னி நிலத்தை இந்திய விவசாய விஞ்ஞானிகள் வரை பார்வையிட்டனர். இதற்கிடையில் ஏகாதிபத்திய முரண்பாடுகள் சார்ந்து அரசுக்கும் மேற்குக்குமான முறுகல், இந்த நில அபகரிப்பு திட்டத்தை தகர்த்தது. திறந்தவெளிச் சிறையில் தொடர்ந்து மக்களை வைத்திருக்க முடியாத வண்ணம், சர்வதேச தலையீடுகளும், அது ஏற்படுத்திய நெருக்கடிகளும் அவர்களது முந்தைய சதித்திட்டத்தை கைவிடவைத்தது. இதனால் மீள் குடியேற்றம் என்று கூறி, அந்த மக்களை அநாதரவாக கிராமங்களில் கொண்டு சென்று இறக்கி விட்டனர். எதையெல்லாம் தாங்கள் முன்னின்று அழித்தனரோ, அதை மீள் கட்டமைப்பு செய்யாது, எந்த வாழ்வாதாரமுமற்ற வண்ணம் பரதேசிகளாக கிராமங்களில் கொண்டு சென்று அநாதரவாக மக்களை விட்டனர். இதையே புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் என்று கூறினர். பணமுள்ளவனுக்கு மறுவாழ்வு அழிக்கும் திட்டத்தை முன்வைத்தது. பணமுள்ளவன் முதலிட்டு அதைக் காட்டுவதன் மூலம், அரசு சாராத நிதியைப் பெற முடியும் என்ற எல்லைக்குள் தான், அரசு மீள் குடியேற்றத்தை அமுல்படுத்தியுள்ளது. அதேநேரம் தொடர்ந்து இராணுவத்தை பலப்படுத்தி நவீனமாக்கும் பணத்தில் ஒரு துளிதன்னும், மீள் குடியேற்றத்தில் பயன்படுத்தப்படவில்லை.

இன்று இதே உத்தி தான் கொழும்பு வாழ் மக்களின் நிலத்தை அபகரிக்கும் தன் சதித் திட்டத்தில் மீளக் கையாள முனைகின்றது. நவீன தொடர்மாடி வீட்டுத் திட்டம் மூலம் நிலத்தை கையகப்படுத்தும் அரசின் சதி, சேர்pப்புறங்களை அகற்றுதல் என்ற போர்வையில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இங்கு சேரி என்பதற்கான வரைவிலக்கணம் எதுவும் கிடையாது. எந்த நிலம், நில மாபியாக்களுக்குத் தேவையோ, எது சந்தையில் அதிக விலையாகின்றதோ, அது சேரியாகிவிடும். இதுதான் நிலப்பறிப்யை நடத்தவுள்ள அரசின் கொள்கை. இப்படி பறிபோகவுள்ள பிரதேசம் எவை என்ற விபரங்கள் கூட, வெளிப்படையற்ற தன்மையுடன் இன்று காணப்படுகின்றது.

இன்று இலங்கையில் மலையகம், கிழக்கு, வன்னி, தெற்கின் ஆழ் கிராமப் பிரதேசங்கள், சேரிகள் போன்றவைதான். ஆனால் அந்த மக்களைக் கண்டுகொள்ளாத அரசு, அதிக விலையுள்ள நிலத்தை குறிவைத்து கொழும்புச் சேரிகளை அகற்றல் என்ற பெயரில் நடத்துவது நிலக் கொள்ளை. அந்த நிலத்துக்குரிய விலையைக் கூட கொடுக்க தயாரற்ற நிலையில், மாற்று வீடு என்ற மாபியாக் கோசத்தை முன்வைக்கின்றது.

