கொக்குவில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட பின்னர்தான், நான் இராணுவத்தால் தேடப்படும் ஒரு நபராக இருப்பதை அறிந்தேன். எனது வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட இராணுவத்தினர், எனது அனைத்துப் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுவிட்டிருந்தனர். நிலைமைகள் அனைத்துமே தலைகீழாகவும், முன்னரைவிட இன்னும் சிக்கலானதாகவும் மாறிவிட்டிருந்ததன. புளொட்டில் நான் இணைந்ததிலிருந்து எனது வீட்டில் இருந்தபடியே அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தேன். இராணுவ சுற்றிவளைப்புக்குப் பின்னான நிலைமையோ, இனிமேலும் வீட்டில் இருக்கமுடியாது என்றாகியது மட்டுமல்லாமல், கொக்குவிலை எமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதையும் அறவே சாத்தியமற்றதாக்கியது. எதிரியைப் பற்றிய எமது தவறான கணிப்பீடு, விழிப்புணர்வின்மை, காலந்தாழ்த்திய முடிவுகள் போன்றவற்றால் தொடர்ச்சியாக இழப்புக்களை சந்திக்க வேண்டியிருந்தது.
ஒரே நாளில் தளநிர்வாகப் பொறுப்பாளர் சலீமின் கைதும், யாழ் மாவட்டப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியின் கைதும் பெரியதொரு வெற்றிடத்தை அமைப்புக்குள் ஏற்படுத்திவிட்டிருந்தது. குறிப்பாக, சத்தியமூர்த்தியினது கைதானது அனைத்துவிடயங்களையும் ஒழுங்குபடுத்திச் செய்யக்கூடிய செயல்திறன்மிக்க ஒருவரை கடின உழைப்பாளியை இழந்ததாகவே கருதப்பட்டது. ஏனெனில் 1983 யூலை க்குப் பின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு புளொட்டின் செயற்பாடுகள் நகர்த்தப்பட்டபின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்களின் தொடர்புகளையும் சத்தியமூர்த்தியே பேணிவந்த அதேநேரம் யாழ் மாவட்ட அமைப்புச் செயற்பாடுகளையும் கவனித்து வந்திருந்தார். கைதுகளும், இழப்புகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. எமது செயற்பாடுகளும் அதே வேகத்தில் தொடர்ந்தவண்ணமிருந்தது.
பௌத்த விகாரை தீக்கிரையை எதிர்த்த அதே இடத்தில் அடையாளமின்றி தீக்கிரை
சலீம், சத்தியமூர்த்தியின் கைதினால் ஏற்பட்ட இடைவெளியை நிவர்த்தி செய்து தொடர்ச்சியாக புளொட் செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும், அதற்கான தேவையும் ஏனைய மத்தியகுழு உறுப்பினர்களிடம் விடப்பட்டிருந்தது. மத்தியகுழு உறுப்பினர்களான பார்த்தன், குமரன் (பொன்னுத்துரை), கேதீஸ்வரன், ஈஸ்வரன் ஆகியோரே அன்று தளத்தில் இருந்தனர். மத்தியகுழு உறுப்பினர்களான குமரன் (பொன்னுத்துரை) கரைப் பொறுப்பாளராக இருந்தமையால் அவர் படகுப் போக்குவரத்து ஒழுங்குகளைக் கவனித்து வந்தார்; ஈஸ்வரன் மட்டக்களப்பு பொறுப்பாளராக செயற்பட்டு வந்ததால் அவர்களது கூடுதல் நேரத்தை மட்டக்களப்பிலேயே கழித்து வந்தார்; பார்த்தன் இராணுவ சம்பந்தமான செயற்பாடுகளில் கவனம் செலுத்தி வந்தார்; இதனால் மத்தியகுழு உறுப்பினரான கேதீஸ்வரன் இப்பொழுது மிகவும் தீவிரமாகவும் அதேவேளை பொறுப்புடனும் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏனைய மாவட்டங்களிலிருந்து வரும் அமைப்பாளர்களுடான தொடர்புகளைப் பேணுதல், இந்தியாவிற்கு பயிற்சிக்கென வருபவர்களை பராமரித்து அனுப்பிவைத்தல், யாழ் மாவட்டத்திலுள்ள அமைப்பாளர்களின் தேவைகளை, பிரச்சினைகளைக் கையாளுதல் அனைத்துமே கேதீஸ்வரனின் முன்னால் மலைபோல் உயர்ந்து நின்றன.
