Language Selection

புளொட்டில் இருந்து வெளியேறி தலைமறைவானோம்

புளொட்டில் இருந்து வெளியேறி இந்தியா செல்வதற்கு உதவி செய்யுமாறு கிட்டுவையும் திலீபனையும் நாம் கேட்டதற்கு என்ன பதிலளிப்பது என்று தடுமாற்றமுற்றவர்களாகக் காணப்பட்ட கிட்டுவும் திலீபனும் ஒருகணம் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினர். சிறிது நேர மௌனத்தின் பின் விபுலையும் என்னையும் ஒருவகை அனுதாபத்துடனும், அதேவேளை சிறிது ஐயத்துடனும் பார்த்தவாறு கிட்டுவும் திலீபனும் பேசத்தொடங்கினர். இந்தியா செல்வதற்கு உதவி செய்வது குறித்த முடிவை தம்மால் எடுக்க முடியாது எனவும், இது குறித்து தமது தலைவருடன்(வேலுப்பிள்ளை பிரபாகரன்) அன்றிரவு புத்தூர் பகுதியில் இருந்த அவர்களின் தொலைதொடர்பு மையமூடாக பேசிய பின்பே மறுநாள் முடிவு சொல்ல முடியும் எனவும் கூறினர்.

 

தலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) முடிவுடன் மறுநாள் காலை எம்மைச் சந்தித்த அதே இடத்திற்கு தாம் வருவதாகவும், எம்மை தமக்காக எதிர்பார்த்து நிற்குமாறும் கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

 

 

ஈரோஸ் அமைப்பிடம் பேசுவதற்கு சென்றிருந்த ஜீவனும் பாலாவும் ஈரோஸ் அமைப்பின் முன்னணி உறுப்பினர் கைலாசை அவர் தங்கியிருந்த அறையில் சந்தித்துப் பேசினர். எமது நிலையை பலமணி நேரமாக கைலாசுக்கு எடுத்துக்கூறி எமக்கு பாதுகாப்ப அளிக்கும்படி அல்லது நாம் இந்தியா செல்வதற்கு உதவியளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் கைலாஸ் அதற்கு சாதகமான பதில் அளிக்கவில்லை. எமக்குப் பாதுகாப்புத் தந்தால் ஈரோஸ் இயக்கத்தை புளொட் அழித்துவிடும் என்றும் அதனால் எமக்குப் பாதுகாப்பு தம்மால் அளிக்க முடியாதென்றும் கூறினார். அப்படியானால் நாம் ஏன் புளொட்டை விட்டு வெளியேறுகிறோம் என்பதை கசெட்டில் ஒலிப்பதிவு செய்து வைக்கும்படியும், எமது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அனைத்து விடயங்களையும் வெளிக்கொணர்ந்து புளொட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறி அனைத்து விடயங்களையும் கைலாசின் கசெற்றில் ஒலிப்பதிவு செய்து கொடுத்து விட்டு கைலாசிடமிருந்து ஜீவனும் பாலாவும் விடைபெற்றுக் கொண்டனர்.

ஈழவிடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட நாம் இதுவரை சிறிலங்கா அரசபடைகளுக்கு மட்டுமே அஞ்சி வாழ்ந்த, தலைமறைவாக ஒழிந்து வாழ்ந்த காலம் மாறி இப்பொழுது எமது அமைப்புக்கும், நாமே வளர்த்து விட்டிருந்த அமைப்புக்கும் அஞ்சி வாழ வேண்டிய, தலைமறைவாக ஒழிந்து வாழ வேண்டிய ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். “அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்ற கோசத்துடன் ஈழவிடுதலைக்காக போராடப் புறப்பட்ட நாம், அனைத்து அடக்குமுறைகளையும் தன்னகத்தே கொண்டதொரு பிற்போக்கு தலைமையை வளர்த்து விட்டிருந்ததன் மூலம் எமது கைகளில் விலங்குகளை பூட்டுவதற்கான நபர்களை நாமே உருவாக்கியிருந்தோம்.

