Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுழிபுரத்தில் சுவரொட்டி ஒட்டச் சென்று காணாமல் போன ஆறு விடுதலைப் புலிகள்

யாழ்ப்பாண மாவட்ட அமைப்புக்குழுவுடனான உமாமகேஸ்வரனின் நீண்ட நேர சந்திப்பும், மாவட்ட அமைப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உமாமகேஸ்வரனால் அளிக்கப்பட்ட பதில்கள், பெரும்பான்மையானவர்களுக்கு முழுமையாகத் திருப்தியளிக்காதபோதிலும் கூட யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்கள் தமது அமைப்பு சம்பந்தமான செயற்பாடுகளை தொடர்ந்து செய்தவண்ணமிருந்தனர். உமாமகேஸ்வரன் மகளிர், மாணவ, தொழிற்சங்க அமைப்பிலுள்ளவர்களுடனும் சந்திப்புக்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார். படைத்துறைச் செயலர் கண்ணன் தனது பங்குக்கு சந்திப்புக்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார். டொமினிக்கின் மீதும், என் மீதுமான தள இராணுவ பொறுப்பாளர் ரமணனின் விசாரணையின் பின் எனக்குள் தொடர்ச்சியாக பல கேள்விகள் எழுந்தவண்ணமிருந்தன. செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றியும் படைத்துறைச் செயலர் கண்ணன் பற்றியும் பல கேள்விகள் எழுந்தன. உமாமகேஸ்வரனும் கண்ணனும் தளத்தில் நிற்கும் போது இத்தகையதொரு நிலைமை என்றால் இதில் இவர்கள் இருவரினதும் பங்கென்ன? சுந்தரம் படைப்பிரிவினர் என்று செயற்பட்டவர்களின் அனைத்து ஸ்தாபன விரோத, தெருச்சண்டித்தனப் போக்குகளுக்கெதிராகவும் புளொட் என்ற எமது அமைப்புக்காகவும் அதன் கொள்கைக்கு விசுவாசமாகவும் செயற்பட்டது தவறா?

 

 

 

தள இராணுவப் பொறுப்பாளர் ரமணனும் யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிஸும் எம்மை எதிரிகள் போல கணித்து செயற்பட்டபோதும் கூட அவர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒத்துழைத்து செயற்பட முனைந்தது தவறா? அமைப்பின் நலன் கருதி ஸ்தாபனக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் டொமினிக் அமைப்புக்குள் அறிமுகப்படுத்தி அங்கத்தவர்கள் அனைவரையும் அதைப் பின்பற்றும்படி வலியுறுத்தியது தவறா? இலங்கை இராணுவத்தினால் தேடப்பட்டவர்கள் என பலரும் இந்தியா சென்று பாதுகாப்பாக இருந்தவேளையில் நாமும் இராணுவத்தினால் தேடப்பட்டபோதும் கூட தளத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அமைப்புக்காகவும் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் செயற்பட்டது தவறா?

கேள்விகள் தொடர்ந்தவண்ணமிருந்தபோதும் கூட ஒருவிடயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அரசியலில் வெறுமையும், சுத்த இராணுவக் கண்டோட்டமும், சொந்த மக்களிடமிருந்து அந்நியப்பட்ட வாழ்வும், மக்களுடனான உயிரோட்டமான உறவுகளைக் கொண்டிராத நிலையும் இந்த நிலைக்கு இவர்களை இட்டுச் செல்வதற்கான ஒரு காரணமாக – ஒரே காரணமாக அல்ல - அமைந்தது என எண்ணினேன்.

