08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

யுத்தத்தின் பின் பேரினவாதம் பௌத்தத்தை முன்னிறுத்தியே இனத்தை அழிக்கின்றது

யுத்தத்தின் பெயரில் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. வடிவத்தை மாற்றியுள்ளனர். 1940 களில் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடத்திய இனவழிப்பு குடியேற்றம், யுத்தத்தின் பின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேரினவாதம் தன் இனவழிப்புக்கு, இன்று பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி முன்னிறுத்துகின்றது. அரசு தன்னை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்தி, பேரினவாதத்தை முன்தள்ளுகின்றது. ஆயுதம் மூலமான இனவழிப்பு புலிகளின் அழிவுடன் முடிந்த நிலையில், பௌத்த மதத்தைக் கொண்டு அதைச் செய்கின்றது. யுத்தத்தின் பின்னான இனவழிப்பில் இன்று மதம் பயன்படுத்தப்படுகின்றது.

 

 

 

தமிழ் பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தின் வழிபாடு சார்ந்து நிர்மாணமாகும் புத்தர் சிலைகள் முதல், திட்டமிட்ட வகையில் முக்கிய சந்திகளில் புத்தர் சிலைகள் தொடர்ச்சியாக வைக்கப்படுகின்றது. இப்படி இராணுவம் மூலம், அந்த மக்கள் வழிபடாத ஒரு மதத்தை முன்னிறுத்த நிறுவப்படும் பௌத்த சின்னங்கள், திட்டமிட்ட ஒரு இனவழிப்பு வன்முறையாக மாறிவருகின்றது.

வவுனியா சந்தியில் நிறுவப்பபட்ட புத்தர் சிலை 1981 முன் இருந்தது கிடையாது. 1981 இல் திடீரென வைக்கப்பட்ட குட்டியான புத்தர் சிலை, இன்று பேரினவாதத்தின் பலத்துக்கு ஏற்ப அதன் உயரமும் பருமனும் அதிகரித்துச் செல்லுகின்றது. இனவாதத்தின் வளர்ச்சிக்கும் பலத்துக்கும் ஏற்ப அது கொழுக்கின்றது.

அமைதி சமாதானம் நிலவிய காலத்தில், திருகோணமலை பஸ் நிலையத்தில் நிறுவிய திடீர் புத்தர் சிலை, என்று அனைத்தும் தொடரான இனவழிப்பின் அரசியல் அங்கம் தான். இப்படி வடக்கு கிழக்கு எங்கும் திடீர் புத்தர் சிலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு நிறுவிய அரசு, யுத்தத்தின் பின் இராணுவம் மூலம் பெருமெடுப்பில் நிறுவி வருகின்றது. தொடர்ந்து இனக் குரோதம் என்பதும், திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது.

1948 முதல் பேரினவாத அரசு காலத்துக்கு காலம், சூழலுக்கு சூழல் இனவொடுக்குமுறை வடிவத்தை மாற்றி வந்துள்ளது. இந்த இனவொடுக்குமுறை தான், இன்று இனவழிப்பாக மாறியுள்ளது.

இந்த இனவொடுக்குமுறை தான், இலங்கையில் இன யுத்தத்தை உருவாக்கியது. அதுதான் புலியையும் உருவாக்கியது. அரசு தன்னை மூடிமறைத்தபடி புலிப் பயங்கரவாதம் தான் நாட்டை பிளவுபடுத்துவதாக கூறியது. புலியின் யுத்தம் தான் நாட்டின் சமாதானத்துக்கும் அமைதிக்கும் எதிராக இருப்பதாக கூறியது. இப்படிக் கூறித்தான், தமிழினவழிப்பாக யுத்தத்தை அரசு திட்டமிட்டு நடத்தியது.

சமாதானத்தையும், அமைதியையும், தமிழ் மக்களுக்கான தீர்வையும் யுத்தத்தின் பின் வழங்குவதாக அரசு கூறி வந்த வாக்குறுதியை, யுத்தத்தின் பின் அதை தன் இனவாத வரலாற்றின் தொடர்ச்சியில் புதைத்துவிட்டது. தன் இனவழிப்பை அது தொடருகின்றது. காலத்துக்குக் காலம் பேச்சுவார்த்தைகள், தீர்வைக் காணுவதற்கான குழுக்கள் முதல் ஒப்பந்தங்கள் வரை, அனைத்தும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப, இனவொடுக்குமுறை தொடர்ச்சியாவே அதை பயன்படுத்தியது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மறுப்பதுதான், அரசின் பேரினவாதக் கொள்கையும் நடைமுறையுமாகும்.

