07062022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

கச்சதீவு இந்தியாவிடம் இருந்திருந்தாலும், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு தான் இருப்பார்கள்

இது எங்கும் தளுவியதொரு உண்மை. இப்படியிருக்க கச்சதீவை மீளப்பெறுதல் பற்றி அம்மாவும், தமிழினவாதிகளும் மக்களை ஏய்க்க நாடகம் போடுகின்றனர். கச்சதீவு இருந்ததால், அதை மீட்டால் எல்லாம் சரியாக இருந்திருக்கும் என்று கூறி மக்களின் காதுக்கு பூ வைக்கின்றனர். மக்களை ஏய்த்து அரசியலில் மோசடி செய்து பிழைக்கின்ற கூட்டத்துக்கு கச்சதீவு ஒரு துடுப்பு.

சரி, இவர்கள் கோருவது போல் கச்சதீவு இந்தியாவிடம் இருந்திருந்தால், மீனவர் படுகொலை நடந்திருக்காதா!? நடந்திருக்காது என்று சொல்லுகின்ற தமிழக ஈழத் தமிழினவாத லூசுகளால், எப்படித் தமிழக மீனவர் பிரச்சனையை உண்மையாகவும் நேர்மையாகவும் அணுகிப் பார்க்க முடியும்!

 

 

 

இதில் உள்ள அடுத்த அரசியல் பித்தலாட்டம் கச்சதீவு இந்தியாவிடம் இருந்திருந்தால், தமிழக மீனவர்களின் படுகொலையல்லாத மற்றைய மீனவர் பிரச்சனைகள் எதுவும் இருந்திருக்காதா!?

ஆக, பிரச்சனை இந்த தமிழினவாதிகள் கூடிக்கூத்தாடும் ஆளும் வர்க்கத்தின் பொது நலனுக்கு வெளியில் இருக்கின்றது. இதைச் சுற்றிய உண்மைகளும் அப்படித்தான்;. இங்கு திரிபுகள் மட்டும் தான், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் எல்லையில் முன்வைக்கப்படுகின்றது. தமிழக மீனவர்கள்நலனோ, இலங்கை மக்களின் நலனோ, தமிழக மக்களின் நலனோ, இங்கு கடுகளவு கூட இந்த கூட்டத்தின் பின் கிடையாது.

இந்திய உழைத்து வாழும் மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்ற இந்தக் கூட்டம், ஈழம் பற்றியும் கச்சதீவு பற்றியும் பேசுகின்றது. இதன் போது இந்திய மீனவர்கள் நலன் சார்ந்து பேசுவதாக பாசாங்கு செய்கின்றது. கச்சதீவை இலங்கை அல்லது இந்தியா என்று யார் வைத்திருந்தாலும், அதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. இதுதான் உண்மை.

1. இலங்கை இந்திய அரசுகள், என்றும் மக்களைச் சார்ந்து நின்று, முடிவுகளையோ தீர்மானங்களையோ எடுத்ததும் கிடையாது, அதை அமுல் செய்வதும் கிடையாது. இந்த வகையில் மீனவர் நலன் சார்ந்து கச்சதீவை மீட்பதாக கூறுவது ஆளும் வர்க்கத்தின் மாபெரும் மோசடியாகும்.

2. கச்சதீவை மீட்டல் மூலம் தமிழக மீனவர்கள் அங்கு தங்கி நின்று தொழில் செய்வதன் மூலம் நன்மை நலனை அடையமுடியும் என்பது மோசடியாகும். இப்படிக் கூறும் மோசடிக்குரிய காரணமான, கடந்தகால மீன்பிடி முறைமை இன்று கிடையாது. இதனால் கச்சதீவை மீனவர்கள் பயன்படுத்த முடியும் என்று கூறுவது, உண்மைக் காரணங்களை மூடிமறைத்தலாகும்.

3. இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டது கச்சதீவு சார்ந்த மீன்பிடி உரிமை மீதல்ல. அதைச் சுற்றி நடந்ததுமல்ல. பொதுவாக இந்திய இலங்கை எல்லையோரங்கள் எங்கும் நடந்தது.

4. கச்சதீவு இந்தியாவிடம் இருந்து, அதுவொரு எல்லையாக இருந்திருந்தால், தமிழக மீனவர்கள் படுகொலையின் அளவு நடந்ததைவிட அதிகமாக இருந்திருக்கும்.