இக்காலப் பகுதியில் படைத்துறைச் செயலர் கண்ணன், டொமினிக் உட்பட நாம் உரும்பிராய் மற்றும் நீர்வேலிப் பகுதிகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தோம். இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளும் தேடுதல்களும் மிகவும் குறைந்த பிரதேசங்களாக உரும்பிராய், நீர்வேலி போன்ற இடங்கள் அன்று விளங்கியது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களது நிறைந்த ஆதரவும் கூட எமக்கிருந்தது. எமக்கான அனைத்து உதவிகளையும் தேவைகளையும் உரும்பிராய் ராசா, குமார், நீர்வேலி ராஜன், சீலன் போன்றோர் கவனித்து வந்தனர். உமாமகேஸ்வரனுடனான யாழ்ப்பாண மாவட்ட அமைப்புக்குழுவின் சந்திப்பு இடம்பெற்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் ஆகியிருந்தது. உரும்பிராயில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றிற்கு முன் நாம் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அவ்வேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்தளபதியாக செயற்பட்ட கிட்டுவும் அரசியற்பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்ட திலீபனும் மோட்டார் சையிக்கிளில் அவ்விடத்துக்கு வந்தனர். இது என்னைப் பொறுத்தவரை நான் எதிர்பார்த்திராத ஒரு விடயமாக இருந்தது. காரணம் நாம் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கியிருந்து செயற்படும் இடங்களுக்கோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் நாம் தங்கியிருந்து செயற்படும் இடங்களுக்கோ செல்வது கிடையாது.

1982ல் சுந்தரம் படுகொலைக்கும் அதன் பின்னரான இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலைக்கும் பின்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எமக்குமிடையில் ஒரு முறுகல் நிலை அல்லது பகைமை நிலை இருந்து வந்திருந்தபோதும், 1983 யூலைக்குப் பின்னரான காலகட்டங்களில் எமக்கிடையேயான உறவு பல்கலைக்கழக மட்டத்தில் எமது பிரச்சனைகளை, முரண்பாடுகளை சந்தித்துப் பேசி தீர்க்கக் கூடிய அளவுக்கு வளர்ச்சியடைந்திருந்தது. இத்தகைய சந்திப்புக்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபனுடன் அல்லது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இயங்கிய மறுமலர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுநிலை உறுப்பினர்களுடனேயே இடம்பெறுவதுண்டு.

