பயங்கரவாதத்தின் பெயரில் அரசும் அதன் படையும் எதையும் செய்யலாம் என்ற விதிக்கமைய, பெண்கள் மேல் பாலியல் வன்முறை ஏவப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கையாண்ட ஆயுதங்களில் ஒன்று ஆணாதிக்கம். ஆம் பெண்கள் மேலான பாலியல் வன்முறை. அச்சம் காரணமாக அல்லது நிர்ப்பந்தம் காரணமாக இணங்கும் பாலியல் வன்முறை முதல் பெண் பிணத்தை நிர்வாணமாக்கி புணரும் ஆணாதிக்க வன்மம் வரையான அனைத்தையும் பேரினவாதம் செய்தது. பேரினவாதத்தின் பின்னணியில், யுத்தத்தின் பின்னணியில் இவை அரங்கேறியது. இதற்கு நிகராக ஆணாதிக்க புனிதம், இதையெல்லாம் தன் பங்குக்கு மூடிமறைத்தது.

 

 

 

பொதுவான போர்க்குற்றத்தையும், அதில் பாலியல் ரீதியான குற்றத்தையும் புலிகள் வெளிக்கொண்டு வரவில்லை. புலியே ஒரு குற்றக் கும்பலாக இருந்தது. அதேநேரம் தங்கள் அமைப்பினது புனிதத்தின் பெயரில், ஆணாதிக்க சமூகம் முன்தள்ளிய புனிதத்தின் பெயரில் பெண்கள் மேலான பாலியல் குற்றத்தை மூடிமறைத்தவர்கள் புலிகள். புலிகளின் அரசியல் யோக்கியத்தை புரிந்து கொள்ள, அண்மையில் வெளியாகிய ஐ.நா போர்க்குற்ற ஆவணத்தை முழுமையாக புலி ஆதரவு இணையங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. அதை தமிழ் மக்களுக்கு இருட்டடிப்பு செய்தனர். (பார்க்க : இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையின் முழுமையான மொழியாக்கம்).  இப்படிப்பட்ட புலிகள் சனல் 4 வீடியோவில், 5 நிமிடத்தை வெட்டிய பின்தான். (பார்க்க : சனல் 4 ஆவணத்தில் 5 நிமிடங்களை நீக்கியது யார்? நீக்கியது ஏன்?)

இப்படித்தான் உண்மைகளைப் புதைத்து, அதை தமிழ்மக்களுக்கு காட்டினர். இந்தப் புலிகள் சார்ந்த சமூக மேலாண்மையுடன், பெண்கள் மேலான பேரினவாதக் குற்றத்தை மூடிமறைத்தது.

இந்த நிலையில் இதை அரசுக்கு எதிரான ஒரு குற்றமாக, ஆதாரங்களுடன் வெளியலகின் முன் கொண்டு வந்தவர்கள் சிங்கள அறிவுத்துறையினர்தான். யாரைப் புலிகளும், தமிழ்தேசியமும் தமிழ்மக்களின் எதிரி என்றார்களோ, அவர்களே தான் இதை பேரினவாதிகளுக்கு எதிராக இன்று கொண்டு வந்துள்ளனர். அரசால் கொல்லப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் பலர் இதன் காரணமாகத்தான் என்பது இதில் உள்ள மற்றொரு அரசியல் உண்மை. பெண்கள் மேலான பாலியல் குற்றத்தை இன்று வெளிக்கொண்டு வந்தவர்கள், இதற்கு எதிரான உணர்வுடைய சிங்கள அறிவுத்துறையினர் தான். சனல் 4 இல் உள்ள பெண்கள் மேலான ஒரு காட்சி, எம்மால் தான் வெளியுலகின் முன் கொண்டுவரப்பட்டது. இதை நாம் 2008 மார்கழி மாதம் கொண்டுவந்த போது (பார்க்க : ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது) அதை எதிர்த்து புனிதத்தின் பெயரில் அதை நீக்கக் கோரினர் புலிகள். அதை எதிர்த்து அன்று நாம் எழுதியது

 

1. சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்

2. மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் பெண்ணியல்வாதிகள்

3. பேரினவாத பாலியல் இழிசெயலுக்கு எதிராக எழுந்துள்ள குரல்கள்

4. பெண்ணை நிர்வாணமாக்கும் பேரினவாதக் கொடுமையை, தமிழ்மக்களுக்கு மூடிமறைக்க கோருகின்றனர்?

5. கருத்தாக அனுமதிக்க முடியாதவையும், நிர்வாணப்படுத்தும் அரசியலும்

6. பெண்கள் மேலான பாரிய பாலியல் போர்க் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)

7. பெண்களை நிர்வாணப்படுத்தியது புலியென்று, அரச ஆதரவாக ஆய்வு செய்கின்றனர்

8. வெளியாகிய போர் குற்றத்தின் முழுமையான வீடியோ காட்சிகள்

9. பேரினவாதிகள் வெளியிடாத காட்சிகள், போர்க்குற்றத்தை எடுத்தியம்பும் புதிய யுத்தக் காட்சிகள் (கவனம் : கோரமான காட்சிகள்).

