08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

"வர்க்க ஆய்வு", "குறிப்பான சூழ்நிலை ஆய்வு" என்று படம் காட்டி செய்யும் புலி அரசியல்

இனியொருவும்-புதியதிசையும் தங்கள் திடீர் அரசியலுக்கு ஏற்ப, தாங்கள் புலியுடன் நடத்தும் புலி அரசியலுக்கு ஏற்ப, புலியைப் புரட்சிகரமானதாக காட்ட, புலியைத் திரிக்கின்றனர். அதே நேரம் புலி மூன்றாகப் பிரிந்து கிடப்பதாக படம் போட்டுக் காட்டுகின்றனர்.

"தமிழ்ப்பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நேர்மையாகப் பங்காற்ற விரும்புவோர்" என்ற அரசியல் உள்ளடக்கத்தில், புலிகள் எதார்த்தத்தில் பிரிந்து இருக்கின்றனரா? எனில் இல்லை. அரசியல் ரீதியாக, நடைமுறைரீதியாக "நேர்மையான" தேசியத்தை முன்னிறுத்தி, மற்றைய இரு போக்குகளையும் விமர்சிக்கின்ற புலித் தேசியவாதிகள் அணி என எதுவும் தன்னை எதார்த்தத்தில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. தங்கள் புலி அரசியலுக்கு ஏற்ப, கற்பனையில் புலிக்குள் இந்த அணியுடன் தான் தாங்கள் அரசியல் செய்வதாகக் கூறி அதற்கு படம் போட்டுக் காட்டுகின்றனர்.

 

இல்லாத இந்தப் புலி அணி, அவர்கள் கூறுவது போலவே இருப்பதாக நாம் எடுத்துக் கொண்டு அதையும் ஆராய்வோம். இவர்கள் யார்? இவர்கள் அரசியல் என்ன? "இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான" புலித் தேசியத்தை முன்னிறுத்தினால் அது முற்போக்கானதா? முற்போக்கானது என்று கூறியே புலி அரசியல் செய்கின்றளர்.

மூடிமறைத்து முன்தள்ளும் இந்த அரசியல் படமாக்கல் சூக்குமத்தை நாம் ஆராய, இனியொருவும்-புதியதிசையும் மற்றைய இரு அணி யார் என்று வகைப்படுத்தி உள்ளதில் இருந்து பார்ப்பது அவசியமாகின்றது.

"1.மக்களின் விடுதலை உணர்வுகளை தமது சொந்த இருப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்வோர்.

2.மக்களின் விடுதலை உணர்வுகளை மூலதனமாக்கி வியாபார அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வோர்."

இந்த இரு அணிகளும் அல்லாத மூன்றாவது அணி தான், தாங்கள் கூடி அரசியல் செய்யும் அணி என்கின்றனர். ஆக தாங்கள் அப்பளுக்கற்ற நோக்கில் பிரபாகரனால் கட்டியமைத்த, புலியுடன் கூடி புலி அரசியல் செய்வதாக கூறுகின்றனர்.

ஆக இதன் அரசியல் "வியாபாரம்" அல்லாத, "இருப்பிற்காக" அல்லாத தூய்மையான புலிப் பாசிசத்துடன் கூடிய புலி அணிதான் இந்த மூன்றாவது அணி. புலிகள் என்ற அணி. 1980 கள் முதல் புரட்சிகரமான சக்திகளால் நிராகரிக்கப்பட்ட அந்த அணி. ஆம் புலி தன்னை தூய்மையானதாக ஒன்றாக எப்போதும் காட்டியும் கூறியும் வந்த அந்த விம்பத்தை அடிப்படையாகக் கொண்ட அணி. ஆக இந்த தூய்மையான புலியுடன் தாங்கள் கூடி அரசியல் செய்வதாக கூறுகின்றனர்.

