06082023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

கைலாசாதியின் 28.வது ஆண்டு நினைவாக…. பகுதி 6

கைலாசபதியும் மு. தளையசிங்கமும்

“இன்று எழுந்துள்ள ‘நற்போக்கு’க் கூடாரம் கைலாசபதியின் பெயரை முற்றாக ஒதுக்கிவிட முயல்கிறது. ‘முற்போக்கு’க் கட்சி எப்படி அவரையே முழு முதல் இலக்கியக் கடவுளாக வழிபட விரும்பிற்றோ அப்படியே ‘நற்போக்கு’ அவரின் பெயரை முற்றாக அழித்துவிட முயல்கிறது. அதனால் இரண்டும் பிழைத்து விடுகின்றன. உண்மை இரண்டிலும் இல்லை. இரண்டுக்குமிடையில் தான். கைலாசபதி கட்டாயம் நம் இலக்கியப் பார்வையை ஒரு படி உயர்த்தியே தான் இருக்கிறார். முதலில் அதை ஒப்புக் கொண்டு தான் கைலாசபதியின் செல்வாக்கைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி ஆரம்பமாக வேண்டும்”  என கைலாசபதியின் இலக்கியப் பார்வை பற்றி குறிப்பிடுகின்றார் மு.தளையசிங்கம்

 

1950ஆம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கிய தளையசிங்கம்  60–70களில் முற்போக்கு இலக்கியத்தின் பிரதான எதிர் விமர்சகராக தன்னை நிலை நிறுத்துகின்றார்.

1935–இல் பிறந்த தளையசிங்கம், 1957ல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது ‘சுதந்திரம்’ என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான ‘தியாகம்’ வெளிவந்தது. முதல் நாவலான ‘ஒரு தனி வீடு’ 1960ல் எழுதப்பட்டது.  இரத்தினபுரியில் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானார். விமர்சனத்தில்  ஆர்வம் கொண்ட இவர்.  ‘விமர்சன விக்கிரகங்கள்’ கட்டுரைத் தொடர் ‘தினகர’னில் வந்த போது சர்ச்சைக்கு உள்ளாயிற்று. இக்காலத்தில் முற்போக்கு, நற்போக்கு இரண்டையும் எதிர்த்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1963ல் இவர்  எழுதிய ‘ஏழாண்டு’ இலக்கிய வளர்ச்சி  “சில அவசரக் குறிப்புகள்’ போன்றவைகள் குறிப்பிடத்தக்கது. 1966ல் இவர்  தனது குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாறிற்று. புங்குடுதீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஆத்மீக வகுப்புகள் நடத்தினார். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.  1970ல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார்.  தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கி அதில் தோதலில் நின்றார். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன் நீர்க் கிணறுகளில் டுக்கப்பட்ட மக்களுக்கு இடம் அளிக்கும்படி போராடினார்.  1972ல் ‘மெய்யுள்’ என்ற புதிய இலக்கிய கோட்பாட்டுருவத்தை உருவாக்கம் செய்கின்றார்.  1973ல் இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

தளையசிங்கம் தனது கலைப் பார்வையை (மெய்யுள்) ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என்று அழைக்கிறார். ‘பிரபஞ்ச யதார்த்தம் என்றால் என்ன?.  கலைப் பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒருபகுதி. வாழ்க்கை பார்வையைத் தெரிந்துகொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடியாது என்கின்றார். எனவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை பார்ப்போம்.


