Language Selection

இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் மரணத்தினையடுத்து, தளத்தில் குமரன்(பொன்னுத்துரை), கண்ணாடிச் சந்திரன் ஆகிய இரு மத்தியகுழு உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். செயலதிபர் உமா மகேஸ்வரன், அரசியல் செயலர் சந்ததியார் உட்பட வாசுதேவா, பெரியமுரளி, ஈஸ்வரன், டொமினிக் (நோபர்ட்) ஆனந்தி(எஸ்.எல்.சதானந்தம்), பரந்தன் ராஜன், ராமதாஸ் போன்ற மத்தியகுழு உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்தனர். கண்ணன் (ஜோதீஸ்வரன்), காந்தன்(ரகுமான் ஜான்) மற்றும் சில மத்தியகுழு உறுப்பினர்கள் மத்திய கிழக்கில் இராணுவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். தளத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்த மத்தியகுழு உறுப்பினர்களான குமரனும் கண்ணாடிச் சந்திரனும், தளத்தில் புளொட்டின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தனர். இதில் குமரன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் போக்குவரத்து சம்பந்தமான வேலைகளில் தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டு வந்ததால் கண்ணாடிச் சந்திரனே தள நிர்வாக செயற்பாடுகளை கவனித்து வந்தார்.

 

 

இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் மறைவின் பின் பார்த்தனுடன் இராணுவப் பிரிவில் செயற்பட்டுவந்த மல்லாவிச் சந்திரன் இராணுவப் பிரிவு சம்பந்தமான வேலைகளை தற்காலிகமாக செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளானார். பார்த்தனின் மரணத்தோடு மட்டக்களப்பில் தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டதால் இந்தியாவில் இருந்து பயிற்சி முடித்து தாக்குதலுக்கென வந்திருந்த அனைவரும் அவர்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அவர்கள் தமது வீடுகளில் இருந்தே புளொட் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். இந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செலவுகளுக்கு பணமும் அவர்கள் பாதுகாப்புக்கென ஆயுதங்களும் வழங்கப்படும் என்று உமாமகேஸ்வரன் உறுதியளித்திருந்தார்.

இதனால் இராணுவப் பயிற்சி முடித்து வந்தவர்கள் தமது செலவுகளுக்கு பணமும் தமது பாதுகாப்புக்கு ஆயுதமும் தருமாறு தளத்தில் செயற்பட்டு வந்த மத்தியகுழு உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தனர். தளத்தில் அவர்களது செலவுகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதே ஒழிய, பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வழங்கப்பட வில்லை. ஏனெனில், அப்பொழுது புளொட்டிடம் பெருமளவுக்கு மக்கள் பலம் இருந்தது. மக்கள் அமைப்புக்கள், மாணவர் அமைப்பு, மகளீர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு என மக்களை போராட்டத்துக்காக அணிதிரட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் அன்று புளொட்டிடம் ஒரு சில ஆயுதங்கள் மட்டுமே இருந்தன. அன்றிருந்த ஒரு சில ஆயுதங்களை கொண்டுதான் பார்த்தன் மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தார்.

சுந்தரம் தலைமையில் 1981ஆம் ஆண்டு ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தை தாக்கி அங்கிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் புளொட் கைப்பற்றி இருந்தது. அந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை சரியான முறையில் பாதுகாத்து வைக்கப்படாமையால் அவை பாவனைக்குதவாதவையாக ஆகிவிட்டிருந்தன. இந்த நிலையில் இராணுவப் பயிற்சி பெற்றவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதொன்றாக இருந்தது. இராணுவப் பயிற்சி முடித்து வந்தவர்களுக்கு பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்காததால் அவர்களுக்கும் கண்ணாடிச் சந்திரனுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியிருந்தன.

 

