08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

குறும் தேசியத்துக்குள் (புலிக்குள் - கூட்டமைப்புக்குள்) தேசியக் கூறு உள்ளதா!? இருப்பதாக கூறும் அரசியல் ஏது?

தேசியம் வர்க்கம் கடந்த அரசியல் கூறல்ல. வர்க்கம் சார்ந்ததாக தேசியம் உள்ள வரை புலி - கூட்டமைப்பு அரசியல் முன்வைக்கும் "தேசியமோ" தேசியமேயல்ல. தேசியம் பற்றிய வர்க்கக் கண்ணோட்டம் மிகத் தெளிவாக தேசியம் என்றால் என்ன என்பதை வரையறுக்கின்றது. இப்படியிருக்க, தான் அல்லாத வர்க்க அரசியலின் பின் தேசியமும் தேசிய சக்திகளும் இருக்கின்றது என்று கூறுவது மோசடியல்லவா? இது வர்க்கம் கடந்த ஒன்றாக தேசியத்தை புனைகின்ற, பொதுப்புத்தி சார்ந்து முன்தள்ளும் இடதுசாரிய அரசியல் புரட்டாகும். அரசியல் வெற்றிடத்தில் (புரட்சிகர சக்திகள் கையில் எடுக்காத அரசியல் வெற்றிடத்தில்) இது எதிர்புரட்சி அரசியலாகத் தொடருகின்றது.

 

முரண்பாடுகளை முற்போக்கு சக்திகள் தங்கள் கையில் எடுக்கத் தவறும் போது, பிற்போக்கு சக்திகள் அதை தமதாக்குகின்றது. இது கடந்தகாலத்தில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் எம் முன்னுள்ள அடிப்படையான அரசியல் பிரச்சனையாக உள்ளது. முற்போக்கு சக்திகள் இன்று தம் கையில் இந்த முரண்பாட்டை நடைமுறைரீதியாக எடுக்காத வரை, பிற்போக்கு சக்திகள் தமது கையில் இதை தொடர்ந்து தக்க வைக்கும் அரசியலை உற்பத்தி செய்கின்றனர். இந்தவகையில் இடதுசாரிய அரசியலில் ஏற்படும் திரிபுதான்,  பிற்போக்கு கூறுக்குள் முற்போக்கு கூறுகள் இருப்பதாக கூறுகின்ற அரசியல். இந்த அரசியல் என்ன செய்கின்றது என்றால்,  அடிப்படை வர்க்கக் கோட்பாட்டையே திரிக்கின்றது.

இந்த எல்லைக்குள் தான் கூட்டணி - புலி - கூட்டமைப்பு ஊடாக தமிழ் தேசியத்தை இனம் காணவும், இதற்குள் அவர்களை அடையாளப்படுத்தும் அளவுக்கு இடதுசாரிய போக்குகள் உருவாகின்றது. சமூக முரண்பாடுகள் மேல் இடதுசாரியம் தன்னை நிலைநிறுத்தாத வரை, நடைமுறைரீதியான அரசியல் இயங்குதளத்தை உருவாக்காத வரை, சரியான கருத்தாக இது இயங்காத வரை,  பிற்போக்கு சக்திகள் தொடர்ந்து இந்த முரண்பாட்டை தம் வசப்படுத்துகின்றனர். இதுதான் தமிழ் தேசியத்தை சுற்றி நிகழ்ந்தது, தொடர்ந்து நிகழ்கின்றது.

ஆக இப்படி எழுகின்ற எம்மைச் சுற்றிய வரலாற்றுச் சூழலில், பிற்போக்கு சக்திகளால் தான் இந்த முரண்பாட்டை தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வெகுஜனங்கள் மத்தியில் எழுகின்றது. இப்படித்தான் கூட்டணி - புலி - கூட்டமைப்பு ஊடாக தேசியம் தொடர்ந்து பிரதிபலிக்கின்றது. வெகுஜனங்களின் இந்த நம்பிக்கை குருட்டுத்தனமானதாக இருக்கும் போது, இதை வளர்ப்பதா இடதுசாரிய அரசியல்!? இல்லை இதில் இருந்து விடுவிப்பது தான் இடதுசாரியம்.

