09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மகிந்த ஓட்டும் படகு………

நீள்குழல் பீரங்கியொடு
நெஞ்சுக் கவசமுமற்று போரிடவிட்டு
குண்டு துளைத்துச் சிதறிய உயிர்கள்
சிங்களவர் தமிழர் முஸ்லீம் மலையகத்துப் பிள்ளைகள்
நெஞ்சு பிளந்தோடிய குருதியில் நீராடிய மகிந்த……….

 

 

இனவாதச் சீண்டுதல்
எகிறிப் பாய்ந்து புலிப் படகோடு வருகிறது
மிருக வெறியோடு கூடி மோதிய
மனித எதிரிகள் சூழத் தொடர்கிறது
மடியோடு சுமந்த பிள்ளைகள் நினைவு
போராடிய காலம் மீள எழுமெனச் சூழுரைக்கிறது……..

தந்தை செல்வா தம்பி பிரபா
எல்லோரும் ஓடிமுடித்து அஞ்சல்கட்டை
நந்திக்கடலில் கைமாற்றப்பட்டு இருக்கிறது
இனி மகிந்த கையில்
காங்கேசன்துறைக் கடலிலோடு வான்
கூட்டமைப்போடு கூடியோடியும் நெஞ்சில் உதைப்பர்
தாங்கும் தைரியத்தை நிமிரும் வரையும் தாங்கு……..

மட்டுநகர் வாவியில் ஓடும்
மகாவலி கங்கையிலும் ஓடும்
கழனி ஆற்றிலும் ஓடும்
இலங்கைத்தீவின் எல்லாத் தெருக்களிலும்
இரத்த வெள்ளத்தில் மகிந்த படகோடும்தான்
பயங்கரவாதம் அழித்த களிப்பில்
ஜநா அமெரிக்கா அருகிருந்தோடும்
மனித உரிமை மீறியநாயெலாம் கூடயிருந்தோடட்டும்….

இழந்த உயிர்வலி எங்கள் கொதிதணல்
விழுந்த வரலாறு வீறுடன் சுவாலையெறியும்
எழுந்து ஆர்ப்பரிக்கும் துனிசிய மக்கள் எழுட்சியாய்……..

-கங்கா

24/01/2011-கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்