தளர்ந்து கொண்டிருந்த நம்பிக்கைகளுடனும், தூக்கமின்றி சோர்ந்துவிட்டிருந்த விழிகளுடனும் மறுநாள் கிட்டுவினதும் திலீபனினதும் வரவையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது (பிரபாகரன்) முடிவையும் எதிர்பார்த்து விபுலும் நானும் வீதியில் நின்று கொண்டிருந்தோம். சற்றுத் தாமதமாகவே கிட்டுவும் திலீபனும் வந்து சேர்ந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே மிகவும் எளிமையானவராகவும் கடின உழைப்பாளியாகவும் எவருடைய கருத்துக்களையும் பொறுமையுடன் செவிமடுப்பவராகவும் ஓரளவு அரசியல் அறிவுடன் கூடிய பேச்சாற்றல் மிக்கவராகவும் விளங்கிய திலீபன், எமது நிலையையிட்டு தாம் மிகவும் அனுதாபப்படுவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய திலீபன் “உங்களது நிலையை நாம் நன்கு புரிந்து கொள்கிறோம், ஆனால் உங்களுக்கு பாதுகாப்புக் கொடுத்து இந்தியா செல்வதற்கு உதவி செய்ய முடியாதவர்களாக உள்ளோம். நாம் பாதுகாப்புக் கொடுத்து இந்தியாவுக்கு உங்களை அனுப்பிவைத்ததை புளொட் அறிந்து கொண்டால் எம்மை முழுமையாக அழித்து விடுவார்கள் என்று ஈரோஸ் உறுப்பினர் கைலாஸ் கூறியது போலவே கூறினார். இதுதான் தலைவரின்(பிரபாகரன்) முடிவு எனக் குறிப்பிட்ட திலீபன், எமது இக்கட்டான ஒரு நிலையில் தம்மால் உதவி எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்காக மிகவும் மனம் வருந்துவதாகக் கூறி எம்மிடமிருந்து விடைபெற்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், ஈரோஸ் அமைப்பினரும் எமக்கு பாதுகாப்புத் தந்து உதவி புரிந்தால் தமது அமைப்பை புளொட் அழித்துவிடும் என்றும் தம்மால் உதவி செய்யமுடியாதென்றும் மறுத்து விட்டிருந்தனர். நாம் தளத்தில் தலைமறைவாவது கூட அவ்வளவு சாத்தியமானதொன்றாக இருக்கவில்லை. ஏனெனில் எம்மில் பெரும்பாலானவர்கள் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்களாக இருந்தது மட்டுமல்லாமல், புளொட் என்ற அமைப்பு மக்கள் மத்தியில் விருட்சம் போல் வளர்வதற்கு நாமும் ஒரு காரணமாக இருந்துவிட்டோம். இரண்டு நாட்கள் எந்தவித முன்னேற்றமோ, எந்தவிதமான நம்பிக்கையை கொடுப்பதாகவோ விடயங்கள் அமையவில்லை. கடிகாரத்தின் முள் முன்பைவிடவும் வேகமாகச் சுற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியா அனுப்புவதை உத்தரவாதப்படுத்துவதற்காக மறுநாள் சின்னமென்டிஸ் என்னிடம் வந்தார். “ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரிடமிருந்து பொறுப்புகள் எடுத்தாகி விட்டதா?" என்று கேட்ட சின்னமென்டிஸ், மறுநாள் படகு இந்தியாவிலிருந்து வருகிறதென்றும் அப்படகில் மூவரையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறினார். “நிச்சயமாக நாளை மூவரையும் இந்தியாவுக்கு அனுப்பலாம்" என்று நான் கூறியதும் சின்னமென்டிஸ் நிறைந்த திருப்தியுடன் திரும்பிச் சென்று விட்டார். இடையிடையே மாவட்ட அமைப்புக்குழுவில் செயற்படுபவர்கள் தமது அமைப்புச் சம்பந்தமான பிரச்சனைகளுடன் வந்து பேசிச்சென்றனர். ஆனால் நாம் புளொட் என்ற அமைப்புடனான அனைத்து உறவுகளையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான கடும் முயற்சியில் இறங்கி விட்டோம் என்பதை மாவட்ட அமைப்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் பலர் அறிந்திருந்தார்களில்லை. எமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கும் நம்பிக்கையானவர்களுக்கும் மட்டுமே நாம் புளொட்டில் இருந்து வெளியேறப்போவதான தகவலை தெரிவித்திருந்தோம்.