பாசிசப் புலிகள் காலகாலமாக எதைத் தங்கள் அரசியல் விம்பமாகக் காட்டினரோ, அதை இருப்பதாக படம் போட்டு காட்டி செய்யும் பித்தலாட்ட அரசியலாகும் இது. உண்மையில் "வியாபாரம்" அல்லாத, "இருப்பிற்காக" அல்லாத அணி தான் பாசிசப் புலி. இந்தப் புலி அணியைச் "சார்ந்தவர்களின் கருத்துக்களை உள்வாங்கி அவர்களுக்கே வழங்குதல் என்பதும் பின்னர் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளல் கற்பித்தல் என்ற இயங்கியல் உறவைத் தடை" செய்யாது வளர்க்கவேண்டும் என்கின்றனர் திடீர் "மார்க்சியவாதிகள்". ஆக தூய்மையான நேர்மையான புலியுடன், புலித்தேசியத்துடன் தான், தாங்கள் கொஞ்சி விளையாடுவதாக கூறுகின்றனர்.

இப்படி கூடிக் கூத்தாடும் அணி யார் என்பது தெளிவாகிவிட்டது. ஆம் இவர்கள் புலிக்கு வெளியில் இல்லை. இவர்களின் அரசியல் என்ன? தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்ச்சியில் உருவான அதே புலி அரசியல். தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல். 1970 கள் முதல் 2009 வரையான புலியின் விம்பம் சார்ந்த நேர்கோட்டு அரசியல். வர்க்கமற்ற, தேசியத்தை முன்னிறுத்திய திடீர் அரசியல். இது சாராம்சத்தில் "இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான" தெனக் கொள்ளப்படும் அதே புலி அரசியல்.

"ஏ(A).இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வைக் கொண்ட தமிழ்ப்பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நேர்மையாகப் பங்காற்ற விரும்புவோர்." என்று புலியை வலிந்து வகைப்படுத்திய வெளிக்கு அப்பால்,

1.1. இந்தப் அரசியல் போக்கை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் மற்றைய இரண்டு போக்குகளுக்கும் எதிராக இயங்கிவருகின்றதா? இல்லை. மற்றயை இரு போக்குகளையும் அம்பலப்படுத்தி செயல்படும் அரசியல் வெளிப்பாடு எதுவும் கிடையாது.

1.2. தன்னை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தாத இந்தப் பிரிவின், வர்க்க அரசியல் என்ன? அந்த வர்க்க அரசியல் தேசியத்துக்கு முரணானது.

1.3. மூன்று பிரிவு உள்ளதாக வகைப்படுத்திக் காட்டிய "படமாக்கல்" அடிப்படையாகக் கொண்ட புலி அரசியல், அடிப்படையில் தேசியத்துக்கும் மக்களுக்கும் எதிரானது. இதைத்தான் கடந்தகால புலி வரலாறு காட்டுகின்றது.

1.4. முள்ளிவாய்க்கால்களுக்கு முன் "தமிழ்ப்பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நேர்மையாகப் பங்காற்ற விரும்புவோர்." புலிக்குள் இருக்கவில்லையா!? அன்று இதே அடிப்படையில் புலியுடன் சோரம் போன அதே இடதுசாரித்தனத்தைத்தான், இங்கு மீள் கண்டுபிடிப்பாக, ஆய்வாக மீள முன்தள்ளப்படுகின்றது.

2. புலி அல்லாத இனியொரு-புதியதிசையின் புரட்டு அரசியலில்

"1.புலிகளின் அரசியல் வழிமுறை தவறானது என்றும் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதற்குத் தமக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் புலிகளை எதிர்த்துக் குரல்ழெழுப்பியவர்கள்." என்று திரிக்கின்றனர்.

"இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதற்குத் தமக்கும் உரிமை வேண்டும" என்று நாம் முதன்முதலில் அரசியல்ரீதியாக வகைப்படுத்தி வைத்தபோது, அதை வர்க்க அடிப்படையில் தான் முன்வைத்தோம். இதை தமக்கு ஏற்ப இன்று திரித்து தேசியத்தின் வரையறைக்குள் குறுக்கி புலியுடன் கூடிக் குலாவும் வகையில் திரித்து முன்வைக்கின்றனர்.

