08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

"யார் தளபதியாக இருந்திருந்தாலும் யுத்தத்தில் வென்று இருப்பார்கள்" கோத்தபாய

ஆம், மிகச் சரியான உண்மை. தமக்கு இடையிலான மோதலிலும், பழிவாங்கலிலும் கக்குகின்ற சரியான வார்த்தை. இதுபோல் யார் பாதுகாப்பு செயலாளராக இருந்து இருந்தாலும், யுத்தத்தை வென்று இருப்பார்கள். யுத்தத்தை வெல்லுதல் என்பது, யாருடன் யுத்தம் செய்தனரோ அவர்கள் தான் அதை தீர்மானிக்கின்றனர். யுத்தத்தை இதற்கு வெளியில் எவர் இருந்தாலும் வெல்ல முடியாது. தோற்றவர்கள் தான் தீர்மானிக்கின்றனர் வென்றவர்கள் யார் என்பதை.

 

தோற்றவர்கள் யாரிடம் தோற்றனர்? பேரினவாத படையிடமல்ல, தமிழ் மக்களிடம் தான் அவர்கள் முதலில் தோற்றனர். ஆனால் தமிழ்மக்களை வெல்ல அனுமதிக்கவில்லை. மாறாக பாசிசத்தையும் மாபியாத்தனத்தையும் அவர்கள் மேல் ஏவினர். இதைத்தான் பேரினவாதம் வென்றது.

 

புலிகள் பீரங்கிகள், விமானங்கள் மட்டுமல்ல பலநூறு கோடி பணத்தை குவித்து வைத்துக் கொண்டு, சில பத்தாயிரம் படையை குவித்து வைத்துக்கொண்டு தோற்றுப்போனார்கள். யார் தளபதியாக இருந்தாலும் வெல்லுமளவுக்கு, யார் புலிகளின் தலைவராக இருந்தாலும் கூட தோற்றுப் போகுமளவுக்கு புலிகள் தமிழ்மக்களிடம் தோற்றுப் போய் இருந்தனர்.

 

 

ஆயுதங்கள், படைகள், அன்னிய உதவிகள், பணம் என்று எவையும், யுத்தத்தின் வெற்றியையோ தோல்வியையோ தீர்மானிப்பதில்லை. மக்கள் தான் அதைத் தீர்மானிக்கின்றனர். இங்கு வெற்றியும் சரி தோல்வியும் சரி, மக்களை சார்ந்து நின்று தீர்மானிக்கப்படவில்லை. மக்களில் இருந்து அன்னியமான சூழலில் தான், புலிகளின் தோல்வியும், அதன் மேலான அரசின் வெற்றியும் அரங்கேறியது. அரசு தமிழ் மக்களை வென்று புலியை வெல்லவில்லை. புலி தமிழ்மக்களை வென்று அரசிடம் தோற்கவில்லை. மக்களிடம் தோற்றவர்கள் தான், வென்றதும் தோற்றதும் என்று இரண்டும் ஒருங்கே அரங்கேறியது.

 

புலிகள் மக்களை ஓடுக்கி அவர்கள் மேல் நடத்திய பாசிச மாபியா ஆட்சியே, புலிகளைத் தோற்கடித்தது. ஆம் மக்கள் புலிகளில் இருந்து விலகி, மந்தைகளாக மாறி புலிகளின் துப்பாக்கியின் தாளத்துக்கு ஏற்ப தலையாட்டினர். இப்படி மக்களை மாற்றியதன் மூலம், புலிகளை மக்கள் தோற்கடித்தனர். இதுவே இன்று கொக்கரிக்கும் பேரினவாதத்தின் வெற்றியாகியது. இங்கு சரத்பொன்சேகாவோ, கோத்தபாயவோ என்று, யாரும் இதை வழி நடத்தி இருக்கத் தேவையில்லை.

 

ஆயுதத்தையும் பணத்தையும் வழிபட்ட வன்முறைக் கும்பலை, சமூகத்தில் இருந்து விலகிய லும்பன் கூட்டத்தை, எந்தப் புற ஆதரவுமற்ற அனாதைக் கூட்டத்தை, மற்றொரு படை வெல்வதற்கு யார் தலைமை தாங்குவது என்ற எந்த அவசியமும் இங்கு இருக்கவில்லை.

 

இப்படி வென்ற கூட்டத்துக்குள்ளான மோதல், தோற்றவர்களின் கதியை அம்பலமாக்குகின்றது. புலி மாபியாக்கள் கைப்பற்றிய கோடிக்கணக்கான மக்கள் பணம், புலி ஆயுதங்கள் சர்வதேச சந்தையில் விற்று சுருட்டுவதில் தொடங்கிய மோதல் தான், அதிகாரத்தை கைப்பற்றுவது வரையான அரசியல் மோதலையும் உருவாக்கியது. பழிவாங்கல், அவமானப்படுத்தல், சிறையில் தள்ளுதல் என்று வென்றவர்களுக்குள் தொடங்கிய நாய்பிடிச்சண்டை, யுத்தத்தில் தோற்றவர்களின் உண்மை முகத்தை மறுபடியும் தோலுரித்துக் காட்டுகின்றது.

 

யுத்தத்தில் தோற்றவர்களும் வென்றவர்களும் தம்மை நிலைநிறுத்த யுத்தத்தை மக்கள் மேல் நடத்தினர். பாரிய அளவில் மக்கள் கொல்லப்பட்டனர். புலிகள் மக்களை பலி கொடுத்து தம்மை பாதுகாக்க முனைய, அரசு பலியெடுத்து புலியை அழித்தது. புலி பலி கொடுக்க முனைந்த போது அதனுடன் உடன்படாதவர்களைக் கொன்றபடிதான் பலி கொடுத்தது. அரசு பலியெடுத்த போது, புலியில் இருந்து விலகியிருந்த மக்கள் கூட்டம் மேல் குண்டை வீசித்தான் பலியெடுத்தது.

 

இப்படி மக்களை யுத்தத்தில் கொன்றவர்கள், இன்று யுத்தக்குற்றம் பற்றி ஆளுக்காள் குற்றம் சாட்டியபடி சதி அரசியல் நடத்துகின்றனர். தோற்றவர்கள் சொத்துச் சண்டையில் மூழ்கி இதை அபகரிக்கும் அரசியலை முன்தள்ள, வென்றவர்கள் புலியின் சொத்தைச் சுருட்டுவதில் தொடங்கிய மோதல் தான் அதைப் பாதுகாக்கும் அதிகாரத்துக்கான அரசியல் மோதலாகியது.

 

இவைகள் தான் இன்று செய்திகளில் தலைப்பு செய்தியாகின்றது. நாடுகடந்;த மாபியாக் கூட்டம் வழங்கும் அடையாள அட்டை பற்றியும், யார் இராணுவ தளபதியாக இருந்தாலும் வென்று இருக்க முடியும் என்று கூறுகின்ற அடாவடித்;தனமான, மக்கள் விரோதக் கூட்டத்தின் பந்தா அரசியல்தான் மக்களை இன்று வழிநடத்துகின்றது. இப்படி இந்த எல்லைக்குள் தான் மக்கள் விரோத அரசியல் தொடர்ந்து இயங்குகின்றது.

 

இதற்கு வெளியில் மக்கள் வாழ்வுக்காகப் படுகின்ற பாட்டை, யாரும் எந்த அரசியலும் இன்று கண்டு கொள்வதில்லை. இதுமட்டும் தான், மக்கள் சார்ந்த உண்மையாகும்.

 

பி.இரயாகரன்

26.01.2011


பி.இரயாகரன் - சமர்