Language Selection

சுந்தரம் படுகொலையின் பின்னான சுந்தரம் படைப்பிரிவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதன் ஆரம்பகாலங்களிலேயே வெறுமனவே சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட ஒரு குழுவின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையாகவே இருந்து வந்தது(ஐயரின் "ஈழ விடுதலைப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற தொடரை படிக்கவும்). தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் தோன்றிய முரண்பாடுகளும் அதன் பின்னான " புதியபாதைக்" குழுவினரின் பிரிவும் அன்றைய சூழலில் ஓரடி முன்னோக்கிய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். அன்றிருந்த சமூக, அரசியல் பின்னணியில் இருந்து " புதிய பாதை " யின் பணியை மதிப்பீடு செய்வோமானால் இது புலனாகும். நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களுடன் கூடிய, பிரதேசவாத சிந்தனைகள், சாதிய அமைப்பு முறைகளுடன் கூடிய ஒரு "பிற்பட்ட" கலாச்சாரத்தைக் கொண்ட சமூகமாக எமது சமூக அமைப்பு இருந்தது. சிங்கள பேரினவாதம் ஒருபுறமும் தமிழ்க்குறுந்தேசியவாதம் மறுபுறமும் கோலோச்சிய காலமாக இருந்தது.

 

 

 

இத்தகையதொரு சூழலில் சுந்தரத்தின் முன்முயற்சியில் வெளிவந்த "புதியபாதை" ஈழ விடுதலைப் போராட்டத்தில் முற்போக்கான அரசியல் சிந்தனையின் ஒரு மைல் கல்லேயாகும். முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த தமிழர் விடுதலைக் கூட்டணி குறுந்தேசிய வெறியை மக்கள் மத்தியில் விதைத்து விட்டிருந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் கூடிய தனிநபர் பயங்கரவாதத்தையே அவர்களது அரசியலாகக் கொண்ட வேளையில், சுந்தரமோ இடதுசாரி அரசியலுடன் கூடிய மாற்றுக்கருத்தை மிகவும் துணிச்சலுடன் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற ஒரு எளிமையான போராளி. ஆனால் சுந்தரம் " புதியபாதை" பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தபோதும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பில் இருந்து பிளவுபட்டு வந்திருந்த காரணத்தால் அரசியல் ரீதியில் அதன் தொப்புள்கொடி உறவுகளிலிருந்து முற்றாக விடுபட்டிருக்கவில்லை என்றொரு உண்மையையும் நாம் கண்டுகொள்ள வேண்டும்.

அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நேர் எதிரிடையான அரசியலை எடுத்துச் செல்லும் " புதியபாதை" பத்திரிகை தங்களை அம்பலப்படுத்துவதை விரும்பாத நிலையில் கூட்டணித்தலைமை அன்றிருந்தது. மக்கள் மத்தியில் சுதந்திரன் போன்ற பத்திரிகைகள் கூட்டணி சார்பாக குறுந்தேசிய வெறிகளைக் கிளப்பி கூட்டணிக்கு பலம் சேர்த்துக் கொண்டிருந்த நிலைமையை தலைகீழாக்கும் "புதியபாதை"யின் கருத்துக்கள் தகர்த்துவிடுமோ என்ற அச்சத்தினால் கூட்டணித்தலைமையால் வெறுக்கப்பட்டது. தனது பக்கத்தில் சார்ந்திருக்கும புலிகளுக்கு யார் யார் துரோகிகள் என சுட்டுவிரல் காட்டி மேடைகளில் பேசி தூபம் இட்டனரோ அவர்களை புலிகள் தமிழினத் துரோகிகள் என்று பெயரில் கொன்றழித்தனர்.

(அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினரால் துரோகியென பிரகடனப்படுத்தப்பட்டு அதன் மூலம் புலிகளுக்கு கொலையாணை வழங்கி துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாக்கப்பட்ட யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா)

 

