08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

ஓசாமா பின்லாடனை, பிரபாகரனை, ரோகண விஜவீரவைக் … கொன்ற பயங்கரவாதங்கள்

இன்றைய உலக ஒழுங்கில் போராடும் தலைவர்களுக்கும், அரச பயங்கரவாதம் சொல்லுகின்ற செய்தி என்ன? சரணடையாதே, கைதாகாதே, மரணம் வரை போராடு. இதை மீறினால், எம் வதைகள் மூலம் நீ கொல்லப்படுவாய். இதுதான் இலங்கை அரச பயங்கரவாதம் முதல் அமெரிக்காவின் உலக பயங்கரவாதம் வரை உலகுக்கு சொல்லுகின்ற பாசிசச் செய்தியாகும். இது தான் ஜனநாயகம், இதுதான் சட்டம், இதுதான் நீதி, என அனைத்துமாகியிருக்கின்றது.

இதன் மேல்தான் தகவல் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. அரச பயங்கரவாதம் கட்டமைக்கும் பாசிசப் பயங்கரவாதத்தை தான், தகவல்களாக எம்முன் திணிக்கப்படுகின்றது. புலிகளை அழித்த இலங்கை அரசும், பின்லாடனை கொன்றதாக கூறும் அமெரிக்க அரசும், இதன் பின்னால் சொல்லுகின்ற பொய்கள் பித்தலாட்டங்கள் அனைத்தும் எவ்வளவு பொய் என்பது உலகறிய இன்று அம்பலமாகிக் கிடக்கின்றது. ஆனால் இதைத் தான் தகவல் ஊடகங்கள் எமக்குச் செய்தியாக, தகவலாக மீள மீளத் தருகின்றது. அரச பயங்கரவாதம், தகவல் பயங்கரவாதமாக மாறி, பொதுமக்கள் மேலான பயங்கரவாதமாக மாறுகின்றது.

 

 

 

உண்மை புதைக்கப்பட்ட பொய்மைகளை கொண்ட உணர்வாக, எம் உணர்வுகள் மாற்றப்படுகின்றது. பித்தலாட்டம், மோசடி மூலம் தான் "ஜனநாயகம்" தன்னைத்தான் இன்று தக்கவைக்கின்றது. மக்களின் ஜனநாயக உணர்வுகளில் இருந்ததல்ல.

மத்தியகிழக்கில் எண்ணைக்கான யுத்தம் தான் என்பதும், பயங்கரவாதம் பற்றிய கூச்சல்கள் இதற்குத் தான் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் தகவல் ஊடகங்கள் இந்த உண்மை சார்ந்து இயங்காது, இதை மறுக்கின்ற வண்ணம் தகவலைத் திரித்து மக்கள் மேல் தகவல் பயங்கரவாதத்தை திணிக்கின்றது.

இன்றைய அரசுகள் மக்களுக்கு எதிரான சொந்தச் சதிகள் மூலம் தான் வாழ்கின்றது. தங்கள் சொந்த சட்டதிட்டங்களைக் கண்டு அச்சமடைகின்றது. கைது செய்தவர்களையும், சரணடைந்தவர்களையும் கொன்றுவிடுவதன் மூலம், தங்கள் சொந்தப் பயங்கரவாதத்தை மூடிமறைக்க முனைகின்றனர். இதுதான் இதன் பின்னுள்ள சூக்குமம். பயங்கரவாதக் குற்றவாளிகள் என்று கூறியவர்கள், தங்கள் சொந்தச் சட்டத்தின் முன் அவர்களை நிறுத்த அஞ்சுகின்றனர். உண்மையான குற்றவாளிகள் தாங்களே என்பதை, இது நிறுவிவிடும் என்ற அச்சம் தான், அவர்களைக் கொன்றுவிடுவதற்கான அடிப்படைக் காரணமாகும்.

பிரபாகரனையும், பின்லாடனையும் சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதும், குற்றவாளிகள் நாட்டையும், உலகத்தையும் ஆள்வதும் அம்பலமாகியிருக்கும். இதனால் குற்றவாளிகள் அவர்களை தங்கள் சொந்த சட்டத்தின் முன் நிறுத்தாது கொல்லுகின்றனர்.

இந்த வகையில் ஓசாமா பின்லாடனை கொன்றதாக கூறிய அமெரிக்கா, அதன் பின் பல பித்தலாட்டங்களையும் மூடிமறைப்புகளையும் செய்கிறபோதும், அவை தொடர்ந்து அம்பலமாகி வருகின்றது. உலகில் உள்ள மக்களை முட்டாள்களாக கருதுகின்ற அரச பயங்கரவாதங்கள், உண்மையைக் கண்டு அஞ்சுகின்றது. இதன் பொருள் இந்த அரசுகள், மக்களைக் கண்டு அஞ்சுகின்றன. இதனால் உண்மையை திரித்து மூடிமறைத்துவிட முனைகின்றது.