மிகவிரைவிலேயே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அதிபர் பிரிவுகளிலும் பொறுப்பாக செயற்படும் அனைவரையும் ஒன்றுசேர்த்து கேதீஸ்வரனால் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் நானும் கலந்துகொண்டேன். சத்தியமூர்த்தி, சலீமின் கைதுபற்றி அனைவருக்கும் கேதீஸ்வரனால் தெரிவிக்கப்பட்டதோடு, சத்தியமூர்த்தி செய்துவந்த வேலைகள் அனைத்தையும் நேசனே இனிமேல் தொடர்ந்து செய்வார் என்றும், அனைவரையும் நேசனுடன் தொடர்புகளைப் பேணுமாறும் கேட்டுக் கொண்டார். அத்துடன் தேவையேற்படும் போதெல்லாம். யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களும் ஒன்று கூடி, யாழ் மாவட்டம் சம்பந்தமான வேலைத்திட்டங்களையும் முடிபுகளையும் எடுக்குமாறு கூறினார்.
நீண்டகாலமாக காந்தீயத்திலும் புளொட்டிலும் செயற்பட்ட உரும்பிராய் ராசா, ரமணன், ஜீவன், பாலா, சின்னப்பத்தர், சுகந்தன்(சிறி),வடமராட்சி கணேஷ், கல்லுவம் குரு, கொக்குவில் கிருபா, சிவானந்தி போன்ற பலர் அன்று புளொட்டில் இருந்தபோதும் சத்தியமூர்த்தியின் இடத்துக்கு கேதீஸ்வரன் என்னைத் தெரிவு செய்தமைக்கு காரணம், நான் சத்தியமூர்த்தியுடன் நெருக்கமாக அமைப்பு வேலைகளில் செயற்பட்டதென்பதாலும், பெரும்பாலான சத்தியமூர்த்தியினுடைய தொடர்புகள் மற்றும் ஏனைய மாவட்டப் பொறுப்பாளர்களின் தொடர்புகள் என்பனவற்றை நான் அறிந்திருந்தமையுமே ஆகும் என நினைக்கிறேன். ஆனால், அன்றைய நிலையில் எனக்கிருந்த அரசியல் அறிவென்பது மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவே இருந்தது. நான் GUES இல் செயற்பட்டபோது படித்த சில இடதுசாரி நூல்கள், தோழர் தங்கராசாவின் பாசறைகளில், கருத்தரங்குகளில் பெற்றுக்கொண்ட அரசியல் அறிவே, அப்போது எனக்கிருந்தது. புளொட்டில் இணைந்த பின்பு அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி எதுவுமே பயனளிக்கவில்லை. நடைமுறை, மற்றும் நிர்வாகரீதியான வேலைப்பழு என்பன அதற்கு இடம் கொடுக்கவில்லை.
கொக்குவில் சுற்றிவளைப்பின் பின்னான சந்திப்புக்கள், யாழ் பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளுக்கு மாறியது. ஏனைய மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் யாழ்ப்பாணம் வந்தவண்ணமிருந்தனர். இவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் மட்டுமல்லாது, இவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதிலுமே நிறையவே பிரச்சனைகளை முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கொக்குவில் சுற்றிவளைப்பின் பின்னான நிலமை இதுவாக இருந்தது. 1983 யூலைக்குப்பின் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியால், அரசபடைகளுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. விடுதலை இயக்கங்களின் தாக்குதல்களுக்குப் பதிலாக, அரசபடையினர் வர்த்தக நிலையங்களை தீயிட்டுக் கொளுத்துதல், அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வந்தனர்.