உரும்பிராய் சனசமூகநிலையத்துக்கு வந்திருந்த கிட்டுவும், திலீபனும் என்னுடன் சில நிமிடங்கள் பேசவிரும்புவதாக தெரிவித்தனர். அதற்கு நானும் சம்மதம் தெரிவிக்கவே திலீபன் விடயத்தைக் கூறினார். சுழிபுரம் பகுதியில் இரவுவேளையில் சுவரொட்டி ஒட்டச்சென்றிருந்த தமது ஆறு உறுப்பினர்களைக் காணவில்லை என்றும், சுழிபுரம் பகுதியில் எமது(புளொட்) இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாய் இருப்பதால் தம்மால் அப்பகுதிக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும், அந்த ஆறுபேர் குறித்த தகவல் ஏதும் எனக்குத் தெரியுமா என்றும் திலீபன் என்னிடம் வினவினார். சுழிபுரம் பகுதியில் சுவரொட்டி ஒட்டிய ஆறுபேர் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என தெரிவித்த நான், சுழிபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருந்தால் சின்னமென்டிஸுடன் பேசிப்பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன் என்று கூறியதோடு, விரும்பினால் திலீபனை சின்னமென்டிஸை சந்தித்துப் பேசிப் பார்க்கும்படி கூறினேன். சின்னமென்டிஸை சந்திப்பதில் திலீபன் அக்கறையில்லாதவராகக் காட்டிக்கொண்டதோடு, இதுபற்றி என்னை சின்னமென்டிஸுடன் பேசிவிட்டு தன்னைத் தொடர்புகொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் சுழிபுரம் பகுதியில் தமது ஆறு உறுப்பினர்களைக் காணவில்லை என்று திலீபன் தெரிவித்த விடயம் உமாமகேஸ்வரன் தளம் வந்திருப்பதை அறிந்து தமிழீழவிடுதலைப் புலிகள் உமாமகேஸ்வரனைக் குறிவைப்பதற்காக ஒரு நாடகம் ஆடுகின்றனரோ எனவும் எண்ணினேன். இருந்தபோதிலும் திலீபனுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருந்ததால் சின்னமென்டிஸை சந்தித்து இதுபற்றி கேட்கலாம் என சித்தங்கேணிக்கு சென்றேன். சித்தங்கேணி கோவிலுக்கு முன்னுள்ள சனசமூக நிலையத்தில் சின்னமென்டிஸ் உட்பட எமது இராணுவப் பிரிவினர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். திலீபன் சுவரொட்டி ஒட்டிய தமது ஆறுபேரை காணவில்லை என்று கூறிய விவகாரத்தைத் சின்னமென்டிஸிடம் தெரிவித்தேன். அது பற்றி சின்னமென்டிஸுக்கு ஏதாவது தெரியுமா எனக் கேட்டேன். அதற்குப் பதிலளித்த சின்னமென்டிஸ், அப்படியான எவரையுமே தாங்கள் பார்க்கவில்லை என்றும் அதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் கூறினார். சின்னமென்டிஸும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போதே கிட்டுவும் திலீபனும் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்துக்கு வந்தனர். சின்னமென்டிஸை பேசுவதற்கு அழைத்த திலீபன் என்னிடம் கேட்ட அந்த விடயத்தையே சின்னமென்டிஸிடமும் கேட்டார். பேச்சின் ஆரம்பத்தில் ஓரளவு நாகரீகமாகப் பேசிய எம்மவர்களின் பேச்சு படிப்படியாக மோசமான வார்த்தைப் பிரயோகங்களாக மாறிக்கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கிட்டுவும் திலீபனும் ஓரளவு பணிவுடன் பேசியதோடு தமது இயக்க உறுப்பினர்கள் ஆறுபேரைக் காணவில்லை என்ற விடயத்தை உறுதியாகத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், சின்னமென்டிஸோ அல்லது அவருடன் நின்ற இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களோ கிட்டு மீதும் திலீபன் மீதும் தொடர்ச்சியாக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதை நிறுத்தினார்கள் இல்லை. சின்னமென்டிஸ் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று "போதைவஸ்து பாவித்துவிட்டு வந்தா எம்மிடம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைக் கேட்கிறீர்கள்" என கிட்டுவையும் திலீபனையும் பார்த்துக் கேட்டதோடு அவர்கள் இருவரும் இனியும் சின்னமென்டிஸுடன் பேசுவதில் பயனில்லை எனக் கருதினார்களோ என்னவோ அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கருத்துக்களிலும் சரி, அவர்களது நடைமுறையிலும் சரி நாம் எந்தவிதத்திலும் உடன்பாடு கொண்டவர்கள் அல்ல என்றபோதிலும் கூட, அவர்களும் விடுதலை இயக்கம் என்ற அடிப்படையில் அவர்களுடன் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்பட்டுக்கொண்டிருந்தோம். இதன் அடிப்படையில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் ஏனைய இயக்கங்களுடனும் கூட நட்புறவைக் கொண்டிருந்தோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எமது அமைப்புக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை, முரண்பாடுகளை சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசியே தீர்த்து வந்தோம். ஆனால் சின்னமென்டிஸும் அவருடன் நின்றிருந்த இராணுவப் பிரிவினரும் கிட்டுவுடனும் திலீபனுடனும் தர்க்கத்தில் ஈடுபட்டவிதம், அவர்களுடைய மோசமான வார்த்தைப்பிரயோகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எமக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வையோ நட்புறவையோ வளர்ப்பதற்கு மாறாக தீராத பகைமையை வளர்ப்பதற்கு உதவுவதாகவே காணப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆறு உறுப்பினர்களை காணவில்லை என்று சொல்லப்பட்ட விடயத்தை எமது அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் செயற்படுவோருடனும் நேரடியாக பேசிப் பார்த்தனர். திலீபன் மீண்டும் என்னை அணுகி ஆறுபேர் பற்றிய தகவலை அறிய முற்பட்டார். ஆறுபேர் பற்றி எமக்கு எதுவுமே தெரியாது என்ற பதிலைத்தான் நாமனைவரும் தெரிவித்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறுபேர் காணாமல் போன விவகாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் பலத்த உணர்வலைகளையும் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்திருந்தது. காணாமல் போன ஆறுபேரின் பெற்றோர்களும் சுழிபுரம் பகுதியிலுள்ள புளொட் உறுப்பினர்களை அணுகி தமது பிள்ளைகள் குறித்து கேட்டுப்பார்த்தனர். அனைவரினதும் பதில் காணாமல் போன ஆறு இளைஞர்கள் பற்றி எமக்கு எதுவும் தெரியாது என்பதுதான்.