பயங்கரவாதிகள் என்று யாரை உலகறிய கூறினார்களோ, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சட்டத்தின் காவலர்களால் முடிவதில்லை. ஒன்றில் சட்டத்தை கட்டைப் பஞ்சாயத்தாக்கி அதைக்கொண்டு கொல்லுதல் அல்லது கைது செய்த இடத்தில் அல்லது சரணடைந்த இடத்தில் வைத்து இரகசியமாக கொல்லுதல் என்பதுதான், அமெரிக்கா தலைமையிலான இன்றைய உலக ஒழுங்காக உள்ளது.

ஈராக்கில் சதாம் குசைன், ருமேனியா நிகோலே சீயசெச்கு போன்ற அமெரிக்கா விரும்பாத முன்னாள் ஆட்சியாளர்களை, தங்கள் கட்டைப் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் மூலம் சட்டத்தை வளைத்துக் கொன்றனர். இதுதான் இன்றைய அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்காகும்.

இன்னுமொரு பக்கத்தில் போராடிய தலைவர்களை தாம் உயிருடன் பிடிக்கவில்லை என்று புளுகிக் கொண்டு கொல்லுகின்றனர். சேகுவோராவை பொலிவிய கூலிப்படையும் அமெரிக்க சி.ஐ.ஏ.யும் சித்திரவதை செய்தே கொன்றது. இலங்கையில் ரோகண விஜவீரவை கைது செய்த பின் சித்திரவதை செய்து கொன்றது. இன்னும் பல முன்னணி Nஐ.வி.பி தலைவர்களையும் இப்படித்தான் கொன்றது. இதே இலங்கை அரசும், இதே இராணுவமும் சரணடைந்த பிரபாகரனை மட்டுமின்றி சரணடைந்த மற்றும் கைதான நூற்றுக்கணக்கான புலித் தலைவர்களையும் சித்திரவதை செய்ததுடன், அவர்களை கொன்று குவித்தது. இப்படிக் கொன்ற கொலைகாரர்கள், ஜனநாயகத்தின் காவலராக நாட்டை ஆள்பவராக இருப்பதுதான் இன்றைய உலக ஒழுங்காகிவிடுகின்றது.

ஆயுதமற்ற நிலையில், சண்டை செய்யாத நிலையில் பின்லாடனை பிடித்த அமெரிக்கா, கொன்றது அல்லது கொல்வதற்காக கடத்திச் சென்றுள்ளது. இப்படி சட்டத்தின் இருட்டை உலகறிய பிரகடனம் செய்துள்ளனர்.

இப்படி உலகெங்கும் அரங்கேறுகின்ற அரச பயங்கரவாதமும், அது நடத்துகின்ற கோமாளித்தமான விளக்கங்களும், பாசிச பயங்கரவாதம் மூலம்தான் மக்கள் மேல் திணிக்கப்படுகின்றது. மக்களை முட்டாளாக்க முனைகின்ற அறிவு சார்ந்த பயங்கரவாதம், மனித உரிமைகளை மறுத்து பாசிசமாக கொப்பளிக்கின்றது.

இதன் மூலம் மூடிமறைப்பது அரச பயங்கரவாதம் தான், போராடும் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்கின்றது என்ற அரசியல் உண்மையை. போராடும் பயங்கரவாதம் அரச பயங்கரவாதத்தின் அதே மக்கள் விரோத அரசியல் கொள்கையால் வழிநடாத்தப்படும் போதுதான், அது மக்களுக்கு எதிரான தனிநபர் பயங்கரவாதமாக மாறுகின்றது என்ற உண்மையைப் போட்டுடைக்காது பாதுகாக்க சட்டத்தை இருட்டாக்குகின்றனர்.

இதன் மூலம் மக்களை எதிரியாக கருதுகின்றது. மக்களை மந்தையாக்கி மேய்க்க முனைகின்றது. அரசு பயங்கரவாதமும், அது உருவாக்கும் தனிநபர் பயங்கரவாதமும் மக்களுக்கு எதிரானது. மக்களைச் சார்ந்து அவை செயற்படுவதில்லை.

இதற்குள் மக்களின் போராட்டங்களை திணிப்பதன் மூலம், மக்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாக இந்தப் பயங்கரவாதங்கள் அரசியல் நீக்கம் செய்கின்றது. இரண்டு பயங்கரவாதத்தை எதிர்த்தும், இதைச் சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் அணிதிரள்வதன் மூலம், உண்மையையும், மக்கள் தங்கள் சொந்தமான மக்கள் அதிகாரத்தையும் நிறுவமுடியும்.

இதுவல்லாத ஜனநாயகம் போலியானது. ஒன்றையொன்று சார்ந்தும், தாங்கியும் இயங்கும் கொலைகாரர்களின் பயங்கரவாத ஆட்சி முறையாகும்.

 

பி.இரயாகரன்

07.05.2011


பி.இரயாகரன் - சமர்