“உலகெங்கும் மனிதன் அதிருப்தியில் ஆழ்ந்து கிடக்கிறான். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுது போக்குகளில் காலத்தை வீணடித்தல், போதைப் பொருட்களில் விஐந்து கிடத்தல், போலிக் கலைகள் எழுப்பும் கனவுகளில் தன்னை மறந்து நிற்றல், வாழ்க்கையில் ஆர்வமின்மை சோம்பல் வன்முறை இவ்வாறான எதிர்மறைச் செயல்கள் ஒருபக்கம். மறுபக்கம் வெவ்வேறு தளங்களில் சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் போராட்டங்கள் இந்த வெளிப்பாடுகளில் பிரச்சினையின் ஆழத்தை உணர முடிகிறதா? முடியவில்லை. விஞ்ஞானப் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக் கொண்டிக்கிறான். உலகெங்கும் வெவ்வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பினும் அங்கு அதிருப்தி மிஞ்சுகிறது. சமூக மாற்றங்கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்? மெய்யான வளர்ச்சி எது? கட்சிகள் அரசுகள் நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக்கின்றனவா? சமூக பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே கொண்டு வரும் போது மேலான வாழ்வு மலருமா? இவற்றைத் தாண்டி மற்றொரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றனவா? பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. அது தான் சத்திய நிலை. இதை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிருவாகத்தை நடத்தவில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவுளை ஏற்றுக்கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ளலாம். பௌத்தர்கள் கடவுளை மறுப்பினும் கடவுளை ஏற்பவர்கள் நிர்வாணத்தை ஏற்றுக்கொள்வர். நிர்வாண  நிலை தான் திருப்தியை அளிக்கக் கூடியது. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரையிலும் அதிருப்தியை தொடரும்”.

“சடம் உயிர் மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம். உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தவர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை எங்கும் நீக்கமற நிலையச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்சினைகளை ஆராயும்போது அவற்றை அரசியல் சமூக கலாச்சார பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணாமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்கவேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும் அகலமான மன விரிவுகளும் ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள் ஞானிகளை விட்டுவிட்டால் கலைஞர்களிடமே அதிக அளவில் தட்டுப்படவாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிறான். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிலைவேறுவதற்கு முன் சிறு சிறு கூட்டங்கள் இணைந்து பெருங்கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக்கும்.”

“மெய்யான மதத்திற்கும் மெய்யான விஞ்ஞானகத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளுணர்வுகளை நாட மற்றொன்று புற உலகைச் சார்ந்து நிற்கிறது. ஒன்று அனுபவம். மற்றொன்று ஆராய்ச்சி. சீரழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும் பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத்தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்திற்கு தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. நீக்ரோக்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞான பூர்வமானது? மனிதத் தன்மைகளை பண நாயகம் விழுங்கிக் கொண்டிருப்பது வரையிலும் உலக சர்வாதிகாரத்திற்கு கனவுகள் கண்டு கொண்டிருப்பது வரையிலும் சந்திர யாத்திரைக்கும் காசி யாத்திரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.”

“முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களும் வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழியாகத் தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்துக்கு செல்லவேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்னரே நிலவுடமை அமைப்பிலிருந்தே நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக முடியுமென்றால் முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பைத் தாண்டி சத்திய எழுச்சிக்குரிய தளத்திற்குச் செல்ல முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சமூகம் மாற மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞான ரீதியாக உணர்ந்த மார்க்சீயவாதிகள் முழுமையை நோக்கி சமுதாயத்தை துரிதப்படுத்தி வளர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள். சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப்படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும்.”

மு.த. தனது குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை சந்தித்தபின் “மெய்யுள்” எனும் கருத்துமுதல்வாதக் கோட்பாட்டை கண்டடைகின்றார். இதற்குள் விஞ்ஞான, பொருள்முதல்வாத, மார்க்சிஸத் தத்துவ சொல்லாடல்களைக் கலந்து, அதை மெய்யுள் எனும் “சாம்பாறுத் தத்துவம்” ஆக்குகின்றார். இத் தத்துவத்தை இவரை விட  தலை சிறந்த  கருத்து முதல்வாதக் கண்ணோட்டம் கொண்ட பல “தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள்”  ஏற்கனவே படைத்துள்ளனர்.  இதற்கு இன்றும் தத்துவ உருவாக்கம் கொடுக்கும் சுந்தரரமசாமிகளும் உள்ளனர்.

(தொடரும்)

-அகிலன் (17/02/2011)

 

1.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக….. (பகுதி-1)

2.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. (பகுதி-2)

3.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக….. (பகுதி-3)

4.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..பகுதி 4

5.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. பகுதி 5கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்