ஆனால் நிலைமைகள் மாறத் தொடங்கின. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்களைத் தேடும் முயற்சியில் இறங்கினர். காணாமல் போன ஆறு இளைஞர்களின் குடும்பத்தினரும் கூட தமது பிள்ளைகளைத் தேடும் பணியில் இறங்கினர். இவர்களுடன் கூடவே சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துகொண்டதாக அறிந்தேன். ஆறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் போன விவகாரம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் எந்தளவுக்கு உணர்வலைகளையும் கொந்தளிப்பையும் கொண்டுவந்ததோ இல்லையோ, புளொட் உறுப்பினர்களிடமிருந்து கடுமையான உணர்வலைகளையும், புளொட்டுக்குள் ஒரு கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆறு உறுப்பினர்களையும் புளொட்தான் கடத்தியது என்ற விடயத்தை ஆணித்தரமாக தெரிவித்துவந்ததோடு, மக்கள் மத்தியிலும், புளொட் கீழணி உறுப்பினர்கள் மத்தியிலும் இந்த விடயத்தை எடுத்துச் சென்றிருந்தனர். மக்கள் அமைப்பில் செயற்பட்டுவந்த நாம் வழமைபோலவே எமது கீழணி உறுப்பினர்களிடமிருந்தும், மக்கள் மத்தியிலிருந்தும் கேள்விகளை முகம் கொடுப்பவர்களாக இருந்தோம். யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிஸ் காணாமல் போன ஆறு தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆறுபேரைக் காணவில்லை என்பதில் உறுதியாக இருந்ததுடன் அவர்களை தேடும் பணியிலும் தீவிரமாக இறங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அமைப்பாளர்கள் இந்தவிடயம் குறித்து கேள்விகளை எழுப்ப ஆரம்பித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறுபேர் காணாமல் போயினர் என்றதன் உண்மையான பின்னணி என்ன என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டிய தேவை எமக்கிருந்தது. தளத்தில் நின்ற உமாமகேஸ்வரனுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சுழிபுரம், சித்தங்கேணி சங்கானை, வட்டுக்கோட்டை போன்ற இடங்களில் இருந்ததால் தமிழீழ விடுதலைப் புலிகள் சுழிபுரத்துக்குள் ஊடுருவுவதற்கு இப்படி கதையைச் சொல்கிறார்களா அல்லது உண்மையிலேயே எமது இராணுவப் பிரிவினர்தான் அந்த ஆறுபேரையும் கடத்திவைத்துள்ளார்களா என்பதை அறிய வேண்டியிருந்தது. தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கும் படைத்துறைச் செயலர் கண்ணனும் அப்பொழுது நீர்வேலியிலேயே தங்கியிருந்தனர்.

டொமினிக்குடனும் கண்ணனுடனும் சந்தித்துப்பேசிய நாம், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்தும், எமது அமைப்பாளர்களிடமிருந்தும், மக்கள் மத்தியிலிருந்தும் காணாமல் போன என்று சொல்லப்பட்ட ஆறுபேர் குறித்த கேள்விகளை நாம் முகம் கொடுப்பதால், இதுபற்றி உடனடியாக விசாரணை செய்து எமக்கு உண்மைநிலையை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம். இதற்கு இருவருமே தமது சம்மதத்தை தெரிவித்ததோடு, படைத்துறைச் செயலர் கண்ணன் தானே அந்த விசாரணையை மேற்கொள்வதாகக் கூறி சுழிபுரம் புறப்பட்டுச் சென்றார். சுழிபுரம் பகுதியில் இரண்டு நாட்கள் வரை தங்கியிருந்து உமாமகேஸ்வரனையும் புளொட் இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துவிட்டு நீர்வேலி திரும்பிய கண்ணன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறுபேர் காணாமல் போன என்று சொல்லப்பட்ட சம்பவத்துக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தான் பெரும்பாலான எமது இராணுவப்பிரிவினரை நேரடியாகச் சந்தித்து இது பற்றி கேட்டதாகவும் குறிப்பிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் உமாமகேஸ்வரனைக் குறிவைப்பதற்கே இத்தகைய பிரச்சாரத்தைச் திட்டமிட்டு செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

 

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18