5. கச்சதீவைச் சுற்றி இந்திய மீனவர்கள் மீன்பிடித்திருக்க முடியும் என்ற ஓரேயொரு நன்மை, இந்திய மீனவர்களின் படுகொலைகளுக்கோ அல்லது இந்திய றோலர்களின் எல்லை கடந்த சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி பிரச்சனைகளுக்கோ எந்த வகையிலும் தீர்வு காணாது.

இப்படி உண்மைகள் இருக்க ஆளும் கட்சிகளும், அது சார்ந்த வர்க்கங்களும் திசைதிருப்பும் வெற்றுவேட்டு உணர்ச்சிக் கோசங்களையும், தீர்மானங்களையும் முன்மொழிகின்றனர். தமிழக ஈழத் தமிழ் தேசியவாதம் மூலம் குறுகிய தளத்தில் தம்மை முன்னிறுத்துகின்றனர். இந்திய தேசத்தில் மக்களின் சொத்துகளை அபகரித்து அன்னியனுக்கு தாரை வார்ப்பதை கண்டு கொள்ளாத இந்தக் கும்பல், மீனவர் நலன் சார்ந்த மீட்பு என்று நாடகமாடுகின்றனர். கச்சதீவு மீதான உண்மையான மக்கள் நலன் சார்ந்த அக்கறை இருக்குமாயின், இந்தியா எங்கும் பறிபோகும் தேச நலனுக்காக போராடுவார்கள்.

இந்திய மக்கள் நலன் என்ற பெயரில் நாட்டை விற்கும் கும்பல் போல்தான், இலங்கையும் தன் நாட்டை விற்கின்றது. அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு தன் நாட்டை முற்றாக அடகுவைத்திருக்கின்றது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இந்தியப் பொருளுக்கு சலுகையுடன் கூடிய வரியற்ற ஏற்றுமதிக்கு, இலங்கையை திறந்து விட்டுள்ளது. இலங்கை இந்தியாவின் நலனுக்கு ஏற்ற சுதந்திரமான வர்த்தக வலையம் தான்.

இங்கு இலங்கை இந்திய முரண்பாடுகள் ஆளும் வர்க்கத்தினதோ, சுரண்டும் வர்க்கத்துடனோவல்ல. இலங்கையை ஆளும் கும்பலின் தன் இருப்பு சார்ந்த அதன் நிகழ்ச்சி நிரலில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் தான், நாடுகளுக்கு இடையிலான உலக நாடுகளுக்கு இடையிலான முரண்பாடாக மாறுகின்றது. ஆளும் கும்பல் தன் சொந்த இருப்பை அடிப்படையாக கொண்ட இனவாதம் முதல் ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் தன்னை நுழைக்கின்ற எல்லைக்குள் முரண்பாடுகள் உருவாகின்றது.

இந்த வகையில்தான் இந்திய மீனவர்கள் மீதான விவகாரத்தை அது கையாளுகின்றது. இலங்கை அரசு தமிழ் மக்களை இராணுவ வழிகளில் ஒடுக்கிய போது, அதே வடிவத்தில் தான் இந்திய மீனவர்களையும் அது கொன்றது. இந்திய இராணுவம் காஸ்மீரில் அப்பாவி முஸ்லீம் மக்களைக் கொல்வது போல், நக்சல் ஓழிப்பின் பெயரில் பழங்குடி மக்களை கொன்று அழிப்பது போல்தான், இலங்கை இராணுவமும் கடற்படையும் தன் முன் இருந்த அனைத்தையும் கொன்றது.

இந்திய மீனவர்கள் என்பதால் அது கொல்லவில்லை. கச்சதீவு உரிமைக்காக, அதன் இறைமைக்காக இந்திய மீனவர்களை அது கொல்லவில்லை. இந்திய மீனவர்கள் அவ்வுரிமையைக் கோரி, அந்த உரிமையை நிலைநாட்ட சென்று தம்மைப் பலியிடவில்லை.

ஆளும் கும்பல்கள் தங்கள் சுயநல அரசியலுக்காகவும், குறுகிய ஈழ ஆதரவு தமிழக தமிழினவாதிகள் தங்கள் அரசியல் சதித்திட்டங்களுக்கு ஏற்ப, கச்சதீவு மீதான உரிமை தான் இந்தப் படுகொலைகளுக்கான காரணம் என்று திரிக்கின்றனர். மீட்பு நாடகத்;தை நடத்துகின்றனர்.