இப்படி மூடிமறைக்க முனைந்த புலியை எதிர்த்து நாம் எழுதவேண்டி ஏற்பட்டது. பல போர்க் குற்றக் காட்சிகள் புலிகளால் மூடிமறைக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னான பல உண்மைகளைக் கொண்ட ஆவணங்கள், புலிகளால் தான் இன்று மூடிமறைக்கப்பட்டு இருக்கின்றது. பெண்கள் மேலான குற்றங்கள், ஆணாதிக்க புலிகளால் பெண்ணியம் சார்ந்து கொண்டு வருவது என்பது கூட அவர்களின் அரசியலுக்கு எதிரானதாக மாறிவிடும்.

இந்த நிலையில் ஐ.நா அறிக்கை, மற்றும் சனல் 4 ஆவணத்தில் பெண்கள் சார்ந்த குற்றங்களை சிங்கள அறிவுத்துறையினர் தான் வெளிக்கொண்டுவந்தனர். இப்படி எம்மைச் சுற்றிய உண்மைகள் இருக்க, குறுகிய தமிழினவாதத்தால் இந்த உண்மைகளும் கூட மழுங்கடிக்கப்படுகின்றது.

புனிதத்தின் பெயரில் பெண்கள் மேலான பாலியல் கொடுமைகளை தமிழ் புனிதமும் பாசிசமும் மூடிமறைக்க, பேரினவாத இராணுவம் அதை யுத்தத்தை செய்யும் உற்சாகமான மனநிலைக்குரிய ஆணாதிக்க ஆயுதமாகப் பயன்படுத்தியது. இப்படி யுத்தத்தின் இன்னொரு பக்கம், ஆணாதிக்க மரபு சார்ந்த புனிதத்துடன் புதைக்கப்பட்டு இருக்கின்றது.

அரசு மற்றும் புலியும், அதை ஓட்டிவாழ்ந்த ஒட்டுண்ணிகள் மூலமும் எம் இனம் இப்படியும் அழிந்திருக்கின்றது. தனக்கு நடந்த பல கொடுமைகளை இன்னமும் பேச முடியாத எல்லையில், இருதரப்பும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

பெண்கள் இந்த யுத்தத்தில் சந்தித்த கொடுமைகளில் பாலியல் ரீதியான குற்றங்களை புனிதமாக மாற்றி புதைக்கக் கோருகின்றது ஆணாதிக்கம். இதை மீறி யுத்தம், யுத்தக் காட்சிகள் வெளிவருகின்றது. காட்சியில் நிர்வாணமாக்கப்பட்ட பெண்களின் உடல்கள். இப்படி நிர்வாணமாக்கபட்ட உடல்களை மறைக்க, மீளப் போர்த்திய காட்சிகளும் விலக்கும் காட்சிகள். பெண் பாலியல் உறுப்புகளின் தனித்துவமான காட்சிகள், அதைப் பற்றிய உரையாடல்கள் யுத்தத்தின் பின்னால் பெண்களுக்கு நடந்த கொடுமையையும், அதன் கோரத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.

மே17 புலியின் முன்னணி தலைவர்கள் சரணடைந்த பின் அவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உண்மையை மறைக்கும் புலிகள் தான், அப்படியொரு சரணடைவே நடக்கவில்லை என்றுதான் கூறுகின்றனர். இந்தப் பின்னணியில் நடந்த இது ஒரு போர்க்குற்றம் என்பதை மூடிமறைக்கின்றனர். மக்களை ஏய்த்து வாழும் தங்கள் பிழைப்பு சார்ந்து இதை மூடிமறைக்கின்றனர். இப்படி அரசின் போர்க்குற்றத்தை மறுத்துத்தான், புலிகள் சாட்சியமளிக்கின்றனர். புலிகள் சரணடையவில்லை, சண்டையில் தான் செத்ததாக சத்தியம் செய்து, அரசுக்கு எதிரான போர்க்குற்றத்தை மறுத்து அரசுக்கு ஆதரவாக பொய்ச்சாட்சியம் வழங்குகின்றனர். பிரபாகரன், பொட்டர் உள்ளிட்டவர்கள் உயிருடன் இருப்பதாக கூறி, அவர்களைக் கொன்ற அரசுக்கு ஆதரவாக நீங்கள் கொல்லவில்லை என்று முழக்கமிடுகின்றனர்.

