இந்திய அரசு நடுநிலையானதாகவும், சுயேச்சையானதாகவும், சமூகத்திலுள்ள அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. மேலும், அரசு செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினரின் நலன்களைச் சார்ந்து இயங்குவதைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நீதிமன்றம் போன்றவை கொண்ட அமைப்பென்றும் கூறிக் கொள்கிறார்கள் இந்தப் போலி ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள். வெளித்தோற்றத்திற்கு உண்மையைப் போலத் தெரியும் இந்த மோசடியை, அலைக்கற்றை ஊழலும், அதையொட்டி கசியவிடப்பட்டுள்ள நீரா ராடியா ஒலிநாடாக்களும் பாமரன்கூடப் புரிந்துகொள்ளும்படி அம்பலப்படுத்திவிட்டன. இந்திய அரசு, ஆளும் வர்க்கமான தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக எப்படியெல்லாம் சேவை செய்கிறது என்பதை இவ்விவகாரம் காட்டிவிட்டது.

 

ஆனால், ஊடகங்களும், முதலாளித்துவ அறிஞர்களும் அம்பலமாகிவிட்ட இந்த உண்மையை மூடிமறைத்துவிட முயலுகிறார்கள். நீரா ராடியா என்ற தனியொரு பெண் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஆட்டிப் படைத்து வந்ததைப் போலவும், அவரை மனோகரா என்ற பழைய தமிழ்த் திரைப்பட வில்லியான வசந்தசேனையைப் போலவும் வாசகர்களின் மூளையில் பதிய வைக்க ஊடகங்கள் முயலுகின்றன. நீரா ராடியா டாடாவின் வியாபார நலனுக்காகத்தான் தரகு வேலை செய்து வந்தார் என்பது அம்பலமான பின்னும், சோ ராமஸ்வாமி போன்றோர் டாடா போன்ற தொழில் அதிபர்களெல்லாம் நீரா ராடியாவிடம் அறியாமல் மாட்டிக் கொண்டு விட்டதைப்போலப் பேசி வருகிறார்கள்.

 

அதிகாரத் தரகு வேலை ஏதோ சமீப காலத்தில்தான் திடீரென முளைத்து நடந்து வருவதைப் போலவும், நீரா ராடியாவைப் போன்று நூற்றுக்கணக்கானோர் அதிகாரத் தரகு வேலை செய்துவருவது தமக்குத் தெரியாதது போலவும் ஊடகங்கள் பசப்புகின்றன

 

தொழில் ஆலோசனை நிறுவனங்கள், சட்ட ஆலோசனை நிறுவனங்கள், மக்கள் தொடர்பு நிறுவனங்கள், சுற்றுப்புறச் சூழல் மேலாண்மை நிறுவனங்கள் என்ற பெயர்களில் தலைநகர் டெல்லியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதிகாரத் தரகு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. நீரா ராடியா, ரத்தன் டாடா, அம்பானி போன்ற தனது வாடிக்கையாளர்களுக்குத் தரகு வேலை பார்ப்பதற்காக, தி.மு.க.வைச் சேர்ந்த ராசா, கனிமொழி, முதல்வர் மு.க.வின் மனைவி ராசாத்தி அம்மாள்; ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த என்.கே. சிங்; பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள்; கர்நாடகாவைச் சேர்ந்த பேஜாவர் சுவாமிகள்; பத்திரிகையாளர் வீர் சிங்வி, பர்கா தத் எனப் பல தரப்பினரோடும் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்திருக்கிறார். இதனை ஒரு உதாரணமாகக் கொண்டு பார்த்தால், இந்த அதிகாரத் தரகுத் தொழில் ஆலமரம் போல் கிளைகளையும் விழுதுகளையும் கொண்டு, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து பரந்து விரிந்து கிடப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

மைய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீரா ராடி யாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டுப் பதிவு செய்து வந்தாலும், அவை அனைத்தும் வெளியே கசியவிடப்படவில்லை. தரகு முதலாளிகளுக்கு இடையே நடந்து வரும் கழுத்தறுப்புப் போட்டியின் விளைவாக, எதிராளியைப் போட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக, நீரா ராடியா ராசா கனிமொழி டாடா இடையே நடந்துள்ள உரையாடல்களில் ஒரு பகுதி மட்டும் வெளியே கசியவிடப்பட்டிருக்கின்றன.

 

இதன் தொடர்விளைவாக, நீரா ராடியா பா.ஜ.க. தொடர்பும் தற்பொழுது அம்பலமாகி வருகிறது. முகேஷ் அம்பானி, கிருஷ்ணா கோதாவரி படுகையில் உள்ள தனது இயற்கை எரிவாயு நிறுவனத்திற்கு 2009 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 91,000 கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளைப் பெறுவதற்கு நீரா ராடியா மூலமும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என்.கே.சிங் மூலமும் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். நாடாளுமன்ற மேலவையில் பட்ஜெட் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசவிருந்த பா.ஜ.க.வின் அருண் ஷோரி, இந்த வரிச் சலுகையை எதிர்க்கக்கூடும் என இவர்கள் சந்தேகித்தனர்.

