08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

அருள் எழிலன், பிரியா தம்பி ... போன்றவர்களின் பித்தலாட்டங்கள்

ஜ.நா அறிக்கையில் புலிகள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் வாதங்கள் ஊடாக, தம்மை முற்போக்குவாதிகளாகக் கட்டமைக்க முற்படுகின்றனர். சொந்த நாட்டில் முற்போக்காக போராட வக்கற்றவர்கள், ஈழ மக்களின் கண்ணீரைச் சொல்லி தொடர்ந்து பிழைப்பு நடத்துகின்றனர். இப்படி இந்திய தமிழினவாதிகளும், காசுக்கு எழுதும் யமுனா போன்ற பிழைப்புவாதிகளும் புலிகளைச் சொல்லிப் பிழைக்க, புலிகள் மீதான குற்றச்சாட்டை மறுக்கின்றனர். இதற்கு வெளியில் இதை மறுக்கும் நிலையில், இன்று புலத்துப் புலிகள் கூட காட்டமாக முனைவதில்லை. மக்கள் சந்தித்த கொடுமையும், அவலமும் எங்கும் நிறைந்ததாக இருப்பதால், புலத்துப் புலிகளால் கூட தர்க்கம் செய்ய முடியாதுள்ளது.

 

ஆக தமிழகத்தில் ஈழ அரசியலை மட்டும் சொல்லி அரசியல் செய்யும் கூட்டம், இலங்கைத் தமிழ் மக்களுக்கு புலிகள் செய்த கொடுமைகளை மூடிமறைத்து அரசியல் செய்கின்றனர். அண்மையில் ஜ.நா அறிக்கை தொடர்பாக ஆற்றிய உரையில் அருள் எழிலன், பிரியா தம்பி போன்றவர்களின் உரைகள், புலிகளைப் பாதுகாக்கின்ற வண்ணம் புலம்புகின்றது. இதில் அருள் எழிலன் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து எழுதி வருவதாக கூறியவர், ஜ.நா அறிக்கையில் புலிகள் பற்றிய குற்றச்சாட்டை மறுக்கக் கூடாது என்கின்றார். அவரின் கவலை புலிகள் மீதான குற்றச்சாட்டை மறுப்புக்குள்ளாக்கினால் அதே அடிப்படையில் அரசின் மீதான குற்றச்சாட்டும் மறுப்புக்குள்ளாகிவிடும் என்ற கவலையோடு அணுகுகின்றார்.

ஆக இங்கும் அருள் எழிலன் புலிகள் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதை மறுத்தால், இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டையும் மறுப்பதாகிவிடும் என்ற கவலையுடன் அதில் பேசுகின்றார். பிரியா தம்பியோ அத்தகைய கவலை எதுவுமின்றி மறுப்பதற்கான தர்க்கத்தை முன்வைக்கின்றார். அவரின் தர்க்கத்தின் சாரம்

1. ஜ.நா என்பது மேற்குலகின் நலன் சார்ந்த அமைப்பு. அதன் நோக்கத்தின் அடிப்படையில் விடுதலை இயக்கங்களை அது குற்றஞ்சாட்டுகின்றது.

2. இந்திய, இலங்கை ஆளும் வர்க்கங்கள் தங்களை நியாயப்படுத்த முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக கொண்டு இதை மறுக்கின்றார்.

3. மூன்றாம் உலக நாடுகளில் நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனம் எமக்கு இயல்பானது. அது மேற்கத்தைய கண்ணுக்கு மனிதவுரிமை மீறலாக மாறி, மிகையானதாகவும் தெரிகின்றது.

4. செப் 2001 பின்னதாக விடுதலை இயக்கங்கள் மேலான மேற்கத்தைய அணுகுமுறை இதுதான்.

இப்படி புலிகளைப் பாதுகாக்கின்ற தர்க்கங்கள் முன்தள்ளப்படுகின்றது. இந்தத் தர்க்கத்தின் சாரத்தை அடிப்படையாக கொண்டு, இலங்கை அரசையும் பாதுகாக்க முடியும் என்பதுதான் இந்த அரசியல் வங்குரோத்தின் பின்னணி எடுத்துக்காட்டுகின்றது. அரசை ஆதரிக்கின்ற "இடதுசாரி" கூட்டம், இதே தர்க்கத்தைக் கொண்டுதான் தன்பக்கத்தை நியாயப்படுத்துகின்றது. என்ன அரசியல் ஒற்றுமை.

இங்கு அருள் எழிலன் இதனால் தான், இதை செய்யக் கூடாது என்கின்றார். மக்கள் தான் தண்டிக்க வேண்டும் என்று கூறும் அருள் எழிலன், இதன் மூலம் ஜ.நா அறிக்கை பலவீனமாகாது பாதுகாக்க வேண்டும் என்ற கவலையுடன் உண்மைகளை மூடிமறைக்க புலம்பி அணுகுகின்றார். புலிகள் குற்றமிழைத்ததாக கூற முடியவில்லை. இதுதான் அவரின் மக்கள் நல வேஷங்கள். மக்கள் போராட்டம் பற்றிய புரட்டுகள். பார்க்க வீடியோவை