இலங்கை இந்திய எல்லையோரத்தில் நடந்த மீனவர் படுகொலைகள் பொதுவான இராணுவ கண்ணோட்டம் சார்ந்து நடந்தது. இது தவிர இலங்கை எல்லைக்குள் சென்ற போது நடந்தேறியது. இதுவும் இராணுவ கண்ணோட்டத்;தின் அடிப்படையில் தான் நடந்தது கைதுக்கு அங்கு இடமற்ற வகையில், இந்திய இராணுவத்தின் அதே பாணியில் அரங்கேறியது. இங்கு இதில் வேறுபாடு எதுவுமில்லை. இப்படிக் கொல்வதற்கு எதிரான போராட்டம், குறிப்பானதாக மட்டும் அமைந்ததால் அது சந்தர்ப்பவாதம். அது அரசியல் திசைதிருப்பலாகும்.

இலங்கை எல்லைக்குள் தமிழக மீனவர்களைக் கொன்ற நிகழ்வுகள்

1. எல்லை தெரியாது அல்லது வள்ளம் பழுதாகி சென்றபோது, படுகொலைகள் அரங்கேறியது.

2. ஆட்களை கொண்டு செல்லுதல் அல்லது கொண்டுவருதலின் போது நடந்தது.

3. ஆயுத வர்த்தகம், சரக்கு சார்ந்த வர்த்தகத்தின் போது படுகொலைகள் அரங்கேறியது.

4. இந்திய றோலர்கள் இந்திய கரையில் மீன்பிடிக்க முடியாததாலும், மீன்வளம் இந்தியக் கரைகளில் அற்றுவிட்டதாலும், இலங்கையில் அத்துமீறி மீன்பிடித்தபோது படுகொலைகள் அரங்கேறியது.

5. இந்திய இலங்கை எல்லையோரங்களிலும், எல்லையை அத்துமீறியும் இந்தியாவினுள்ளும் படுகொலைகள் நடந்தன.

இப்படித்தான் இந்த விவகாரம் அரங்கேறியது. உலகில் உள்ள இராணுவங்கள் போல், இலங்கை இராணுவமும் கடற்படையும் கூட தன் கண்ணில் பட்ட அனைத்தையும் கொன்றது. இங்கு கச்சதீவு இந்தியாவிடம் இருந்திருந்தாலும் கூட இது நடந்திருக்கும். அது அதிகமாக நடத்தேறியிருக்கும்.

உண்மைகள் வெளியில் உள்ளது. கச்சதீவை மீட்பதால் தீர்வுகள் காணப்பட முடியாது. கண்ணில்பட்டதைக் கொல்லும் இராணுவ நிகழ்ச்சிப்போக்கு குறைந்து, யுத்தத்தின் பின் உதிரியான சம்பவமாக மாறிவருகின்றது. முரண்பாடுகள் வேறுதளத்திற்கு மிக வேகமாக மாறிவிடுகின்றது. இலங்கைத் தமிழ் மீனவர்களின் குரல்கள், இந்திய ரோலருக்கு எதிராக இன்று எழுகின்றது. இதை மகிந்த அரச எடுபிடிகளின் குரல்களாக முத்திரை குத்தி, சட்டவிரோத ரோலர் வகை மீன்பிடியை இலங்கையில் நடத்துவதை அங்கீகரிக்கின்றனர். இதை எதிர்த்து யாரும் இந்தியாவில் குரல் கொடுக்கவில்லை. இப்படி இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு எதிராக, தங்கள் குறுகிய அரசியலுக்காக கடந்தகால படுகொலை நிகழ்வை மட்டும் முன்னிறுத்தி திசைதிருப்புகின்றனர். இலங்கை போர்க்குற்றங்கள் போல், தமிழக மீனவர் படுகொலையும் பல குற்றங்களில் ஒன்று. இதற்கு எதிரான போராட்டம் குறுகிய அரசியல் தளத்தில் நடத்த முடியாது. மற்றைய முரண்பாடுகளை இதற்குள் புதைக்க முடியாது.

இந்திய அரசோ, தமிழக அரசோ, தமிழினவாதிகளோ இதை எல்லாம் புறக்கணித்து அதை கருத்தில் கொள்ளாது, இலங்கை கடல்வளத்தையும், இலங்கை தமிழ் மீனவர்கள் வாழ்வை அழிக்கும் வண்ணம், இலங்கை அரசுடன் கூட்டாக சதி செய்கின்றனர்.

 

பி.இரயாகரன்

12.06.2011


பி.இரயாகரன் - சமர்