மற்றைய இயக்கங்களுக்கூடாக இந்தியாவுக்கு செல்வதற்கு நாம் எடுத்த எந்த முயற்சியும் பயனளிக்கத் தவறியதால், இறுதி முயற்சியாக மீன்பிடிக்கும் படகுகளில் இந்தியா செல்ல முயற்சி எடுத்தோம். எமது அமைப்புக்கு பல வழிகளிலும் உதவி செய்து வந்த குருநகரைச் சேர்ந்த நண்பர் தாசன் என்பவரை அணுகினோம். புளொட்டுக்குள் தோன்றிவிட்டிருந்த நிலையை நண்பர் தாசன் அவர்களுக்கு எடுத்துக்கூறி அவரது உதவி மூலம் இந்தியா செல்ல முடிவெடுத்தோம். நண்பர் தாசன் அவர்களை சந்தித்துப் பேசுவதற்கு விபுலும் தர்மலிங்கமும் சென்றனர். எமது நிலையை நண்பர் தாசன் அவர்களுக்கு விளக்கிக் கூறி எம்மை இந்தியாவுக்கு கொண்டு சென்று விடும்படி வேண்டினோம். எம்மை இந்தியாவுக்கு கொண்டு சென்றுவிடுவதற்கு சம்மதம் தெரிவித்த நண்பர் தாசன் அவர்கள், உடனடியாக தன்னால் அதைச் செய்யமுடியாதென்றும், எமக்குப் பாதுகாப்புப் பிரச்சனையெனில் தனது வீட்டிலேயே தலைமறைவாகவே இருக்கும்படியும் கூறி ஓரிரு நாட்களில் தன்னால் இந்தியா கொண்டு சென்றுவிட முடியும் என்றும் உறுதியளித்தார். இராணுவரீதியாக பலம்வாய்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் எமக்கு பாதுகாப்பளிக்க முடியாத நிலையில், மார்க்சிசம் பற்றியும் மக்கள் பற்றியும் பேசிய ஈரோஸ் அமைப்பினரால் எமக்கு பாதுகாப்பளிக்க முடியாத நிலையில், ஒரு தனிமனிதன் மனித நேயத்துடன் எங்களில் எவராவது புளொட்டிடம் பிடிபட்டால் தனது உயிர் மட்டுமல்ல தனது மனைவி, பிள்ளைகள் கூட கொல்லப்படலாம் என்ற நிலைமை இருந்தும் கூட எமக்கு பாதுகாப்பளிக்க முன்வந்தது, எமது பாதுகாப்பு என்ற உடனடிப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமைந்தது.

சமூக விரோதிகள் என்ற பெயரில் யாழ்ப்பாணம் கொட்டடியை சேர்ந்த மூவர் எம்மால் – எமது அமைப்பால் – 1984 ஆரம்பப் பகுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் மூன்றாமவர் அவர்களது குடும்ப உறவினராகவும் இருந்தார். இவர்களது கொலை எமது அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தவறான முடிவு என்மீதும் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றதன் மூலம் சமூகத்தில் ஒரு பீதியை ஏற்படுத்தியிருந்தோம். சமூக விரோதிகள் என கொலை செய்யப்பட மூவரும் எவ்வளவுதான் மோசமானவர்களாக இருந்தாலும் கூட, அவர்களை கொலை செய்ததன் மூலம் சமூகத்தைப் பற்றி, சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றி எவ்வளவு மோசமான புரிதலுடன் இருந்தோம் என்பதை வெளிக்காட்டி இருந்தோம். துப்பாக்கி முனையில் சமுதாயப் பிரச்சனைகளை அணுகுவதன் மூலம் தற்காலிகமாகவும், இலகுவாகவும் தீர்வுகளை காண முனைந்த நாம் மரணதண்டனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வறிய, மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் எதிர்காலம் பற்றியோ அவர்களுக்கு ஏற்படும் உளரீதியான பாதிப்புகள் பற்றியோ கண்டு கொண்டிருக்கவில்லை. இதே போன்றதொரு துன்பியல் சம்பவம் மீண்டும் இடம் பெறுவதை நான் என்றுமே விரும்பியிருக்கவில்லை. இதனால் நண்பர் தாசன் அவர்கள் தற்காலிகமாகவேனும் எமக்கு பாதுகாப்பு தர முன்வந்தது எனக்கு பெரும் ஆறுதலை அளித்தது.