இதற்காக கட்டப்படுவதாக கூறுகின்ற, கட்டவுள்ள புதிய தொடர்மாடி வீடுகள் அங்கு வாழப்போகும் அந்த மக்களின் அபிப்பிராயங்கள் ஆலோசனைகள் இன்றியும், அவை எங்கு எப்படி நிர்மாணமாகின்றது என்று எந்த விபரமும் கிடையாது, யார் யார் எங்கிருந்து எப்போது எப்படி வெளியேற்றப்படப் போகின்றனர் என்ற விபரம் எதுவும் அந்த மக்களுக்குத் தெரியாது. ஒரு இரகசிய யுத்தம் தொடங்கிவிட்டது. மக்களுக்கு எதிரான நேரடித் தாக்குதல் தான் இன்னும் தொடங்கவில்லை. இனவழிப்பு யுத்தத்தை நடத்திய அதே கும்பல், அதே பாணியில் இரகசிய சதிகளில் இன்று இறங்கியிருக்கின்றது.

புதிய குடியேற்றம் செய்யும் வாழ்விடம் தங்கள் தொழிலுக்கும் ஏற்ற இடமாக இருக்குமா என்று எதுவும் தெரியாத நிலையில், மக்களுக்கு எதிராக ஆளும் அரசு யுத்த பாணியில் நில ஆக்கிரமிக்பை நடத்தும் சொந்தச் சதியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றது.

இப்படி இரகசிய சதிகள் மூலம் வெளியேற்றி ஆக்கிரமிக்கும் நிலத்தை, யாருக்கு, எந்த நோக்கில், எதற்கு பயன்படுத்த உள்ளனர் என்பது கூட யாருக்கும் தெரியாது. யுத்த சூழலில் உருவான புதுப் பணக்காரக் கும்பல் அரசின் அதிகாரத்தில் இருந்தபடி இந்த நில ஆக்கிரமிப்பை நடத்தத் திட்டமிடுகின்றது. மக்களை ஏய்க்க நவீன வீட்டுத் திட்டம், வன்னி மற்றும் கிழக்கில் மீள் குடியேற்றத்தின் பெயரில் உலகை ஏமாற்ற நடத்திய அதே மோசடியை அடிப்படையாகக் கொண்டது. இரண்டையும் ஒரே அரசு, ஒரே குழு, ஒரே பாணியில் தான் திட்டமிடுகின்றது.

உலகம் தளுவிய அளவில் நில ஆக்கிரமிப்பு என்பது புதுப் பணக்கார மாபியாத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசுடன் சேர்ந்து சட்டங்களை வளைத்தும், திருத்தியும், அரச பயங்கரவாதம் மூலம் மக்களின் குடியிருப்பு நிலத்தைப் பிடுங்குகின்றது. இந்த வகையில் சர்வதேசரீதியான இந்த நிலச் சூதாட்டத்தை, இலங்கையில் யுத்தக் குற்றக் கும்பல் தலைமையில் தொடங்கி இருக்கின்றது. யுத்தத்தின் மூலம் புதுப் பணக்காரராக உருவாகிய குற்றக் கூட்டம், நில ஆக்கிரமிப்பை தொடங்கி இருக்கின்றது. சட்டங்களைத் திருத்தியும், அரச பயங்கரவாதம் மூலம் மிரட்டியும் இதை அடைய முனைகின்றது.

உலகில் செல்வத்தைக் குவித்து வரும் வர்க்கம், உலகின் பல்வேறு பகுதிகளில் சொகுசான ஆடம்பரமான பாதுகாப்பான இயற்கை கொழிக்கும் இடங்களைத் தனது பொழுதுபோக்கு மையமாக்கக் கோருகின்றது. உலக வங்கி இதை இலாபம் தரும் தேசியத் தொழிலாக வழிகாட்ட, அதை உருவாக்கும் வண்ணம் அரசுகள் செயல்படுகின்றது. இதன் பின்னணியில் உருவாகும் புதுப் பணக்கார நில மாபியாக்கள் பல்வேறு வழிகளில் நிலங்களை ஆக்கிரமித்து, அதை உலக பணக்காரக் கும்பலுக்கு மீள விற்கின்றனர். இலங்கையில் யுத்தம் மூலம் உருவான புதுப் பணக்காரக் குற்றக் கும்பல், இதற்கு இன்று தலைமை தாங்குகின்றது. ஆக யுத்தம் நகர்புற மக்களுக்கு எதிராக விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால் அதை உணராத நிலையில் எந்த விழிப்புணர்வுமின்றி மக்கள் உள்ளனர்.

 

பி.இரயாகரன்

02.10.2011


பி.இரயாகரன் - சமர்