http://www.youtube.com/watch?v=ZyMW-5GvIfU&feature=share

http://www.youtube.com/watch?v=xtZRSZT_19I&feature=related

மக்களைச் சார்ந்து நின்று ஜ.நா அறிக்கையையும், அதன் உள்ளடக்கத்தையும், அதன் நோக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டும் என்கின்றார். இதுவும் கூட மோசடி தான். மக்களைச் சார்ந்து நிற்றல் என்பது, இங்கு புலி மற்றும் அரசு இரண்டையும் அம்பலப்படுத்தி மக்களுடன் நிற்றல்தான். வெறுமனே அரசை எதிர்த்துக் கொண்டு, புலியை பாதுகாத்துக் கொண்டு அல்லது சந்தர்ப்பவாதமாக அணுகிக் கொண்டு, மக்களைச் சார்ந்து நிற்றல் என்பது மாபெரும் மோசடி. மக்களைச் சார்ந்து நிற்காத கூட்டத்துடன் சேர்ந்து கும்மியடிக்கும் சந்தர்ப்பவாதம் தான், இங்கு அருள் எழிலனின் மக்கள் அரசியலாகின்றது. இங்கு மக்களை நிராகரிக்கும் புலித் துதிபாடிகள் கூட்டத்துடன், அதன் பொய்யான பித்தலாட்டத்துடன் கூடி நிற்கும் மோசடியைத்தான் அருள் எழிலன் அரங்கேற்றுகின்றார்.

இங்கு பிரியா தம்பி கூறுகின்றார், புலிகள் எந்தச் சிங்கள மக்களையும் கொல்லவில்லை என்கின்றார். இப்படி வேடிக்கை காட்டுகின்றார். 1985ம் ஆண்டு அனுராதபுரத்தில் பஸ் நிலையத்தில் 150 க்கு மேற்பட்ட அப்பாவி மக்களை சுட்டும் வெட்டியும் கொன்றனர் புலிகள்.

அநுராதபுரப் படுகொலை மே 14 1985

மூதூர் வெளியேற்றம்

(இதை செய்த புலிகள், தமக்கு இதற்காக இந்திய அரசு 50 லட்சம் தந்ததாக கூறினர்), காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த 100க்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களை கொன்றனர் புலிகள். இவை அவற்றில் சில. இதுபோல் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதலை புலிகள் நடத்தியிருக்கின்றனர். சிங்கள முஸ்லீம் கிராமங்கள் பல, புலிகளின் படுகொலைக்கு உள்ளாகியிருக்கின்றது. சிங்கள மக்கள் பயணித்த 10க்கு மேற்பட்ட போக்குவரத்து பஸ்களை தகர்த்து, அவர்களை கொன்று இருக்கின்றனர். இப்படி பற்பல. ஒரு லட்சம் முஸ்லீம் மக்களின் உடைமைகளை எல்லாம் பறித்துவிட்டு, உடுத்த உடையுடன் விரட்டியவர்கள் புலிகள். இப்படிப்பட்ட புலிகளின் யோக்கியத்தை பாதுகாத்து, அதை மூடி மறைக்கின்றனர் மக்கள் நலன் பேசும் அருள் எழிலன் முன் நின்று. அருள் எழிலன் கும்மியடிக்கின்றார்.

 

புலிகள் சிறுவர்களையும், மற்றவர்களையும் கட்டாயப்படுத்தி யுத்தம் செய்ய வைத்தது முதல், மக்களை வன்னியில் இருந்து தப்பிப் போகாத வண்ணம் யுத்தத்தில் பணயம் வைத்தது வரை எத்தனை விடையங்கள். மக்கள் கூட்டத்தில் நின்று திட்டமிட்டு தாக்குதலை நடத்தியது வரை, அங்கு பல நிகழ்வுகள் அவலமாய் நடந்தேறியது. உண்மையில் மக்களைக் கொன்று குவிக்க உதவுதன் மூலம் தான், அதை ஊக்குவிப்பதன் மூலம் தான், புலிகள் தங்களைப் பாதுகாக்க முனைந்தனர் கட்டியமைக்க முனைந்தனர். இதுதான் புலியின் யுத்த தந்திரமாக இருந்தது. புலிகளின் இந்த மக்கள் விரோத அரசியல், புலியின் ஆரம்பம் முதலே இருந்து வந்தததுதான். இதன் முழுமையான பரிணாமமோ, இறுதி யுத்தத்தில் உச்சத்தை எட்டியது. ஒரு பாசிசக் கும்பலாக மாறிய புலிகள், அதை மாபியாத்தனத்துடன் அணுகி தேசியத்தை குறுக்கி குதறினர். இதன்பின் பிழைப்புவாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்.

இந்திய அரசியலில் எந்த மக்கள் நல கருத்தையும் முன்வைத்து மக்களுடன் மக்களாக நின்று போராட முடியாத இந்தப் பிழைப்புவாத பிரமுகர் கூட்டம், புலியைச் சுற்றி நின்று ஈழ மக்களுக்கு எதிராக தன்னை வளர்க்கின்றது. அவர்களின் முற்போக்கு வேஷம் முதல் அவர்களின் அரசியல் போக்கிரித்தனம் வரை, ஈழ மக்களின் கண்ணீரில் தான் மிதக்கின்றது. இந்திய மக்களின் வாழ்வுசார் போராட்டங்களில் முற்போக்காக அந்த மக்களின் நடைமுறையுடன் போராட வக்கற்ற கூட்டம், எப்படி ஈழ மக்களுக்காக உண்மையாக இருக்க முடியும். ஈழ மக்களை அவர்களின் கண்ணீரை வைத்து பிழைக்கும் பிழைப்பையே, செய்கின்றது.

பி.இரயாகரன்

03.06.2011


பி.இரயாகரன் - சமர்