08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

வடக்கு மீனவர்களின் உணர்வுகளை தன் அரசியலுக்காக பயன்படுத்தும் இலங்கை அரசு

இன்று இலங்கையில் வடக்கு மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் பல. அதை யாரும் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை. இலங்கை அரசோ இதைப் பயன்படுத்தி இதில் குளிர் காய்கின்றது. வடக்கு மீனவர்களின் இன்றைய நிலை என்ன?

1.தங்கள் சொந்தக் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடிவதில்லை.

1.1.அந்த வகையில் இலங்கை அரசு இராணுவ மற்றும் கடற்படையின் கெடுபிடி

1.2.இந்தியா றோலர்களின் அழிவுகரமான மீன்பிடி முறைமையும், நூற்றுக்கணக்கில் இலங்கையின் வடக்குக் கரையில் படையெடுத்து ஆக்கிரமித்து நிற்கும் முறைமையும்

2.வடக்கு மீனவர்கள் யுத்தத்தின் பின்னான சிறியளவிலான முதலீட்டைக் கொண்ட மீன்பிடி உபகரணங்களை கூட, இந்திய றோலரால் இழந்து விடுகின்ற பரிதாபம். இதன் மூலம் இலங்கைக் கடலை முழுமையாக, இந்திய அரசின் ஒத்துழைப்புடன் தமதாக்கி வருகின்றனர்.

3.வடக்கு மீனவர்களுடன் இணைந்து போராடக் கூடிய, வழிகாட்டக் கூடிய அரசியல் மற்றும் சமூக அடித்தளம் இன்மை.

4.தவறான மீன்பிடியால், வடக்குக் கடலில் மீன்வளம் வற்றி வருகின்றது.

இப்படி வாழ்விழந்து வரும் மீனவர்கள், வாழ்வுக்காக போராட நிர்பந்திக்கப்படுகின்றனர். தமிழக றோலருக்கு எதிரான வடக்கு மீனவர்களின் உணர்வுகள் என்பது, தன்னெழுச்சியான உதிரியான லும்பன் உணர்வுகளாக வெளிப்படுகின்றது.

இந்த நிலையில் பேரினவாத அரசும், அரசு சார்பு சக்திகளும் இதை பயன்படுத்துகின்றது. தமது இனவாத ஒடுக்குமுறையாலும்;, அரசியல் ரீதியாக தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு போயுள்ள நிலையில், இதை தன் கையில் எடுக்கின்றது. தம்மை வடக்கு மீனவர்களின் நண்பனாக, தோழனாக காட்ட முனைகின்றது. தமிழக மீனவர்கள் மீதான தங்கள் படுகொலை முதல் அனைத்தையும், வடக்கு மீனவர்களின் நலனுக்காகத்தான் என்ற மாயையை உருவாக்க முனைகின்றது. அதாவது புலிகள் சிங்கள மக்களைக் கொன்றது, தமிழ்மக்களின் விடுதலைக்காகத்தான் என்ற அதே அரசியலைப் போலத்தான்.

இப்படி வடக்கு மீனவர்களின் நலனையே தாம் உயர்த்தி நிற்பதாக காட்டிக்கொண்டு, அரசியல் செய்கின்றது. மீனவர்களின் நியாயமான சுதந்திரமான குரல்களையும், போராட்டங்களையும் அடக்கியொடுக்கும் பேரினவாத அரசு, மீனவர் உணர்வுகளை தனது அரசியலுக்கு ஏற்ற வகையில் உடைத்து விட்டு தனது அரசியலாக்குகின்றது. இதன் பின்னணியில் தான் தன்னியல்பாகவும் கூட, இந்த உடைப்பின் ஊடாக மீனவர்களின் போராட்டங்கள் ஆங்காங்கே நடக்கின்றது. வடக்கு மீனவர்களின் போராட்டத்தின் பின்னணி இதுதான். மீனவர்களின் நியாயமான கோரிக்கையும் உணர்வும், இப்படிதான் வெளிப்பட்டு வடிகின்றது. இதைச் சரியாக முன்னெடுக்கவும் வழிகாட்டவும் முடியாத வெற்றிடம். அந்த வகையில்

1.வடக்கு மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக குறுந் தமிழ் தேசிய கட்சிகள் (உதாரணமாக கூட்டணி வரை) கள்ள மௌனம் சாதித்து, இந்திய விஸ்தரிப்புவாத குறுந் தமிழ் தேசியத்தின் பின் வடக்கு மீனவர்களின் வாழ்க்கையை புதைகுழிக்குள் தள்ளி வருகின்றனர். பேரினவாதத்துக்கு எதிரான குறுந் தமிழ் தேசியம், வடக்கு மீனவர்களின் முதுகில் குத்தித்தான், அதில் குளிர்காய்கின்றது.