இதை மாற்றியமைக்கும் போராட்டம், வெற்றிடத்தில் தானாக நடக்க முடியாது. புரட்சிகரமான கட்சி தனக்கான சொந்த வர்க்க அரசியல் நடைமுறைகள் ஊடாக, இதில் தீவிரமாக தலையிடுவதன் மூலம் தான் இது சாத்தியமானது. இது நடக்கும் போராட்டத்தில் தன்னை ஒரு வர்க்க சக்தியாக முன்னிறுத்தியும், தான் அல்லாத போக்கை அம்பலப்படுத்தியும் தன்னை முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும். தான் அல்லாத போக்கை அம்பலப்படுத்தாது, சரியான கருத்துகளால், சரியான நடைமுறையால் பிற்போக்கை அரசியல் ரீதியாக முறியடித்துவிட முடியும் என்பது இடதுசாரியத்தின் மற்றொரு விலகல். இந்த அரசியல் விலகல் பிற்போக்குக்குள் முற்போக்கு பிரதிபலிக்கின்றது என்ற அடிப்படை உள்ளடக்கத்தில் இருந்து பிறக்கின்ற அதே அரசியல்  திசைவிலகல்தான். சரியான கருத்துகள், சரியான நடைமுறைகள் தானாக எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. தவறான கருத்துகள், தவறான நடைமுறைகளில் இருந்து, மக்களை அரசியல் ரீதியாக விடுவிக்கவேண்டும். சரியான கருத்துகள், சரியான நடைமுறைகள் மட்டும் ஒரு இயங்கியல் போக்கில் தனித்து இயங்குவதில்லை. தவறான கருத்தும் தவறான போக்கும் கூடத்தான் தொடர்ந்து அக்கம் பக்கமாக இயங்குகின்றது. ஒரு வர்க்கப்போராட்டம் அனைத்து வடிவங்களிலும் இங்கு தொடருகின்றது. கட்சிகள், குழுக்களுக்கு இடையிலான முரண்பாடு வர்க்கங்களுக்கு இடையிலானது. இதுதான் அரசியல் தளத்தில் உள்ள தனிநபர்கள் வரை பொருந்தும். இங்கு எந்த வாக்கம் எதிரி, எந்த வர்க்கம் நண்பன் என்ற அடிப்படையில் தான், விமர்சனங்கள் அம்பலப்படுத்தல்கள் கையாளப்படவேண்டும்.

புலிகள் - கூட்டமைப்பு  எந்த வர்க்கத்தை பிரதிபலிக்கின்றனர் என்ற அடிப்படையில் வைத்துத்தான் பார்க்க வேண்டும். அது தன் வர்க்கத்தை அரசியல் ரீதியாக முன்னிறுத்தித்தான் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கின்றது என்ற உண்மையை மறுத்து, தேசியத்தை முன்னிறுத்தி பேசும் இடதுசாரியம் படுபிற்போக்கானது. இதற்குள் நல்ல சக்திகளும், மக்களும் இருக்கின்றனர் என்று கூறி அரசியல் செய்வது, அரசியல் சந்தர்ப்பவாதமாகும். அரசின் பின் கூட இதே போன்ற கூறுகளும், சூழலும் இருக்கின்றது. சமூக முரண்பாடுகள் மேல் முற்போக்கு சக்திகள் தீர்மானகரமான சக்தியாக மாறாதவரை, வெகுஜனங்கள் அனைத்து பிற்போக்கான அரசியல் செல்வாக்கிலும் தொடர்ந்து நீடிப்பர். இதை சொல்லி அதனுடன் கூட்டுச்சேரும் அரசியல், திட்டமிட்ட நன்கு தெரிந்து செய்யும் அரசியல் மோசடியாகும். இங்கு பிற்போக்கு சக்திகள் மக்களை தம்முடன் தக்கவைத்திருக்க, தொடர்ந்து தன்னை மூடிமறைத்தபடி போராடும். இது புலி, அரசு முதல் தனிநபர்களின் கோட்பாடுகள் வரை, இந்த அடிப்படையில்தான் முரண்பாடுகளை கையாளுகின்றன.

இங்கு முற்போக்கான அரசியல் கூறுகள் இதன் போக்கில் தன்னை முன்னிறுத்தி, மக்களை விடுவிக்கத்தான் என்பது சந்தர்ப்பவாத அரசியல். புலியுடன், அரசுடன் இப்படி கூறி சகவாழ்வு அரசியல் நடத்தும் இடதுசாரியம்,  இன்று தொடர்ந்து எங்கும் அரங்கேறுகின்றது.