2.1. அரசுக்கு எதிரான குறுந்தேசிய போராட்டாமா? அல்லது அரசுக்கு எதிரான வர்க்கப் போராட்டாமா?

2.2. தேசியம் சாராம்சத்தில் வர்க்கப் போராட்டம். இதை மறுத்துப் போராடும் உரிமையை நாம் கோரவில்லை.

2.3. "புலிகளின் அரசியல் வழிமுறை தவறானது" என்றால், எப்படி புலிக்குள் சரியான அரசியல் பிரிவு இருக்க முடியும்!?

இங்கு இந்த வகைப்படுத்தல்கள் தனிப்பட்ட நபர்கள் தங்கள் பித்தலாட்டங்களை மூடிமறைக்கும் மோசடிகள். புலிகள் மற்றவர்களைக் கொன்று, தாம் அல்லாத அனைத்தையும் துரோகமாகக் காட்டி, தாம் மட்டும் போராடும் சக்தியாக தன்மை முன்னிறுத்திய போது, இதுதான் விடுதலைப் போராட்டம் என்று நம்பவைக்கப்பட்டது. இப்படித்தான் இதற்குள் உண்மையான தியாகங்கள் வரை நடந்தேறியது.

ஆனால் புலி அரசியலும், அதன் வர்க்க அடிப்படையும் உண்மையான தேசியத்துக்கு எதிராக இருந்தது. பாரிய பலத்துடன், தாமே அனைத்தும் என்ற பாசிசமயமாக்கலுடன் புலிகள் தங்களை முன்னிறுத்திய போது, அதை எதிர்த்துப் போராடுவதன் மூலம் தான், ஒரு சரியாக வர்க்க தேசியத்தை முன்னிறுத்துவது அவசியமானதாக இருந்தது. உண்மையான தேசபக்தர்களை சரியான பக்கத்துக்கு கொண்டு வருதல் என்பது, புலிகளுடனான இணக்க அரசியல் ஊடாக அல்ல. மாறாக எமது சொந்த அரசியல் ஊடாகத்தான். எமது சொந்த வர்க்க அரசியல் அணிதிரட்டல் மூலம்தான்.

இதை நாம் செய்வதன் மூலம்தான், உண்மையான தேசபக்தர்களை புலியில் இருந்து விடுவிக்க முடியும். பரந்துபட்ட மக்களுக்கு புலியை அம்பலப்பபடுத்தாமல், புலித் தலைமையுடன் நடத்தும் சமரச அரசியல், உண்மையான தேசபக்தர்களை புலிக்குள் நீடித்து இருக்கத்தான் கோருகின்;றது.

இது அவர்கள் காட்டிய படத்தின் எல்லைக்குள்ளான அரசியல் பித்தலாட்டம். அடுத்து இந்த அரசியல் பித்தலாட்டத்தை "வர்க்க ஆய்வு", "குறிப்பான சூழ்நிலை ஆய்வு" என்று இதைக் கூறுகின்றனர். மக்களின் இன்றைய அரசியல் நிலையில் இருந்து அணுகி ஆராயாத அரசியல், பம்மாத்து அரசியலாகும். புலி மாபியாக் குழுவை மையப்படுத்திய ஆய்வு புரட்டுத்தனமானது. இங்கு இதன் அரசியல் பின்புலம் தனிமனிதர்களை மையப்படுத்தியது. இதற்காக தாங்கள் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை நியாயப்படுத்தவே, வகைப்படுத்தலும் படமாக்காலும்.

இது எமது வரலாற்றில் புதிதல்ல. இதன் அடிப்படையில் கடந்தகாலத்தில் பலர் புலியாகினர். புலிகளுடன் தேசியம் என்றும், அரசுடன் ஜனநாயகம் என்று சொல்லி, மக்கள் விரோதிகளாக பலர் மாறினர். இப்படி இடதுசாரிகள் நடத்திய மக்கள் விரோத அரசியலுக்கு, பற்பல அரசியல் தர்க்கங்கள் விளக்கங்கள்.

