கடந்த ஜனவரியில் நடந்த துனிசிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி, அந்நாட்டின் சர்வாதிகார அதிபரான பென் அலி, குடும்பத்தோடு நாட்டை விட்டே தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அடக்குமுறையும் கைதுகளும் துப்பாக்கிகளும் கவச வண்டிகளும் மக்கள் சக்தியின் முன் மண்டியிடும் என்பதை இப்பேரெழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

 

முன்னாளில் பிரெஞ்சுக் காலனியாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியிலுள்ள சிறிய இஸ்லாமிய நாடான துனிசியா, 1956இல் பெயரளவிலான சுதந்திரம் பெற்றது. 1987 இல் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அதிகாரத்துக்கு வந்த சர்வாதிகார அதிபர் பென் அலி, மக்கள் பேரெழுச்சியில் நாட்டைவிட்டு விரட்டப்படும்வரை தொடர்ந்து 23 ஆண்டுகளாகப் பதவியில் நீடித்து வந்தார். மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் நம்பகமான விசுவாசியாக இருந்ததால், அவரது அடக்குமுறையும் அட்டூழியங்களும் சூறையாடல்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்தன.

 

ஏழை நாடாக இருந்த போதிலும், படித்தவர்கள் நிறைந்த துனிசியாவில் இளைஞர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர். உள்நாட்டில் வேலை கிடைக்காததால், சிலர் வெளிநாடுகளுக்கு ஓடி கொத்தடிமைகளாக உழல்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள் விரக்தியில் உழல்கிறார்கள் அல்லது கலகக்காரர்களாக மாறுகிறார்கள். அரபு நாடுகளின் சர்வாதிகாரிகளும் அமெரிக்காவும் இத்தகையோரை அல்கைதா தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்குவதை நியாயப்படுத்துகின்றன. துனிசியாவில் போராடிய வேலையில்லா இளைஞர்களையும் பென் அலி இப்படி தீவிரவாத முத்திரை குத்தித்தான் ஒடுக்கி வந்தார்.

 

துனிசியாவின் தென்பகுதியிலுள்ள சிடி பௌசித் நகரில், 26 வயதான மொகம்மது பௌவாசிசி என்ற வேலையற்ற தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி இளைஞர், தெருவில் பழங்களை விற்க உரிமம் பெறவில்லை என்று போலீசார் தொடர்ந்து தொல்லைப்படுத்தியதால், மனமுடைந்து நகராட்சி அலுவலகத்தின் முன்பாக கடந்த டிசம்பர் 17ஆம்தேதியன்று தீக்குளித்தார். ஜனவரி 4ஆம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

 

வேலையில்லா இளைஞர்களின் குமுறலை எதிரொலித்த அவரது தீக்குளிப்பும் மரணமும், இளைஞர்களின் எழுச்சியாக மாறியது. ஊழல், ஒடுக்குமுறை, அநீதி, வேலையின்மைக்கு எதிராக இளைஞர்கள் போராடத் தொடங்கினர். பெண்கள் பெருந்திரளாக அணிதிரண்டு,""நாட்டைச் சூறையாடும் சர்வாதிகார பென் அலி கும்பல் ஒழிக!'' என்று முழக்கமிட்டபடி பேரணிகளைத் தொடர்ந்தனர். இப்போராட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மொகம்மது வழியில் மேலும் பல இளைஞர்கள் தீக்குளிக்கத் தொடங்கினர்.ஊழல் ஒடுக்குமுறையாலும், ஊதியவெட்டு வேலையின்மை விலையேற்றத்தாலும் வெறுப்பிலும் ஆத்திரத்திலும் இருந்த உழைக்கும் மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இக்கொடுமைகளைக் கண்டு பொங்கியெழுந்து அலையலையாக வீதிகளில் திரண்டு போராடினர்.

 

போராடும் மக்களைப் பயங்கரவாதக் கும்பல், வேலையில்லா பொறுக்கிகளின் அட்டகாசம் என்றெல்லாம் ஆளுங் கும்பல் அவதூறு செய்து இராணுவத்தை ஏவி ஒடுக்கியது. மேற்கத்திய ஊடகங்கள் திட்டமிட்டே துனிசிய மக்கள் எழுச்சியை மூடிமறைத்தன. போராட்டப் படங்கள், வீடியோக்கள், வாக்குமூலங்கள், கட்டுரைகள் முதலான அனைத்தும் இணையதளங்களில் அவசரமாக நீக்கப்பட்டன. இருப்பினும் டுவிட்டர், பேஸ் புக் முதலானவற்றின் மூலமும் அல்ஜசீரா போன்ற சில இணையதளங்களின் வழியாகவும் இப்போராட்டச் செய்திகள் துனிசியாவில் காட்டுத் தீயாகப் பரவி போராட்டத்தை உந்தித் தள்ளின.

