Language Selection

வெறுகுடிலில் தனிமையில்

அருகணைத்துக் கிடக்கும் குழந்தைகளால்

எரியும் உணர்வுகள் பொறியடங்கிக் கிடக்கிறது

கொடும் அரக்கர்

நந்திக் கடலில் குடித்த இரத்தமும்

வெறிகொண்டு ஆடிய பேய்களும்

உயிர் குடிக்க அலைகிறது

பேயரசு ஆட்சியில் —வேறெது உலாவும்

 

 

 

பேயரசாட்சியின் நீட்சிக்காய்

எலி வளைக்குள் கிடந்த பூதங்கள்

இரை தேடி அலையத் தொடங்கியிருக்கின்றன

விடிகாலைப் பொழுதுள்

கோத்தாபாய மடியுள் போய் உறங்குகின்றன

வெடியோசை அதிர்வுகள்

செவிப்பறையை விட்டகலா மண்ணில்

ஒரு பொழுதேனும்

அயர்ந்து தூங்கமுடியா அவலம்

பேயரசு ஆட்சியில் —வேறெது உலாவும்

மகிந்தவின் தந்திரம்

மக்கள் சுதந்திரம் பெற்றதாய்

போரினுள் சிதைந்து புண்ணான இதயங்கள்

மகிந்தப் பேய்களை விரட்ட

இராணுவ அரணினுள் மறைகிறது

நாட்டுச் சட்டம்

இராஜபக்ச குடும்பத்து சொத்து

இராணுவத்தின் சொத்து

இந்தியா சீனாவின் சொத்து

ஏன் எல்லா ஏகாதிபத்தியங்களின் சொத்து

மக்கள் திரள் எதிர்த்தெழும்போது மட்டும்

சட்டத்தை கையில் எடுத்ததாய்

பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது

பீதியில் வைத்திருக்க இராணுவப் பூதங்கள் மிரட்டுகிறது

பேயரசு ஆட்சியில் —வேறெது உலாவும்

மக்கள் அணிக்கு தலைமை பிறக்கும்

மானுட மீட்சியின் கதவுகள் திறக்கும்

அடக்க அடக்க வெடித்துக் கிளம்பும்

மக்கள் அரசை நோக்கி நகர்வு செல்லும்

பேரழிவை கண்ட எம்சனங்கள் கொதிக்கும்

பெரும் புயலாய் மாறும் பேய்கள் மிரளும்!

கங்கா

26/08/2011