2. எந்தப் போலி, இடதுசாரிய கட்சி முதல் மார்க்சிய லெனினிய வரை, இந்த விடையத்தில் மீனவர்களுடன் நிற்கவில்லை.

3. எந்த மக்கள் அமைப்பும் இதைச் சார்ந்து நின்று, அவர்கள் சார்பாக குரல் கொடுக்கவில்லை, வழிகாட்டவுமில்லை.

4. தமிழக ஈழ தமிழினவாதிகள் ஈழ மக்களின் மேல் கருசனை உள்ளதாக காட்டிக்கொண்டு, ஈழ மீனவர்களின் வாழ்வுக்கு குழிபறிக்கும் பிழைப்புவாதப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

5.எந்த இந்திய இடதுசாரிய அமைப்பும் (மார்க்சிய லெனினிய அமைப்பு உள்ளடங்க), இலங்கை மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்களுக்காக போராடவில்லை. கருத்தியல் அளவில் கூட.

6.இந்திய அரசு இலங்கைக் கடலை றோலர் கொண்டு அழித்து சூறையாடும் மூலதனக் கொள்ளைக்கு சார்பாக நிற்கின்றது.

இப்படி தனிமைப்படுத்தப்பட்ட வடக்கு மீனவர்களையும், அவர்களின் நியாயமான கோரிக்கை சார்ந்த உணர்வுகளையும் இலங்கை அரசு தன் அரசியலுக்கு பயன்படுத்த முனைகின்றது.

இந்த இடத்தில் நாம் மட்டும் தனித்துவிடப்பட்ட நிலையில் இருந்து, ஒரு சரியான போராட்டத்தை தொடங்கினோம். தத்துவார்த்த ரீதியான ஒரு திசைவழியையும், இதன் பின்னான பல பரிமாணங்களையும் எடுத்துக்காட்டி போராடி வருகின்றோம். இந்த இடத்தில் இந்திய இடதுசாரிகள் வடக்கு மீனவர்களுக்கும் குரல் கொடுக்கும் போதுதான், உண்மையில் மீனவர்கள் நலன் சார்ந்த அரசியல் ஒரு சரியான கிளர்ச்சியாக மாறும். இந்தியாவில் நடக்கும் தவறான போராட்டத்தை மறுத்து, சரியான திசையில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்புத்தான், இலங்கை மீனவர்களின் நலனை உள்ளடக்கிய சர்வதேசியமாக மாறும்.

இல்லாத போது மீனவரை உடன் விடுவிக்காவிட்டால், போர்க்குற்ற விசாரணை நடத்துவோம் என்று இந்தியா மிரட்டும் அதன் அடாவடித்தனம் வரை, அதை ஆதரிக்கும் தமிழ் தேசிய அரசியல் வரை, மக்களை முட்டாளாக்கி வழிகாட்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மீனவரை விடுவிக்கும் போராட்டம் மற்றும் மிரட்டல் நடந்த காலத்தில், அண்ணளவாக அதேயளவு இலங்கை மீன்வர்கள் (இலங்கை தமிழ் மீனவர்கள் உள்ளடங்க) இந்தியச் சிறைகளில் ஒரு சில மாதங்களாக இருந்து வந்ததை இன்று வரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்று வடக்கு மீனவரின் நண்பனாக காட்டும் இலங்கை அரசும், டக்கிளஸ்சும் கூடத்தான் இதைக் கண்டு கொள்ளவில்லை. மீனவர் நலன், தமிழர் நலன் என்று எல்லாம் இவர்கள் கூறுவது, படுகேவலமான குறுகிய பிழைப்புவாத அரசியல்தான்.

பி.இரயாகரன்

23.02.2011


பி.இரயாகரன் - சமர்