 

பென் அலி சர்வாதிகார கும்பலின் உல்லாசக் கார்களும் பண்ணைகளும், நாட்டை ஆளும் கோடீசுவர கும்பல்களின் ஆடம்பர மாளிகைகளும் விடுதிகளும் போராடும் உழைக்கும் மக்களால் கைப்பற்றப்பட்டன. சிறைகள் உடைக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மக்களின் சீற்றத்தைக் கண்டு அஞ்சி பென் அலி கும்பல், ஜனவரி 14 அன்று சவூதி அரேபியாவுக்குத் தப்பியோடியது. இன்னும் இரு மாதங்களுக்குள் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து, நாடாளுமன்ற அவைத் தலைவர் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்ற பின்னரே துனிசியாவில் மக்களின் போராட்டம் தணியத் தொடங்கியது.

 

முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதால் துனிசியா, பிரான்சின் முக்கியமான வர்த்தகக் கூட்டாளியாக இருந்துவந்தது. பென் அலியின் சர்வாதிகார ஆட்சியை பிரான்சும் மேற்கத்திய நாடுகளும் முட்டுக் கொடுத்து ஆதரித்து வந்தன. மனித உரிமைகள் துனிசியாவில் பெரிதும் மதிக்கப்பட்டு வருவதாக பிரெஞ்சு அதிபர் சர்கோசி சான்றிதழ் அளித்தார். மக்கள் எழுச்சி பெருகியதும், அதை ஒடுக்குவதற்கு பிரெஞ்சுப் படைகளை அனுப்பவும் அந்நாடு தயாராக இருந்தது. போராடும் மக்கள் மீது சித்திரவதையும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடும் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அமெரிக்க அதிபர் ஒபாமா வாய்திறக்கவில்லை. இப்போது போராட்டப் புயல் சுழன்றடிக்கத் தொடங்கியதும், பிரான்சும் அமெரிக்காவும் நாக்கைச் சுழற்றி பென் அலியின் ஊழலையும் மனித உரிமை மீறல்களையும் சாடுகின்றன.

 

இது, சர்வாதிகார அடக்குமுறைக்கும் வேலையின்மைக்கும் எதிரான எழுச்சி மட்டுல்ல; இது, உலக முதலாளித்துவத்துக்கு எதிரான பேரெழுச்சி. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என உலக மேலாதிக்க வல்லரசுகளால் திணிக்கப்படும் கொள்கைகளையே உலகின் பெரும்பாலான நாடுகள் பின்பற்றி வருகின்றன. அக்கேடுகெட்டப் பொருளாதாரக் கொள்கையால், உணவும் வேலையும் ஊதியமும் மானியமும் மூலவளங்களும் பறிக்கப்படுவதை எதிர்த்தும், நாட்டைச் சூறையாடும் முதலாளித்துவக் கும்பல்களுக்கு எதிராகவும் தொடங்கிய இளைஞர்களின் கலகம், துனிசியாவில் மக்களின் பேரெழுச்சியாகச் சுழன்றடித்துள்ளது.

 

துனிசிய பேரெழுச்சியைத் தொடர்ந்து எகிப்து, லிபியா, ஜோர்டான், மாரிடோனியா முதலான நாடுகளிலும் இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன. அல்ஜீரியாவில் உணவுக் கலகம் வெடித்துப் பரவுகிறது. காட்டுத் தீயாகப் பரவும் இப்போராட்டங்களைக் கண்டு இந் நாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அரண்டு போயுள்ளனர்.

 

தீவிரமாகிவிட்ட முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் சதிகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, இப்போது ஆப்பிரிக்க கண்டத்திலும் போராட்டங்கள் பரவத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தென் அமெரிக்க நாடுகளில் இத்தகைய எழுச்சிகள் நடந்து சர்வாதிகார ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டனர். தொடரும் இப் போராட்டங்களின் ஊடாக புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையையும், முதலாளித்துவ அரசியலமைப்பு முறையை வீழ்த்தி சோசலிசத்தை நிறுவுவதுதான் ஒரே தீர்வு என்பதையும் உழைக்கும் வர்க்கம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

• குமார்