இவ்வாறே சுந்தரத்தின் கொலைக்கான அரசியல் காரணங்கள் அன்று திரண்டிருந்தன. கூட்டணியின் விருப்பை புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுந்தரம் படுகொலையும் அதற்குப் பழிவாங்கும் முகமாக புளொட்டினால் மேற்கொள்ளப்பட்ட இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலைகளும், 1982 மே 19 சென்னை மாம்பழம் பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரன்(முகுந்தன்), ஜோதீஸ்வரன் (கண்ணன்) ஆகியோரை கொல்வதற்காக அவர்கள் மீது பிரபாகரன் நடாத்திய துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பின்னான நாட்கள் இரண்டு அமைப்புக்களுமிடையிலான முறுகல் நிலையாக மாறியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைமிரட்டல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு புளொட் நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனால் சுந்தரத்துடன் செயற்பட்டவர்கள் உட்பட சுழிபுரம் பகுதியையும் அதைச் சூழவுள்ள பகுதியினரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கும் ஜனநாயக மறுப்புக்கும் எதிராக முகம் கொடுக்கத் தயாரானார்கள். சுந்தரம் சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதாலும், புளொட்டின் ஆரம்பகாலங்களில் சுழிபுரத்தையும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள இளைஞர்கள் கணிசமாக இருந்ததாலும், சுழிபுரத்தை மையமாகக் கொண்டு இவர்கள் செயற்படக் காரணமாக இருந்தது. இதன் ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கும், ஜனநாயக மறுப்புக்கும் எதிராக துணிச்சலுடன் முகம் கொடுத்தவர்கள் பின்னாட்களில் தம்மை "சுந்தரம் படைப்பிரிவு" என்ற பெயரில் அழைக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல் தமது நடவடிக்கைகளுக்கு "சுந்தரம் படைப்பிரிவு" என்றே உரிமையும் கோரினர். இவ்வாறு உருவான " சுந்தரம் படைப்பிரிவை" ச் சேர்ந்தவர்கள் புளொட்டுக்குள் ஒருவகை அதிகாரத்தன்மை கொண்டவர்களாகவும் புளொட்டினுடைய கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் வெளிப்படுத்திக் கொண்டனர். இலங்கையின் அரச படைகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப்புலிகளின் எதேச்சதிகாரத்துக்கெதிராகவும் போராடி புளொட்டை வளர்த்தது தாம் என்பதால் " சுந்தரம் படைப்பிரிவு " தான் புளொட் என்ற ஒரு மனோநிலை இவர்களிடத்தில் வளர்ந்திருந்தது. இதனால் புளொட்டின் தளநிர்வாகத்துடன் முரண்பாடு கொண்டவர்களாகவும் தளநிர்வாகத்துக்கு கட்டுப்படாதவர்களாகவும் காணப்பட்டனர். " சமூகவிரோதிகள் ஒழிப்பு", தமது செலவீனங்களுக்குத் தேவையான பணத்தை அரச தபாற்கந்தோர் போன்ற இடங்களில் கொள்ளையிடுதல் மூலம் பெற்றுக் கொள்ளுதல், அன்றாட தனி நபர்சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் (சாதிப்பிரச்சனை, காதல் விவகாரங்கள்) தலையிடுதல் என்பனவற்றில் தாமாகவே முடிவெடுத்து செயற்பட்டனர். இவர்களிடையே சாகசப் போக்கும் ஆயதக் கவர்ச்சியும் குழுவாதமும் தலையெடுத்திருந்தது. புளொட்டின் அரசியல் கருத்துக்கள் எதுவும் தங்களுக்கு பொருந்தாதது அல்லது நடைமுறைக்குதவாதது என்ற கருத்துப் போக்கும் இவர்களிடம் காணப்பட்டது. உமாமகேஸ்வரனுடன் தமக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் அவரின் அனுமதியுடன் தான் செயற்படுவதாகவும் இதற்கு விளக்கம் கொடுத்திருத்தனர். எந்த எதேச்சதிகாரப் போக்கு தவறானதென்று சுந்தரம் படைப்பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொண்டார்களோ, பின்பு அதே எதேச்சதிகாரப் போக்குகளுடன் சுந்தரம் படைப்பிரிவினர் புளொட்டுக்குள் விருட்சம் போல் வளர்ந்து நின்றனர்.

எதேச்சதிகாரப் போக்குடன் சுந்தரம் படைப்பிரிவினர்

புளொட்டில் முழுநேரமாக செயற்பட்ட சிலர் தங்கள் செலவுக்கென ( உணவு, போக்குவரத்து) மாதாந்தம் பணம் பெற்று வந்தனர். ஆனால் அதற்குச் சரியான கணக்கு எழுதப்பட்டு தலைமையிடம் அல்லது சம்பந்தப்பட்ட நபருக்குப் பொறுப்பானவரிடம் கொடுக்கப்பட வேண்டும். சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்களோ செலவுகளுக்கு கொடுக்கும் பணத்துக்கு கணக்குக் கொடுப்பதைத் தவிர்த்து வந்தனர். இவர்களது இத்தகைய தவறான போக்கை நிறுத்துவதற்கு செலவுகளுக்கான கணக்கு கொடுத்தால் மட்டுமே பணம் கொடுப்பதென்று முடிவாகி சந்ததியாரின் வேண்டுகோளின் பேரில் சுந்தரம் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்குப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சுந்தரம் படைப்பிரிவினர் மானிப்பாய் தபால் அலுவலகத்தை கொள்ளையிட்டு தமது செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டனர். புளொட்டினுடைய கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படியாதவர்களாக, அதன் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களாக, தள நிர்வாகத்துக்குக் கீழ்ப்படியாதவர்களாக சுந்தரம் படைப்பிரிவினர் விளங்கினர்.

