08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக ஜே.வி.பி. சுயாதீனமான சுதந்திரமான ஒரு விசாரணையைக் கோருமா!?

இதைக் கோராத வரை, அதற்காக போராடாத வரை, ஜே.வி.பி.யும் மீண்டும் அது ஒரு இனவாதக் கட்சிதான் என்பதை நிரூபிக்கின்றது. தமிழ் மக்கள் இலங்கையில் இனப்படுகொலை செய்யபட்ட நிலையில், அதை எதிர்த்துப் போராடாத எவரும் இனவாதம் கடந்து சிந்திக்கவில்லை என்பது தான் அதன் அரசியல் அர்த்தம். நாங்கள் தமிழருக்கு எதிரான இனகலவரத்தில் பங்கு கொள்ளவில்லை என்று கூறுவதால் மட்டும், ஜே.வி.பி. இனவாதமற்ற கட்சியாகிவிடுவதில்லை. மாறாக இனவாதத்தை எதிர்த்து போராடுவதன் மூலம்தான், இனவாதமற்ற கட்சியாக அது இருக்க முடியும். அதை என்றும், அதன் வரலாற்றில் ஜே.வி.பி. செய்தது கிடையாது.

அரசு-புலி யுத்தத்தின் பின்னணியில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதும், போர்க்குற்றம் இழைக்கப்பட்டதும் உலகமறிந்தது. இதைக் குறுகிய இனவாதம் மூலம் பாதுகாக்கமுடியாது. ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து அரசுடன் சென்ற வீரவன்சா மாதிரித்தான், தொடர்ந்து ஜே.வி.பி. இனவாத அரசியல் செய்கின்றது. போர்க்குற்ற அடிப்படையில் உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தாத அரசியல் நிலை இனவாதம் சார்ந்தது. மறுதளத்தில் இந்தப் போக்குதான் சர்வதேச தலையீடுகளுக்கு வழி சமைக்கின்றது. இதைத்தான் தொடர்ந்து ஜே.வி.பி. இனவாத அரசியலும் வழிகாட்டுகின்றது.

 

 

ஐ.நா உள்ளிட்ட மேற்கு தலையீட்டை எதிர்க்கும் போது, தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் போராட்டத்தையும் ஒருங்கே நடத்த வேண்டும். அது வேறு இது வேறல்ல. அரசு ஐ.நா உள்ளிட்ட மேற்கு தலையீட்டை எதிர்த்து, ஏகாதிபத்திய எதிர் முகாமுக்குள் (சீனா, ருசியா) நாட்டை விற்கும் போது, அந்த இனவாதத்தையும் எதிர்க்க வேணடும். இங்கு குறுகிய பேரினவாத தேசியம் தான், இதையும் வழிநடத்துகின்றது.

இதற்கு எதிராக மார்க்சியத்தை உச்சரிக்கும் ஜே.வி.பி. சுயாதீனமான சுதந்திரமான விசாரணையைக் கோரி போராடுவதில்லை. ஜே.வி.பி. பேசும் மாhக்சியமும், இடதுசாரியமும் அடிப்படையில் இனவாதம் சார்ந்தது தான். இன்று தமிழ் பகுதிகளில் மார்க்சியத்தின் பெயரில் தன்னை அறிமுகப்படுத்தியும், மார்க்சியத்தின் பெயரில் தனது இனவாத வலதுசாரித்தனத்தை இடதுசாரித்தனமாக காட்டி வருகின்றது. தமிழ் இனத்தை ஜே.வி.பி.யும் தன் பங்குக்கு, மார்க்சியத்தின் பெயரில் ஏமாற்ற முனைகின்றது.

ஐ.நா எம் நாட்டில் அத்துமீறித் தலையிடுவதாக குற்றம் சாட்டும் ஜேவிபி, இலங்கை அரசுக்கு எதிரான சுயாதீனமான சுதந்திரமான போர்க்குற்ற விசாரணையைக் கோரவில்லை. சீனா உள்ளிட்ட ருசியாவுடன் சரணடைவதை கண்டிக்கவில்லை. இதுதான் இந்த இடதுசாரித்தனத்தின் போலித்தனமாகும். இதுதான் பேரினவாதம் சார்ந்த இடதுசாரித்தனமாகும்.