இங்கு வர்க்கமற்ற அரசியல் சகவாழ்வா அல்லது வர்க்கப் போராட்டமா என்பது தான் புரட்சிகரமான அரசியலைத் தீர்மானிக்கின்றது. இங்கு இதை அம்பலப்படுத்தாது சரியான கருத்துகளை முன் வைப்பதன் மூலம், அவர்களை கருத்தால் வென்று தோற்கடிக்க முடியும் என்ற தவறான அரசியல் போக்கும் இதனடிப்படையில் தான் உருவாகின்றது. சரியான கருத்து மூலம் மேவி, நாம் வென்று விட முடியும் என்ற அரசியல் சமரசவாதத்தை உருவாக்குகின்றது.

1980 களில் தேசியம் மையப்படுத்தபட்ட போது, முற்போக்கான தேசியக் கூறு பிற்போக்கான தேசியக் கூறு மீது ஒரு சமரசத்தைக் கையாண்டது. பிற்போக்கான தேசியக் கூறு மீதும், அதை பிரதிபலித்த அமைப்புகள் மீதான வர்க்க அம்பலபடுத்தலை செய்து தன்னை அமைப்பாக்கவில்லை. பிற்போக்கை அம்பலமாக்காத தேசியம் மீது தன் கருத்தால் மேவவும், சமரசம் மூலம் அதை வெல்லவும் முனைந்தது. அதேநேரம் இயக்கத்துக்கும் மக்களுக்கும், இயக்கத்துக்கும் இதன் உறுப்பினர்க்கும் இடையிலான முரண்பாடுகள், பகை முரண்பாடாக மாறிக்கொண்டு இருந்தது.

ஆனால் இடதுசாரிகள் இதற்கு அப்பால் பிற்போக்கை அம்பலமாக்காத தேசிய கருத்தால் மேவவும், சமரசம் மூலம் சூழலை வெல்லவும் முனைந்தனர். இதில் அவர்கள் தோற்று இறுதியில் இந்த வழியை கைவிட்டு, மக்கள் முரண்பாட்டைச் சார்ந்து தலைமை தாங்க முற்பட்டனர். இதன் போது இது காலம் கடந்த சூழலில் தப்பியோடவும் அல்லது பலியாகும் நிலைக்குள் சென்று, மொத்தப் போராட்டத்தையும் படுகுழியில் கைவிட்ட நிலையே தோன்றியது.

பிற்போக்கான கோட்பாடுகளுக்கும், அதன் நடைமுறைகளுக்கும் முற்போக்கு சக்திகள் வழங்கிய சலுகைகளே, முற்போக்கு சக்திகளை தோற்கடித்தது. இதில் மையவாத சக்திகளின் அரசியல்தான், முரண்பாட்டை வர்க்க அடிப்படையில் வைத்து அம்பலப்படுத்துவதை தடுக்கின்றது.

புலிகளில் தேசிய கூறுகள் உண்டு, அதில் நல்ல சக்திகள் உண்டு என்று கூறி, புலிகளை அம்பலமாக்காது தடுக்கின்ற மையவாத அரசியல் போக்கு, தன்னை இடதுசாரியமாக வெளிக்காட்டுகின்றது. புலிகளுடன் - கூட்டமைப்புடன் இணைங்கி போவதன் மூலமும், அவர்களை கருத்தால் வென்று எம்மை நிலைநாட்டுதல் என்ற சந்தர்ப்பவாத அரசியலாக  இது வெளிப்படுகின்றது. இந்த போக்கில் எம்மைச் சுற்றி பல்வேறு முரண்பாடுகளை மேலும் நாம் காணமுடியும்;.