 

எனவே, அனில் அம்பானியின் ஆளான அருண் ஷோரிக்குப் பதிலாக, பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடுவை இந்த வரிச் சலுகைக்கு ஆதரவாகப் பேசி விவாதத்தைத் தொடங்கி வைக்கச் செய்வதில் நீரா ராடியாவும், என்.கே.சிங்கும் வெற்றிபெற்றனர். நாடாளுமன்ற மேலவையில் அருண் ஷோரிக்குப் பதிலாக பட்ஜெட் விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய வெங்கையா நாயுடு, ""நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு கருதி இந்த வரிச் சலுகையினை அளிக்கலாம்'' என நியாயப்படுத்தினார்.

 

அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு விற்று அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது ஊழல் என்றால், பட்ஜெட் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் தனியொரு முதலாளிக்கு 91,000 கோடி ரூபாய்க்கு வரிச்சலுகை அளிக்க பா.ஜ.க. சிபாரிசு செய்ததும் ஊழல்தான். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகியிருந்தாலும், ஊழலாக அடையாளப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீரா ராடியாவும், டாடாவும் ஆ.ராசாவைத் தொலைபேசித் துறை அமைச்சராக்க ""லாபி '' செய்தனர் என்றால், தற்பொழுதுள்ள மைய அமைச்சரவையில் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கமல்நாத்தை நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சராக்கவும், ஆனந்த ஷர்மாவை வர்த்தகத் துறை அமைச்சராக்கவும் சி.ஐ.ஐ. என்ற தரகு முதலாளிகள் சங்கம் ""லாபி'' செய்திருக்கிறது.

 

சி.ஐ.ஐ. சங்கத்தின் முன்னாள் தலைவரான தருண் தாஸ், ""கமல் நாத் திறமையாகப் பணியாற்றக் கூடியவர்தான். ஆனால், நாட்டிற்குச் சேவை செய்வதன் ஊடாகவே, தனக்கு உரிய 15 சதவீத கமிஷனைக் கறந்துவிடக் கூடியவர்'' என கமல்நாத்தின் ஊழலைப் பற்றி பச்சையாகவே நீரா ராடியாவிடம் கூறியிருக்கிறார்.

 

விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் படேல், ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிபர் நரேஷ் கோய லுக்கும் கிங் ஃபிஷர் விமான நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுக்கும் நெருக்கமானவர் என்கிறது ராடியா டேப்பின் உரையாடல். பதிலுக்கு, நீரா ராடியாவைப் "பொருளாதார பயங்கரவாதி' எனச் சாடுகிறார் பிரஃபுல் படேல்.

 

இவையனைத்தும் அம்பலமாகியிருக்கும் ராடியா டேப்பில் பேசப்படும் விவரங்கள். மீதமுள்ள பதிவுகள் அனைத்தும் அம்பலமாகும் பட்சத்தில் இந்த அரசமைப்பின் அங்கங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கங்களுடன் எவ்வாறு பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பது இழை இழையாக வெளிவந்திருக்கக் கூடும்.

 

அமைச்சர்களின் நியமனம் மற்றும் அமைச்சரவையின் உருவாக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் நேரடியாகத் தலையிடுவதை ராடியா டேப்புகள் அம்பலப்படுத்தியவுடன், பெரிதும் அதிர்ச்சியுற்றவர்களைப் போல நடிக்கின்றனர் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி அரசை அமைப்பதிலும் அரசைக் கவிழ்ப்பதிலும், அமைச்சரவை நியமனங்களிலும் ஆளும் வர்க்கம், சாராய மாஃபியா, சுரங்க மாஃபியா போன்ற பலவகையான மாஃபியாக்கள், முதலாளிகளின் சிண்டி கேட்டுகள் ஆகியவை ஆற்றும் பாத்திரம் அம்பலமான எடுத்துக்காட்டுகள் பல இருக்கின்றன.

 

அவ்வளவு ஏன்? 1990 களில் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவே இல்லாத மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்க வேண்டும் என அமெரிக்காவும் உலக வங்கியும்தான் ""லாபி'' செய்தன. இன்று பிரதமராகப் பதவி உயர்வு பெற்றுள்ள அந்தக் கனவான் ஒரு அமெரிக்கத் தரகர் என்பது கடந்த ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியிருக்கிறது.

 

1980களுக்கு முன்பு, தனி நபர்கள் மூலம் நடந்து வந்த இந்தத் தரகுத் தொழில் இப்பொழுது நிறுவனமயமாக வளர்ந்திருக்கிறது. மேலும், தாராளமயத்திற்குப் பின் அமைச்சர்களும் அதிகாரிகளும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தரகு வேலை பார்ப்பதும் அதிகரித்து வருகிறது.