இப்படிப்பட்ட பிழைப்புவாத புலிப் பின்னணியில் தான், சரணடைந்த பெண்களை பேரினவாதம் பாலியல் ரீதியாக குதறியது. நாய்களும் நரிகளும் குதறிய பின்னான காட்சிகள், ஆங்காங்கே இன்று வெளிவருகின்றது. இதை புனிதத்தின் பெயரில், தமிழ் மானத்தின் பெயரில் மூடிமறைக்கக் கோரினர் புலத்து புலி மாமாக்கள். இப்படி அப்படியும் மூடிமறைக்க, இந்த கொடூரத்துக்கு எதிராக சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த உண்மைகளையும் இன்று வெளிக்கொண்டு வருகின்றனர்.

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தங்களில் சிலரை இழந்து, இந்தப் போர்க்குற்றத்தின் ஒரு பக்கத்தை வெளியுலகின் முன் கொண்டுவந்துள்ளனர்.

இந்தக் காட்சிகள் எதைச் சொல்லுகின்றது. யுத்த ஆர்வத்துடன் முன்னணி முனையில் ஈடுபட்டால், பெண்களை தாராளமாக புணரலாம் என்ற அடிப்படையில் பேரினவாதம் யுத்தத்தை உற்சாகமூட்டி நடத்தியிருக்கின்றது. காட்சியை அவர்கள் படமாக்கிய விதங்கள், இதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இதற்கு எதிராக இராணுவ நீதிமன்றம், தன் இராணுவம் இது போன்ற குற்றங்களை இழைத்ததாகக் கூறி யாரையும் தண்டித்தது கூட கிடையாது.

இராணுவத்தின் முன்னிலையில் நிர்வாணமான பெண்களின் காட்சிகள், பல யுத்த முனையில் இருந்து கிடைத்து இருக்கின்றது. ஆக யுத்தப் பிரதேசத்தில் என்னந நடந்தது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு பெண்ணையும் பாலியல் ரீதியாகத்தான், இராணுவம் அணுகியது. இதுதான் பொதுவான காட்சிப் படிமம். இராணுவத்திலும் இதை ஏற்றுக்கொள்ளாத தனிநபர்கள் இருந்ததால் தான், குதறிய பெண்ணின் நிர்வாணத்தை மூடிய காட்சிகளும் கூட வெளிவந்திருக்கின்றது.

இந்தவகையில் யுத்தத்தில் கைதானவர்கள், சரணடைந்தவர்கள் கதை பரிதாபகரமானது. அவர்களுக்கு நடந்தது வெளிவராத காட்சிகளைக் கொண்ட அதே நேரம் மூடிமறைக்கப்படும் அவலம். இப்படி சிக்கிய ஆண் கொல்லப்படுவதற்கு முன் சந்திக்கும் சித்திரவதையை விட, பெண் கொல்லப்பட முன் சந்தித்த சித்திரவதைகள் அதிகமானது தனித்துவமானது. அது பாலியலை உள்ளடக்கியது. கைது, விசாரணை முதல் தங்கள் உயிர் வாழ்வுக்கான போராட்டம் என்பது, பெண்ணைப் பொறுத்தவரையில் பாலியல் கொடூரங்களையும் கொடுமைகளையும் அனுபவித்தாக வேண்டும். இதில் சிக்கிய பெண்கள் சந்தித்த அனுபவம் இதுதான். இதன் பின் தப்பிபிழைத்து வாழ்தல் என்பது, அதை மூடிமறைத்து வாழ்தலுடன் தொடங்குகின்றது. இது வாழ்நாள் சித்திரவதை. இப்படித்தான் யுத்தத்தில் முழுமையாக பேசப்படாத பெண்களின் நிலைக்கும் பின்னால், புனிதம் என்னும் ஆணாதிக்கம் கோலோச்சுகின்றது. யுத்தத்தின் பின் விளைவை பெண் என்ற ஒரே காரணத்தால் அனுபவிக்கும் பெண்கள், பிழைப்புக்காக விபச்சாரத்தை தேர்ந்தெடுக்குமாறு ஆணாதிக்க சமூகம் இன்று வழிகாட்டுகின்றது.

யுத்தத்தை ஊக்குவித்த புலித்துப் புலி மாபியாக் கூட்டம், இன்று பெண்களை விபச்சாரம் செய்து வாழுமாறு கோருகின்றது. இதில் புலிக்காக சண்டை செய்த பெண்களை சமூகம் புறக்கணிக்க, அவர்களை பாலியல் தொழில் செய்யுமாறு சமூகம் நிர்ப்பந்திக்கின்றது. வடக்கு கிழக்கில் பெண்கள் மேலான வன்முறை மூலமான பாலியல் மேலாண்மை செய்த இராணுவம், இன்று வாழ்வை நடத்த விபச்சாரம் செய்யும் பெண்களை அதே வக்கிரத்துடன் பணத்தைக் கொடுத்து மேய்கின்றது. ஆணாதிக்க சமூகத்தில், அதன் புனிதத்தில், பெண் மேலும் தாழ்ந்து சிறுமைப்பட்டு போகின்றாள். எம்மை நாம் மாற்றாமல், இதற்கு தீர்வு காண முடியாது.

 

பி.இரயாகரன்

19.06.2011