இந்த எல்லையில் திடீர் இடதுசாரியம் பேசிய இனியொருவும்-புதியதிசையும், தேசியத்தின் பெயரில் புலிக்குள் உள்ள தேசபக்த சக்திகளுடன் தான் தாங்கள் கூடிக் கூத்தாடுவதாகக் கூறுகின்றனர். இதைத்தான் அவர்கள் படம் போட்டுக் கூறுகின்றனர். இதை "வர்க்க ஆய்வு", "குறிப்பான சூழ்நிலை ஆய்வு" என்று கூறி, புலியுடன் கூடிக்குலாவுவதற்கான படமாக்கலைச் செய்கின்றனர்.

சரி இந்த "வர்க்க ஆய்வு", "குறிப்பான சூழ்நிலை ஆய்வு" எங்கிருந்து எதற்காகத் தொடங்குகின்றனர். தங்கள் சொந்த தனிப்பட்ட நலன் சார்ந்த அரசியல் பித்தலாட்டங்களை நியாயப்படுத்த செய்யும் புரட்டு. தமிழினத்தை புலி – புலியெதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி, அதற்குள் சமூகம் சுருங்கிக் கிடப்பதாகக் காட்டி, தங்கள் அரசியல் பித்தலாட்டம் சமூகம் சார்ந்ததெனக் காட்ட முற்படுகின்றனர்.

உண்மையில் பரந்துபட்ட மக்கள், இந்த புலி-புலியெதிர்ப்புக்கு வெளியில் அரசியல் அனாதையாக உள்ளனர். புலிக்கு வெளியில் அரசியல் அனாதையாக உள்ள மக்களை அணிதிரட்டுவதற்கு, எதற்காக புலியுடன் கூட வேண்டும்!? இந்த நிலையில் இவர்களின் கள்ளக் கூட்டு, மக்களுக்கு எதிரானது. அந்த மக்களை அரசியல் ரீதியாக மேலும் அனாதையாக்குவது தான். மாபியாக் கட்டமைப்பைக் கொண்டு மக்களை மந்தையாக மேய்க்கும் புலியுடன் சேர்ந்து, தொடர்ந்து மேய்க்கும் குறுகிய அரசியல் தான் இது.

இந்த புலிக் கூட்டுக்கு வெளியில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், புலியின் மாபியா தனத்தின் கீழ் இருந்து முற்றாக விடுபட்டுள்ளனர். புலத்து மக்கள் புலி மாபியாவின் பின் மந்தையாக இருந்த போக்கில் இருந்து விலகிவிட்டனர். இன்னும் ஒரு சிறிய பகுதிதான், புலி மாபியாக்களின் கொடுக்கல் வாங்கல் எல்லைக்குள் நீடிக்கின்றனர். இலங்கை – புலம் எங்கும், பரந்துபட்ட மக்கள் புலியின் மாபியாப் பிடியில் இருந்து விலகி அரசியல் அனாதையாகி விட்டனர். இந்த மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கான பரந்த வெளியிருக்கின்றது. இதைச் சுற்றி பல தடைகள் இருக்கின்றது. இப்படியிருக்க புலிக்குள் தேசபக்த பிரிவு இருப்பதாக கூறி, அது தன்னை தனித்துவமாக வெளிப்படுத்துவதாக கூறி நடத்தும் அரசியல் மோசடி, பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது.

இந்த மோசடி, புலியில் உள்ள தேசிய சக்திகளின்பின், மக்களை மீள அணி திரளக் கோருவதாகும். இப்படி தன்னை வெளிப்படுத்தாத ஒரு அணியின் பெயரில் அரங்கேற்றும் மோசடி. சரி இப்படியொரு அணி இருப்பதாக மீண்டும் எடுத்துக்கொண்டால், அதன் இருப்பும் அதன் செயல்பாட்டுத்திறனும் புலி மாபியா கட்டமைப்பைச் சார்ந்து தான். அதனால் அரசியல் ரீதியாக தனித்து இருக்கவும் நீடிக்கவும் முடியும். ஆக இதை நம்பித்தான், இனியொருவும்-புதியதிசையும் பேரினவாதத்துக்கு எதிராக மக்களைப் போராட அழைக்கின்றனர்.