மக்களே ஒரு போராட்டத்தின் தீர்க்கரமான சக்தி

இராணுவப் பயிற்சி முடித்து வந்தவர்கள் தாம் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் இராணுவப் பயிற்சி முடித்து வந்து பாதுகாப்பில்லாமல் இராணுவத்திடம் பிடிபட்டு இறக்க முடியாது என்ற வாதத்தை முன்வைத்தனர். இவர்களது இந்த வாதம் தவறானதாகும். ஆயுதங்கள் இருந்தால் மட்டுமே தம்மை இராணுவத்திடமிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்ற வாதம், போராட்டத்தில் மக்களின் பாத்திரத்தையும், மக்களே ஒரு போராட்டத்தின் தீர்க்கரமான சக்தி என்பதையும், மக்களே எமது பாதுகாவலர்கள் என்பதையும் மறுதலித்து, ஆயுதங்கள் மட்டுமே தீர்க்ககரமான சக்தி என்ற தவறான முடிவுக்கு இட்டு செல்கிறது. புளொட் அமைப்பானது தன்னை ஒரு புரட்சிகரமான அமைப்பாக பிரகடனப்படுத்தி இருந்தது. ஆனால் இந்தியாவில் பயிற்சி முடித்து வந்த பெரும்பாலான புளொட் உறுப்பினர்களோ போராட்டம் பற்றிய அரசியல் பார்வை அற்றவர்களாக, அரசியல் வளர்ச்சி அற்றவர்களாக, வெறுமனே இராணுவப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனரே தவிர, ஒரு புரட்சிகர அமைப்புக்கு, ஒரு புரட்சிகர இராணுவத்துக்கு இருக்கவேண்டிய அரசியல் பார்வை, அரசியல் வளர்ச்சி, சமூகம் பற்றிய, மக்கள் பற்றிய பார்வை போன்ற முற்போக்கு அம்சங்களை கொண்டவர்களாக விளங்கவில்லை.

1984 ஆரம்ப பகுதியில், புளொட்டின் மக்கள் அமைப்பின் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, அதன் இராணுவ அமைப்பின் வளர்ச்சி பின்னிலையிலேயே இருந்து வந்தது. ஆனைக்கோட்டை போலீஸ் நிலைய தாக்குதலுக்கு பின்பு புளொட் உறுப்பினர்களால் நன்கு திட்டமிடப்படாது உதிரியாக மேற்கொள்ளப்பட்ட, கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலை பரீட்சை கடமையில் இருந்த போலீசார் மீதான தாக்குதல், வவுனியா விமானப்படையினர் மீதான தாக்குதல் போன்ற தாக்குதல்களில் ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை. 1984 சித்திரை மாதம் பார்த்தன் தலைமையில் மட்டக்களப்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வேளை பார்த்தனின் மரணத்துடன் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

புளொட்டின் இராணுவத்தின் வளர்ச்சி என்பது அன்றைய நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. ஆயுத போராட்டத்துக்கு தன்னை தயார்படுத்தும் ஒரு அமைப்புக்கு ஆயுதங்கள் அற்ற நிலை என்பது மிகவும் கவலைக்கிடமானதொன்றாகும். எனவே, இந்த நிலையை மாற்றுவதை நோக்கமாக கொண்டு ஆயுதங்கள் சேகரிப்புக்கான தேடல் தளத்தில் செயற்பட்ட உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வேளையில் சாவகச்சேரி அமைப்பாளர் மைக்கல், யாழ்ப்பாணம் கண்டி வீதி மக்கள் வங்கி கிளையில் துப்பாக்கிகள் பாதுகாவலர்கள் உபயோகத்திற்காக இருப்பதாக தெரிவித்தார். அவற்றை எம்மால் கைப்பற்ற முடியுமானால், தான் அது பற்றிய விபரமான தகவல்களை பெற்று தருவதாக கூறியிருந்தார். இது எமது ஆயுத தேவையை குறைந்த பட்சம் தீர்த்து வைக்கும் என கருதியதால் இது பற்றிய தகவல்களை பெற்று துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. இந்த நடவடிக்கையில் மல்லாவிச் சந்திரன் முக்கிய பங்கு வகித்தார். தர்மலிங்கம், மது, சிலோன், வாகீசன் உட்பட பலர் இதில் பங்கு கொண்டனர்.

இந்தியாவில் பயிற்சி பெற்று யாழ்ப்பாணம் திரும்பியவர்கள் பங்கு பற்றிய முதலாவது இராணுவ நடவடிக்கை இதுவாக அமைந்தது. மக்கள் வங்கியில் பாதுகாப்பாக பூட்டி இரும்புப் பெட்டகமொன்றில் வைக்கப்பட்டிருந்த 18 துப்பாக்கிகளும் இந்த நடவடிக்கையின் போது வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டன.

இதற்கு அந்தப் பகுதி பொதுமக்களின் உதவி பெரிதும் காரணமாய் அமைந்தது. 18 துப்பாக்கிகளையும் பூட்டி வைத்திருந்த இரும்பு பெட்டியை வங்கிக்கு வெளியே கொண்டுவந்துவிட்டிருந்த புளொட் இராணுவத்தினர் அதை தாங்கள் கொண்டு சென்ற லொறிக்குள் ஏற்ற முடியாமல் திண்டாடிய வேளையில் அப்பகுதி மக்கள் தாமாகவே முன் வந்து துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியை லொறிக்குள் ஏற்றி விட்டனர். நீண்ட காலமாக ஒரு சில ஆயுதங்களுடன் புளொட் இராணுவம் இயங்கி வந்த நிலையில் இருந்து சிறிது முன்னோக்கிய நகர்வாக இந்த நடவடிக்கை அமைந்தது.

 

(தொடரும்).

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8