1984 சித்திரை 10ம் திகதி, யாழ் வைத்தியசாலைக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த இராணுவ வண்டித் தொடர் மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நிகழ்த்தினர். இச் சம்பவத்தில் ஒரு இராணுவவீரர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமுற்ற இராணுவத்தினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தால், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த அடைக்கலமாதா கோவில் சிறிது சேதமுற்றிருந்தது. ஊரடங்கு உத்தரவும் இராணுவத்தால் அமுல்படுத்தப்பட்டது. மறுநாள், சித்திரை 11 ம் திகதி, இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் அடைக்கலமாதா கோவில் சேதமடைந்ததற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு, ஒரு கும்பல் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் அமைந்திருந்த பௌத்தவிகாரை மீது தாக்குதல் நடத்தியதோடு அதற்கு தீயுமிட்டனர். இச் செயலுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமலதாஸ் என்பவர் தலைமை தாங்கினார்; அமலதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்; தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் கிட்டுவுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்தவர்; பௌத்தவிகாரை தாக்குதல் சம்பவம் பற்றி யாழ் பல்கலைக்கழகத்துக்கு தகவல் பரவியது.
எரியூட்டப்பட்ட விகாரை
(அதேநாள் யாழ்நகர மத்தியில் அமைந்திருந்த சிங்கள மத்திய மகாவித்தியாலம் எரியூட்டப்பட்ட நிலையில்)
(எரியூட்டப்பட முன்னர் விகாரை)
இதையறிந்த யாழ் பல்கலைக்கழக மாணவனும் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினருமான கேதீஸ்வரனும் அவரது நண்பர்களும் உடனடியாக பௌத்தவிகாரைக்கு விரைந்து, பௌத்தவிகாரையை சேதப்படுத்துவதை நிறுத்துமாறு, அங்கு கூடியிருந்தவர்களை வேண்டினர். ஆனால் பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோளை, அவர்கள் செவிமடுத்தார்களில்லை. பல பத்தாண்டுகளாகவே, தமிழர்களல்லாத ஏனைய இனத்தவர்களையும், ஏனைய மதத்தவர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும், கீழ்த்தரமாக மேடைகளில் பேசிவந்த பிற்போக்குத் தலைமைகளினால், மக்களின் சிந்தனையில் நஞ்சூட்டப்பட்டிருந்ததன் வெளிப்பாடாக, இந்தச் சம்பவம் அமைந்தது. இதனால் பௌத்தவிகாரையில் கூடியிருந்தவர்கள், தமது செயற்பாட்டிலிருந்து பின்வாங்க முடியாதவர்களாக, காணப்பட்டனர். பௌத்தவிகாரையை எரியூட்டியதால் ஏற்பட்ட பதட்டநிலையால், யாழ் நகரம் வெறிச்சோடத் தொடங்கியது. இந்நிலையில் மறுநாள், இந்தியாவுக்கு பயிற்சிக்கு செல்வோரை அனுப்புவதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு, கேதீஸ்வரனுக்கு இருந்தது. இதற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும், விரைந்து செயற்பட முடிவெடுத்தனர். திருநெல்வேலியில் வசித்து வந்த எரிபொருள் நிலைய உரிமையாளரை தொடர்பு கொண்டு, எரிபொருள் தந்துதவுமாறு கேட்டதற்கு, அவரும் சம்மதிக்கவே, கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும் வாகனம் ஒன்றில், எரிபொருளைப் பெறுவதற்கு, யாழ்நகர் நோக்கி விரைந்தனர்.