இந்த மோசடிக்கார திடீர் அரசியல், பிரிந்து போகும் சுயநிர்ணயம் என்று புலி அரசியலுக்கு ஏற்ப சுயநிர்ணயத்தையே திரிக்கின்றது. ஜே.வி.பி. ஐக்கியப்பட்ட சுயநிர்ணயம் என்று கூறி சுயநிர்ணயத்தையே திரித்து இனவாதத்தை தொழுததுபோல், பிரிந்து போகும் சுயநிர்ணயத்தின் பெயரில் புலிகளுடன் சேர்ந்து குறுந்தேசியத்தை தொழக் கோருகின்றது.

மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டுவதற்கான அரசியல் வேலைத்திட்டத்தையும், நடைமுறையையும் முன்வைக்க தயாரற்றவர்கள், புலியுடன் கூடி அரசியல் செய்ய தேசியத்தை முன்தள்ளுகின்றனர். "இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான" அரசியல் அளவுகோலை, தேசியத்துக்கான அரசியல் வரையறையாக கொள்கின்றனர். இந்த எல்லையில் "சுயநிர்ணயத்தின்" அடிப்படையிலான சமூக பொருளாதார பண்பாட்டு கூறுகளைக் கூட புலியுடன் கூடி நிற்க மறுக்கின்றனர்.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கடமை இதற்கு மாறானது. உண்மையான தேசபக்தர்களை புலியின் அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டுமே ஓழிய, அவர்களை புலிக்குள் தக்கவைப்பதற்கான அரசியல் அல்ல எமது தெரிவு. எமது சொந்த வர்க்க அமைப்பைக் கட்டுவதே எமது அரசியல் தெரிவே ஓழிய, புலியுடன் இணக்க அரசியலுக்கு உட்பட்ட " இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வைக் கொண்ட" பிரிந்து போகும் சுயநிர்ணயத்தை முன்னிறுத்திய புலியை மீளக் கட்டுவதல்ல எமது தெரிவு. பரந்துபட்ட மக்களை வென்று எடுப்பதுதான் எமது அரசியலே ஒழிய, மாபியா அடிப்படையிலான அமைப்பு உறுப்பினர்களை வென்று எடுப்பது எமது தெரிவல்ல.

கணிதம் மூலம் எல்லோராலும் விளங்கிட முடியாத சூக்குமத்தை முன்வைத்து, அதை "வர்க்க ஆய்வாக", "குறிப்பான சூழ்நிலை ஆய்வு"வாக, மக்களை அனாதையாக விட்டுவிட்டு புலி மாபியாக்களுடன் சேர்வதற்கு ஏற்ப படம் காட்ட முனைகின்றனர்.

கணிதத்தில் ஒரு அட்டவணையில் உள்ளது, இரண்டாவது அட்டவணையில் உள்ளதுடன் இணைந்து செல்லும் அல்லது விலகிச் செல்லும் வரைவைக் கொண்டு, "பேரினவாதத்திற்கு எதிரான ஒற்றுமை - அரசியல் படமாக்கல்" மூலம் கூறவருவது, வர்ககமற்ற குறுந்தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களை நிராகரித்த அதே புலி அரசியல்தான். இந்த அடிப்படையில் தான் மக்களின் இன்றைய நிலையை ஆய்வுப் பொருளாகக் கூட எடுக்கவில்லை. இவர்களின் நோக்கம் மக்களை அணி திரட்டுவதல்ல, புலியை அணிதிரட்டுவது தான்.

பி.இரயாகரன்

07.07.2011


பி.இரயாகரன் - சமர்