இதைப் பாராளுமன்ற வழிகளில் தீர்க்க முற்பட்டவர்களும், ஆயுத மூலம் தீர்வு காண முற்பட்டவர்களும், தோற்றுப் போனதே எம்மைச் சுற்றிய வரலாறாகின்றது. அதே இனவாத எல்லைக்குள் நின்று இதை நாம் அணுகியதால் தான், இது நிகழ்ந்தது. குறுகிய தமிழ் இனவாதத்தை கொண்டு பேரினவாதம் தன்னை பலப்படுத்தியது. இதைக் கொண்டு தான், இனவழிப்பாக அதை மாற்றியது.

இனவாத அரசை தனிப்படுத்தும் அரசியல் வழிமுறையை முன்னெடுக்காத குறுந்தேசிய தமிழினவாதம், பேரினவாத சிங்கள அரசுடன் தான் பேரம் பேசியது. சிங்கள மக்களுடன் பேசத் தவறியது என்பது, அதை தொடர்ந்து அரசியல் ரீதியாக நிராகரிப்பது என்பது, தொடர்ந்தும் பேரினவாதத்தை பலப்படுத்துகின்றது.

அது சிங்கள மக்களின்; அறியாமையை தனது இனவாதத்துக்கு ஆதரவுக் கருத்தாக மாற்றிக்கொண்டு, தொடர்ந்து இனவழிப்பை நடத்துகின்றது. இன்று பௌத்தத்தைக் கொண்டு, தமிழ் இனவழிப்பை முடுக்கிவிட்டுள்ள நிலையில், பேரம் பேசும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியாது. இந்தியா முதல் அமெரிக்கா வரை சென்று முறையிடுவதன் மூலம், இதை தீர்க்கவும் முடியாது. இதுதான் எம்மைச் சுற்றிய 60 வருட வரலாறு. இப்படி இருக்க, தொடர்ந்து பேரம் பேசுவதையும், இந்தியா முதல் அமெரிக்கா வரை வழிகாட்டி தமிழினத்தை காவு கொடுப்பதும் தான் தமிழ் குறுந்தேசிய அரசியலாக தொடருகின்றது.

இதற்கு மாறாக இதை சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் தான், அதற்கான மனநிலையை நாம் பெறுவதன் மூலம் தான், தொடரும் இனவழிப்பை தடுத்து நிறுத்த முடியும். இதற்கான முதற்படியை நாம் எடுத்து வைக்க, சிங்கள மக்களிடம் எம் பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும். இனவொடுக்குமுறை முதல் இனவழிப்பு வரை சிங்கள் மக்கள் செய்யவில்லை, பேரினவாத அரசு தான் செய்தது. சிங்கள மக்களுடன் சேர்ந்து, அரசுக்கு எதிராக போராடுவதன் மூலம் தான், நாம் எம்மீதான இனவொடுக்குமுறையை தடுத்து நிறுத்த முடியும்.

இதைவிட வேறு எந்த மார்க்கமும், மாற்று வழியும் கிடையாது என்பதையே எமது 60 வருட வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. எம் 60 வருட வழிமுறைகள், இன அழிவை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடரும் இனவழிப்பு, கடந்தகால எமது அரசியல் வழிமுறை ஊடாகத்தான் பலம்பெற்று வந்திருக்கின்றது. அது எம்மை அனாதையாக்கியிருக்கின்றது. இதைப் புரிந்து கொண்டு, எம்மை நாம் விமர்சனமும் சுயவிமர்சனமும் செய்யாவிட்டால், தமிழினம் இலங்கையில் தன் அடையாளத்தை இழந்து அழிந்து போவது என்பது எம் வரலாறாக எஞ்சும். அதற்கு நாங்கள் காரணமாக இருப்போம்.

பி.இரயாகரன்

22.05.2011


பி.இரயாகரன் - சமர்