08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

சிங்கள மக்கள் மேலான தமிழக தமிழினவாதிகளின் தாக்குதல்

1980 களில் இந்திய அரசு தமிழ் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியும், ஆயுதமும் பணம் கொடுத்ததுடன், சிங்கள அப்பாவி மக்களைக் கொல்லுமாறு கோரினர். இதனடிப்படையில் இந்தியா முன்னின்று வழிகாட்ட புலிகள் அனுராதபுர நகரத்தில் 150க்கு மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை நடத்தியதற்காக இந்தியா 50 கோடி இந்திய ரூபா தந்ததாக பாலசிங்கம் பின்னால் கூறினார். இந்தத் தாக்குதல் மூலம் தான் திம்புப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா வழிகாட்ட நடந்த இது போன்ற தாக்குதல் தான், எல்லைப்புற சிங்கள முஸ்லீம் கிராமங்கள் தோறும் ஆயிரமாயிரம் சிங்கள மக்களைக் கொன்று குவிக்கவும் வழிகாட்டியது. இன்று தமிழகத்தில் சிங்கள மக்கள் மேலான தாக்குதல் இதே போன்ற இனவாதத் தாக்குதல் தான். அன்று போல் இன்றும் தமிழினத்தின் பெயரில் இவை அரங்கேறுகின்றது.

 

 

 

தமிழகத்தில் அரங்கேற்றும் இந்த இனவாத வன்முறை, இலங்கையில் தமிழ்-சிங்கள மக்களின் இன ஐக்கியத்துக்கு வேட்டு வைக்கின்ற குறுந்தேசிய இனவாத அரசியலாகும்;. மக்களை பிளந்து மோதவிடும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியல் நோக்குடன், இது பின்னிப் பிணைந்த அரசியல் சதியாகும்;. இது இந்திய ஆளும் வர்க்க நலனுடன் பின்னிப் பிணைந்து வெளிப்படுகின்றது.

இதுபோன்ற தமிழகத்தில் அரங்கேறும் ஆளும்வர்க்க அரசியல் அடிப்படை கொண்ட பிரிவினரின் இனவாதத் தாக்குதலுக்கு எதிராக, இடதுசாரிகள் எவரும் வாய் திறக்கவில்லை. தமிழினவாதத்தின் பின்னால் சந்தர்ப்பவாதத்தை கடைப்பிடிக்கும் அரசியல் போக்கு, இது போன்ற செயலுக்கு தங்கள் மௌனமான சம்மதம் மூலம் குடைபிடிக்கின்றனர். குறுகிய தமிழினவாதத்தை தனிமைப்படுத்தும் வண்ணம், அதற்கு எதிராக செயல்படாத சந்தர்ப்பவாத அரசியல் தமிழக அரசியலில் கோலோச்சி நிற்கின்றது. சிங்கள மக்களைத் தாக்குவது, தமிழின விடுதலையாக கருதுமளவுக்கு தமிழகத்தில் புலி அரசியல் கோலோச்சி நிற்கின்றது.

இந்தவகையில் இலங்கைத் தமிழர், புலிகள் என்ற குறுக்கிய வட்டத்துக்குள் தங்களை முன்னிறுத்திய அரசியல் முயற்சிகள், அனைத்துவிதமாகவும் குறுகிய இனவாத அரசியலை தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. இது இந்திய நலனுக்கு உட்பட்ட, இலங்கையில் தலையீட்டுக்குரிய மற்றொரு அரசியல் அடித்தளத்தை வளர்த்தெடுக்கின்றது. இந்த நிலையில் இந்தப் போக்கை அம்பலப்படுத்தி போராட வேண்டி பாட்டாளிவர்க்க கட்சிகள், தமிழினவாத அலையுடன் சந்தர்ப்பவாத நிலையெடுத்து நிற்கின்றனர்.

இலங்கையில் இருந்து வரும் மக்களை இனரீதியாக பிரித்து தாக்கும் அரசியல், மக்கள் விரோத அரசியலாகும். இலங்கை அரசு இனரீதியாக இலங்கையில் பிரித்து ஒடுக்கும் அதே அரசியல் போக்காகும்;. இங்கு தமிழ் மக்கள் என்ற கூறிக்கொண்டு அரங்கேறுவது மக்கள் விரோதக் கூறுதான். மக்களை இனரீதியாக பிரித்து தாக்குவது, எந்த வகையிவும் மக்கள் நலன் சார்ந்ததல்ல.

இதுதான் புலிகளின் கடந்தகால அரசியல் பாதையுமாகும்;. இந்த வகையில் புலிகளின் அரசியலை தமிழகத்தில் அம்பலப்படுத்தி, அதன் மக்கள் விரோதம் எப்படி தமிழினத்தை அழித்தது என்று சொல்லுவார் எவருமற்ற நிலையில், தமிழகத்தில் குறுகிய இனவாதம் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படுகின்றது. புலிகளின் இது போன்ற நடவடிக்கைகளை விடுதலைப் போராட்டத்தின் வீரமிக்க செயலாகக் காட்டி வளர்த்தெடுக்கும் இனவாத அரசியல் மூலம், புலிகளின் குறுந்தேசிய வக்கிரத்தை தமிழகத்திலும் திணிக்கின்றனர்.

அப்பாவி சிங்களை மக்களை குறிவைத்து தாக்குதல், அதை கண்டிக்க வக்கற்ற மக்கள் திரள் அமைப்புகள், இலங்கையில் மக்கள் மத்தியில் இனரீதியான பிளவை மேலும் ஆழமாக்கிவிடுகின்றது. தமிழ் சிங்கள மக்கள், பேரினவாதத்தை குறுந்தேசியத்தை புரிந்துகொண்டு, அதை எதிர்க்கும் அரசியல் போக்குகளை கருவிலேயே கொன்றுவிட நடத்தும் கருச்சிதைப்புதான், தமிழகத்தில் சிங்கள மக்கள் மேலான வன்முறையாகும்.

இது இந்திய - இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்த அரசியல் தேவையைப் பூர்த்திசெய்கின்றது. இலங்கை தமிழ் மக்களை மேலும் தனிமைப்படுத்தி அழிக்கின்ற, இனத்தின் பெயரிலான கூட்டுச் சதியாகும். இதைத்தான் தமிழக தமிழினவாதிகள் 1980 கள் முதல் செய்து வருகின்றனர். 1980 களில் பயிற்சி மூலம் போராட்டத்தை சிதைத்து அழிக்க இந்திய நலனின் பின் வழிகாட்டி நின்றவர்கள் இந்த தமிழினவாதிகள் தான். அதையே இன்று தொடருகின்றனர். அதில் ஒரு அங்கம் தான் சிங்கள மக்கள் மேலான தமிழினவாதிகளின் தாக்குதல். இதனால் இலங்கை தமிழ் மக்கள் மேலும் மேலும் அடிமைப்படுத்தப்படுகின்றனர்.

 

பி.இரயாகரன்

16.08.2011


பி.இரயாகரன் - சமர்