(கொக்குவில் கிருபா)
பௌத்தவிகாரை எரியூட்டப்பட்ட தகவலை அறிந்து, இராணுவம் யாழ்நகரின் பெரும்பாலான பகுதிகளில் குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. துரதிஸ்டவசமாக கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும் சென்ற வாகனம், இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும், இராணுவத்தால் பௌத்தவிகாரைக்கு அருகில் ஏற்கனவே கைது செய்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டு, அனைவரையும் அதே இடத்தில் இராணுவம் சுட்டுக் கொன்று, ரயர் போட்டு எரியூட்டியது. சில மணி நேரத்துக்கு முன் பௌத்தவிகாரையை எரிப்பது தவறான செயல் என வாதம் புரிந்த ஒருவன், அத்தகைய செயலுக்கெதிராக போராடிய ஒருவன், அதே விகாரைக்கு அருகே சுட்டுக்கொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டான். ஈனர்களின் ஈனச் செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இழப்புகளும், மரணங்களும் எம்மைத் தொடர்ந்த வண்ணமிருந்தன.
(கேதீஸ்வரன்)
ஆரம்ப காலங்களிலேயே புளட்டுக்குள் தோன்றிய தவறான போக்குகளுக்கு எதிராக கேதீஸ்வரன் தொடர்ச்சியாக புளட்டின் தலைமையுடனும் மத்திய குழு உறுப்பினர்களோடும் போராடிய ஒருவர். தவறான போக்குகளுடன் கேதீஸ்வரன் என்றுமே சமரசம் செய்தது என்பது கிடையாது.
தென்னிலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் அதன் முடிவும்
1984 தைமாதம் ஒன்பதாம் திகதி, இனக் கலவரத்துள் அகப்பட்டு பாதிக்கப்பட்டதனால் இடம் பெயர்ந்த தமிழ் பல்கலைக்கழக மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது. இப் போராளிகளுள் மதிவதனியும் ஒருவர். பல்கலைக்கழக மாணவர்களின் அகிம்சை வழியான போராட்டத்தை வெற்றிகரமான வெகுஜன போராட்டடமாக மாற்றுவதற்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் கேதீஸ்வரனும் ஒருவராக இருந்தார். ஆனால் மக்கள் போராட்டத்திலோ, மக்கள் அரசியலிலோ நம்பிக்கை அற்ற, வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பியிருந்த, மன நோயாளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோ மாணவர் போராட்டத்தில் ஈடுபட்ட, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தோரை ஆயுத முனையில் கடத்தி செல்வதற்கு திட்டமிட்டிருந்தது, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கசிந்திருந்தது. இதையறிந்த பல்கலைக்கழக மாணவர்களான கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி, பாலா, சிறி (சுகந்தன்) போன்றோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்படி ஒரு அராஜக செயலில் ஈடுபட்டால் அதனை தடுத்து நிறுத்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுடன் தயாராக இருந்தனர். ஆனால் அகிம்சை போராளிகள் ஆயுத முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தின் முன்னால், நிராயுதபாணிகளான பல்கலைக்கழக மாணவர்கள், எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒரு மாணவர் போராட்டம் வெகுஜன எழுச்சிப் போராட்டமாக மாறுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்தனர். மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறுவதை, எப்படி தடுத்து நிறுத்தலாம் என திண்டாடிக் கொண்டிருந்த சிறீலங்கா அரசுக்கு, புலிகள் உண்ணாவிரத போராளிகளை கடத்தியது, பெரும் நிம்மதியை கொடுத்தது. உண்ணாவிரதிகளை கடத்திய அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த கடத்தல் தவறானது என கண்டித்து புளொட் சார்பாக யாழ் நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டியதில் கேதீஸ்வரன் முக்கிய பங்கு வகித்ததிலிருந்து, கேதீஸ்வரன் எப்படி தவறான போக்குகளுடன் சமரசம் செய்யாமல், அவற்றிற்கு எதிராக தன்னால் முடிந்தவரை போராடினார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இணைப்பு - துண்டுப்பிரசுரம் -இணைப்பு அகிம்சைப் போராளிகள் ஆயுதமுனையில் கடத்தப்பட்டனர்
தொடரும்
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6