 

எடுத்துக்காட்டாகச் சொன்னால், போபால் விஷவாயுப் படுகொலை வழக்கில் தொடர்புடைய டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றால், அந்நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் கமல் நாத், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் தங்கள் பதவியைப் பயன்படுத்திக் கொண்டு ""லாபி'' செய்தனர்.

 

இந்தியாவில் அமெரிக்க முதலாளிகளுக்குத் தேவையான காரியங்களைச் செய்து கொடுப்பதற்காகவே இந்திய அரசின் அங்கீகாரத்தோடு இந்திய அமெரிக்கத் தொழில் அதிபர்கள் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல் அமெரிக்காவில் இந்தியா தனக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக அதிகாரத் தரகு நிறுவனங்களை நியமித்துக் கொண்டுள்ளது.

 

தனியார் நிறுவனங்கள் அதிகாரத் தரகு வேலைகளில் ஈடுபடுவது இருக்கட்டும். தொகுதி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களும் அமைச்சர்களும் தொழிலதிபர்களின் தரகர்களாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். சர்வகட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தரகு முதலாளிகள் விலைக்கு வாங்கி வைத்திருப்பதும், அவர்கள் மூலம் தமக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை எடுக்க அரசைப் பயன்படுத்துவதும் இந்திய அரசியலில் புதிய விசயங்கள் அல்ல.

 

அரசின் உறுப்புகளைத் தத்தம் நலனுக்கு ஏற்ப வளைக்கவும், தமது காரியங்களை விரைந்து முடித்துக் கொள்ளும் பொருட்டு, அவற்றுக்கு "எண்ணெய்' ஊற்ற வும், ஊடகங்கள் மூலம் தமக்குச் சாதகமான பொதுக்கருத்தை உருவாக்கவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அதிகாரத் தரகர்கள் தேவைப்படுகிறார்கள். தனியார் வங்கிகள் மிரட்டிக் கடன் வசூலிக்கும் வேலைக்கு வெளி நிறுவனங்களை அமர்த்திக் கொள்வதைப் போல சதிகளையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் முடித்துத் தரும் பொறுப்பை கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகாரத் தரகு நிறுவனங்களிடமே ஒப்படைக்கின்றன. பொதுநலனுக்காகப் போராடுபவர்களைப் போலக் காட்டிக் கொள்ளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் கூடத் தமது தரகு நிறுவனங்களாக கார்ப்பரேட் முதலாளிகள் தீனி போட்டு வளர்க்கிறார்கள் என்ற உண்மையும் ராடியா டேப்பில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

1980களில் போஃபர்ஸ் ஊழல் அம்பலமானபொழுது, அரசாங்கம் நடத்தும் ஆயுதக் கொள்முதல்களில் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும் என்ற கூச்சல் எழுப்பப்பட்டது. இராணுவ உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றதும் இத்தகைய தரகு நிறுவனங்களை நடத்துவதும், உளவு வேலை பார்ப்பதும் அம்பலமான பிறகும் ஆயுதத் தரகு நிறுவனங்கள் கூட ஒழிக்கப்படவில்லை எனும்போது மற்ற தரகு நிறுவனங்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

 

இப்போது, இந்த கார்ப்பரேட் தரகு வேலையைச் சட்டபூர்வமாக்கும் வேலைகளில் அரசாங்கமே இறங்கியிருக்கிறது. குறிப்பாக, கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சர் சல்மான் குர்ஷீத் தரகு முதலாளிகள் சமீபத்தில் நடத்திய ""கார்ப்பரேட் வீக்'' என்ற கூட்டத்தில், ""அதிகாரத் தரகு வேலைகளில் ஈடுபடுவதை ஜனநாயக அமைப்பின் அங்கமாகக் குறிப்பிட்டு''ப் பேசியிருக்கிறார். அதிகாரத் தரகு வேலையைச் சட்டபூர்வமாக்கிவிட் டால், இலஞ்சம் ஊழல் போன்றவை பெருமளவு குறைந்துவிடும் என வாதிடுகிறார்கள் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள்.

 

மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் இயங்கும் திட்ட கமிசன் அதிகாரத் தரகு வேலை வெளிப்படைத் தன்மையோடு இயங்குவதை உறுதி செய்வதற்காக, அதிகாரிகளையும், தொழில் அதிபர்களையும் கொண்ட குழுவொன்றை அமைத்துத் தொழில் அதிபர்கள் சங்கங்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. ராடியா டேப் இரகசியங்கள் வெளி வந்ததனால் நீரா ராடியாவுக்கு இனி வெளிப்படையாக இயங்குவதற்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

செல்வம்