10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நிறங்கள்....

கலியாணம் முடிச்சு மனிசி இங்கே என்னிடம் வந்து இன்றையோடு மூன்றே மூன்று நாள் தான்.  என்ன வெளியிலே மட்டுமா குளிர், உள்ளேயும் குளிர் தானே என்று ஒரு இடமும் வெளிக்கிட விருப்பமில்லாமல் போர்த்துக் கொண்டு சோபாவில் இருந்த படியே ரீவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனிசி என்று குறிப்பிட்டு எழுதுவதால் பெண்ணியவாதிகள் கோவிச்சு கொள்ள வேண்டாம்.

 

ஏதோ ஒரு அவசர வேலையாக வெளியில் போட்டு வர கொஞ்ச நேரமாகி விட்டது.
மனுசி இப்ப தானே வந்தவள் தனித்திருக்கப் பயப்படுவா
ள் என நினைத்துக் கொண்டு ஓடோடி வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்து உள்ளே வரும் போது ரீவியின் சத்தமும் மனிசியின் சத்தமும் பலமாயக் கேட்டது.


 

அடிடா… அடிடா..என்ற பலத்த சத்தத்தோடும் மிகுந்த உற்சாகத்தோடும் மனிசி நான் வந்ததைக் கூட கவனிக்காமல் ரீவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் நின்றேன். ஒரு கணம் தலையை நிமிர்த்திப் பார்த்து விட்டு மீண்டும் வைத்த கண் வாங்காமல் ரீவியைப் பார்த்தபடி கைகள் இரண்டாலும் சோபாவில் குத்தியபடியே மறுபடியும் அடிடா.. அடிடா என மிகுந்த ஆவேசப்பட்டாள்.

எனக்கு வியப்பாகவும் சிரிப்பாகவும்  கூட இருந்தது. ரீவியில் நல்ல கொழுத்து முறுகிய இரண்டு பேர் குத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்பதோ அல்லது எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோ எனக்குத் தெரியாது. இந்தக்குத்துச் சண்டை எனக்கு பிடித்தமான விளையாட்டோ அல்லது நான் ஏற்றுக்கொள்ளும் விளையாட்டும் இல்லை.

முன்பு ஊரில் இருந்த வேளை முகமட் அலி பற்றியும் பின்பு இங்கு வந்த போது மைக்தைசன் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்கள் சண்டையை சில முறை ரிவியில் பார்த்தும் இருக்கிறேன்.

இப்ப நடக்கிற சண்டையை மனுசி மிகவும் உன்னிப்பாகவும் மிகுந்த விருப்பத்தோடும் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள்.
இந்தச் சண்டைக்காரர்களும் அவர்களைப் போல் பிரசித்தி பெற்ற குத்துச் சண்டை வீரர்களா…? இவர்கள் பற்றி மனிசி முன்னர் அறிந்திரக்கிறாரா… இது சம்பந்தமாய் கேட்க….

என்னப்பா இவர்களை உனக்குத் தெரியாதா….என்று மனிசி கேட்டு விட்டால்… என்ரை கௌரவம் மரியாதை…. என நினைத்து கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாது நானும் மௌனமாய் நின்றேன்.

சிறிது நேரத்தின் பின் பொறுமையிழந்தும் எனது வரட்டுக் கௌரவத்தை விட்டும் கேட்டேன்.
யாரப்பா இவங்கள் அடிபடுறாங்கள்..
தெரியாது
மனிசி நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை…
அப்ப ஏனப்பா உணர்ச்சிவசப்பட்டுக் கத்திறாய்
ஒரு கறப்பனும் ஒரு வெள்ளைக்காரனும் அடிபடுறாங்கள்
அதுக்கு
வெள்ளைக்காரனுக்கு நல்ல அடி குடுக்க வேணும்
ஏனப்பா அப்ப கறுப்பனைத் தெரியுமோ
இல்லை
அப்ப ஏன் வெள்ளையனுக்கு அடிக்க வேணும்
தெரியாது
மொட்டையாகவும் சுருக்கமாகவும் சொன்னாள்
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை
கொஞ்ச நேரம் அமைதியாகவே நின்றேன்
இல்லையப்பா கறப்பரென்றால் எங்கடை இனமெல்லே…என்று தானாகவே பதிலுரைத்து விட்டு மீண்டும் ரிவியில் மூழ்கி விட்டாள்.
ஏன்னப்பா இவ்வளவு நிறத்துவேசியாய் இருக்கிறாய்..? எனக்குத்தலாகவே கேட்டேன்.
ஏன் என்றபடி முழித்து விழித்தப் பார்த்தாள். பின்னே என்ன இரண்டு பேர் சண்டை போடுறாங்கள்.  இதிலே திறமைசாலி தான் வெல்ல வேண்டும் அல்லது உனக்குத் தெரிந்தவனோ அல்லது உன்றை நாட்டவனோ அல்லது உன்ரை இனத்தவனோ வெல்ல வேண்டும் என நினைப்பது இயற்கை. ஒரு போட்டியில் கறுப்பென்ன சிவப்பென்ன..
இது துவேசம் தானே…
இதுக்கு ஏன் எண்டு என்னால் விளக்கம் கொடுக்க முடியாது. ஆனால் கறுப்பனுக்குத் தான் சப்போட் பண்ண வேண்டும் போல் தோன்றகிறது. அப்படித் தான் மனமும் விரும்புகின்றது.


அவளோடு சண்டைபிடிக்காமல் குசினிப்பக்கம் நகர்ந்து போனேன்.
மனிசி நினைப்பதைப் போல் இன்று நிறையப்பேர் நினைக்கின்றோம். கறுப்பு வெள்ளை என்ற வரலாற்றுப் பின்னணிகளை அறியும் போதும், கேள்விப்படும் போதும் இவைகளில் உண்மைகளும் இருக்கவே செய்கின்றது. அதற்காக கோபப்படுவதும் ஆத்திரப்படுவதும் கூட நியாயம் தான்.
அனால் யாரோ ஒரு சிலர் விட்ட தவறுகளுக்காக அந்த மொத்த இனத்தையே குறை கூறவோ கோபப்பட்டவிடவோ முடியாது.


துவேசம் எந்த வகை வடிவிலாக இருந்தாலென்ன எந்த நிலையில் தான் இருந்தால் என்ன துவேசம் என்பது பிழையானது.


சிங்கள அரசாங்கம் செய்த கொடுமைகளுக்காகவும், அநியாயங்களக்காகவும் மொத்த சிங்கள இனத்தையே நாம் பகையாளிகளாகவும் எதிரிகளாகவும் கணித்துவிடத் தான் முடியுமா….?


ரீவியில் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது.

முற்றும்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்