நாம் தேசியத்தை எப்படி அணுகுவது? முரணற்ற வகையில் தேசியத்தை முன்னிறுத்தி, அதுவல்லாத அனைத்துப் போக்குகளையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும். அதை யார், எந்த கட்சி கொண்டு இருந்தாலும், அவர்களை தெட்டத் தெளிவாக அம்பலமாக்க வேண்டும். இதன் மூலம் மக்களை அதில் இருந்து விடுவிக்கவேண்டும். இது இன்று நாம் செய்து கொண்டு வெறும் கருத்தால் மட்டுமல்ல நடைமுறையாலும் கூடத்தான். கருத்தை நடைமுறையாக்குவது எப்படி என்பது (மண்ணில் - புலத்தில்) எம்முன்னுள்ள பாரிய சவால். இன்று மக்கள் பின்பற்றி நிற்கும் நபர்கள், குழுக்கள், கட்சிகள் எதுவாகினும் அதில் இருந்து மக்களை விடுவிக்கும் வண்ணம் அவர்களை அம்பலமாக்கவேண்டும். இங்கு மிகச் சரியாக அம்பலமாக்கிவிட்டால், சரியான கருத்துகள் இருந்து விட்டால், அதை மக்கள் படித்துவிட்டால், தானாக மக்கள் அதில் இருந்து தம்மை விடுவித்துவிடுவார்கள் என்பதும், ஏன் புரட்சியே அதனூடாக வந்துவிடும் என்பது கற்பனையானது. சரியான கருத்துக்கள் மக்களிடம் சென்று விட்டால், மாற்றம் தானாக வந்துவிடாது.

இதை இலகுவாக புரிந்துகொள்ள புலியின் வன்முறை புரியாத, உணராத எந்த தமிழ்மக்களும் அன்றும் இன்றும் கிடையாது. கூட்டணியின், கூட்டமைப்பின் தேர்தல் மூலமான பம்மாத்தை புரிந்து கொள்ளாத தமிழ் மக்கள் யாரும் கிடையாது. ஆனால் மாற்றம் எதுவும் தானாக நிகழவில்லை. இதை அம்பலப்படுத்தி இதை எதிர் கொள்ளும் அரசியல் உணர்வும், இதை அடிப்படையாக கொண்ட ஸ்தாபனமும் நடைமுறையும் உருவாகாத வரை, மாற்றம் தானாக நடக்காது. சரியான கருத்துகள் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடாது. இது பற்றி விரிவாக தனியாக மற்றொரு கட்டுரையில் நாம் பார்ப்போம்.

கூட்டணிக்கும் அதைத் தொடர்ந்து கூட்டமைப்புக்கும் மக்கள் வாக்களிப்பதால் அல்லது தமிழ் தேசியத்தை இது பிரதிபலிப்பதால், அங்கு நல்ல சக்திகள் புரட்சிகர சக்திகள் இருப்பதாக கூறி, இடதுசாரிய அரசியல் செய்தால் அது மாபெரும் அரசியல் மோசடியாகும். இது புலிக்கு விதிவிலக்கல்ல. அரசுக்கும் கூட விதிவிலக்கல்ல. இங்கு கூட்டணி - புலி - கூட்டமைப்பு ஊடான தேசிய பிரதிபலிப்பை தேசியமாக காட்டி அவர்களுடன் அரசியல் செய்வது இடதுசாரிய திரிபாகும்.

தேசியம் என்ற வர்க்க அரசியல் வரையறையை நிராகரித்த, அரசியல் பித்தலாட்டம் இங்கு அரங்கேறுகின்றது. புலித் தேசியம் படுபிற்போக்கானது. இந்த பிற்போக்கான தேசியத்தின் அடிப்படையில், தேசியத்தில் நல்ல சக்திகள் இருக்க முடியும் என்பது தேசியத்தை வர்க்கம் கடந்ததாக காட்டி செய்யும் மோசடி. பிற்போக்கான வர்க்கம் முன்னிறுத்தும் தேசியத்தில், முற்போக்கான தேசியம் எப்படி இருக்க முடியும்? இப்படி காட்டும் அந்த  நல்ல சக்திகள் முன்தள்ளும் தேசியத்தின் அடிப்படையான வர்க்க கூறு தான் என்ன? தேசியம் தொடர்பான அரசியல் திரிபு. இது படுபிற்போக்கான தேசியத்தில் முற்போக்கு தேசியம் இருப்பதாக கூறி, அதை முற்போக்கு தேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துகின்றது. இதுதான் புலிக்கு பின் காட்டும் தேசியத்தின் பின்னான அரசியல் உள்ளடக்கமாகும்.

பி.இரயாகரன்
19.07.2011


பி.இரயாகரன் - சமர்