ஜீவன், விபுல் சிவானந்தியுடன் நானும் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகப் போகும் தகவலை விஜயன், பாண்டி உட்பட எம்முடன் நெருக்கமாக செயற்பட்டவர்களுக்கு உடனடியாகத் தெரிவித்தோம். சிலர் எம்முடன் தாமும் தலைமறைவாகப் போவதாகவும், சிலர் தாம் புளொட் செயற்பாடுகளில் ஈடுபடாமல் புளொட்டிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாகவும் தெரிவித்தனர். எம்முடன் தலைமறைவாக விரும்புபவர்கள் அனைவரையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் ஓர் இடத்தில் இரவு வந்து சந்திக்கும்படி கூறினோம். எமது சந்திப்பின் போது எம்மிடமிருந்த புளொட்டின் முக்கியமான ஆவணங்கள், மக்களிடமிருந்து பணம் பெறும் போது கொடுக்கும் பற்றுச்சீட்டுக்கள் அனைத்தையும் சின்னமென்டிஸிடம் கையளிப்பது என முடிவெடுத்தோம். அதேவேளை ஜீவனிடம் இருந்த மார்க்சிய நூல்கள், மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு சுரேன், இடியமீன் ஆகியோரிடம் கையளிப்பதாக முடிவெடுத்தோம். இரவோடு இரவாக அனைவரையும் குருநகரில் உள்ள நண்பர் தாசன் அவர்கள் வீட்டிற்கு வந்து சேரும்படி கூறி அனைவரும் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றோம்.

எம்மிடமிருந்த புளொட்டின் ஆவணங்களை சின்னமென்டிஸிடம் கையளிப்பதற்கு எனது நண்பரும், எமது அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும், கொக்குவில் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது படைத்துறைப் பொறுப்பாளர் பார்த்தனுடன் சுற்றிவளைப்பிலிருந்து தப்பி வெளியேறியவருமான கொக்குவில் ஆனந்தனை தெரிவு செய்தோம். இதற்கு காரணம் ஆனந்தன் மெண்டிஸுடன் நீண்ட காலமாக அறிமுகமானவராக இருந்தவர் என்பதால் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் எனக் கருதினோம். எம்மிடமிருந்த புளொட்டின் ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று ஆனந்தனை அவரது வீட்டில் சந்தித்ததுடன் புளொட்டினுள் தோன்றிவிட்டிருந்த நிலைபற்றி விபரமாக எடுத்துக்கூறி நாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகப் போகும் விடயத்தையும் தெரிவித்தேன். எமது அமைப்பைப் பற்றி நான் சொன்ன விடயங்கள் எவையுமே ஆனந்தனை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கவில்லை. காரணம், இந்தியாவில் இராணுவப் பயிற்சி முடித்து திரும்பியிருந்த எமது அமைப்பைச் சேர்ந்த பலர் இந்தியாவில் பயிற்சி முகாம்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து ஆனந்தனுக்கு தெரிவித்ததுடன் சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலையும், தமிழீழ விடுதலை இராணுவ இயக்கத்தை அழித்தமையும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரிய விடயங்களாகவே இருந்து வந்தன. எமது அமைப்பின் தவறான போக்குகளுக்கெதிராக போராடுவது மட்டுமல்லாமல் அமைப்பை அம்பலப்படுத்துவதும் அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஆனந்தன், எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் அமைப்பினுடைய அனைத்து ஆவணங்களையும் மறுநாள் சின்னமென்டிஸிடம் கையளிப்பதாகவும் உறுதியளித்தார்.

நாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாக முடிவெடுத்திருந்ததால் எமது எதிர்காலம் என்பது கேள்விக்குரியதொன்றாகவும், மரணம் என்பது எந்த நேரத்திலும் எந்த வடிவிலும் நேரலாம் என்ற நிலையே காணப்பட்டது. இதனால் எனது வீட்டிற்குச் சென்று அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு செல்ல விரும்பினேன்.(சிலவேளைகளில் அதுவே கடைசி முறை எனது வீட்டாரைப் பார்ப்பதாகவும் இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்). ஆனந்தனுடன் எனது வீட்டுக்குச் சென்றதும் வீட்டில் ஆச்சரியம் மேலிட என்னை சந்தித்ததில் தம்மையும் மறந்து ஆனந்தத்தில் திளைத்தனர். சிறிது நேரத்துக்குள்ளாகவே தம்மை சுதாகரித்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு உடனடியாக வீட்டிலிருந்து புறப்படும்படி – அது அவர்கள் விருப்பமாக இல்லாத போதும் கூட – என்னைக் கேட்டுக் கொண்டனர். இலங்கை இராணுவம் எந்த நேரத்திலும் வீட்டுக்கு வரலாம் என்பதும், எனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதுமே அவர்கள் என்னை உடனடியாக வீட்டிலிருந்து புறப்படும்படி கூறியதன் நோக்கமாய் இருந்தது.

இலங்கை இராணுவத்தால் கொக்குவில் சுற்றி வளைக்கப்பட்டு நான் இலங்கை அரசால் தேடப்படும் நபர் என்றானதிலிருந்து வீட்டுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். இன்று மாறிவிட்டிருந்த நிலைமையை எனது வீட்டார் உணர்ந்து கொள்ள வாய்ப்பேதும் இருந்திருக்கவில்லை. ஏனெனில் இதுவரை காலமும் இலங்கை இராணுவத்தினரால் மட்டுமே நான் தேடப்படும் நிலை இருந்து வந்தது, ஆனால் இப்பொழுதோ எம்மால் வளர்த்து விடப்பட்ட எமது அமைப்பின் தலைமையும், அந்த தலைமையை – கொலை வெறி பிடித்த அந்த தலைமையை – காப்பாற்ற முனைந்து நிற்கும் எமது இராணுவப் பிரிவினரின் ஒரு பகுதியினர் கூட எம்மைக் குறிவைத்து தேடியலையப்போவதை அவர்கள் அறிந்திருந்தார்கள் இல்லை.

பகலை முழுமையாகவே விழுங்கிவிட்டிருந்த இரவு; வானத்தில் தோன்றியிருந்த வட்டநிலாவையும் மின்மினிப்பூச்சிகள் போல் மிளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களையும் கருமுகில் கூட்டங்கள் கபளீகரம் செய்து கொண்டிருந்தன. ஈழவிடுதலைப் போராட்டத்தில் எம்முடன் இணைந்து போராடியதால் சிறைகளில் வதைபட்டுக் கொண்டிருப்பவர்கள், தம் இன்னுயிரை விடுதலைப் போராட்டத்துக்காக தியாகம் செய்தவர்கள், எமது அமைப்பின் தலைமை தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை இன்னமும் அறிந்து கொள்ளாமலே உளசுத்தியுடனும் தன்னலமற்றும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள், அரசபடைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் விடுதலைப் போராட்டத்துக்காக தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் மக்கள், எமது அமைப்புடன் இணைந்து இந்தியா சென்று பயிற்சி முகாம்களில் சித்திரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் என இதயத்தில் துருத்திக் கொண்டிருந்த நினைவுகளை மீட்டவண்ணம் எமக்கு பாதுகாப்பு தருவதாக கூறியிருந்த நண்பர் தாசன் அவர்களின் வீட்டை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.

நண்பர் தாசன் அவர்களின் வீட்டை அடைந்ததும் எமக்கு தலைமறைவாக தங்குவதற்கான அனைத்து தயாரிப்புகளையும் முடித்து விட்டவர் போல் என்னை இன்முகத்துடன் வரவேற்று தனது வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு நாம் பேசியபடி ஜீவன், விபுல், சிவானந்தி, விஜயன், பாலா, பாண்டி, தர்மலிங்கம், செல்வன், ரஞ்சன் அனைவருமே வந்து சேர்ந்திருந்தனர். ஈழவிடுதலைக்காகப் போராடப் புறப்பட்டு, நாம் அங்கம் வகித்த, வளர்த்து விட்ட அமைப்புக்கே தலைமறைவாக வேண்டிய வரலாறு ஒன்று ஆரம்பமாகியது.

(தொடரும்)

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25