அரச-புலி யுத்தத்தில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். பெருமெடுப்பில் அரசும், சிறியளவில் புலிகளும் தமிழ் மக்களைக் கொன்றனர். சில பத்தாயிரம் பேர் இப்படி பலியானார்கள். இதற்கு எதிரான ஜே.வி.பி.யின் போராட்டம், கோரிக்கை தான் என்ன? இங்கு மக்களுக்கு எதிரான குற்றம் என்ற வகையில், அரசும் புலியும் பரஸ்பரம் சம அளவில், பல தளத்தில் ஈடுபட்டனர். இதன் மீதான சுதந்திரமான சுயாதீனமாக விசாரணையை கோருவது தான், உண்மையான இடதுசாரியம். அது தான் மார்க்சியம்;

சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகளை, இந்த அரசு கொன்றதை எந்த வகையிலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாhது. ஜே.வி.பி. தலைவர்கள் இதே போல் கொல்லப்பட்டனர், இந்த ஆட்சியாளர்களால். அதே இராணுவம், அதே அரச இயந்திரம் தான், அவர்களைக் கொன்று குவித்தது.

ஆனால் வர்க்க அரசியலற்ற இனவாத வலதுசாரித்தை முன்னெடுக்கும் ஜே.வி.பி.யின் சந்தர்ப்பவாத குறுகிய அரசியல், இதைக் கண்டுகொள்ளாத குறுகிய அரசியலை நடத்துகின்றது. பேரினவாத அரசுக்கு அன்று முதல் இன்று வரை உதவி செய்கின்றது.

இடதுசாரியம், மார்க்சியம் பேசிக்கொண்டு, மக்களை ஏமாற்றிக்கொண்டும், இலங்கையின் இனவாதம் பிரதான முரண்பாடாக நீடிக்கும் வண்ணம் இந்த அரசியலுக்கு துணையாக நிற்கின்றனர். சந்திரிக்கா முதல் மகிந்தா வரையான இனவாத அரசின் வெற்றிக்கும், அதன் இராணுவ பலத்துக்கும் துணையாக நின்று, அதைப் பலப்படுத்தியவர்கள். தமிழ்மக்களை கொல்ல உதவியவர்கள். பத்தாண்டுகளாக பல வகையில் இனவாதத்துக்கு நேரடியாக உதவியவர்கள். இவர்கள் இன்றி இந்த அரசு அதிகாரத்துக்கு வரவில்லை.

இன்றைய மகிந்த குடும்ப சர்வாதிகாரத்துக்கும், அதன் பாசிச கட்டமைப்புக்கும் பக்கத்துணை நின்று அதை உருவாக்கியவர்கள். இனவாதம் சார்ந்த இந்த வெட்கம்கெட்ட அரசியலை, மார்க்சியம் என்று கூறி இதை வர்க்கப்போராட்டம் என்றனர்.

இன்று தமிழ்மக்களை ஏமாற்றியபடி வடக்கு கிழக்கில் கால் ஊன்றுகின்றனர். சிங்கள இளைஞர்களை ஒருசில பத்தாண்டுகளாக ஏமாற்றியவர்கள், தமிழ் இளைஞர்களை ஏமாற்றப் புறப்பட்டுள்ளனர். தாங்கள் எதிரியாக காட்டும் இந்த அரசில் போர்க்குற்றத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டாது, சுயாதீனமான சுதந்திரமான விசாரணையை கோராது, சர்வதேச அழுத்தங்களை மட்டும் எதிர்ப்பது சாராம்சத்தில் பேரினவாதம்தான். இது இழைக்கப்பட்ட குற்றங்கள் சரியானவை என்று கூறி, பாதுகாக்க விரும்புகின்ற பம்மாத்து அரசியலை இடதுசாரியத்தின் பெயரில் நடத்துகின்றனர் அவ்வளவுதான். இதை புரிந்து கொண்டு போராடுவது அவசரமானது அவசியமானது.

 

பி.இரயாகரன்

20.04.2011


பி.இரயாகரன் - சமர்