01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

வெள்ளையினவாதமும் இஸ்லாமியவாதமும் : நோர்வேயில் நடந்தது இன நிற மதப் பயங்கரவாதம்

வெள்ளையினப் பயங்கரவாதம் நோர்வேயில் நடத்திய படுகொலை, மேற்கை அதிரவைத்திருக்கின்றது. இந்தப் பயங்கரவாதத்தை ஒருங்கிணைத்திருந்தது வெள்ளையினத் தேசியவாதமும், கிறிஸ்துவவாதமுமாகும். இஸ்லாமியப் பயங்கரவாதம் தான் இந்த நாகரிக உலகின் காட்டுமிராண்டித்தனம் என்று நம்பிய வெள்ளையினக் கற்பனைகளை எல்லாம் இது தூள் தூளாகத் தகர்த்திருக்கின்றது.

 

 

சொந்த மக்களைச் சுரண்டவும், உலகைச் சூறையாடவும் நிறவெறியைக் கக்கிய, இஸ்லாமிய எதிர்ப்பை முன்னிறுத்தித்தான் மேற்கில் அரசியல் நடத்தப்படுகின்றது. இந்த இன நிற தேசியவாத அரசியல், வெள்ளையின அடிப்படைவாதத்தை உருவாக்குகின்றது. இதன் உருத்திரண்ட வடிவமாகத்தான், வெள்ளையினப் பயங்கரவாதமாக இது வெளிப்படுகின்றது.

இஸ்லாமிய மதவாதம் எப்படி இஸ்லாமிய அடிப்படை வாதத்தை உருவாக்குகின்றதோ, அப்படித்தான் வெள்ளையினவாதம் வெள்ளையினப் பயங்கரவாதத்தை உருவாக்குகின்றது. இந்த இரு பயங்கரவாதத்தின் சமூக பொருளாதார அரசியல் அடிப்படை ஒன்றுதான். மதம் தனிப்பட்ட மனிதனின் உரிமைக்கு அப்பால் மதமாக, மதவாதமாக மாறும் போது அதில் இருந்து மதப் பயங்கரவாதமும் அது சார்ந்த தனிநபர் பயங்கரவாதமும் உருவாகின்றது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். இதுபோல் மற்றவனைச் சுரண்ட, மற்றைய நாடுகளை சூறையாட இன நிற உணர்வாக தேசியம் மாறும் போது, உலகநாடுகள் மேலான மேற்கத்தைய பயங்கரவாதமாகவும், இதில் இருந்து தனிநபர் பயங்கரவாதமும் உருவாகின்றது.

இன்று இராணுவரீதியான உலக மேலாதிக்க ஒழுங்கை கட்டமைக்கும் மேற்கத்தைய இஸ்லாமியவாதம் தான், மறுபக்கத்தில் வெள்ளையின மத அடிப்படைவாதமாக வெடிக்கின்றது. குண்டுவெடிப்பும் படுகொலையும் நடந்தவுடன், இஸ்லாமிய பயங்கரவாதமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கின. உலக மேலாதிக்கத்தை வழிகாட்டும் தலைவர்கள் சூழுரைத்து, இதன் மூலம் உலகை மேலும் ஆக்கிரமிக்கும் கனவுடன் பயங்கரவாதம் பற்றி உலக்கு பாடம் நடத்தினர்.

ஒரேயொரு நாள் மேலாதிக்க கனவுதான், அடுத்தநாள் எல்லாம் தலைகீழாக மாறியது. வெள்ளையினப் பயங்கரவாதத்தை நடத்திய பயங்கரவாதி எந்த எதிhப்புமின்றி சரணடைந்த நிலையில் தறிகெட்ட ஊடக சுதந்திரம் எல்லாம் தவிடுபொடியானது. தமக்குத் தாமே சுயதணிக்கை போட்டுக் கொண்டு ஓன்றும் தெரியாத பச்சைப் பிள்ளையாட்டம் புலம்புகின்றனர். பயங்கரவாதத்தை செய்த பயங்கரவாதி தன் இன, மத, நிற வெறிக்கொள்கைகளை பிரகடனம் செய்த நிலையில், இஸ்லாமிய வெறுப்பை கக்கிய நிலையில், எல்லா வெள்ளையின உலக மேலாதிக்க பிரச்சாரங்களும் ஒடுங்கியது. இதைத் தனிப்பட்ட ஒருவரின் செயலாக இட்டுக்கட்ட முற்படுகின்றனர்.

இது இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி சதா ஊளையிடும் ஊடகங்கள், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பெயரில் இந்து அடிப்படைவாதம் இரகசியமாக நடத்திய பயங்கரவாதம் அம்பலமான போது, அதை மூடிமறைத்தன. இந்து அடிப்படை மதவாதத்தின் பயங்கரவாதமாக காட்டாது, அதை திட்டமிட்டு மூடிமறைக்கின்றது. அதைத்தான் ஐரோப்பிய ஊடகங்கள் ஓரேநாளில் தலைகீழாக்கி செய்கின்றன. வெள்ளையின அடிப்படைவாத பயங்கரவாதம் உடனடியாக அம்பலமானதைத் தொடர்ந்து, வழிதவறிய மந்தையின் செயலாக அதைக் காட்ட முற்படுகின்றனர். இது வெள்ளையின நிற அடிப்படைவாதமல்ல, அது ஒரு தனிப்பட்ட ஒருவரின் குற்றமாக காட்டுவது முதல் அவன் ஒரு மனநோயாளி என்ற எல்லை வரை இதை இட்டுக்கட்டித் திரிக்கின்றனர்.

தங்கள் இன நிற மத மேலாதிக்கம் மூலம் உலக மேலாதிக்கத்தை பிரச்சாரம் செய்தவர்கள், அதற்கு இன்று பலியாகிப்போனார்கள். ஆனால் இந்த உண்மையை அவசரமாக குழிதோண்டி புதைக்கப் புறப்பட்டுள்ளனர். இந்த இன நிறவாத பயங்கரவாதத்தின் அரசியல் அடிப்படையாக உள்ளது தங்கள் சமூக பொருளாதார அரசியல் என்ற உண்மையை மறுக்க, அதற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இதை திரித்துப் புரட்டி வருகின்றனர்.

இந்தப் பயங்கரவாதியை உருவாக்கியது தாங்களும் தங்கள் அரசியலும் தான் என்ற உண்மையை மூடிமறைக்கவும், இந்தப் பயங்கரவாதத்தை தூண்டிய குற்றவாளிகள் தாங்கள் அல்ல என்பதை சொல்வதும் தான், இதன் பின்னுள்ள அரசியல் சூக்குமமாகும். இதைப் புரிந்து கொள்வது மூலம் தான், இந்தப் பயங்கரவாதத்தை புரிந்து கொள்ளமுடியும். இதன் மூலம் தான் சமூகத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

 

பி.இரயாகரன்

23.07.2011


பி.இரயாகரன் - சமர்