சந்ததியார் அமைப்புக்குள் கொள்கை கட்டுப்பாடு என்பவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒருவர். சுந்தரம் படைப்பிரிவினரின் தவறான போக்குகளுக்கு எதிராக சந்ததியார் நேரடியாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். இதனால் சந்ததியார் மீது வெறுப்புணர்வும் காழ்ப்புணர்ச்சியும் கூட இவர்களிடத்தில் வெளிப்படையாகக் காணப்பட்டது. சந்ததியார் சுந்தரம் படைப்பிரிவினரின் தவறான போக்குகள் மேல் காட்டிய "கடும்" போக்கும், அதேவேளை உமாமகேஸ்வரன் அவர்கள் மேல் காட்டிய "மென்" போக்கும் சுந்தரம் படைப்பிரிவினரிடையே சந்ததியார் மீதான வெறுப்புணர்வை வளர்ப்பதற்கு காரணமாக இருந்தது மட்டுமல்லாது அவர்களை உமாமகேஸ்வரனை நோக்கி அணிதிரளவும் வைத்தது. இதுவே அமைப்புக்குள்ளே குழுவாதம் தோன்றி வளர்வதற்கும் காரணமாக அமைந்தது.

அரசியல் பேசுபவர்கள் கொள்கை மற்றும் கட்டுப்பாடு பற்றிப் பேசுபவர்கள் சந்ததியாரின் கருத்துக்கு ஆதரவாகக் காணப்பட்டனர். மக்கள் அரசியலைப் புறக்கணித்த கொள்கை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக் காட்டிக் கொண்டவர்கள் உமாமகேஸ்வரனைச் சுற்றி அணிதிரண்டனர்.

 

வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து போட்டோப்பிரதி இயந்திரம்,றோணியோ இயந்திரம் போன்றவற்றை கொள்ளையிடுவதென்று சுந்தரம் படைப்பிரிவினர் முடிவு செய்திருந்தனர். இந்தத் தகவலை அறிந்து கொண்ட மத்தியகுழு உறுப்பினர்களான சத்தியமூர்த்தியும், கேதீஸ்வரனும் இத்தகைய தேவையற்ற, தள நிர்வாகக்குழுவின் முடிவற்ற ஒரு கொள்ளை தேவையல்ல என்றும், இதனை உடனே நிறுத்தும்படியும் தள நிர்வாகப் பொறுப்பாளரை( காந்தன்- ரகுமான் ஜான்) கேட்டுக் கொண்டனர். ஆனால், தள நிர்வாகப் பொறுப்பாளரான காந்தனோ(ரகுமான் ஜான்) இந்த விடயத்தில் நேரடியாக முகம் கொடுத்து உரியமுறையில் தீர்த்துவைப்பதைத் தவிர்த்து சத்தியமூர்த்தியையும் கேதீஸ்வரனையும் அவர்களே கையாளும்படி விட்டுவிட்டார். மத்தியகுழு உறுப்பினர்களான இருவரும் சுந்தரம் படைப்பிரிவினரிடம் சென்று பேசினர். மத்தியகுழு உறுப்பினர்களுடன் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்ட சுந்தரம் படைப்பிரிவினர் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி கொள்ளையிடப்பட்டது. இந்தக் கொள்ளை, அன்று எந்தவித தேவையுமற்ற எந்தவித பயனுமற்ற கொள்ளை என்பதோடு மட்டுமல்லாமல், புளொட்டின் தளநிர்வாகத்தின் முடிவில்லாத, மத்தியகுழு அங்கத்தவர்களின் சரியான கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத, புளொட்டின் இராணுவப்பிரிவு என்று சொல்லப்படும் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயற்பாடாகும் இதுபோன்ற தன்னிச்சையான முடிவுகளும் செயற்பாடுகளும் புளொட்டின் ஆரம்ப காலங்களிலேயே புற்றுநோய் போல் தோன்றி வளர்ந்து வந்தது.

 

(தொடரும்)

20/05/2011

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4